Thursday, April 17, 2008

கோளறு பதிகம் தோன்றிய கதை

'அப்பரே. அடியார் குழாத்தில் இருந்து ஐயனை வணங்குவது மிக மிக அருமையாக இருக்கிறது. தாங்கள் அடியேனைத் தேடி வந்ததும் நாம் இருவரும் இந்த திருவெண்காட்டுத் திருத்தலத்தில் இருந்து மாதொரு பாகனை வணங்கி வாழ்த்துவதும் எல்லாம் ஐயனின் திருவருளே. நாளெல்லாம் இப்படியே சென்றுவிடக் கூடாதா என்று இருக்கிறது நாவுக்கரசப் பெருமானே!'.

'முற்றிலும் உண்மை காழிப்பிள்ளையாரே. நாம் இருவரும் சேர்ந்து அவன் புகழைச் செந்தமிழில் பாடவேண்டும் என்பது ஐயனின் ஆவல் போல் இருக்கிறது. அதனால் தான் நம்மை சேர்த்துவைத்திருக்கிறான்'.

'திருநாவுக்கரசப் பெருமானே. அடியார் குழாம் என்று நான் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டேன். கிடைத்தற்கரிய பேறல்லவா எனக்குக் கிடைத்திருக்கிறது. நற்றுணையாவது நமச்சிவாயமே என்று கல்லைக் கட்டி கடலில் தள்ளிய போதும், சுண்ணாம்பு காளவாயில் வீசப்பட்டப்போதும் இறைவன் திருநாமத்தைச் சொல்லி அந்தத் துன்பங்களில் இருந்தெல்லாம் எந்த வித குறையும் இன்றி வெளிவந்து அரன் நாமத்தின் பெருமையை உலகறியச் செய்த தங்களின் அன்பு அடியேனுக்குக் கிடைத்தது என் பெரும் பாக்கியம்.'

'சம்பந்தப் பெருமானே. அடியேன் மீதுள்ள அன்பினால் தாங்கள் என்னை உயர்த்திப் பேசுகிறீர்கள். அம்மையப்பனை நேரே கண்டு உமையன்னையின் திருமுலைப்பாலை அவளே தர உண்டு திருஞானசம்பந்தர் என்ற திருப்பெயரைப் பெற்று இந்த சின்ன வயதில் ஊர் ஊராய் போய் ஐயனைப் பற்றி அழகான தமிழ்ப் பாடல்கள் பாடி வரும் தங்கள் பெருமையே பெருமை. தாங்கள் வெயிலில் வெகுதூரம் நடக்கக் கூடாது என்று ஐயனே தங்களுக்கு முத்துப்பல்லக்கும் முத்துப்பந்தலும் சிவகணங்களின் மூலம் தந்தாரே. என்னே அவன் அருள்! என்னே தங்கள் பெருமை!'.

அடியார் ஒருவர் குறிக்கிட்டு, 'பெருமானே. மதுரையில் இருந்து மகாராணி மங்கையர்கரசியாரிடமிருந்தும் அமைச்சர் குலச்சிறையாரிடமிருந்தும் செய்தி வந்துள்ளது', என்று கூறி ஒரு ஓலையை சம்பந்தரிடம் தருகிறார். அதனைப் படித்துவிட்டு காழிப்பிள்ளையார் அப்பரைப் பார்த்து

'ஐயனே.பாண்டியன் தேவியாரும் குலச்சிறையாரும் அடியேனை மதுரையம்பதிக்கு வந்து ஆலவாய் அரசனின் ஆலய தரிசனம் செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஓலையைப் பார்த்தவுடன் உடனே சென்று அன்னை அங்கயற்கண்ணியுடன் அமர்ந்திருக்கும் திருஆலவாயானைப் பார்க்கவேண்டும் போல் ஆவல் கூடுகிறது'.

திருநாவுக்கரசர் ஒன்றுமே சொல்லாமலும் முகவாட்டம் அடைவதையும் பார்த்து, 'பெருமானே. ஏன் தயங்குகிறீர்கள்? உடனே திருஆலவாய்க்குச் செல்லவேண்டும் என்று என் மனம் பொங்குகிறது. ஆனால் தாங்கள் எதையோ எண்ணிக் கலங்குவதாய்த் தோன்றுகிறது. என்னவென்று தயைசெய்து சொல்லுங்கள்'.

