Tuesday, April 01, 2008

துரியோதனப் பார்வை

மக்களில் பலவகை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் கருப்பு வெளுப்பில் 'உண்டு - இல்லை' என்ற அளவில் பிரிக்கும் போது பல வகைகளில் மனிதர்களையும் இரு எதிர் எதிர் வகைகளாகப் பிரிக்கும் நிலை தோன்றுகிறது. அப்படி உள்ளவற்றில் ஒரு எதிர்-எதிர் இருமையைப் பற்றியக கதை இது.

***

துரோணருக்கு அருச்சுனன் மேல் தனிப்பட்டப் பாசம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறிது காலமாக தருமனின் மேலும் அதிகப் பாசம் காட்டுவது போல் இருக்கிறது. பாண்டு மகன்களில் மேல் அழுக்காறு கொண்ட துரியோதனனுக்கு இது மேலும் எரிச்சலைத் தந்தது. நேராகச் சென்று பிதாமகர் பீஷ்மரிடம் 'ஐயா. ஆசிரியர் எங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை. அவருக்கு பாண்டவர்கள் என்றால் ஒரு தனிப்பாசம் இருக்கிறது. அதுவும் தருமன் என்றால் தலையில் வைத்து ஆடுகிறார்' என்று முறையிட்டான்.

பீஷ்மருக்கு நடப்பது என்ன என்பது ஓரளவிற்குத் தெரியும். ஆனாலும் அதனைத் தானே துரியனுக்குச் சொல்வதை விட ஆசிரியர் சொன்னால் நன்று என்றெண்ணி அவனை ஆசிரியர் அழைத்துச் சென்றார்.

ஆசிரியரும் 'பரத குலத் தோன்றலே. இருவரும் எனக்கு ஒரே மாதிரி தான். ஆனால் அவர்கள் பார்வையில் தான் பிசகு இருக்கிறது. அதனால் என்னில் குறை காண்கிறார்கள்' என்றார். வீடுமரும் 'ஐயா. நீங்களே அதனை துரியனுக்குப் புரிய வைக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார்.

ஆசிரியரும் தருமனையும் துரியனையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஒரு காரியத்தைச் சொல்லி அனுப்பிவைத்தார். தருமனிடம் 'உன்னை விட கீழானவரைக் கண்டு அழைத்து வா' என்றார். துரியனிடம் 'உன்னைவிட மேலானவரைக் கண்டு அழைத்து வா' என்றார்.

சிறிது நேரம் சென்று இருவரும் தனித் தனியே வந்தனர். என்ன என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது.

தருமன்: ஐயா. நான் எல்லா இடத்திலும் தேடிவிட்டேன். எல்லோருமே என்னைவிட மேலானவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் என்னால் அழைத்து வர முடியவில்லை.

துரோணர்: உன்னை ஒப்பு நோக்கும் போது சிறு குறைகளும் உள்ளவர் யாருமே இல்லையா?

தருமன்: ஐயா. சிறு குறைகளுடன் சிலர் இருந்தார்கள். ஆனால் அவர்களின் நிறைகளை ஒப்பு நோக்கும் போது அவர்களின் குறைகள் பொருட்படுத்த முடியாத வண்ணம் இருக்கிறது.

துரோணர்: அப்படியென்றால் ஒருவர் கூடவா உன்னை விட கீழானவர் இல்லை?

தருமன்: இல்லை ஐயா.

துரோணர்: துரியா. நீ ஏன் யாரையும் அழைத்துவரவில்லை?

துரியன்: ஐயா. என்னை விட மேலானவர் யாரையும் நான் காணமுடியவில்லை. அதனால் அழைத்து வரவில்லை.

துரோணர்: உன்னைவிட நல்ல குணங்கள் உடையவர் எவருமே இல்லையா?

துரியன்: இருக்கிறார்கள் ஐயா. ஆனால் யாருமே குறையில்லாதவர்களாக இல்லை. அவர்களின் குறைகளைப் பார்க்கும் போது அவர்களின் குணங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

துரோணர்: பார்த்தாயா துரியா?! நீ எல்லாவற்றிலும் தீயதைப் பார்க்கிறாய்; அதனைப் பற்றியே பேசுகிறாய். அவன் எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்கிறான். அதனைப் பற்றியே பேசுகிறான். வருங்காலம் உன்னைப் போல் எல்லாவற்றிலும் தீயதையே கண்டு அதனையே பேசி வருபவர்களை 'துரியோதனப் பார்வை' கொண்டவர்கள் என்று அழைக்கும். அது மாறவேண்டும் என்றால் நீ மாறவேண்டும்.

***

துரியோதனனின் கதை எல்லோருக்கும் தெரியும். அவன் மாறவில்லை. 'துரியோதனப் பார்வை' கொண்டவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

***

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 24 மே 2007 அன்று இடப்பட்டது.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 24 மே 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

13 comments:

முத்துகுமரன் said...
நோய்க்கு மருந்தொன்று காண்பவன் நோயை அறியாது ஆராயாது தீர்த்திடல் இயலுமா. களைதனை நீக்கி மருந்திட்டால்தான் வருங்காலப் பயிர்தழைக்கும். பயிருக்கு அவன் இறைவன். களைக்கவன் பகைவன். ஜீவகாருண்யம் இங்கு ஒத்துவரா.

May 24, 2007 6:37 AM
--

மதுரையம்பதி said...
எதையோ நினைவுபடுத்திவிட்டது குமரன்....

