உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த
யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இறைவன் மிகப்பெரியவன். தேவர்களின் அரசன். இந்த உலகில் வாழ்பவர் இம்பர். மற்ற தெய்வீக உலகங்களில் வாழ்பவர் உம்பர். அவர்கள் இருவகையினர் - எப்போதும் தெய்வீக உலகங்களில் வாழ்ந்து இறைத்தொண்டினை இடையறாது செய்பவர்; இவ்வுலகில் வாழ்ந்திருந்து இறைவன் கருணையால் அவன் தொண்டில் ஈடுபட்டு தெய்வீக உலகங்களை அடைந்து அங்கும் அவன் தொண்டினைத் தொடர்பவர்கள். இந்த இருவகை உம்பர்களுமே இம்பர்களின் வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் அரசாங்க அதிகாரிகள் போல. அவர்கள் சிற்றரசர்கள் போல. இறைவன் அவர்களுக்கு எல்லாம் அரசன். உம்பர்கட்கு அரசன். பேரரசன். ராஜராஜன். ராஜேந்திரன். தேவராஜன். இங்கு இறைவனின் 'பரம்பொருள்' தன்மை போற்றப்படுகிறது.
இறைவன் எங்கும் நிறைந்தவன். இந்தப் ப்ரபஞ்சத்தில் எங்கும் எந்த இடத்திலும் எப்பொருளிலும் எல்லாக் காலத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் எல்லாக் காலத்திலும் இங்கிருப்பதால் அவன் காலத்தைக் கடந்தவன் - காலாதீதன். அவன் இல்லாத இடமே இல்லை என்பதால் அவன் எல்லா எல்லைகளையும் கடந்தவன் - தேசாதீதன். அவன் எல்லா இடத்திலும் எப்போதும் இருந்தாலும் சாதாரணமாய் புலன்களுக்குப் புலப்படாமல் எங்கும் 'கலந்து' நிற்பவன். யோகம் என்றால் கலத்தல். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம், தியான யோகம், ஹத யோகம், ப்ரபத்தி யோகம் என்று இறைவனை ஜீவன் கலப்பதற்கான வழிகள் எல்லாமே யோகம் என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம். இங்கு இறைவனின் 'எங்கும் எப்போதும் கலந்து நிற்கும்' தன்மை போற்றப்படுகிறது.
நானோ பொல்லா வினையேன். எல்லா தீய காரியங்களும் செய்துள்ளேன். அவன் பெருமையுடன் ஒப்பிடும் போது நான் மிக மிக மிகச் சிறியவன். இருந்தும் அவன், காலத்திற்கு முன் கனிந்த இனிய பழம் போல, எனக்கு அருள் செய்தான். அவன் என்னிடம் மட்டும் கருணை கொள்ளவில்லை. எனது குழு முழுவதையுமே தன் அடியார்களாக்கிக்கொண்டு எங்களுக்கு நிரந்தரமான வாழ்வு கொடுத்தான். இங்கு இறைவனின் கருணையும் எளிவந்த தன்மையும் போற்றப் படுகின்றன.
அவன் எல்லா அறிவு நூலகளாலும் அறிஞர்களாலும் 'செம்பொருள்' என்று போற்றப்படுகிறான். இங்கு இறைவனின் 'மேலான போற்றுதலுக்கு உரிய' தன்மை பேசப் படுகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
அவனே எல்லோர்க்கும் கதி. அவன் திருவடிகளே எப்போதும் எவ்வகையினருக்கும் மிகச் சிறந்த கதி. இங்கு இறைவனின் 'மேலான கதி'யாகும் தன்மை போற்றப்படுகிறது.
அவனே நிரந்தரமான செல்வம். மற்ற வகைச் செல்வங்கள் எல்லாம் நிரந்தரமில்லை. அவன் வைத்தமாநிதி. இங்கு இறைவனின் 'அடியார்களுக்கு எல்லாமும்' ஆகும் தன்மை போற்றப்படுகிறது.
இப்படி பல விதமான 'சீர்கள்' இந்தப் பாடலில் போற்றப்படுகிறது.
5 comments:
திருவாசகத்திற்கு மட்டும் ஒவ்வொரு பாட்டிற்கும் இரண்டிரண்டு இடுகைகள் இட்டு வந்திருக்கிறேன். முதல் இடுகையில் வரிக்கு வரி பொருளும் பொழிப்புரையும் தந்திருக்கிறேன். இரண்டாவது இடுகையில் தன்னனுபவப் பெருக்காகப் பொருள் சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் இந்த இடுகை 'உம்பர்கட்கரசே' பதிகத்தின் முதல் பாடலுக்கான இரண்டாவது இடுகை.
இந்த இடுகை 25 அக்டோபர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
4 comments:
சிவா said...
ஒரு கதா காலட்ஷேபம் கேட்ட மாதிரி இருக்குது. நடை நல்லா இருக்கு.
இப்படி சின்ன புள்ள மாதிரி கலர மாத்தி மாத்தி போட்டு, எங்க கண்ண சோதிக்கறீயலே :-)
முன்னுரையில பாட்டையும் போட்டு தொடங்கியிருக்கலாம்.
October 25, 2005 10:35 AM
--
குமரன் (Kumaran) said...
