
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
எயிலது அட்டது நீறு - திரிபுராசுரர்களின் முப்புரம் எனும் மூன்று கோட்டைகள் சிரித்தெரி கொளுத்தியது திருநீறு.
இருமைக்கும் உள்ளது நீறு - இம்மை மறுமை எனும் இருமைக்கும் உறுதுணையாக உண்மையாக உள்ளது திருநீறு.
பயிலப்படுவது நீறு - கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற நிலையில் கல்வி கரையின்றி இருக்கும் போது எதனைக் கற்றால் எல்லாவற்றையும் கற்றதாகுமோ அப்படிப்பட்டது திருநீறு.
பாக்கியமாவது நீறு - இம்மைக்கும் மறுமைக்கும் நல்வினைப்பயனாவது திருநீறு.
துயிலைத் தடுப்பது நீறு - அறியாமையையும் அந்தகன் கைப் பாசத்தால் வரும் அருந்துயிலையும் தடுப்பது திருநீறு.
சுத்தமதாவது நீறு - அணிபவர்களையும் நினைப்பவர்களையும் பேசுபவர்களையும் சுத்தம் ஆக்கும் சுத்தங்களில் சுத்தம் அதாவது திருநீறு.
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே - கூர்மையான ஒளிவீசும் திருசூலத்தை ஏந்திய திருவாலவாயான் திருநீறே!
3 comments:
இந்த இடுகை 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் 19 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
14 comments:
ஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
எயிலது அட்டது நீறு - நரகமாகிய முமமலங்களை எரிக்கும் நீறு
பாக்கியமாவது நீறு - சித்தியாவது நீறு(ஏனெனில் இருமையைப் பற்றி மேலே சொல்லிவிட்டாரல்லவா?)
துயிலைத் தடுப்பது நீறு - நித்திரை மரணத்தின் வாயில். அதைத் தடுப்பது நீறு.
சுத்தமதாவது நீறு - அணிபவரின் எண்ணங்களை நல்வழிப்படுத்துவது நீறு
இப்படிக் கொள்ளலாமா?
9:00 PM, November 19, 2006
--
Anonymous said...
குமரா!
துயில் என்பதற்கு அறியாமை மிக நன்றாகப் பொருந்துகிறது. நான் இது வரை அதை நித்திரை எனும் கருத்துடனே!!!!இருந்து விட்டேன்.
ஆனால் மனிதனுக்கு நல்ல நித்திரையும், வேண்டும் ;அதைத் தடுக்கலாமா????கூடாது என்பதனை....இந்த நித்திரைக்குத் தத்தளிக்கும் காலங்களில் உணர்கிறேன்.
நம் சம்பந்தர்;;;;அறியாமையைத் தான் குறிப்பிட்டிருப்பார்.
மிக நன்று
யோகன் பாரிஸ்
4:31 AM, November 20, 2006
--
G.Ragavan said...
குமரன், உங்கள் விளக்கத்தைப் படித்ததும் மனதில் தோன்றியதெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு பின்னூட்டமிட வந்தால் நான் நினைத்ததை ஞானவெட்டியான் ஐயா மிகவும் சிறப்பாகவே சொல்லி விட்டார்.
மூன்று என்பது கோட்டைகள் என்றும் கொள்ளலாம் என்றாலும் சைவத்தில் அழிய வேண்டிய மூன்று என்பது மும்மலங்களையே குறிக்கும்.
பாக்கியம் என்பது பேறு. அத்தோடு வீட்டைச் சேருங்கள்.
துயிலைத் தடுப்பது நீறு. இதற்கு யோகன் ஐயா மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். நான் இன்னமும் விளக்கமாகச் சொல்கிறேன். கெடுநீரார் காமக்கலன்கள் எவை? நெடுநீர் மறவி மடிதுயில் இவை நான்கும் கெடுநீரார் காமக்கலம். இங்கே துயில் என்பது இறப்பையும் குறிப்பதில்லை. வழக்கமான தூக்கத்தையும் குறிப்பதில்லை. புரிந்ததுதானே?
சுத்தத்திற்கு உங்கள் விளக்கம் சரியே. ஆனால் உளத்தூய்மை என்று வெளிப்படையாகக் குறியாது விட்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.
5:09 AM, November 20, 2006
--
ஞானவெட்டியான் said...
அன்பு இராகவன்,
//நெடுநீர் மறவி மடிதுயில் இவை நான்கும் கெடுநீரார் காமக்கலம்.//
ஈண்டு "மறவி" என்பது "மறலி" என வருமென நினைக்கிறேன். மறலி என்பது எமன். சரிபாருங்களேன்.
6:18 AM, November 20, 2006
--
ஜெயஸ்ரீ said...
ஐயா,
மறவி என்பதே சரி.
மறவி என்றால் மறதி என்று பொருள்
7:20 AM, November 20, 2006
--
குமரன் (Kumaran) said...
