நாம் அதிகம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்று இந்த 'கோஷ்டி' என்னும் சொல். ஒரு அரசியல் கட்சியின் இரு பிரிவினர் சண்டை போட்டுக் கொண்டால் அதனைக் 'கோஷ்டி சண்டை' என்போம். இந்த மாதிரி குழு சேர்ந்து ஒருவரை மற்றவர் சாடுதல் நம் இயற்கையிலேயே இருக்கிறது. அதனால் 'ஓ நீ அந்த கோஷ்டி தானே' என்று ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதையும் அடிக்கடி பார்த்திருக்கிறோம். வைணவ கோவில்களில் ஒரு குழுவாக இறைவன் முன் அமர்ந்து திவ்விய பிரபந்த பாசுரங்களைப் பாடி இறைவனை வணங்குதலை 'கோஷ்டி பூஜை' என்பார்கள். இந்த மாதிரி 'கோஷ்டி' என்ற சொல் பயன்படும் இடங்களில் எல்லாம் 'குழு, குழாம்' போன்ற சொற்களைப் புழங்கலாம்.
கோஷ்டி சண்டை - குழுப்பூசல்
நீ அந்த கோஷ்டி தானே - நீ அந்த குழாம் தானே
கோஷ்டி பூஜை - குழு வழிபாடு
ஆனால் கோஷ்டி என்ற சொல்லில் கிடைக்கும் போதை குழுவில் கிடைக்கவில்லை என்று சொல்வார்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் :-(
அண்மையில் அப்படி 'கோஷ்டி' என்று சொல்லாமல் ஒரு அருமையான தமிழ்ச்சொல்லான 'குழுமம்' என்ற சொல்லைப் புழங்கத் தொடங்கியுள்ளார்கள். அந்தத் தமிழ்ப்பற்றாளர்களுக்கு என் வாழ்த்துகள்.
***
இந்த இடுகை அந்தக் காலத்தில் ஒரு சூடான இடுகையாக இருந்தது. இன்றைக்கும் அப்படி ஆவதற்குரிய தகுதி உடையது என்றே நினைக்கிறேன். :-)
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 24 மே 2006 அன்று இடப்பட்டது.
2 comments:
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 24 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
106 கருத்துக்கள்:
முத்து(தமிழினி) said...
ஒரே கேள்வி:
"திராவிட தமிழர்கள்" அல்லது "திராவிடத்தமிழர்கள்" இவற்றில் எது சரி?
May 24, 2006 5:21 AM
--
கோவி.கண்ணன் said...
//கோஷ்டி சண்டை - குழுப்பூசல்
நீ அந்த கோஷ்டி தானே - நீ அந்த குழாம் தானே//
கோஷ்டி என்பதற்கு அழகான தமிழ் பெயர் : தமிழக கதர்சட்டைகள்
கோஷ்டி சண்டை : தமிழக கதர்சட்டைகளின் அடிதடி
நீ அந்த கோஷ்டி : வாசனா ? இளங்கோவனா ?
May 24, 2006 5:40 AM
--
நன்மனம் said...
உள்ளேன் ஐயா.
:-)
May 24, 2006 5:50 AM
--
சிவமுருகன் said...
//ஆனால் கோஷ்டி என்ற சொல்லில் கிடைக்கும் போதை குழுவில் கிடைக்கவில்லை //
உண்மை தான்.
குழுமத்தை விட குழு, குழாம் என்பது மிகவும் பொருத்தமான சொல், பெரியாழ்வாரும் தன் பல்லாண்டு பாடலில் 'கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்' என்றும் 'ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து' என்ற சொற்றொடரை பயன்படுத்துகிறார்.
May 24, 2006 5:56 AM
--
குமரன் (Kumaran) said...
முத்து,
நான் சொல்லிப் பார்த்தால் 'திராவிடத் தமிழர்கள்' என்பது தான் சரியாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு எந்த இடங்களில் ஒற்று மிக வேண்டும் என்பதில் ஐயம் உண்டு. நன்றாய் அறிந்தவர்கள் கூறட்டும்.
May 24, 2006 6:04 AM
--
குமரன் (Kumaran) said...
கோவிகண்ணன். இப்போது எல்லா அரசியல் கட்சிகளிலும் குழு மனப்பான்மை வந்துவிட்டது. வலைப்பதிவுகளில் எப்போதும் அது உண்டு. தற்போது அது தான் எல்லா இடத்திலும் பார்க்க முடிகிறது.
May 24, 2006 6:05 AM
--
குமரன் (Kumaran) said...
நன்மனம், இதைத்தான் எதிர்பார்க்கிறேன். :-) வந்து படித்துவிட்டு சில நேரம் சொல்வதற்கு எதுவும் இருக்காது. அந்த நேரங்களில் வருகைப் பதிவு செய்துவிட்டுச் சென்றால் வந்து படித்தீர்கள் என்றாவது தெரியுமல்லவா? :-) நானும் அதனை நிறைய இடங்களில் செய்திருக்கிறேன்.
May 24, 2006 6:09 AM
--
குமரன் (Kumaran) said...
தகுந்த எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தீர்கள் சிவமுருகன். மிக்க நன்றி.
May 24, 2006 6:10 AM
--
கோவி.கண்ணன் said...
//நான் சொல்லிப் பார்த்தால் 'திராவிடத் தமிழர்கள்' என்பது தான் சரியாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு எந்த இடங்களில் ஒற்று மிக வேண்டும் என்பதில் ஐயம் உண்டு. நன்றாய் அறிந்தவர்கள் கூறட்டும்.//
'திராவிடத் தமிழர்கள்' இதில் திரவிட - தமிழர்கள் நடுவில் ஒற்று அவசியம் வரவேண்டும்.
எடுத்துக் காட்டு : மூவிடப் பெயர், போரிடச் சென்றனர் ( வல்லின வருமொழிக்கு முன் ஒற்று வரும்)
May 24, 2006 6:30 AM
--
johan -paris said...
