பாரி வள்ளல் மூவேந்தர்களின் சதியால் கொல்லப்பட்ட பின்னர் பாரியின் நண்பரான புலவர் கபிலரும் பாரி மகளிரான அங்கவையும் சங்கவையும் பறம்பு நாட்டிலிருந்து கிளம்பி பறம்பு நாட்டின் வடக்கிலிருக்கும் வேளிர்களால் ஆளப்படும் நாடுகளுக்குச் சென்றார்கள். ஒவ்வொரு நாடாகச் சென்று பாரி மகளிரை அறிமுகம் செய்து அந்த நாட்டை ஆளும் வேளிரிடம் அந்த மகளை மணம் செய்து கொள்ள கபிலர் வேண்டினார். மூவேந்தர்களுக்குப் பெண் தர மறுத்து அதனால் உயிர் இழந்த பாரியின் மக்களை மணம் கொண்டு மூவேந்தர்களின் சினத்திற்கு ஆளாக அந்த வேளிர் அரசர்கள் விரும்பவில்லை. சிலர் நேரடியாகவும் பலர் மறைமுகமாகவும் தங்கள் இயலாமையை கபிலரிடம் சொல்லிவிட்டனர். அப்படி ஒவ்வொரு நாடாக வரும் போது கபிலரும் பாரி மகளிரும் விச்சிக்கோ என்னும் வேளிர் அரசன் ஆளும் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அரசவைக்கு அங்கவையையும் சங்கவையையும் அழைத்துக் கொண்டு வந்து அரசனுக்கு அறிமுகப்படுத்துகிறார் கபிலர்.
***
"மன்னவா. உன்னுடைய மலை மிகவும் குளிர்ச்சி உடைய மலை. மிகவும் உயர்ந்த மலை. நீ தாங்கிய வேலோ பகைவர்களின் ஊனை உண்டு நெருப்பு போல் ஒளி வீசும் தன்மை கொண்டது. பெரிய யானைகளை உடையவன் நீ. விச்சிக்கோவே. இந்தப் பெண்களைப் பற்றிக் கூறுகிறேன் கேள். நாத்தழும்பேறும் அளவிற்குப் பாடும் பாணர்களுக்குப் பல பரிசில்களைக் கொடுக்கும் வள்ளல்கள் உண்டு. அப்படி பாடாமல் போனாலும் நலிந்து நிற்கிறதே என்று முல்லைக்குத் தேர் தந்தானே பாரி அவனுடைய மக்கள் இவர்கள். நான் ஒரு புலவன்; அந்தணன். யான் உனக்குத் தர நீ இவர்களை மணம் முடித்துக் கொள்வாய். அவர்கள் தந்தை விரும்பியது போல் நீ வீரம் மிகுந்த வேளிர் குலத்தில் உதித்தவன். அதனால் இந்தப் பெண்களை மணக்கத் தகுதியுடையவன்.
பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந்துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
மழை மிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடுவேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே
இவரே பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே"
விச்சிக்கோன் கபிலரின் பாடலையும் வேண்டுதலையும் கேட்டு தன் அவையோருடன் கலந்து பின்னர் பாரி மகளிரை மணக்க மறுத்துவிட்டான். கபிலரும் மன வருத்தத்துடன் இருங்கோவேளின் ஊருக்குச் சென்று அவனிடம் பேசுகின்றார்.
"வாருங்கள் புலவரே. தங்களைப் பார்த்தால் பாணராகத் தெரியவில்லை. இந்தப் பெண்களைப் பார்த்தாலும் விறலியர்களாகத் தெரியவில்லை. தாங்கள் யார்? இங்கே வந்த காரியம் என்ன?"
