Sunday, April 27, 2008

கிழவன்

யாரு யாரு இந்தக் கிழவன் யாரு?
நாரு நாரு இது தேங்கா நாரு!

இந்தப் பாட்டு தெரியாதவர் யார்? குரு சிஷ்யன் படத்தில் கிழவன் வேடத்தில் வருகின்ற ரஜினியைப் பார்த்து பிரபு பாடுகின்ற பாடல். கிழவனென்றால் அத்தனை இளப்பம்! அதனால்தான் பாருங்கள், பாட்டின் முதல் வரியில் கிழவர் என்று கூடச் சொல்லாமல் கிழவன் என்று ஒருமையில் அழைக்கிறார் பிரபு. இரண்டாவது வரிக்கு வருவோம். தேங்கா நாரு! இது அந்தக் கிழவனின் வயதுக் குறிப்பு. வயது முதிர்ந்த காரணத்தால் வளர்ந்த தாடி வெளிரிப் போய் வெண்ணிறமாய் இருக்கிறது. அதையும் கிண்டலடிக்கிறார் பிரபு.

நல்ல வேளை நக்கீரர் இங்கே இல்லை. இருந்திருந்தால் பிரபுவை ஒரு கை என்ன, இரண்டு கைகளும் பார்த்திருப்பார்? சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்? (இதுவும் ரஜினி படப் பாட்டுதானே!) கிழவனுக்குத் தாடி இருக்கலாம்! அவனுக்கு வெண்ணிறத் தாடி இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்பார் நக்கீரர். (நாகேஷ் திருவிளையாடல் படத்தில் சொன்னது நினைவிற்கு வருகிறது. உம்மைப் போல்...இல்லை நீர் ஒருவரே போதும். உலகம் உருப்படும்.) நக்கீரர் நம்மையெல்லாம் குழப்பவில்லை. அவர் சொல்ல வருவது என்னவென்றால், கிழவன் என்பவன் வயது முதிர்ந்தவனாக இருக்க வேண்டியதில்லை!

குழப்பமில்லை என்று கூறிவிட்டு குழப்பினால் எப்படி? நக்கீரர் சங்கப் புலவர். அதிலும் செண்பகப் பாண்டியனின் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலமைப் புலவர். ஈசருடன் நேருக்கு நேர் வாதிட்டு வென்றவர். அவர் தவறாகச் சொல்வாரா? எதனால் அப்படிச் சொல்கிறார் என்று நாமும் சற்று சிந்திக்க வேண்டும். கிழவன் என்ற சொல்லுக்கு அன்றைக்குப் பொருளே வேறு. இன்றைக்கு அதன் பொருள் வேறு. அன்றைய பொருளுக்கு இன்றைக்கு ஒரு சொல் இருக்கிறது. அது தலைவன். இன்றைக்குத் தலைவர்கள் எல்லோரும் கிழவர்களாய்த்தானே இருக்கிறார்கள். அப்படி வந்ததுதான் கிழவன் என்ற சொல்லுக்கு முதியவர் என்ற பொருள்.

இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர்ச் சோலைமலை கிழவோனே!
இந்த இரண்டு அடிகளும் நக்கீரரின் திருமுருகாற்றுப்படையின் கடைசி இரண்டு அடிகள். இதற்கு நான் பொருள் சொல்லவும் வேண்டுமோ?

வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு திருத்தலத்தில் இறைவனுக்குக் கிழவன் என்றும் இறைவிக்குக் கிழவி என்றும் பெயர். கோயில்களில் வடமொழி நுழைந்த காலத்தில் பெயர்களை முறையே விருத்தகிரீசுவரன் என்றும் விருத்தகிரீசுவரி என்றும் மாற்றி விட்டார்கள். சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் (அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர்) அந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். பெயர்களைப் பார்த்துவிட்டு, கிழவனையையும் கிழவியையும் பாடமாட்டேன் என்று கோவித்துக் கொண்டு போய்விட்டாராம். தேவாரப் பாடல் பெற்ற தலம் என்ற பெயருக்காக இறைவனுக்கும் இறைவிக்கும் முறையே பாலகிரீசுவரர் என்றும் பாலாம்பிகை என்றும் புதுப் பெயர்களை சூட்டினார்களாம். அதன் பிறகு அந்த குரவர் அந்தக் கோயிலுக்குத் தேவாரம் பாடினாராம்.