அன்புக் குமரனுக்கு!
நான் குமரன் அணி; என்று கூட இதற்குச் சொல்லலாமே! பாடசாலை நாட்களில்; மஞ்சள் அணி;பச்சை அணி; கம்பன் அணி; பாரதி அணி எனக் குழுக்கள் இருந்தது.
யோகன்
பாரிஸ்
May 24, 2006 7:14 AM
--
குமரன் (Kumaran) said...
நண்பர்களே. பதிவுக்குத் தொடர்பில்லாதப் பின்னூட்டங்களை அழித்துவிட்டேன். நேரம் செலவழித்து நீங்கள் பின்னூட்டங்கள் இட்டிருப்பீர்கள். அதற்கு மிக்க நன்றி. ஆனால் அந்தப் பின்னூட்டங்களும் அதற்கு நான் தந்த பதில்களும் இந்தப் பதிவுக்குத் தொடர்பில்லாதவையாக இருந்ததால் அவற்றை அழிக்கவேண்டி வந்தது. மன்னிக்கவும். அடுத்த முறை மட்டுறுத்தலிலேயே அதனை செய்துவிடுகிறேன்.
May 24, 2006 7:21 AM
--
கைப்புள்ள said...
//அந்த நேரங்களில் வருகைப் பதிவு செய்துவிட்டுச் சென்றால் வந்து படித்தீர்கள் என்றாவது தெரியுமல்லவா? :-) நானும் அதனை நிறைய இடங்களில் செய்திருக்கிறேன்.//
பலமுறை செய்ய தவறியதை...இன்று செய்கிறேன்...இனியும் செய்கிறேன்.
:)-
May 24, 2006 8:38 AM
--
முத்துகுமரன் said...
குமரன்,
தனிமனிதர்களை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்துகையில் திராவிடத் தமிழர் என்பதுதான் சரி. அதே நேரத்தில் இயக்கமாக கருதும் போது திராவிட தமிழர் என்று வருவதுதான் சரி.
பதிவை முன்பே பார்த்தேன். இப்போதுதான் நேரம் கிடைத்தது.
நன்றி :-)
May 24, 2006 8:40 AM
--
Sivabalan said...
குமரன்
நல்ல பதிவு!!
நன்றி!!
May 24, 2006 9:00 AM
--
Samudra said...
//வைணவ கோவில்களில் ஒரு குழுவாக இறைவன் முன் அமர்ந்து திவ்விய பிரபந்த பாசுரங்களைப் பாடி இறைவனை வணங்குதலை 'கோஷ்டி பூஜை' என்பார்கள்//
அப்படியா?
பல வைனவ கோவில்களுக்கு சென்று இருந்தாலும் "கோஷ்டு பூஜை" என்று யாரும் சொல்லி நான் கேட்டதில்லை.
தகவலுக்கு நன்றி குமரன்னே.
May 24, 2006 9:08 AM
--
பொன்ஸ்~~Poorna said...
கூட்டம், அணி? இதெல்லாம் பயன்படுத்த முடியாதா?
திராவிடத் தமிழர்கள், திராவிட தமிழர்கள் இரண்டுமே சரி என்று தான் தோன்றுகிறது. இரு பெயர்ச்சொல் புணர்ச்சியில் இரண்டுமே சரிதான். முத்துகுமரன் சொல்வது போல் தனி மனிதர்களைச் சொல்லும் போது திராவிடத் தமிழன் என்பது பொருந்தும்.
தொடர்பில்லாத(?!) சொல் : கும்பல் - தமிழா இல்லையா?
May 24, 2006 9:27 AM
--
குமரன் (Kumaran) said...
பரமபிதா, நீங்கள் கொடுத்துள்ள பின்னூட்டம் இந்தப்பதிவிற்குத் தொடர்பில்லையென்பதாலும் அது ஏற்கனவே இங்கு பிறர் இட்டிருந்த, என்னால் அழிக்கப்பட்டப் பின்னூட்டங்களுக்கு பதில் என்பதாலும் அதனை அனுமதிக்கவில்லை. பதிவைப் படித்துப் பின்னூட்டம் இட்ட தங்களின் நேரத்திற்கு நன்றி.
May 24, 2006 9:35 AM
--
குறும்பன் said...
சில இடங்களில் "கூட்டம்" என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். ஏன்டா கூட்டமா நிக்கறிங்க? ஏன்டா கோஷ்டியா நிக்கறிங்க?. என்று பெரியவர்கள் கேட்பதுண்டு.
May 24, 2006 9:39 AM
--
பொன்ஸ்~~Poorna said...
"எங்க கூட்டம்" அப்டின்னு கூடச் சொல்லுவாங்களே!!
May 24, 2006 9:48 AM
--
H.Selva said...
முத்து & குமரன்,
சந்திப்பிழைகளைத் தவிர்க்க ஒரு பாலபாடம்:
http://www.pudhucherry.com/pages/gram2.html
May 24, 2006 9:56 AM
--
SK said...
"வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர் "குழாத்துடன்" கூட்டி"
என அவ்வையும் விநாயகர் அகவலில் கூறிவிட்டார்!
சிவமுருகனும் பெரியாழ்வாரைத் துணைக்கழைத்திருக்கிறார்!
பிறகென்ன?
அடுத்த 'சொல் ஒரு சொல்லுக்குப் போகலாமே!
அது சரி,
தமிழர் என்றலே போதாதா?
தமிழர்கள் என்று சொல்லல் தேவையா/
தமிழர் என்பதே பன்மைதானே?
சிலர் சேர்ந்து வந்தால் கும்பல்.
பலர் சேர்ந்து வந்தால் கூட்டம்.
'கூம்பி'[ஒன்று சேர்ந்து] வருவது கும்பல் எனலமோ?
May 24, 2006 10:03 AM
--
பொன்ஸ்~~Poorna said...