"மன்னவா. இவர்கள் யார் என்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள். இரந்து வந்தவர்களுக்கு ஊர்களையே பரிசாகக் கொடுத்தவனும் வாடி நின்ற முல்லைக்கொடிக்குத் தன் தேரைத் தந்தவனும் என்றும் அழியாத புகழை உடையவனும் ஆன பறம்பு நாட்டரசன் பாரியின் மக்கள் இவர்கள். நான் அவர்களின் தந்தையின் தோழன். அதனால் அவர்கள் என் மக்களும் ஆவர். நான் ஒரு அந்தணப் புலவன். என் பெயர் கபிலன்"
"பறம்பு வேந்தர் பாரியின் மக்களா? மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இங்கே வந்ததன் நோக்கம் என்ன கபிலரே?"
"மன்னவா. நாற்பத்தொன்பது தலைமுறைகளுக்கு முன் துவரைப்பதியை ஆண்டு பெரும் புகழ் கொண்ட வேளிர்களின் வழி வந்தவனே. துவரையை ஆண்ட மாலின் வழி வந்த நீயும் புலியைக் கொன்று புலிகடிமால் என்று பெயர் பெற்றாய். வேளிர் குலத்திற்கு ஏற்பத் தேடி வரும் பாணர்களுக்கு எல்லாம் பரிசில்களை வாரி வழங்கும் வள்ளலே. இருங்கோவேளே. இந்தப் பெண்களை நான் இங்கே அழைத்து வந்த காரணத்தைக் கூறுகிறேன் கேள். இவர்கள் தந்தை பெரும் புகழ் கொண்ட வேளிர் குலத்துதித்தவர்க்கே இந்தப் பெண்களை மணம் முடித்துத் தர விரும்பினான். அவன் விரும்பிய படி பெரும் புகழ் கொண்ட வேளிர் குலத்தில் பிறந்த உனக்கு நான் தர இவர்களை நீ மணந்து கொள்ள வேண்டும்.
இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊர் உடன் இரவலர்க்கு அருளி தேர் உடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமா பாரி மகளிர் யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா வீகைத் துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங்கோவே
ஆண்கடன் உடைமையில் பாண் கடனாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான் தர இவரைக் கொண்மதி வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே"
"ஐயனே. தாங்கள் சொல்வதெல்லாம் வியப்பாக இருக்கிறது. பாரி வள்ளல் வேந்தர்கள் சதியால் இறந்ததை அறிந்துள்ளேன். பாரி மன்னர் பெண் தர மறுத்ததால் படை எடுத்து பழி தீர்த்தனர் வேந்தர்கள் என்றும் அறிந்துள்ளேன். அந்தப் பெண்களை இன்று நீங்கள் என் அவைக்கு அழைத்து வந்திருப்பதைக் கண்டு என் மனம் துணுக்குறுகிறது. தங்களுக்குத் தகுந்த பதிலை என் அவை முன்னவர்களிடம் கலந்து கொண்டு தருகிறேன். அது வரை தாங்கள் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்"
***
பாடற்குறிப்புகள்:
இரு பாடல்களும் பாடாண் திணையிலும் (பாடப்படுபவரது பெருமைகளைக் கூறுதல்) பரிசில் துறையிலும் (பரிசை வேண்டிப் பாடுவது) அமைந்திருக்கின்றன.
1. பனிவரை நிவந்த என்று தொடங்கும் பாடல் கபிலர் விச்சிக்கோ வேளைப் பாடியது. புறநானூறு 200வது பாடல்.
