Monday, July 07, 2008
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயான் திருநீறே
பூச இனியது நீறு - நெற்றியிலும் உடலெங்கும் பூசுவதற்கு இனியது திருநீறு
புண்ணியம் ஆவது நீறு - நல்வினைப்பயன்களைத் தருவ்து திருநீறு
பேச இனியது நீறு - பெருமைகளை எடுத்துப் பேச இனிமையாக இருப்பது திருநீறு
பெரும் தவத்தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு - பெரும் தவம் செய்யும் அடியவர்களுக்கெல்லாம் அவர் தம் 'மற்றை நம் காமங்களைத்' தீர்ப்பது திருநீறு
அந்தமதாவது நீறு - இறுதி நிலையாவது திருநீறு
தேசம் புகழ்வது நீறு - ஊர் உலகமெல்லாம் புகழ்வது திருநீறு
திருவாலவாயான் திருநீறே - மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.
***
மிக எளிமையான பாடல்.
அதிகாலை எழுந்ததும் இறைவன் திருவடிகளைத் தொழுது நெற்றி மணக்கத் திருநீறு பூசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பூசி உணர்ந்தவர்களுக்குத் தெரியும் அதன் இனிமை. அந்த திருநீறை அணிந்து கொண்டு யார் முன்னால் சென்றாலும் அதனைப் பார்ப்பவர்களுக்கும் அதன் புனிதத்தால் நல்ல உணர்வுகள் தோன்றி நல்ல செயல்கள் செய்ய நல்ல தூண்டுதல் கிடைக்கிறது. நமக்கும் திருநீறு அணிந்ததால் உள்ளம் தூய்மை பெற்று நல்வினைகளில் ஈடுபாடு தோன்றுகிறது. அப்படி புண்ணியங்கள் ஆவது திருநீறு. இதன் பெருமைகளைப் பேசத் தொடங்கினால் கேட்பதற்கும் இனியதாக இருக்கிறது. பேசுவதற்கும் இனியதாக இருக்கிறது. திருநீறின் பெருமைகளே பெருமை. முற்பிறவித் தவத்தாலும் நம் முன்னோர் செய்த தவத்தாலும் நமக்குத் திருநீறு அணியும் எண்ணம் தோன்றி நம் ஆசைகளை அறுக்கிறது. ஐயன் வள்ளுவன் சொன்னதைப் போல் பற்றற்றானின் பற்றைப் பற்றி மற்ற பற்றுகளை விட அணி செய்கிறது திருநீறு. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று என்று இறைவனை வேண்டத் தூண்டுகிறது திருநீறு. ஆதி பகவன் முதற்றே உலகு என்று எல்லோருக்கும் தெரியும். அந்தமும் அவனே என்று சொல்லாமல் சொல்லி நிற்பது திருநீறு. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் பொய்யாமொழிப் புலவர். ஊர் உலகம் தேசமெல்லாம் போற்றிப் புகழும் படி நிற்பது திருநீறு. இவ்வளவு பெருமையும் உடையது திருவாலவாயாம் மதுரையம்பதி வாழும் மீனாட்சி சுந்தரேசனின் மடைப்பள்ளித் திருநீறே.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இந்த இடுகை 11 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
9 comments:
G.Ragavan said...
// இவ்வளவு பெருமையும் உடையது திருவாலவாயாம் மதுரையம்பதி வாழும் மீனாட்சி சுந்தரேசனின் மடைப்பள்ளித் திருநீறே. //
மடப்பள்ளியில் திரூன் கிடைக்கும். திருநீறுமா? :-) உண்மைதான். அடுப்பில் வெந்ததும் நீறுதானே.
குமரன் ஒரு சிறு குறிப்பு. ஒரு வரிக்குப் பொருள் சொல்கையில் அது அதற்கு முன்னும் பின்னும் உள்ள வரிகளோடு கொண்ட தொடர்பையும் கவனிப்பது சிறந்தது. குறிப்பாக அந்தமாவது நீறு என்ற வரி அதற்கு முந்திய வரியோடு தொடர்ந்தது. இப்பொழுது நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
9:38 AM, November 12, 2006
--
குமரன் (Kumaran) said...
இராகவன். உங்களுக்குத் தெரியாததில்லை. ஆளுடையபிள்ளையார் மதுரைத் திருக்கோவில் மடைப்பள்ளி அடுப்புச் சாம்பலைக் கொணரச் செய்து அதனைப் பூசியே கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்தார் என்பது மரபைச் சார்ந்த வரலாறு. அதனையே இங்கே குறித்தேன்.