எஸ்.கே, கூம்புதல்னா, வாடுதல்னு தெரியும், இதென்ன, ஒன்று சேர்த்தல்? புதுப் பொருள்?!!
May 24, 2006 10:10 AM
--
வெற்றி said...
குமரன்,
நன்றிகள்.
அணி என்ற சொல்லை பொதுவாக (விளையாட்டு)team என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாகத்தான் ஈழத்தில் புழங்குவார்கள். எடுத்துக்காட்டாக, இந்திய கிரிக்கெற் அணி பாகிஸ்தான் அணியை வென்றது. குழு/குழுமம் என்ற சொற்களை gang/ committee/club/ team/group of people போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக ஈழத்தில் புழங்குவார்கள்.
எடுத்துக்காட்டுக்கள்:
1]விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு[team] இன்று ஜெனீவா பயணம்.
[2]தி.மு.க மத்திய குழு[committee] இன்று கூடுகிறது
[3]இன்று ரொரன்ரோவில் இரு தமிழ்க் ஆயுதக் குழுக்கள்[gangs] மோதின.
May 24, 2006 10:10 AM
--
வெற்றி said...
//சில இடங்களில் "கூட்டம்" என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். //
குறும்பன், நானும் அப்படித்தான் நினைக்கிறேன். யாராவது மொழிவல்லுனர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
May 24, 2006 10:23 AM
--
SK said...
ஐந்து விரல்களையும் ஒன்றாகக் கூம்பி,
ஒரு கூம்பின் விட்டம்
பருப்பு தேங்காய் கூம்பு
என்னும் சொற்றொடரில் எல்லாம் 'வாடுதல்' என்னும் பொருள் வருவதில்லையே!
கூம்புதல் என்றால், சுருங்குதல், சேர்தல், ஒன்றுபடல் என்னும் பொருளும் உண்டு.
புதுப்பொருளன்று, பொன்ஸ்,
புதரகம் போனதும் [வந்ததும்!!]
பொருளும் மறக்குமோ!!
:))
May 24, 2006 10:48 AM
--
SK said...
மேலும், 'வாடுதல்' எனின் யாது?
பரந்து விரிந்திருந்த ஒரு பொருள், சுருங்கி,ஒன்று சேர்ந்து போவதுதானே!
ரோஜாவின் பல இதழ்கள் சுருங்கி, ஒன்று சேர்ந்தால், கும்பி, வாடி, ஒன்றுசேர்ந்து போனது எனக் கொள்ளலாம் அல்லவா?
May 24, 2006 10:52 AM
--
பொன்ஸ்~~Poorna said...
//ரோஜாவின் பல இதழ்கள் சுருங்கி, ஒன்று சேர்ந்தால், கும்பி, வாடி, ஒன்றுசேர்ந்து போனது எனக் கொள்ளலாம் அல்லவா? //
சரிதான் சரிதான்.. தெரியாத பொருள் எல்லாம் புதுப் பொருள் தானே? !! :) புதருக்குள் இருந்தாலும் தெரியாதவை புதியவையே :)
சாந்துணையும், கற்பவர்களாச்சே நம்மதான் :)
May 24, 2006 11:00 AM
--
SK said...
மேலும், 'வாடுதல்' எனின் யாது?
பரந்து விரிந்திருந்த ஒரு பொருள், சுருங்கி,ஒன்று சேர்ந்து போவதுதானே!
ரோஜாவின் பல இதழ்கள் சுருங்கி, ஒன்று சேர்ந்தால், கூம்பி, வாடி, ஒன்றுசேர்ந்து போனது எனக் கொள்ளலாம் அல்லவா?
[கும்பி அல்ல, கூம்பி!
தவறுக்கு வருந்துகிறேன்!]
May 24, 2006 11:05 AM
--
முத்துகுமரன் said...
//முத்து & குமரன்,
சந்திப்பிழைகளைத் தவிர்க்க ஒரு பாலபாடம்:
http://www.pudhucherry.com/pages/gram2.html//
நன்றி செல்வா. பிரதி எடுத்து கொண்டேன். மிக உபயோகமான இணைப்பு....
முத்துகுமரன்.
May 24, 2006 11:19 AM
--
பொன்ஸ்~~Poorna said...
//பிரதி எடுத்து கொண்டேன். மிக உபயோகமான இணைப்பு....//
அதுசரி முத்துகுமரன், உங்க பேரில் 'க்' வரும் தானே? ஏன் இல்லை?
May 24, 2006 11:26 AM
--
குமரன் (Kumaran) said...
//அதுசரி முத்துகுமரன், உங்க பேரில் 'க்' வரும் தானே? ஏன் இல்லை?
//
:))))
நல்ல கேள்வி பொன்ஸ். பலமுறை நான் முத்துக்குமரன் என்று எழுதிவிட்டு பின்னர் அவர் பெயரைப் பார்த்துவிட்டு முத்துகுமரன் என்று மாற்றியிருக்கிறேன். :-)
May 24, 2006 11:28 AM
--
பொன்ஸ்~~Poorna said...
இருக்கீங்களா குமரன், ரொம்ப நேரமா நானும் எஸ்கேவுமே பேசிகிட்டு இருக்கோமேன்னு நினைச்சேன் :)
May 24, 2006 11:34 AM
--
SK said...
ஏன், எப்படி 'க்' வரும், வரவேண்டும் என்கிறீர்கள்?
May 24, 2006 11:47 AM
--
குமரன் (Kumaran) said...
செல்வா கொடுத்த சுட்டியை இன்னும் படிக்கவில்லை. முன்பு ஒரு முறை ஒருவர் ஹரிகிருஷ்ணன் ஒற்று மிகும் இடங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்று சில தகவல்களைச் சொன்னார். அதனையும் இன்னும் முழுதுமாகப் படிக்கவில்லை. வசந்தன் சொன்னதை மட்டுமே பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். வசந்தன் சொன்னது - ஒரு முறை அந்த சொல்லை சொல்லிப் பாருங்கள். ஒற்று மிகுந்தால் ஒற்றுடன் எழுதுங்கள். இல்லை வேண்டாம் என்றார். அதன் படி தான் திராவிடத் தமிழர்கள் என்றேன். முத்துக்குமரன் அப்படியே. தவறாக இருக்கலாம்.