பொழிப்புரை: குளிர்ந்த மலையின் மீது ஓங்கி வளர்ந்த பச்சை இலையையுடைய பலா மரத்தினது கனியைக் கவர்ந்து உண்ட கரிய விரலையுடைய கடுவன் (ஆண் குரங்கு) சிவந்த வாயையுடைய தன் மந்தியொடு (பெண் குரங்கு) விற்றிருக்கும். பார்க்கும் போது மலையின் உச்சி வெகு தூரத்தில் விளங்கும். மேகங்களும் இந்த மலையின் உச்சியை அறியாமல் மலையின் இடையில் தவழ்ந்து கொண்டிருக்கும் (மலை அவ்வளவு உயரமானது). ஆனால் அந்த மலை உச்சியில் மூங்கில்கள் முழைத்துப் பரவியிருக்கும். அப்படிப்பட்ட மலையை உடையவனே. பகைவர்களின் உடலைக் கிழித்ததால் பெற்ற நிணத்தை உண்டு அதனால் செருக்கிய நெருப்பினைப் போல் ஒளிவீசிச் சுடும் தலையையுடைய வேலை உடையவன் நீ. போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு கனல் வீசும் கடிய கண்களையுடைய யானைகளைக் கொண்டவன் நீ. ஒளி வீசும் மாணிக்கங்களைக் கொண்ட வளைந்த அணிகலன்களை உடைய விச்சிக்கோவே! இவர்கள், எப்போதும் பூக்கள் பூத்துக் குலுங்கும் முல்லைக் கொடி நாத்தழும்பேறும் படி பாடாது ஆயினும் ஒலிக்கும் மணிகளையுடைய பெரிய தேரினை கொழுகொம்பாகக் கொள்க என்று கொடுத்த எல்லாத் திசைகளிலும் பரந்து ஓங்கி நிற்கும் புகழை உடைய பாரி வள்ளலின் மகளிர். நான் பரிசினை வேண்டி வந்திருக்கும் பரிசிலன். அந்தணனும் ஆவேன். நீயோ தகுந்த போர் முறைகளால் பகைவரை தாழச் செய்யும் வாளினை உடையவன். உனக்கு நான் இவர்களைத் தர நீ மணம் கொள்வாய். சினத்தால் போர் செய்து அடங்காத பகையரசர்களை அடக்கும், அளவில்லாத விளைச்சலைத் தரும் நாட்டையுடைய தலைவனே!
கடுவன் மந்தியோடு மகிழ்ந்திருப்பதைப் போல் நீ இந்தப் பெண்களுடன் மகிழ்ந்து இருக்கலாம் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.
முகம் என்ற சொல் வடசொல் என்றும் தமிழில் அந்தச் சொல் இல்லை என்றும் சிலர் கூறக் கேட்டுள்ளேன். இங்கே செம்முகம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. அதனால் இது சங்ககாலத்திலேயே இருந்த தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
2. இவர் யார் என்குவை என்று தொடங்கும் பாடல் கபிலர் இருங்கோவேளைப் பாடியது. புறநானூறு 201வது பாடல்.
பொழிப்புரை: இவர் யார் என்று வினவுவாய் ஆயின், இவர்கள், இரப்பவர்களுக்கு ஊர்களையே உடனே அருளி தேரினை முல்லைக்கு உடனே தந்து என்றும் மறைந்து போகாத நல்ல புகழை உடைய ஒலிக்கும் மணிகளைக் கழுத்தில் அணிந்த யானைகளை உடைய பறம்பு நாட்டின் தலைவனும் நெடியவனும் ஆன பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன்; அதனால் இவர்கள் என் மகளிரும் ஆவர். அந்தணனும் புலவனும் ஆகிய நான் இவர்களைக் கொண்டு வந்தேன். நீயோ வடதிசையில் ஒரு முனிவருடைய வேள்வித்தீயில் தோன்றி உயர்ந்த நெடிய செம்பினால் ஆனது போன்ற மதிலை உடைய துவரைப் பதியை என்றும் குறையாத ஈகைக் குணத்துடன் ஆண்டவர்களின் வழியில் நான்பத்தொன்பது தலைமுறைக்குப் பின்னர் வந்திருக்கும் வேளிர்களில் சிறந்த வேளே! வெற்றியைத் தரும் போரினைச் செய்யும் அண்ணலே! தார் என்னும் மலர் மாலையை அணிந்த யானைகளை உடைய பெரிய இருங்கோவே! உன்னுடைய ஆண்மைக்கு ஏற்ற கடமையாக பாணர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எப்போதும் செய்து, தழைந்த மாலைகளைச் சூடிய புலிகடிமாலே! நான் தர இவர்களை மணம் கொள்வாய்! வானத்தால் கவிழப்பட்டும் பெரும்கடல்களால் ஆடையைப் போல் சூழப்பட்டும் இருக்கும் இந்த உலகத்தில் அருமையான வலிமையையுடைய பொன்விளைக்கும் மிக உயர்ந்த மலைக்குத் தலைவனே1 வெற்றி வேலுடன் பகைவர்கள் நடுங்கும் படையைக் கொண்ட கேடில்லாத நாட்டினை உடைய தலைவனே!