சிவா. உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொன்னபடி பாடலையும் சேர்த்துவிட்டேன். எல்லா பத்திக்கும் ஒரே வண்ணத்தையும் கொடுத்து விட்டேன். :-)
October 25, 2005 10:41 AM
--
G.Ragavan said...
அடேங்கப்பா! கொஞ்சம் மலைப்புதான்.
அப்புறம் இந்த செம்மைப் பண்பைப் பற்றி. எல்லாத் தமிழ்ப் புலவர்களும் இறைவனுக்குச் செம்மைப் பண்பை வைத்துத்தான் பாடியிருக்கின்றார்கள்.
நக்கீரர் கொஞ்சம் மேல போய்....
தாமரை புரையும் காமர் சேவடி - திருவடியும் செம்மை
பவழத்தன்ன மேனி - மேனியும் செம்மை
திழக் ஒளிக்குன்றி ஏய்க்கும் உடுக்கை - செம்மையான ஆடைகள்
குன்றின் நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் - வேலும் செம்மை
செம்மைப் பண்பை உயர்வு செய்வதற்காகவே அனைத்தும் செம்மையான செஞ்சடையன் மகனைப் புகழ்கிறார் நக்கீரர்.
October 28, 2005 7:29 AM
--
குமரன் (Kumaran) said...
ராகவன். நீங்கள் கந்தன் பாடல்கள் அனைத்தையுமே கற்றிருப்பீர்கள் போலிருக்கிறதே! எந்த நூலில் நக்கீரர் முருகனை இப்படிப் பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையைப் பற்றி அறிவேன் - ஆனால் முழுவதும் படித்ததில்லை.
October 29, 2005 6:12 AM
//அவனே நிரந்தரமான செல்வம். மற்ற வகைச் செல்வங்கள் எல்லாம் நிரந்தரமில்லை. அவன் வைத்தமாநிதி.//
நன்கு சொன்னீர்கள் குமரா. நீங்கள் இப்படி தன்னனுபவப் பெருக்காகப் பொருள் சொல்வது மிக இனிமையாய் இருக்கிறது. மிக்க நன்றி.
//இறைவனை ஜீவன் கலப்பதற்கான வழிகள் //
ஜீவனும், பரம்பொருளும் வெவ்வேறா குமரன்?..இதுவே அது, அதுவே இதுவல்லவா? .. நீண்ட அருமையான விளக்கம் நடுவில், எனக்கு இந்த அடிப்படையான சந்தேகம் எனக்கேற்பட்டது..
"இனி எங்கு எழுந்து அருள்வது இனி நீயே?"--எவ்வளவு உரிமையுடன், சொல்லாட்சி செறிவுடன் கேள்வி புறப்பட்டிருக்கிறது, பாருங்கள்!
நல்லதொரு பதிகப்பாடலை எடுத்துக் கொண்டு சிறப்பாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்..
உங்கள் பணி சிறக்கட்டும்.
இப்படி நிறைய எழுத வேண்டும் என்று ஆசை தான் கவிநயா அக்கா. சில நேரங்களில் இயல்கிறது. சில நேரங்களில் முடிவதில்லை.
நன்றிகள்.
வாங்க ஜீவி ஐயா. வெகு நாட்களாகிவிட்டது உங்களை இங்கே பார்த்து. :-)
நான் இந்த உடல் என்றோ நான் இந்த மனம் என்றோ நான் இந்த உயிர் என்றோ எண்ணிக் கொண்டிருக்கும் வரை ஜீவனும் பரமும் வெவ்வேறாகத் தானே இருக்கிறார்கள் ஐயா. யோகத்தால் வெவ்வேறாக 'இருந்தவர்கள்' இணைவதுவோ வெவ்வேறாகத் 'தோற்றமளித்தவர்கள்' ஒன்றென்று தெளிவதுவோ நடக்கிறது என்று அனுபூதிமார்கள் சொல்கிறார்கள். அடியேனுக்கு அந்தத் தெளிவில்லை. அதனால் இரண்டையும் சேர்த்து உலக வழக்கில் 'இறைவனை ஜீவன் இணையும் வழிகள்' என்று சொல்லிவிட்டேன்.
அடிப்படையான இந்த ஐயம் அனுபூதி கிடைக்கும் வரை இருக்கத் தானே செய்கிறது. நேருக்கு நேராகப் பார்ப்பது போன்ற தெய்வீகக் கண் கிடைத்தவுடன் அந்த ஐயம் மறைந்து போகிறது. இப்படியும் அனுபூதிமான்கள் சொல்கிறார்கள். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை நான். :-)
வாதவூரடிகளாரின் வரிகளைப் படிக்கும் போதெல்லாம் கண்களில் நீர் நிறைவது உண்மை. நம்மாழ்வாரின் பாசுரங்களிலும் பல இடங்களில் அப்படித் தோன்றும். கண்களில் நீரை இப்படி நிரப்பிவிட்டு நடு நடுவில் தத்துவங்களைச் சொல்லிச் செல்வது இருவருக்கும் மிக இயல்பாக வந்திருக்கிறது. 'இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே' என்று அவரும் சொல்வார் இவரைப் போல்.
தங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றிகள். தன்னைத் தானே பாடுவித்துக் கொண்டவன் தன்னைத் தானே எழுதியும் கொண்டான்.
Post a Comment