May 24, 2006 11:52 AM
--
பொன்ஸ்~~Poorna said...
பண்புத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும்
பண்புத் தொகையில் ஒற்று மிகும்.
முத்துப் போன்ற குமரன்.. முத்தாகிய குமரன்?!! சரி தானே..
May 24, 2006 11:59 AM
--
வெற்றி said...
H.செல்வா,
சுட்டிக்கு நன்றிகள்.
பொன்ஸ்,
//"எங்க கூட்டம்" அப்டின்னு கூடச் சொல்லுவாங்களே!! //
நீங்கள் குறிப்பிடுவது meeting என நினைக்கிறேன். குழு அல்ல. சரியா?
//கும்பல் - தமிழா இல்லையா? //
கும்பல் தமிழ்ச் சொல் என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த கும்பல் எனும் சொல் ஓர் குறிப்பிட்ட அளவுக்கு[எண்ணிக்கைக்கு] மேற்பட்ட உயர்திணை / அகிறிணைப் பொருட்களைக் குறிக்கும் என நினைக்கிறேன்.
எடுத்துக்காட்டுகள்:
[1]மண் கும்பல்
[2]நாசகாரக் கும்பல்
ஆனால் கும்பலும் குழுவும் இருவேறு பொருள் கொண்ட சொற்கள் என்றே நான் நினைக்கிறேன்.
May 24, 2006 12:00 PM
--
குமரன் (Kumaran) said...
முத்துகுமரன். உங்கள் பெயரினை வீணாக ஆராய்ச்சி செய்கிறோம். அது உங்களின் தனிமனித உரிமையை மீறுவதாக நீங்கள் எண்ணினால் சொல்லுங்கள். நிறுத்திக் கொள்கிறோம். தொடர்புடைய பின்னூட்டங்களையும் நீக்கிவிடுகிறேன்.
May 24, 2006 12:04 PM
--
வெற்றி said...
இப்ப , சில நிமிடங்களுக்கு முன்னர்தான் நிலா அவர்கள் ஓர் அறிவிப்புச் செய்திருந்தார்கள். இச் சந்தி இலக்கணம் பற்றியும் அவ்வறிவிப்பில் இருந்தது. நல்ல பலனுள்ள தளம். படித்துப் பாருங்கள்.
இதோ நிலாவின் அறிவிப்பு கீழே:
-----
//1. தமிழில் சந்தி இலக்கணம் - முனைவர் விஜயராகவன்
இதுவரை நிலாஷாப் வெளியிட்டுள்ள 7 நூல்களில் 3 நூல்கள் ஆண்டுவிழாவை ஒட்டி வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்தப் பரிசுச் சலுகை இன்னும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.
பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள்:
http://www.nilacharal.com/ebook.asp
//
May 24, 2006 12:12 PM
--
பொன்ஸ்~~Poorna said...
//முத்துகுமரன். உங்கள் பெயரினை வீணாக ஆராய்ச்சி செய்கிறோம். அது உங்களின் தனிமனித உரிமையை மீறுவதாக நீங்கள் எண்ணினால் சொல்லுங்கள். நிறுத்திக் கொள்கிறோம். தொடர்புடைய பின்னூட்டங்களையும் நீக்கிவிடுகிறேன்.
//
குமரன்.. என்ன முயற்சிக்கிறீங்க? தப்பா நினைக்க என்னங்க இருக்கு? முத்து குமரன் இன்னும் இந்தப் பக்கம் வரலைன்னு நினைக்கிறேன்.. வந்தா நிச்சயம் பதில் சொல்லுவாரு..
//நீங்கள் குறிப்பிடுவது மீட்டிங் என நினைக்கிறேன். குழு அல்ல. சரியா?//
வெற்றி, மதுரைக்கார நண்பர் ஒருத்தர் எங்க கூட்டம் என்று குழுவையும் சொல்லுவார்.. "எங்க கூட்டம் சாப்பிடப் போனா ஒண்ணும் மிஞ்சாது" (பின்ன, யாரோட நண்பர் அவரு ?!! :) )- இது போல
May 24, 2006 12:14 PM
--
குமரன் (Kumaran) said...
பொன்ஸ். முத்துகுமரன் தப்பா நினைக்க மாட்டார்ன்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனா யாராவது ஒருத்தர் வந்து 'தனிப்பட்ட மனிதரின் பெயரினை எடுத்து அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து அலசுகிறார்கள் இவர்கள். அந்த மனிதரின் பெயர் அது. அதனை ஆராய்ச்சி செய்ய யாருக்கு உரிமை' என்றெல்லாம் பாய்வதற்கு முன் ஒரு தற்காப்பு தான். முத்துகுமரன் ஒன்றும் சொல்லவில்லையென்றால் ஒரு கவலையும் இல்லை. நன்றாக ஆராயலாம்.
May 24, 2006 12:18 PM
--
மலைநாடான் said...
' ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் ' இங்கும் குழாமென்றே வருகிறது. குழாம் நல்லதோர் சொல்லே.
நன்றி!
May 24, 2006 1:28 PM
--
SK said...
அண்மைக்கால தாக்குதல்களுக்குப்பின் சற்று முன்னேற்பாடாகத்தான் இருக்கிறீர்கள் என அஞ்சுகிறேன், குமரன்! :))
பொன்ஸ்,
வீரக்குமரன், வெற்றிக்குமரன், திருக்குமரன், ஞானக்குமரன், செல்வக்குமரன் போன்றவை பண்புத்தொகை என ஒத்துக்கொள்ள முடியும்!
ஆனால், முத்துகுமரன்??
முத்துப் போன்ற என சொல்லிவிட்டதால் பண்புத்தொகை ஆகிவிடுமா?