இரு பாடல்களிலும் 'நான் புலவன். பரிசிலன். அந்தணன்' என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் கபிலர். பெண் கேட்டு வரும் போது அதனை ஏற்றுப் பெண் கொடுப்பது முறையாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. அந்த முறையை மீறி இப்போது தானே வந்து பெண்களைத் தருகிறேன்; பெற்றுக் கொள் என்று வேண்டி நிற்பதால் இது பரிசில் துறை ஆயிற்று. அப்படிப் பரிசில் வேண்டுவதால் தன்னைப் பரிசிலன் என்றும் புலவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வேறெங்கும் அந்தணன் என்று சொல்லாமல் 'பெண் கொடுக்கிறேன். கொண்மதி' என்னும் போது மட்டும் தன்னை அந்தணன் என்று சொல்வதைப் பார்த்தால் 'அந்தணர் தர மன்னர் பெறுதல்' முறையுடையது என்ற குறிப்பைத் தருகிறதோ என்று தோன்றுகிறது. இங்கே அந்தணன் என்பது குணத்தால் வந்ததா பிறப்பால் வந்ததா என்ற குறிப்பு இல்லை. பலரும் பிறப்பால் வந்த பெயர் என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் துவரைப்பதி கருநாடகத்திலிருக்கும் துவாரசமுத்திரம் என்று சிலரும் துவாரகை என்று சிலரும் பொருள் கொள்கிறார்கள். தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் 'துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதிணென்மரையும் பதிணென்குடி வேளிர் உள்ளிட்டோரையும் கொண்டு போந்து' என்றும் 'மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதிணென்வகைக் குடி பிறந்த வேளிர்' என்றும் சொல்லுபவை இந்த இரு வகைக் கருத்துக்கும் துணை நிற்கிறது. துவரைப் பதி துவாரகை தான் என்று எண்ணுபவர்கள் நச்சினார்க்கினியர் சொல்லும் 'நிலங்கடந்த நெடுமுடியண்ணல்' வாமன திரிவிக்கிரம அவதாரத்தில் உலகை அளந்தவனாகக் கூறப்படும் மாயோனாகிய கண்ணன் என்று பொருள் கொள்கிறார்கள். கண்ணனின் வழி வந்தவர்களே வேளிர்கள் என்ற கருத்து அவர்களுடையது. துவரைப்பதி துவாரசமுத்திரம் என்று எண்ணுபவர்கள் நச்சினார்க்கினியர் கூறும் 'நிலம் கடந்தவர்' அகத்தியர் என்று பொருள் கொள்கிறார்கள். வடக்கிலிருந்து அகத்தியரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் வேளிர்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள். வேளிர் குடியினர் வேந்தர் குடியினரை விட காலத்தால் மூத்தவர்கள் என்ற செய்தியைக் கொண்டு பார்க்கும் போது இந்த இருவிதமான கருத்தும் சுவையாக இருக்கின்றன.
21 comments:
//வேளிர் குடியினர் வேந்தர் குடியினரை விட காலத்தால் மூத்தவர்கள் என்ற செய்தியைக் கொண்டு பார்க்கும் போது இந்த இருவிதமான கருத்தும் சுவையாக இருக்கின்றன.//
கட்டுரை, கருத்து, பாடல், பொழிப்புரை எல்லாமே சுவையாக இருக்கின்றது. மெளனமாய்ப் படித்துவிட்டுப்போவது ஒன்றே ஒரே சிறந்த வழி, இதுக்கு என்ன கருத்துச் சொல்லுவது? புரியலை! வேளிர் குடியைப் பற்றிய தகவல் புதியது!