'ஒன்றும் இல்லை பிள்ளையாரே. பாண்டியன் சமணனாய் மாறிவிட்டான். மதுரையில் சமணர் ஆதிக்கம் அளவில்லாமல் போய்விட்டது என்று கேள்விப்பட்டேன். என் இளம்வயதில் சமணரால் அடியேன் அடைந்த துன்பங்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்திருக்கும். சிறு பிள்ளையான தாங்கள் மதுரைக்குச் சென்றால் அந்த சமணர்களால் ஏதாவது ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன். அதனால் தாங்கள் மதுரைக்குச் செல்லவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்'.

'அப்பரே. என் தந்தையாரைப் போன்ற அன்பு என் மேல் தங்களுக்கு இருப்பதால் தான் அடியேன் உங்களை அப்பர் என்று அழைத்தேன். உங்களுக்கு சமணர்களால் விளைந்த துன்பங்களெல்லாம் எந்த இறைவனின் திருவருளால் விலகியதோ அதே இறைவன் திருவருள் அடியேனையும் காக்கும் என்பதனை மறந்து கலங்குகிறீர்களே. தாங்கள் இப்போது கலங்குவதைப் பார்க்கும் போது நான் உங்களை அப்பர் என்று அழைத்தது மிகச் சரி என்று தெளிவாகிவிட்டது. என்னை தயைசெய்து தடுக்கவேண்டாம்.'

'அது மட்டும் இல்லை ஐயனே. இன்று நாளும் கோளும் சரியில்லை. அதனால் இன்று நீங்கள் கிளம்பி மதுரைக்குச் செல்லாமல் பிறிதொரு நாள் சென்றால் மிக்க நலமாகும் என்று அடியேன் எண்ணுகிறேன்'.

'அப்பரே. நாளும் கோளும் அடியார்க்கு என்றும் மிக நல்லவை என்று தாங்கள் அறியாததா. வேயுறு தோளி பங்கன் ....'

---------------

இப்படி தொடங்கியது தான் 'கோளறு பதிகம்' என்னும் இந்தப் பத்துப் பாடல்களும். பதிகப் பொருளை அடுத்தப் பதிவிலிருந்து பார்க்கலாம்.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 01 ஏப்ரல் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

15 comments:

Merkondar said...
//திருஆலவாய்//
என்றால் மதுரை தானே ஏன் அப்பெயர் வந்தது?

April 01, 2006 5:05 PM
--

Sam said...
உங்கள் முயற்சிக்கு எழுத்துக்கு நல்வாழ்த்துக்கள்.
மதுரை என்ன சபை, மறந்து விட்டது.
அன்புடன்
சாம்

April 02, 2006 6:02 AM
--

G.Ragavan said...
குமரன்....கோளறு பதிகம்....நாளும் கோளும் வினையும் அறப் பாடிய பதிகம். நல்லோர் நாடிய பதிகம். சான்றோரும் ஆன்றோரும் பாடிய பதிகம். தீமைகள் எழுந்து ஓடிய பதிகம். அதைத் தங்கள் விளக்கத்தில் கேட்கப் பேறு கொண்டோம். நம சிவாய வாழ்க.

April 02, 2006 10:10 AM
--

G.Ragavan said...
வாழ்த்துச் சொல்லி விட்டேன் குமரன். இப்பொழுது கொஞ்சம் இடிப்பு.....முன்பே சொன்னதுதான்...ஏற்கனவே தொட்டவை..முழுதாக சொல்லி விட்டவை எனச் சொல்லாத வகையில் இந்தப் பதிவு வந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்.

April 02, 2006 10:11 AM
--

சிவமுருகன் said...
நல்ல ஆரம்பம்.

இதை படிக்கும் சமயம் நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் பொழுது (1992) ஒளிபரப்பப்பட்ட நடிகர் மனோகர் அவர்களின் 'கோளாறு பதிகம்' நாடகம் நினைவில் வருகிறது.