பாலகுமரன், வள்ளல்குமரன், வேல்குமரன், சிவகுமரன், அருட்குமரன், செந்தில்குமரன் போன்ற தகைமைகளைக் குறிக்கும் ஒரு பெயரே முத்துகுமரன் என நான் நினைக்கிறேன்.
ஆகவே, 'க்' இல்லாதது சரியே எனவும் நம்புகிறேன்.
May 24, 2006 1:35 PM
--
செல்வன் said...
தலைவா ஆன்மிக குமரா,
எனக்கு இலக்கணம் சுத்தம்.என்னவென்று பின்னூட்டம் போட?ஒரு + குத்திவிட்டுகிறேன்.அம்புட்டுதான் இந்த பதிவுக்கு என் contribution.
May 24, 2006 1:39 PM
--
பொன்ஸ்~~Poorna said...
எஸ் கே, தகைமை = பண்பு.. ?? சரி தானே?
முத்து போன்ற - உவமைத் தொகை.. தவறாகச் சொல்லியதற்கு மன்னிக்கவும். அப்படி இருந்தாலும் ஒற்று மிகும்..
பார்க்க:
http://pksivakumar.blogspot.com/2006_01_01_pksivakumar_archive.html - ஓகை நடராஜன் கொடுத்த சுட்டி, இன்னும் தெளிவான விதிகளுட்கன்
May 24, 2006 1:49 PM
--
பொன்ஸ்~~Poorna said...
சொல்ல மறந்துட்டேன் : ஒற்று மிகும் என்றே இன்னும் நம்புகிறேன்..
எஸ்கே, எது எதுக்கோ விவாதம் செய்யறாங்க.. நம்ம இந்த ஒற்றை இன்றைக்கு உண்டு இல்லைன்னு செய்துடணும் ஆமாம்!! :)
May 24, 2006 1:50 PM
--
SK said...
//தலைவா ஆன்மிக குமரா,//
இதிலும் 'க்' இல்லை!!
:))))))))))))))
இன்னும் யாரும்
"தமிழர்", "தமிழர்கள்" பற்றி சொல்லவில்லையே!
May 24, 2006 1:53 PM
--
செல்வன் said...
இதிலும் 'க்' இல்லை!!
:))))))))))))))
////
எஸ்.கே சார்
இங்கிலீஷ் டீச்சரிடம் லவ் லெட்டர் குடுத்தவன் கதை தான் நினைவுக்கு வருது.ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் பாத்து பெயில் மார்க் குடுத்துட்டங்களாம்.:-))
May 24, 2006 2:02 PM
--
பொன்ஸ்~~Poorna said...
தமிழர் மரியாதைப் பன்மையாகும் போது, தமிழர்கள் அவசியமாகிறது.. இரண்டும் ஒன்று தான்.. ஆனால், இரண்டு வார்த்தை இருப்பது நல்லது தானே?
May 24, 2006 2:04 PM
--
வவ்வால் said...
நான் எதற்கு இருக்கேன் எஸ்.கே. இதோ வந்து எனது பங்காற்றி செல்கிறேன். தமிழர்= தமிழ் + அர்,இதில் அர் என்பது உயர்வு சிறப்பு விகுதி.மரியாதைக் காட்டுவதற்காக சேர்ப்பது, எனவே பண்மை ஆகாது தனி நபரே.தமிழன் ,தமிழர் இரண்டும் ஒருமையே. எனவே பண்மையில் விளிக்க தமிழர்கள் என்பதே சரி.அவன் ,அவர்,அவர்கள் என்பது போல
May 24, 2006 2:27 PM
--
SK said...
//
இரண்டும் ஒன்று தான்.. //
சரி, விட்டுருவோம்!......
ஆஹா! விட முடியாது போல இருக்கே!
இப்போ, 'வவ்வால்' வந்து குதிச்சிட்டாரே!...
//அர் என்பது உயர்வு சிறப்பு விகுதி.மரியாதைக் காட்டுவதற்காக சேர்ப்பது, எனவே பண்மை ஆகாது தனி நபரே.தமிழன் ,தமிழர் இரண்டும் ஒருமையே. எனவே பண்மையில் விளிக்க தமிழர்கள் என்பதே சரி.//
அப்போ,
"எங்கள் தமிழர் என்றோ நிமிர்ந்தார்!
இங்குள்ள தமிழரும் ஒன்றாகச் சேர்ந்தார்"
என் பாவேந்தர் பாடியது இலக்கணப்பிழை என்கிறீர்களா?
May 24, 2006 2:49 PM
--
பொன்ஸ்~~Poorna said...
ஏங்க எஸ்கே, மொதல்ல அவரை ப'ன்'மையில் விளக்கச் சொல்லுங்க.. ப'ண்'மையில் விளக்கி ரொம்பத்தான் படுத்தறாரு!!
May 24, 2006 2:53 PM
--
SK said...
இப்போ, நம்ம விவாதத்தைத் தொடரலாமா, பொன்ஸ்?!
//17. பண்புத் தொகையில் வல்லினம் மிகும் (உதாரணம்: பெருமைக் குணம், அருமைத் தம்பி, நகைச்சுவை, வெள்ளைக்குதிரை)//
இதில் நான் கூறிய முதல் வகையைச் சேர்க்கவும்.
//
வீரக்குமரன், வெற்றிக்குமரன், திருக்குமரன், ஞானக்குமரன், செல்வக்குமரன் //
//7. மென்றொடர்க் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகாது.//
இதுதான் நான் கூறுவது!
//முத்துகுமரன்//
என்ன சொல்றீங்க!
May 24, 2006 2:56 PM
--
பொன்ஸ்~~Poorna said...
அர் - உயர்வு சிறப்பு விகுதியாகவும் பயன்படும், பன்மை விகுதியாகவும் எடுத்தாளப் படும்..
எஸ்கே, முத்து(க்)குமரனை விட்டுட்டீங்களே? உவமைத்தொகைதானே?