அப்படித் தான் கீதாம்மா நிறைய பதிவுகள் இருக்கின்றன. ஆனாலும் நானும் உங்களைப் போல் 'வந்துட்டுப் போனேன்'ன்னு உங்க பதிவுகள்ல கட்டாயம் சொல்லிட்டு வர்றேன். சரி தானே? :-)
சூப்பர் குமரன்.....எப்படித்தானிந்த புலமை தங்களுக்கு வாய்த்ததோ....அழகாக பொருள் சொல்லியிருக்கீங்க...2 முறை படித்தேன்...தெரிந்து கொண்டேன்.
ஆமாங்க முகம் என்பது 2 மொழியிலும் இருக்கும் சொல்தான் போல..'மந்தஸ்மித முகம்' அப்படின்னெல்லாம் சொல்றாங்களே!
குமரன்...வந்தாச்சே! :-))
//முகம் என்ற சொல் வடசொல் என்றும் தமிழில் அந்தச் சொல் இல்லை என்றும் சிலர் கூறக் கேட்டுள்ளேன்//
என்னாது முகம் வடசொல்லா???
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் "முகம்"
முகம்...அதே பொருளில்...(தேவஸ்ய முகம் ஆசீர்) வடமொழியில் வந்தாலும்...
முகம் என்பதும் பழந்தமிழ்ச் சொல்லே! இரு மொழிகளிலும் ஒரே சொல் ஒரே பொருள் என்பது coincedence-aaa என்பது ஆய்வுக்குரியது!
பாடலின் பொழிப்புரை எல்லாம் அருமையாச் சொல்லி இருக்கீங்க குமரன்!
//அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே//
உம்ம்ம்ம்...பாவம் கபிலரின் நிலை! எப்படி எல்லாம் பாட வேண்டியிருக்கு பாருங்கள்!
யாருக்கும் தாழாதவர்...நட்புக்காக விச்சிக்கோன் போன்ற சிறு மன்னர்களை எல்லாம் இப்படி விளிக்க வேண்டிய கட்டாயம்!
//அந்தப் பெண்களை இன்று நீங்கள் என் அவைக்கு அழைத்து வந்திருப்பதைக் கண்டு என் மனம் துணுக்குறுகிறது//
என் மனமும் தான்!
கபிலருக்கு என்னவாயிற்று?
பொதுவாக மணமுடிக்கும் பெண்களை இப்படி எல்லாமா சபை சபையாக அழைத்துச் செல்வார்கள்? கபிலர் மட்டும் சென்று பேசி...பின்னர் பாரி மகளிரைக் காண வரச் செய்திருக்கலாமே!
அந்தச் சிறுமியரை இப்படி அவை அவையாக அழைத்துச் சென்று ஏமாற்றம் மிஞ்சி இருக்க வேண்டாம்!
அக்கால நிலை...முதலில் மகன், மகள் பார்க்க வருவதா...இல்லை மகள் மகன் பார்க்க வருவதா?
//அக்கால நிலை...முதலில் மகன், மகள் பார்க்க வருவதா...இல்லை மகள் மகன் பார்க்க வருவதா?//
எதுவாயிருந்தாலும் பெண்களை வருந்தச் செய்த கபிலருக்கு ஒரு எதிர்ப்பை தெரிவிச்சுடுங்க குமரன். :)
புலமை எல்லாம் ஒன்றுமில்லை மௌலி. நீங்கள் சொன்னதைத் தான் நானும் செய்தேன். உங்களைப் போலவே பொறுமையா இணையப் பல்கலைகழகத்துல இருக்கிற உரையைப் படிச்சு அதை வச்சு தான் இந்தத் தொடரை எழுதிக்கிட்டு இருக்கேன். பாரி வள்ளல் கதை வேணும்னா வேறெங்கேயும் போக வேண்டாம். புறநானூறு முழுக்கதையையும் தொகுத்து வச்சிருக்கு. :-)
முகம் தமிழில் இல்லை; வடமொழியிலிருந்து வந்து தமிழில் புழங்குகிறது என்று முன்பொரு முறை தமிழைப் பற்றி பேசும் போது யாரோ சொன்னார்கள். அதனைத் தான் இங்கே குறித்திருக்கிறேன்.
