Friday, August 01, 2008

அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே! பெருந்திறல் அருந்தவர்க்கரசே!


அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

அருளுடைச் சுடரே - கருணையுடன் கூடிய சுடரே

அளிந்ததோர் கனியே - கனிந்துப் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே

பெருந்திறல் அருந்தவர்க்கு அரசே - பெருமையும் ஆற்றலும் கொண்ட அருமையான தவம் உடையவர்களுக்கு அரசனே

பொருளுடைக் கலையே - உண்மைப்பொருளை தன் உட்பொருளாகக் கொண்ட கலையே

புகழ்ச்சியைக் கடந்த போகமே - எவ்வளவுதான் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளை எல்லாம் கடந்து நிற்கும் இன்பவடிவானவனே

யோகத்தின் பொலிவே - யோகமே உருவானவனே; யோகம் செய்வார்களுக்குக் காட்சியளிப்பவனே

தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - மயக்கமே இல்லாத நிலையை அடைந்த அடியவர்கள் சிந்தையுள் புகுந்து நிற்கும் செல்வமே

சிவபெருமானே - என் தலைவனான சிவனே

இருளிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - மயக்கம் அளிக்கும் நிலையான இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கு எழுந்து அருளுவது இனியே - நீர் இனிமேல் எங்கு எழுந்தருளிச் செல்வது?

கருணையுடன் கூடிய சுடரே. அடியார்களுக்குக் கனிந்துப் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனி போன்றவனே. பெருமையும் ஆற்றலும் கொண்ட அருமையான தவம் உடையவர்களுக்கு அரசனே. உண்மைப்பொருளை தன் உட்பொருளாகக் கொண்ட கலையே. மெய்நூலானவனே. அந்தக் கலைகளும் நூல்களும் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளை எல்லாம் கடந்து நிற்கும் இன்பவடிவானவனே. யோகமே உருவானவனே. யோகம் செய்வார்களுக்குக் காட்சியளிப்பவனே. மயக்கமே இல்லாத நிலையை அடைந்த அடியவர்கள் சிந்தையுள் புகுந்து நிற்கும் செல்வமே. சிவபெருமானே. மயக்கம் கொடுக்கும் நிலையான இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். எங்கு எழுந்து அருளுவது இனியே?

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியொ' பதிவில் 28 டிசம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Kay Yes said...
சீக்கிரம் 100 ரீச் பண்ணுங்க.

December 28, 2005 9:43 AM
--

SK said...
Pl. listen to Ilaiyaraja's THIRUVASAGAM Cd for this song. Visit www.tis-usa.com for more info. Thanks.

December 28, 2005 9:48 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி கார்த்திக் (kay yes). இன்னும் ரெண்டு வாரத்துல 100வது பதிவு போட்டுடலாம்னு இருக்கேன். :-)

December 28, 2005 10:35 AM
--

குமரன் (Kumaran) said...
sk. இந்த வலைப்பூவே இளையராஜாவின் திருவாசகம் CDயில் இருக்கும் பாடல்களுக்கு விளக்கம் தரத் தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்த CDஐ நண்பர் சிவாவின் மூலம் ஏற்கனவே வாங்கிவிட்டேன். அடிக்கடி கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். நீங்கள் இந்த CDக்கு விளம்பரம் செய்வதைப் பார்த்தால் சிவா மகிழ்ச்சி அடைவார். :-)

December 28, 2005 10:38 AM
--

சிவா said...
குமரன்! சில வார இடைவெளிக்கு அப்புறம் இன்று காலையில் தான் திருவாசக ஒலித்தட்டை ஓட விட்டேன். நீங்களும் ஒரு பாடலுக்கு விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.
//**தெருளிடத்து அடியார்**// இதில் தெருளிடத்து என்பதை பிரித்து விளக்க முடியுமா.

December 28, 2005 10:07 PM
--

குமரன் (Kumaran) said...
சிவா,

தெருளிடம் என்பதை தெருள்+இடம் என்று பிரிக்கலாம்.

மருள் என்றால் மயக்கம். தெருள் என்றால் தெளிவு; மயக்கம் தீர்ந்த நிலை. ஞானம் பெற்ற நிலை.

நிலையில்லாதவற்றில் உள்ள பற்றுகள் நீங்கி நிலையான இறைவன் மேல் பற்றுதல் வைக்கும் ஞான நிலையே தெருளிடம்.

December 29, 2005 5:21 AM

Kavinaya said...

"அளிந்ததோர் கனியே", "தெருளிடத்தடியார்", இந்த சொற்பிரயோகங்கள் நல்லாருக்கு. நல்ல விளக்கத்துக்கு நன்றி குமரா.

சிவத்தமிழோன் said...

தங்களுடைய வலைப்பூவைக்கண்டு ஆனந்தப்பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ளேன். எளியேன் ஈழத்தமிழன் என்று தங்களுடன் அறிமுகமாவதில் பெருமைகொள்கின்றேன். திருமூலர் சைவசமயத்தை ஈழமணி நாடு சிறப்பாக பேணிவருந்திருந்த தன்மையினால் கயிலையும் சிதம்பரமும் இல்லாத ஈழநாட்டை சிவபூமி என்று அழைத்து மகிழ்ந்தார். ஆயினும் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கும் சுமார்த்தம் இலங்கையில்கூட அடியேடுக்க ஆரம்பித்துவிட்டது. எனினும் அதனால் இன்றுவரை வெற்றிகாணமுடியவில்லை.
ஈழவளநாட்டில் முல்லைநாதன் திருமால் வழிபாடும் சக்தி வழிபாடும் உண்டு. ஆயினும் அத்தனையும் சைவத்தின் அங்கமாய் சிறப்பாகப் பேணப்பட்டுவருகின்றன.
திருமுறை ஓதும் ஈழவர் நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை பாட வெறுப்பதில்லை.எதிர்பதில்லை. திருமால் ஆலயங்களாக தொன்றுதொட்டு வல்லிபுர ஆழ்வார் ஆலயம், பொன்னாலை வெங்கடேசுவரர் ஆலயம் என்பன திருமாலைக் காத்தற்கடவுளாக கண்டு ஈழமக்கள் தொழுதுவரும் வரலாற்று புதழ்மிக்க ஆலயங்கள். இங்கு இவற்றை குறிப்பிடுவது ஈழத்தமிழர்களின் சமயவாழ்வு எத்தகையது என்பதை தங்களின் பார்வைக்கு கொண்டுவருவதன் பொருட்டேயாகும். ஏனெனில் தங்கள் வலைப்பூவால் கவரப்பட்ட நான், எனது வலைப்பூவில் தங்களது வலைப்பூவுக்கு வருவதற்கான வாசலையமைக்க அவாக்கொண்டுள்ளேன். அதன்மூலம் தங்கள் எழுத்துக்கள் ஈழத்தமிழரையும் சென்றடையப்போகின்றது ஆதலால் உங்கள்மீது எளியேன் சுமத்தியுள்ள பொறுப்பை பணிவோடு தங்கள் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். என்றும் நன்றியும் பணிவுமுடன் - சிவத்தமிழோன்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் கவிக்கா. அருமையான சொற்றொடர்கள் அவை.

குமரன் (Kumaran) said...

தங்கள் வருகைக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சிவத்தமிழோன் ஐயா. அடிக்கடி வந்து தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.