May 24, 2006 2:56 PM
--
வவ்வால் said...
வணக்கம் குமரன்,
எனக்கு ஒரு சந்தேகம் குழு = group, ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களைக் குறிக்க தான் குழுமம் = groups என்ற சொல் உள்ளது எனக் கருதுகிறேன்.குழுக்களின் தொகுப்பு குழுமம் என வரும் போல் உள்ளது ,விளக்கவும்.
மேலும் குழு என்பதற்கு ஒரு எட்ட வேண்டிய பொது இலக்கு (goal)இருக்கும்,அவர்கள் கருத்தின் அடிப்படையில் ஒன்று சேர்வார்கள்.நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது.பரஸ்பர உதவி இருக்கும் குழு உறுப்பினர்களுக்கிடையே!
ஆனால் கும்பலுக்கு அவ்வாறு வரையறுக்கப்பட்ட பொது இலக்கு இருக்காது,கருத்தின் அடிப்படையில் சேர்வதில்லை.ஏன் சேர்கிறோம் எனத்தெரியாமல் கூடி நிற்பது கும்பல் எனலாம்.உ.ம்.விபத்து நடந்ததும் அந்த இடத்தில் வேடிக்கை பார்க்க கூடுவது கும்பல்.
May 24, 2006 2:58 PM
--
SK said...
//ஏங்க எஸ்கே, மொதல்ல அவரை ப'ன்'மையில் விளக்கச் சொல்லுங்க.. ப'ண்'மையில் விளக்கி ரொம்பத்தான் படுத்தறாரு!!//
:-))
May 24, 2006 2:58 PM
--
பொன்ஸ்~~Poorna said...
வவ்வால், குழு, கும்பல் பற்றி நீங்கள் கூறியதை ஒப்புக் கொள்கிறேன்:)
எஸ். கே, 'மென்றொடர் குற்றியலுகரம்' = முத்துக் குமரன் => மெல்லினம் எங்கே? து, கு, இரண்டுமே வல்லினம்..
//7. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் ஒற்று மிகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் வருமொழி பெயர்ச்சொல்லாக இருந்தாலும் ஒற்று மிகும் (உதாரணம்: பாக்குக் கடை)//
May 24, 2006 3:02 PM
--
வெளிகண்ட நாதர் said...
குமரன், அந்த காலத்திலே ரேடியாவில ரொம்ப நாளா கோஷ்டி கானம் தான் சொல்லிக்கிட்டிருந்தாங்க, அப்புறம் அதை குழுவினர்னு மாத்தினாங்க. கவனிச்சிரிக்கீங்களா?
May 24, 2006 3:08 PM
--
பொன்ஸ்~~Poorna said...
வாங்க வாங்க வெளிக்கண்ட நாதர், உங்க பேர்லயும் ஏன் க் இல்லை?!!
May 24, 2006 3:12 PM
--
வவ்வால் said...
வாங்க அய்யா எஸ்.கே.
உங்களை என்று நான் அழைத்தால் நீங்கள் ஒருவரா,ஒன்றுக்கு மேற்பட்டவரா? எனவே இலக்கணப்படி உங்கள்,நீங்கள் எல்லாம் பன்மையே,எனினும் ஒரு தனி நபரையே சுட்டுகிறது.எனவே தமிழர் என்பது ஒருமையில் ஒருவரை விளிக்காமல் இருக்கும் பொருட்டு பயன்படுவது.அது புழக்கத்தில் பன்மையாக இருந்தாலும் எண்ணிக்கையை குறிக்க பிரயோகிப்பதில்லை.கவிதையில் நடை முறை வழக்கம் மீறுவது ஒன்றும் புதிதல்ல!இலக்கணம் பார்த்தால் சரியே,நடை முறை மரபுப்படி முரண்பாடே.
//ஏங்க எஸ்கே, மொதல்ல அவரை ப'ன்'மையில் விளக்கச் சொல்லுங்க.. ப'ண்'மையில் விளக்கி ரொம்பத்தான் படுத்தறாரு//
அம்மா பொன் ஸ் அது "typo error" மன்னிக்கவும் வேறு ஏதேனும் பெரிய தவறா கண்டுபுடிங்க :-))
May 24, 2006 3:20 PM
--
பொன்ஸ்~~Poorna said...
//கவிதையில் நடை முறை வழக்கம் மீறுவது ஒன்றும் புதிதல்ல!இலக்கணம் பார்த்தால் சரியே,நடை முறை மரபுப்படி முரண்பாடே.//
தப்புங்க.. கவிதை, இலக்கியம் பார்த்து தான் இலக்கணமே உருவானது என்பார்கள்..
வந்தனர் = வா(வ)+ந்+த்+அன்+அர் = இதில் அர் என்பது பன்மை வினைமுற்று விகுதி தான். அர் என்பது பன்மைக்கும் பொருந்தும்
வந்தார் = வா(வ)+ந்+த்+ஆர்= இதில் ஆர் என்பது உயர்வு சிறப்பு வினைமுற்று விகுதி.
தட்டச்சுப் பிழையோ, எழுத்துப் பிழையோ, சொல்லணும்னு தோன்றியது.. அவ்வளவுதான்.. பெரிய தப்பு செய்தால் பெரிதாய்க் கண்டுபிடிக்கிறேன் :). குமரன் பதிவில் கார ஜாங்கிரி வேண்டாம், அப்புறம் நம்ம பின்னூட்டத்தையும் எடுத்து விடப் போகிறார் :)
May 24, 2006 3:31 PM
--
வெளிகண்ட நாதர் said...
பொன்ஸ், 'க்' வரக்கூடாது! உற்சரிப்பு அப்படி!
May 24, 2006 3:36 PM
--
குமரன் (Kumaran) said...