ஒரு வள்ளலின் பெண்களுக்கு மணம் செய்ய இவ்வளவு தூரம் அல்லல் பட்டுள்ளாரே!!
நல்ல விளக்கங்கள். நன்று குமரன்.
// முகம்...அதே பொருளில்...(தேவஸ்ய முகம் ஆசீர்) வடமொழியில் வந்தாலும்...
முகம் என்பதும் பழந்தமிழ்ச் சொல்லே! இரு மொழிகளிலும் ஒரே சொல் ஒரே பொருள் என்பது coincedence-aaa என்பது ஆய்வுக்குரியது! //
வடமொழிக்கு வாய் இல்லை. தமிழுக்கு முகம் இல்லை என்று எங்கோ படித்திருக்கிறேன். அது உண்மையா என்பது வேறு விஷயம். ஆனால் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.
நானும் உங்களைப் போல் 'வந்துட்டுப் போனேன்'ன்னு உங்க பதிவுகள்ல கட்டாயம் சொல்லிட்டு வர்றேன். சரி தானே? :-)
அட, வந்துட்டு எங்கே போனேன், அதான் பிரமிச்சுப் போயிட்டேன்னு சொன்னேன் இல்லை! :P
வந்தது தான் உங்க ஆர்குட் பக்கத்துலயே பார்த்து தெரிஞ்சுக்கிட்டேனே இரவிசங்கர். வாங்க வாங்க. :-)
//வடமொழிக்கு வாய் இல்லை. தமிழுக்கு முகம் இல்லை என்று எங்கோ படித்திருக்கிறேன்.//
புதசெவி....
இராகவன் சொன்னது தான் இரவிசங்கர். முன்பு தனித்தமிழ் பற்றிய விவாதம் 'சொல் ஒரு சொல்' பதிவில் வந்த போது யாரோ அப்படி சொன்னார்கள். அதனைத் தான் குறிப்பிட்டேன்.
வடமொழிக்கு வாய் இல்லை; தமிழுக்கு முகம் இல்லை - இது தான் அப்போது சொல்லப்பட்டது. வடமொழியில் 'வாய்' என்பதற்குத் தனியாக சொல் இல்லை. முகம் என்பது சில இடங்களில் Faceஐக் குறிக்கும்; சில இடங்களில் Mouthஐக் குறிக்கும். ஏனோ முகம் என்பது வடமொழிச் சொல் மட்டுமே என்று எண்ணி அது தமிழுக்கு வடமொழியிலிருந்து வந்தது என்ற கருத்து இருக்கிறது. அதனைத் தான் இராகவன் சொன்ன சொற்றொடர் குறிக்கிறது. ஆனால் வடமொழியில் இரண்டிற்கும் சொற்கள் இல்லாமல் 'முகம்' என்ற தமிழ்ச்சொல்லை அந்த இரண்டிற்கும் புழங்கத் தொடங்கியிருக்கலாம். விதப்பாக 'வாய்', 'முகம்' என்ற இரு சொற்கள் தமிழில் இருப்பதால் அப்படி நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் தெளிவு இல்லை.
இதில் இன்னொரு சுவையான செய்தி என்னவென்றால் பிராகிருத மொழிகளில் ஒன்றான சௌரசேனியின் வழி வந்த சௌராஷ்ட்ரத்திலும் இப்போது வாய், முகம் இரண்டிற்கும் ஒரே சொல்லைத் தான் புழங்குகிறார்கள். 'தோண்' என்பதே அந்தச் சொல். சில நேரம் விதப்பாகச் சொல்ல வேண்டி என் அத்தையும்(மாமியாரும்) என் மகளும் (அண்மைக்காலமாக) 'சாப்பிடும்' என்ற முன்னொட்டோடு வாயைக் குறிக்கிறார்கள். நானும் என் மனைவியும் பேசும் போது அப்படி முன்னொட்டு இட்டதில்லை; இடத்திற்கேற்ப பொருள் கொண்டோம் போலிருக்கிறது. :-) சௌராஷ்ட்ரத்தில் வாய், முகம் இரண்டிற்கும் தனித்தனிச் சொற்கள் முன்பு இருந்தனவா என்று நாயகி சுவாமிகளின் பாடல்களிலும் மற்ற இலக்கியங்களிலும் பார்க்க வேண்டும்.