உண்மை தான் இராகவன். அப்படி முன்னும் பின்னும் உள்ள வரிகளுடன் பொருந்திப் பொருள் கொள்ளவே இங்கு முயன்றிருக்கிறேன். அந்தமதாவது நீறு என்பதற்கு உங்கள் மனதில் தோன்றும் பொருளைச் சொல்லுங்கள். மிக்க உதவியாக இருக்கும்.
9:57 AM, November 12, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ரு வரிக்குப் பொருள் சொல்கையில் அது அதற்கு முன்னும் பின்னும் உள்ள வரிகளோடு கொண்ட தொடர்பையும் கவனிப்பது சிறந்தது.//
ஆகா,
அப்பிடின்னா,
பெரும் தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு...
ராகவன் விளக்கத்துக்குக் காத்து இருக்கிறேன்!
12:32 PM, November 12, 2006
--
Merkondar said...
நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள்
5:03 PM, November 12, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி என்னார் ஐயா.
5:35 PM, November 12, 2006
--
Anonymous said...
"பெரும் தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு"
அன்புக் குமரா!
நீறு பூசும் போது,ஓர் நாள் நீறாவாய்! என்பது ஞாபகம் வருகிறது. ஆசை பெருந்தவத்தோனையும் விட்டுவைப்பதில்லை. நீறாவாய்!!என்பதை உணர்வதால் ஆசை அறுகிறது.
சம்பந்தர் நல்லாச் சொல்லியுள்ளார்;
நன்று
யோகன் பாரிஸ்
3:24 AM, November 13, 2006
--
குமரன் (Kumaran) said...
உண்மை ஐயா. திருநீறு பூசும் போது அது நினைவிற்கு வரவேண்டும். எப்போதும் வருவதில்லை. வரும் போதெல்லாம் ஆசை அறுக்கிறது.
ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்
4:03 AM, November 13, 2006
--
Sivabalan said...
குமரன் சார்
நன்றாக விளக்கியுள்ளீர்கள்
7:44 AM, November 13, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
1:35 PM, November 13, 2006
ஆதியும் அந்தமும் ஆனவனின் நீறணிந்து, ஆசை அறவே அடிபணிந்து, நலம் பெறுவோம்.
நன்றி குமரா.
நன்றி கவிநயா அக்கா.
தரணி போற்றும் பரணி பாயும் நெல்லைச் சீமையில் சைவா வேளார் இனங்கள் பல உண்டு. அவற்றுள் சைவப் பிள்ளைமார் இனம் தொகை கனக்கில் அதிகம்( தற்போதைய நெல்லை மாநகரத் தந்தை கூட(A.L.S) அந்த இனத்தை சேர்ந்தவ்ர்- அடுத்தது தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன்).
அந்த சமுகத்தினரில் பெரியவர்கள் தமிரபரணியில் குளித்துவிட்டு நெற்றி,மார்ர்பு,கைகளில் திருநீறு பட்டை
அணிந்து சைவப்பழமாக காட்சி அளிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும் ஐயா.
www.pugaippezhai.blogspot.com
ஆனால் வெப்பு நோயை நீக்கிய ’நீர்’ தென்திருவாலவாயப்பன் நீர்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி விஜய்.
சிவமுருகன்.
வெப்பு நோயை நீக்கியது தென் திருவாலவாயனின் திருநீறு இல்லையா? நீர் இல்லை. நீறு என்பதே சரி.
////எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று என்று இறைவனை வேண்டத் தூண்டுகிறது திருநீறு.///
திருநீற்றிற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு!
உன் உடம்பு ஒரு நாள் சாம்பலாகப் போகிறது! ஆகவே அதன் இச்சைக்கு முக்கியத்துவம் தராமல் தினமும் இறைவனை நினை. நினைத்து நெற்றியில்
பூசிக்கொள்!
உண்மை தான் வாத்தியார் ஐயா. வாழ்வின் நிலையாமையைக் குறிக்கும் விதமாக சாம்பலும் மண்ணும் அணியப் படுகிறது என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
//இவ்வளவு பெருமையும் உடையது திருவாலவாயாம் மதுரையம்பதி வாழும் மீனாட்சி சுந்தரேசனின் மடைப்பள்ளித் திருநீறே. //
திருநீற்றின் மகிமை சொல்லவும் பெரிதே!
நன்றி கீதாம்மா.
Post a Comment