ஞானவெட்டியான் ஐயா. முப்புரங்களை எரிப்பவன் என்பது மும்மலங்களை எரிப்பவன் என்ற ஒரு புதிய புரிதல் இன்று உங்களாலும் இராகவனாலும் ஏற்பட்டது. நன்றிகள்.
இம்மையின் நற்வினைப்பயன் என்பதனைத் தெளிவாக சித்தியென்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மறுமையின் நற்வினைப்பயன் என்பதனை வீட்டுப் பேறு என்று இராகவன் சொல்லியிருக்கிறார்.
தங்களின் விளக்கத்திற்கு மறுப்பு உண்டா? மிக்க நன்றி ஐயா.
8:00 AM, November 20, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி யோகன் ஐயா. நித்திரை குற்றமில்லை. அதிக நித்திரை தான் சோம்பலைத் தரும். அதனை ஐயனும் குறை கூறியிருக்கிறார். இராகவனின் பின்னூட்டத்தைப் பாருங்கள்.
8:01 AM, November 20, 2006
--
குமரன் (Kumaran) said...
நான் எங்கே இராகவன் விளக்கம் கூறினேன். சும்மா ஒவ்வொரு வரியாக விரித்துக் கூறினேன். அவ்வளவு தான். நீங்களும் ஐயன்மார் இருவரும் தான் விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
சுத்தம் என்பதில் உளத்தூய்மை மட்டுமின்றி உள்ளம், உரை, செயல் இம்மூன்றின் தூய்மையும் சொல்லப்பட்டதாக உணர்ந்தேன் இராகவன். அதனால் உளத்தூய்மையை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லாமல் தூய்மை என்பதனை மட்டுமே சொன்னேன்.
8:04 AM, November 20, 2006
--
ஜெயஸ்ரீ said...
துயிலைத் தடுப்பது நீறு
துயில் என்பது இருளைத் , தமோகுணத்தை குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். இராகவன் கூறிய நெடுநீர்(காலம்தாழ்த்துதல்), மறவி(மறதி), மடி(சோம்பல்), துயில் (மிதமிஞ்சிய தூக்கம்) இவையனைத்தும் தமோகுணத்தின் அறிகுறிகள்.
'தமஸோமா ஜ்யோதிர்கமய'
9:40 AM, November 20, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
ஞானம் ஐயாவும், ஜிராவும், ஜெயஸ்ரீயும் அருமையா விளக்கம் சொல்லிட்டாங்க! அதுவும் துயில் குறித்த குறள் விளக்கமும் அருமை!
முப்புரம் என்பது மும்மலமாகவே சைவ சித்தாந்தம் கருதுகிறது. திருமூலரின் திருமந்திரம் இதோ:
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே!
பூச நட்சத்திரம் கூடிய பெளர்ணமியில், தங்க-வெள்ளி-இரும்புக் கோட்டைகள் மூன்றும் ஒன்று கூடிய ஒரு தருணத்தில், ஈசன் ஒரே அம்பால், முப்புரம் எரித்தான்!
எரித்த பின்பு தானே நீறு வரும்?
ஆனால் இங்கே கோட்டைகளை எரித்ததே நீறு தான் என்கிறார் பாருங்கள்! (எயிலது அட்டது நீறு)!!
இப்படி நீறினால் நீறாகுவது மும்மலங்கள் என்பது எவ்வளவு சிறப்பு!
2:24 PM, November 20, 2006
--
ஞானவெட்டியான் said...
விழித்திரு!(துயில் தவிர்க்க)
பசித்திரு!!
தனித்திரு!!!
3:53 AM, November 21, 2006
--
குமரன் (Kumaran) said...
தமோகுணத்தின் அறிகுறிகளை விவரமாகச் சொன்னதற்கு நன்றிகள் ஜெயஸ்ரீ.
11:28 PM, November 23, 2006
--
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர்.
'முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்'... திருமந்திரம் சொல்கிறேன் என்று சந்தடி சாக்கில் என்னைச் சொல்லலையே? :-)
ஈசன் அம்பால் முப்புரம் எரித்தானா? சிரித்தெரி கொளுத்தினான் என்றல்லவா கேள்வி பட்டிருக்கிறேன்.
11:29 PM, November 23, 2006
--
குமரன் (Kumaran) said...
ஞானவெட்டியான் ஐயா. தங்கள் சொற்படி இதோ விழித்திருக்கிறேன். இரவு 1:30 ஆகிவிட்டது. :-)
நகைச்சுவை போக நீங்கள் சொன்ன கருத்து மிக முக்கியம் ஐயா.
இந்த 'தனித்திரு. விழித்திரு. பசித்திரு' என்ற உபனிஷத வாக்கியங்களை பெரியோர்கள் பலர் வற்புறுத்தியிருக்கிறார்கள். மிக்க நன்றி.
11:31 PM, November 23, 2006
துயிலைத் தடுத்துப் பொலிவை அருளும் நீறு குறித்த விளக்கங்கள் மிக அருமை.
நன்றி கவிக்கா.
Post a Comment