அன்புடன்,
கோ.இராகவன்

2 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 21 ஜூன் 2006 அன்று நண்பர் இராகவனால் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

13 கருத்துக்கள்:

குமரன் (Kumaran) said...
இராகவன். சமயக் குரவர் நால்வரில் வேறு யாருக்கு அந்த உரிமை இறைவனிடம் கொள்வார்? ஐயமே இல்லாமல் அது தம்பிரான் தோழர் தான் என்று எண்ணுகிறேன். நாயன்மார்களில் நம்பி ஆரூரர் சுந்தரரும் ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வாரும் கொஞ்சம் துடுக்கானவர்கள். :-)

கிழவனுக்குப் பொருள் சொல்லக் குமரன் பதிவு தான் கிடைத்ததா? அது சரி. நான் இப்போது குமரனா? கிழவனா?

June 21, 2006 11:48 AM
--

இலவசக்கொத்தனார் said...
ராகவா,

உமது பதிவை மெச்சினோம். இனி நீர் தமிழ்க்கிழவன் என்றே அழைக்கப் பெறுவீர். உமது தமிழ்ப்பணி தொடரட்டும். நீர் வாழி பல்லாண்டு.

June 21, 2006 12:08 PM
--

பொன்ஸ்~~Poorna said...
//ஒரு திருத்தலத்தில் இறைவனுக்குக் கிழவன் என்றும் இறைவிக்குக் கிழவி என்றும் பெயர்//

திருத்தலம் - திருமுதுகுன்றம்.
சமயக் குரவர் - சுந்தரர்

பால கிரீஸ்வரர் என்ற பெயரைத் தான் கல்கி சொல்லாமல் விட்டுவிட்டார் :(

June 21, 2006 1:46 PM
--

G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
இராகவன். சமயக் குரவர் நால்வரில் வேறு யாருக்கு அந்த உரிமை இறைவனிடம் கொள்வார்? ஐயமே இல்லாமல் அது தம்பிரான் தோழர் தான் என்று எண்ணுகிறேன். நாயன்மார்களில் நம்பி ஆரூரர் சுந்தரரும் ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வாரும் கொஞ்சம் துடுக்கானவர்கள். :-) //

ஆகா...சுந்தரரா! அப்பரடிகளோ என நினைத்தேன். மறதி.

// கிழவனுக்குப் பொருள் சொல்லக் குமரன் பதிவு தான் கிடைத்ததா? அது சரி. நான் இப்போது குமரனா? கிழவனா? //

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் குமரனா? கிழவனா?

June 22, 2006 1:23 AM
--

G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
ராகவா,

உமது பதிவை மெச்சினோம். இனி நீர் தமிழ்க்கிழவன் என்றே அழைக்கப் பெறுவீர். உமது தமிழ்ப்பணி தொடரட்டும். நீர் வாழி பல்லாண்டு. //

நன்றி கொத்சு. பட்டமளித்த வெண்பாக்கிழவரே...நன்றி நன்றி.

June 22, 2006 1:24 AM
--

G.Ragavan said...
// பொன்ஸ் said...
//ஒரு திருத்தலத்தில் இறைவனுக்குக் கிழவன் என்றும் இறைவிக்குக் கிழவி என்றும் பெயர்//

திருத்தலம் - திருமுதுகுன்றம்.
சமயக் குரவர் - சுந்தரர்

பால கிரீஸ்வரர் என்ற பெயரைத் தான் கல்கி சொல்லாமல் விட்டுவிட்டார் :( //

அடடே! பொன்னியின் செல்வன். படிச்சு ரொம்ப நாளாச்சு. திரும்ப எடுத்துப் படிக்கனும். சரியா எடுத்துக் குடுத்த பொன்சுக்கு ஒரு ஓஓஓஓஓஓ!