//குமரன் பதிவில் கார ஜாங்கிரி வேண்டாம், அப்புறம் நம்ம பின்னூட்டத்தையும் எடுத்து விடப் போகிறார் :)
//
பொன்ஸ். சிரிப்பான் போட்டுட்டா என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கொத்ஸ் புதிய விதி போட்டிருக்கிறார். தெரியுமல்லவா? :-)
May 24, 2006 3:38 PM
--
SK said...
இந்த சொல்லாடலில் ஈடுபட்டு, ஒரு வேலையும் ஆகவில்லை இங்கு!
ஒரு, ஒரு மணி நேரம் ஜூட்!
6 மணிக்கு மேல்[கி.த.நே.] மீண்டும் ஜோதியில் வந்து கலக்கிறேன்!
பொன் ஸ், ஓடிட்டேன்னு நினைக்க வேண்டாம்!!
:))
May 24, 2006 3:43 PM
--
பொன்ஸ்~~Poorna said...
உங்க பக்கம் ரொம்ப மெலிஞ்சாச்சு எஸ்.கே,
ஆறு மணிக்கு மேல் உங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்..:))
அது வரை நானும் வவ்வாலும் அனேகமாக ஜாங்கிரி பிழிந்துகொண்டிருப்போம்!!
May 24, 2006 3:47 PM
--
குமரன் (Kumaran) said...
ஜிலேபியா? ஜாங்கிரியா? ரெண்டுமே தமிழ் இல்லை போலிருக்கே :-)
May 24, 2006 3:49 PM
--
சோழநாடன் said...
"முத்துக்குமரனை" இப்படியா பிரிச்சு மேயுரது. :-))
எனக்கும் பொன்ஸ் சொல்வதுபோல் "முத்துக்குமரன்" தான் சரின்னு தோனுது.
"முத்துக்குமரன்" என்று பெயரை பதிவேட்டில் சேர்த்தாலும் பள்ளியில் ஆங்கிலத்தில் எழுதும்போது muthukumaran என்று எழுதிவிடுவதால் பெரும்பாலானோர் முத்துகுமரன் என்பதையே உபயோகிக்கின்றனர். ஆறாம் வகுப்பு சேர்கையில் என் நண்பனின் தந்தை சண்டை போட்டு muthukkumaran என்று மாற்றினார். மற்ற "முத்துக்குமரன்கள்" ஆங்கிலத்தில் muthukumaran என்று எழுதிவிட்ட காரணத்தால் முத்துகுமரனாகவே தொடர்ந்தனர் (நான் ஆறாவது சேர்ந்த போது வகுப்பில் மூவரது பெயர் முத்துகுமரன். அதில் ஒருவர் மட்டுமே முத்துக்குமரன் ஆனார் )
btw முத்துக்குமரனை ஆங்கிலத்தில் muththukkumaran என்றுதானே எழுதவேண்டும். இல்லையென்றால் முதுகுமரன் ஆகிவிடாது.:-)
May 24, 2006 3:51 PM
--
பொன்ஸ்~~Poorna said...
ஜாங்கிரி தமிழ்னாட்டு இனிப்பு தானே? ஜிலேபி தான் வட நாட்டு இனிப்பு!! தமிழ்ப் பெயர் எல்லாம் கேட்காதீங்க.. அதெல்லாம் தெரியாது :)
May 24, 2006 3:54 PM
--
வவ்வால் said...
அம்மா பொன் ஸ்,
நீங்கள் சுட்டிக்காட்டியது "அர்" உயர்வு சிறப்பு, பன்மை வினை முற்று விகுதி இரண்டும் சரியே,ஆனால் நான் விளக்கமாக எண்ணிக்கையில் சுட்டும் போது அழுத்தி பன்மையை சொல்வது வழக்கம் எனக்கூறிவிட்டேனே,பார்க்கவில்லையா?
//தப்புங்க.. கவிதை, இலக்கியம் பார்த்து தான் இலக்கணமே உருவானது என்பார்கள்//
இலக்கணம் மொழியின் கட்டமைப்பு கூறு,எனவே ,கவிதை ,இலக்கியம் பார்த்து இலக்கணம் உருவாவதில்லை.மேற்கோள் காட்ட கூறலாம். அப்படி பார்த்தால் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடல் இலக்கணப்பிழை அதைப்பார்த்து இலக்கணம் கற்க முடியுமா?(அடுத்த சுற்றுக்கு அடி போட்டாச்சு :-)) ) காரமில்லா இனிப்பு ஜிலேபி போட்ரலாம் கவலைப்படதிங்க)
May 24, 2006 3:57 PM
--
பொன்ஸ்~~Poorna said...
சோழநாடன், அப்போ உங்க பேரை எப்படி, - போட்டுத் தான் எழுதுவீங்களா?(Choza-naadaan) :)))
நாங்க தமிழில் எப்படி எழுதுவதுன்னு ஆராய்ச்சி செஞ்சிகிட்டு இருக்கோம், நீங்க ஆங்கிலப் பதிவேட்டில் மாற்றச் சொல்றீங்க?!! இதைப் பார்த்துத் தான் முத்துகுமரன் உண்மையிலேயே கடுப்பாகப் போறாரு :)
May 24, 2006 3:58 PM
--
வவ்வால் said...
//ஜாங்கிரி தமிழ்னாட்டு இனிப்பு தானே? ஜிலேபி தான் வட நாட்டு இனிப்பு!! தமிழ்ப் பெயர் எல்லாம் கேட்காதீங்க.. அதெல்லாம் தெரியாது :)//
ஜாங்கிரி,ஜிலேபி இரண்டுமே நம்ம நாட்டு இனிப்பல்ல, அரபியர்கள் நமக்கு அறிமுகப்படுத்தியது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.ஜாங்கிரி உளுந்து மாவினால் செய்வது,ஜிலேபி மைதா மாவினால் செய்வது.சமோசா,பிரியாணி எல்லாம் அரபியர்களின் படை எடுப்பால் நம்ம வயிற்றுக்குள் படைஎடுக்க வந்த பலகாரங்கள் :-)) (திசை மாறிப்போகுதே உணவுப்பக்கம்)
May 24, 2006 4:04 PM
--
johan-paris said...