குறு மன்னர்களோ பெரிய வேந்தர்களோ போற்றிப் பாடுவதில் தமிழ்ப்புலவர்கள் எந்த குறையும் வைக்கவில்லை இரவிசங்கர். அண்மையில் பக்தி இலக்கியங்களைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது தான் நினைவிற்கு வருகிறது. பக்தி இலக்கியங்களில் இறைவனை எப்படி எல்லாம் புகழலாம் என்பதற்குச் சங்கப் பாடல்கள் ஒரு வழிமுறை வகுத்துக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். :-)
இந்தப் பாடல்களில் 'சுட்டிக் காட்டி' பாரி மகளிரை அறிமுகப்படுத்துவது போல் இருப்பதால் அந்தப் பெண்களையும் அரசவைக்கு அழைத்துச் சென்றார் கபிலர் என்று எழுதியிருக்கிறேன். சீட்டுக்கவியாகவும் எழுதி அனுப்பியிருக்கலாம். அப்படி செய்தார் என்றால் வேறெங்கோ (சத்திரத்திலோ மாளிகையிலோ) தங்கியிருந்து அறிமுகத்தை எழுதி அனுப்பியதாகக் கொள்ளலாம்.
உங்கள் கடைசிக் கேள்விக்குப் பதில் துறை விளக்கத்தில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.
//இரு பாடல்களிலும் 'நான் புலவன். பரிசிலன். அந்தணன்' என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் கபிலர். பெண் கேட்டு வரும் போது அதனை ஏற்றுப் பெண் கொடுப்பது முறையாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. அந்த முறையை மீறி இப்போது தானே வந்து பெண்களைத் தருகிறேன்; பெற்றுக் கொள் என்று வேண்டி நிற்பதால் இது பரிசில் துறை ஆயிற்று. அப்படிப் பரிசில் வேண்டுவதால் தன்னைப் பரிசிலன் என்றும் புலவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.//
மௌலி. உங்கள் எதிர்ப்பைக் கபிலரிடம் காட்ட வேண்டுமா என்னிடமா என்று தெரியவில்லை. நான் அவர் பாடல்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். இரவிசங்கருக்குச் சொன்ன பதிலில் இருப்பது போல் வேறு மாதிரியாகவும் எழுதியிருக்கலாம்.
ஆமாம் யோகன் ஐயா. வேந்தர்களுக்குப் பெண் தரேன்; வேளிர்களுக்கு மட்டுமே பெண் தருவேன் - என்ற கொள்கையால் பாரி வள்ளலின் மக்களுக்கும் இந்த நிலை வந்தது போலும். ஆனால் மனம் தளராமல் 'உடுக்கை இழந்தவன் கை போல' கபிலர் வேளிர் வேளிராகச் சென்று பார்த்து கடைசியில் ஒரு வேளிருக்கே இந்தப் பெண்களை மணம் முடித்துத் தருகிறார். சரியோ தவறோ நண்பனின் விருப்பமே தன்னை வழிநடத்தும் என்றிருந்திருக்கிறார் இந்தப் பெருமகன்.
நன்றி இராகவன். ஆமாம். நீங்கள் சொன்ன சொற்றொடரைத் தான் நானும் குறிப்பிட்டேன்.
அண்மைப் பின்னூட்டங்களைப் பார்த்து புதசெவி வியாழசெவி ஆகியிருக்குமே மௌலி. ஆனதா? :-)
மீண்டும் அருமையான விளக்கங்களுடன் அழகான பாடல்கள்..அந்தணர் விளக்கம் மாறுபட கோணத்தில் இருக்கிறது..
நன்றி பாசமலர்.
Post a Comment