June 22, 2006 1:26 AM
--

முத்துகுமரன் said...
பொன்ஸ் விருத்தாசலம் = திருமுதுகுன்றம்.:-) எஸ்.கே அய்யாவிற்கு திருத்தலம்தான் :-)

நல்ல சொல்லாடல் ராகவன். முன்பொருமுறை உங்களை கிழவன் என்றழைத்தது ஞாபகம் வருகிறது.

June 22, 2006 4:55 AM
--

பொன்ஸ்~~Poorna said...
முத்துகுமரன்,
விருத்தாசலம், திருமுதுகுன்றம் ரெண்டும் ஒன்று தானா? இது எனக்குத் தெரியாது..
இந்த விருத்தகிரீஸ்வரர் பேரைக் கொஞ்சம் குழப்பிகிட்டே இருந்தேன்..
ரொம்ப நன்றி :)

June 22, 2006 9:18 AM
--

தேவ் | Dev said...
எனக்குப் பிடிச்ச பலச் சொற்கள் பதிவில் இருந்தாலும் ரொம்பப் பிடிச்ச சொல்லும் இருக்கு ... அதுக்காக ராகவனுக்கு ஒரு ஸ்பெஷல் ஓ போடலாம்

June 22, 2006 9:34 AM
--

G.Ragavan said...
// முத்துகுமரன் said...
பொன்ஸ் விருத்தாசலம் = திருமுதுகுன்றம்.:-) எஸ்.கே அய்யாவிற்கு திருத்தலம்தான் :-) //

அதே அதே. சரியாக எடுத்துக் குடுத்தீர்கள் முத்துக்குமரன்.

// நல்ல சொல்லாடல் ராகவன். முன்பொருமுறை உங்களை கிழவன் என்றழைத்தது ஞாபகம் வருகிறது. //

:-) எனக்கும் கூட.

June 22, 2006 2:37 PM
--

G.Ragavan said...
// Dev said...
எனக்குப் பிடிச்ச பலச் சொற்கள் பதிவில் இருந்தாலும் ரொம்பப் பிடிச்ச சொல்லும் இருக்கு ... அதுக்காக ராகவனுக்கு ஒரு ஸ்பெஷல் ஓ போடலாம் //

அடடா! அந்தச் சொல் எந்தச் சொல்லுன்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்க தேவ். :-)

June 22, 2006 2:38 PM
--

சிறில் அலெக்ஸ் said...
ராகவன்,
கிழ சொற்கள் கூட இந்த 'வார்ப்புரு' மாதிரியான புது சொர்களுக்கும் விளக்கம் சொல்லலாமே?

கிழமையை சொன்ன இளமை வாழ்க.

June 22, 2006 4:48 PM
--

G.Ragavan said...
// Cyril அலெக்ஸ் said...
ராகவன்,
கிழ சொற்கள் கூட இந்த 'வார்ப்புரு' மாதிரியான புது சொர்களுக்கும் விளக்கம் சொல்லலாமே?

கிழமையை சொன்ன இளமை வாழ்க.

June 22, 2006 4:48 PM //

சிறில், இது முதல்ல போலிப் பின்னூட்டம்னு நெனச்சுட்டேன். சிறிலுக்கும் போலீன்னு. சரி...கொஞ்சம் பாத்து எழுதுறது. நெறைய எழுத்துப் பிழை இருக்கே! கீ போர்டுல கோளாறா?

வார்ப்புரு என்பதும் பழைய சொல்தான். வார்த்தெடுக்கப் படுவதனால் கிடைப்பது வார்ப்புரு. அதைத்தானே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். வேறு ஏதேனும் பொருள் இருக்கிறதா?

June 26, 2006 1:21 AM

Tamil Home Recipes said...

Simply superb.
மிகவும் அருமை