April 02, 2006 10:12 PM
--

குமரன் (Kumaran) said...
ஆம் என்னார் ஐயா. திருவாலவாய் என்றால் மதுரையம்பதி தான். திருவிளையாடல் புராணத்தில் இந்த பெயர் வந்த நிகழ்ச்சியைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஒரு முறை மதுரை மாநகரின் எல்லைகளைப் பற்றிய சர்ச்சை வந்த போது ஐயனின் ஆணைப்படி வாசுகி பாம்பு மதுரை நகரை முற்றுகையிட்டு எல்லைகளைக் காட்டியதாம். ஆலமாகிய பாம்பினால் எல்லை வகுக்கப் பட்டதால் மதுரைக்குத் திருவாலவாய் என்ற பெயர் வந்ததாம்.

April 04, 2006 7:44 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சாம். மதுரையில் உள்ளது வெள்ளியம்பலம். பாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க ஐயன் கால் மாறி ஆடிய இடம்.

April 04, 2006 7:49 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன்.

உங்கள் கேள்விகளுக்கு ஏற்கனவே விளக்கமாக நான் பதில் சொல்லிவிட்டேனே. இந்த வலைப்பூவில் இருக்கும் 'முதல் வணக்கம்' பதிவின் பின்னூட்டங்களில் பாருங்கள்.

http://kolarupathikam.blogspot.com/2006/02/blog-post.html

April 04, 2006 7:51 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன். நான் நடிகர் மனோகரின் 'கோளறு பதிகம்' நாடகத்தைப் பார்க்கவில்லையே. அதிலும் இங்கு சொன்னது போல தான் வருமா?

April 04, 2006 7:54 AM
--

சிவா said...
ஆஹா! குமரன் மறுபடி கதை சொல்ல தொடங்கிட்டாரு..இனி கதை படிக்கணும் என்றால் இங்கே வந்து விடவேண்டியது தான்..சரி குமரன்! 'இப்படி தொடங்கியது தான்' என்று மொட்டையாக முடிச்சிட்டீங்க..எனக்கு புரியலையே..எப்படி தொடங்கியது..கொஞ்சம் விளக்குங்கள்.

April 05, 2006 7:50 PM
--

சிவமுருகன் said...
ஆமாம் குமரன்,
அதிலிருந்து தான் சில வசனங்களை போட்டீர்கள் என்று நினைத்தேன். நல்ல நாடகம், கோப்பெருந்தேவி முதலில் சம்பத்தரை பார்க்க வருவார், பிறகு, அப்பரும் - சம்பத்தரும் பல விஷயங்களை பேசிக்கொள்வர், பிறகு நிறைய எடுத்துக்காட்டுகளுடன் கோளாறு பதிகத்தை சம்பந்தர் பாடுவார்.

April 06, 2006 2:44 PM
--

குமரன் (Kumaran) said...
சிவா. கதை இத்துடன் முடிந்து விட்டது. இப்படி திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பேசிக் கொண்டிருக்கும் போது சம்பந்தர் பாடிய பாடல்கள் தான் இந்தக் 'கோளறு பதிகம்' என்னும் பத்துப் பாடல்களும். இப்போது புரிகிறதா? இல்லை இன்னும் மொட்டையாக முடிந்துவிட்டதாய்த் தான் தோன்றுகிறதா?

April 07, 2006 9:25 PM
--

குமரன் (Kumaran) said...
இல்லை சிவமுருகன். நான் அந்த நாடகத்தைப் பார்த்ததில்லை. எழுதத் தொடங்கி தானாகத் தோன்றியவற்றை எழுதிக் கொண்டு வந்தேன்.

April 07, 2006 9:27 PM
--

manu said...
Kumaran,1962 WAS THE YEAR. SRI paramaachaariyaar asked everyone to recite Kolaru pathikam.
since we were young,we could memorise these songs. Ippothu Neengal urai (puriyumpad)ezhuthi ,arambithu vaitheerkal.added advantage is ,that I cannot refer back to any movie or drama. adhanaal ADIYAARUKKU AVAI NALLAVE!!! friday morning reading kolarupathikam does feel great.thank you.

April 20, 2006 6:23 PM
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி மனு அவர்களே. பரமாச்சாரியர் இந்தப் பதிகத்தைப் படிக்கச் சொன்னதாய் நானும் படித்திருக்கிறேன்.

April 21, 2006 8:24 PM