May 24, 2007 7:07 AM
--

வெட்டிப்பயல் said...
உலகத்தில நம்மவிட யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை... அதனால எனக்கு தெரிஞ்சி ரெண்டு பேர் பண்ணதும் சரி தான் ;)

May 24, 2007 8:30 AM
--

Boston Bala said...
கதையில் நான் கண்ட பார்வைகள் :)

1. துரோணர்: 'இருவரும் எனக்கு ஒரே மாதிரி தான். ஆனால் அவர்கள் பார்வையில் தான் பிசகு இருக்கிறது.'

குற்றத்தை ஒப்புக்கொண்டு களையாமல், அடுத்தவர் மேல் பழிபோட்டு, சுயமறுப்பை வெளிப்படுத்தும் அதிகார ஆசிரியரின் பதில்.

2. பீஷ்மர்: 'நீங்களே அதனை துரியனுக்குப் புரிய வைக்கவேண்டும்'

தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிக்கத் தெரியாமல், பழி சுமத்தப்பட்டவனையே நியாயம் வழங்க நியமித்து, தட்டிக்கழித்துத் தப்பிக்கும் முதிய செயலவற்றவரின் செய்கை.

3. தருமர்: 'எல்லோருமே என்னைவிட மேலானவர்களாகத் தான் இருக்கிறார்கள்.'

சொன்ன வேலையில் ஈடுபாட்டுடன் கடமையாற்றி, தேவையானதை கண்டுபிடிக்க இயலாத, எல்லாவற்றுக்கும் சப்பைக்கட்டு கற்பிக்கும் வேடதாரி துரியோதனப் பார்வை.

ஏதோ என்னாலான வழக்காடு மன்றம் ;)

பிகு.: சமீபத்தில் விசு படம் எதுவும் பார்க்கவில்லை.

May 24, 2007 9:36 AM
--

G.Ragavan said...
இது மிகவும் சிக்கலான வழக்கு. நல்லது கெட்டது இரண்டையும் பார்த்து முடிவெடுப்பதுதான் சரி. எனக்கு இருவர் செய்ததும் தவறாகப் படுகிறது.

May 24, 2007 11:22 AM
--

குமரன் (Kumaran) said...
நல்ல கருத்து முத்துகுமரன். சிவபெருமானின் அழித்தல் தொழிலைப் பற்றி விளக்கும் போது இப்படித் தான் சொல்வார்கள்.

May 24, 2007 1:04 PM
--

குமரன் (Kumaran) said...
இந்தக் கதையை எழுதும் போது உங்களையும் செல்வனையும் தான் நினைத்துக் கொண்டேன் பாலாஜி. அவர் தானே தன்னைப் புதிய கடவுள் என்று அழைத்துக் கொள்பவர். உங்கள் பதிவில் யாரும் என்னை விட உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்று சொல்பவர். :-)

May 24, 2007 1:08 PM
--

குமரன் (Kumaran) said...
துரியோதனப் பார்வைக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் பாபா. :-) ரொம்ப நல்லா எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். :-)

May 24, 2007 1:09 PM
--

குமரன் (Kumaran) said...
இராகவன். அதனைத் தானே முதல் பத்தியில் சொன்னேன். எதிர் எதிர் துருவங்களாக எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்கும் போது தருமனின் பார்வை <-> துரியோதனனின் பார்வை, நாத்திகர் <-> ஆத்திகர், நல்லவர் <-> கெட்டவர் என்று தானே பிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம்?! ஆனால் உலகத்தில் அப்படியா இருக்கிறது? எல்லோரும் தருமர்களே; எல்லோரும் துரியோதனர்களே. எல்லோரும் நாத்திகரே; எல்லோரும் ஆத்திகரே. எல்லோரும் நல்லவரே; எல்லோரும் கெட்டவரே. எடுத்துக்காட்டுகள் தான் இவை. ஆங்கிலத்தில் சொல்வார்களே - He wants to see everything Black and White; but everywhere I see various shades of Grey only.

அதுவே என் கருத்தும். அதனையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.

May 24, 2007 1:12 PM
--

ஓகை said...
பார்வைக் குறை உள்ளோரை குருடு என்று அழைக்கும் மருத்துவரை நான் கண்டதில்லை. களை விளைந்திருக்கும் வயலை களைக்களம் என்றா அழைக்க முடியும்?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

.

May 24, 2007 8:35 PM
--

குமரன் (Kumaran) said...
நன்கு சொன்னீர்கள் ஓகை ஐயா. உடல்குறை உள்ளவனுக்கு முதல் தேவை மருத்துவன் மேல் நம்பிக்கை - இவன் நமக்கு நல்லது செய்கிறான் என்ற நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கை வரவழைக்காமல் பார்வைக்குறை இருப்பவரைக் குருடன் குருடன் என்று திட்டிக் கொண்டிருந்தால் அவன் மருத்துவனும் இல்லை; அப்படிப்பட்ட மருத்துவன் மேல் உடல்குறை உள்ளவனுக்கு நம்பிக்கை வரப்போவதும் இல்லை. திட்டித் தீர்ப்பதால் மன அரிப்பு வேண்டுமானாலும் தீரலாம் - திட்டுபவர்களுக்கு. ஆனால் அவன் நோய் தீர்க்கும் மருத்துவன் இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். திட்டித் திருந்தியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் திட்டுவதால் தான் நீங்கள் திருந்துகிறீர்கள் என்று தற்பெருமை மட்டுமே பேசிக் கொள்ளலாம்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். நன்கு சொன்னார் பொய்யாமொழிப் புலவர்.

May 24, 2007 8:53 PM
--

Natarajan said...
very nice story.ty

January 05, 2008 10:13 PM
--

குமரன் (Kumaran) said...
Thanks Natarajan.

January 06, 2008 8:49 AM