சில இடங்களில் "திரள்" என்றும் பாவிப்பர்.
அவர் சனத் திரளின் மத்தியில் பேசினார்.
யோகன் - பாரிஸ்
May 24, 2006 4:19 PM
--
பொன்ஸ்~~Poorna said...
இலக்கியத்திலிருந்து இலக்கணமா, இலக்கணத்திலிருந்து இலக்கியமா என்று தனிப்பதிவு போட்டு ஆராய்ச்சி செய்வது தான் சரி என்று தோன்றுகிறது.
இருந்தாலும், "ஒவ்வொரு பூக்களுமே" இன்னிக்கு இலக்கணப் பிழைங்க.. நாளைக்கு அதுவே இலக்கணம் ஆகலாம்.. பாரதியார் பாடுவதற்கு முன்னாடி, சிந்துப்பா என்ற இலக்கியவகை எங்கே இருந்தது?
பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, ஏன் ஹைக்கூ எல்லாமே பின்னாளில் தோன்றியது தானே? அதற்கெல்லாம் தொல்காப்பியத்தில் இலக்கணம் சொல்லி இருக்காங்களா என்ன?
யாரோ ஒரு முதல் ஆள், ப்ளாக் எழுதத் தொடங்கியபோது மறுமொழி மட்டுறுத்தல், மூன்று பதிவுக்கு மேல் போனால் தான் தமிழ்மணத்தில் சேர்ப்பது மாதிரி இலக்கணம் எல்லாம் இருந்ததா என்ன? அதெல்லாம் பின்னர் வந்தது தானே...
நெருப்பில் வாட்டிய சாப்பாடு நன்றாக இருக்கிறது என்பதே அனுபவத்தில் மனிதன் கற்ற இலக்கணம் தானே?!! (திருப்பி சாப்பாடுக்குக் கொண்டு வந்தாச்சு) :))
May 24, 2006 4:22 PM
--
சோழநாடன் said...
பொன்ஸ்,
சோழநாடனை இதுவரை chozanaadan என்று தான் எழுதுகிறேன். இதுவே சும்மா வச்சுகிட்ட பேருதானுங்க்ளே.
[ நம்ம பேருல ஏற்கனவே 3 பேர் வலைபதிவு வைத்திருப்பதால் வேறு வழியில்லாமல் புனைப்பெயர் வைத்துக்கொள்ளவேண்டியதாயிற்று.]
May 24, 2006 4:25 PM
--
வவ்வால் said...
அம்மா பொன் ஸ்,
//பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, ஏன் ஹைக்கூ எல்லாமே பின்னாளில் தோன்றியது தானே? அதற்கெல்லாம் தொல்காப்பியத்தில் இலக்கணம் சொல்லி இருக்காங்களா என்ன//
தொல்காப்பியருக்கு ஜப்பானிய மொழி தெரியாமல் போய்விட்டது இல்லையெனில் ஹைக்கூ விற்கும் இலக்கணம் கூறி இருப்பார்!.மேலும் இலக்கணம் என்பது மொழிக்கான அடிப்படை செங்கல் போல அதை வைத்து வித விதமான இலக்கியம் கட்டலாம் வீடு போல.எனவே சிந்து பா என எத்தனை இலக்கிய வகை வேண்டுமானாலும் நம் மொழியில் கொண்டு வரலாம் இலக்கணத்திற்கு உட்பட்டு!ஆனால் வார்த்தை பிரயோகம் தவறாக வருவது இலக்கணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது மொழியின் சீர் அழிவு!
நீங்கள் கூட புதிதாக ஒரு இலக்கியம் எழுத முயற்சிக்கலாம் அதற்கு பொன் ஸ் பா என பெயரிடலாம். :-))
//நெருப்பில் வாட்டிய சாப்பாடு நன்றாக இருக்கிறது என்பதே அனுபவத்தில் மனிதன் கற்ற இலக்கணம் தானே?!! //
சுட்டப் பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக்கேட்ட அந்த குமரனின் வலைப்பதிவிலேயே சுடுறத பத்தியா !!??
(இந்த விடாதே பிடி விளையாட்டைப்பார்த்து குமரன் கோபித்து கொள்ளக் கூடாது :-)) )
May 24, 2006 5:22 PM
--
SK said...
அப்போது,
'சுட்ட பழம்'
இதுவும் வல்லினம்தானே!
ஏன் 'சுட்டப்பழம்' ஆகவில்லை?!
'கசடதபற' வல்லினமாம்!
'யரலவழள' மெல்லினமாம்
'ஙஞணநமன' இடையினமாம்!
மேலும் இந்த விதிகள் எல்லாம் 'தனிப்' பெயர்களுக்குப் பொருந்தாது!
வேற்றுமை உருபுகளோடு சேர்ந்து வருவனவற்றிற்கு சரி!
[நான் மெல்லியலுகரம் எனச் சொதப்பியதை சரியாக ஒரு பிடி பிடித்தீர்கள் !!]
இது போன்ற இரு பெயர்களைத் தனித்தனியே வருவனற்றிற்குப் பொருந்தாது!
முத்து+ குமரன் == முத்துகுமரன் தான்!
சிவ+குமரன் == சிவகுமரன் என்பது போலவே!
May 24, 2006 6:53 PM
--
Ram.K said...
கோஷ்டி கானம் என்று வருமே அந்த 'கோஷ்டி' வேறயா என்ன ?
May 24, 2006 7:54 PM
--
கோவி.கண்ணன் said...
//நல்ல பதிவு கோவிகண்ணன் ஐயா. தங்கள் வயது எனக்குத் தெரியாததால் இதுவரை ஐயா என்றோ சார் என்றோ அண்ணா என்றோ சொல்லாமல் வெறும் பெயர் மட்டுமே சொல்லி விளித்திருக்கிறேன். அதனால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். //
குமரன்,
பதிவுக்கு தொடர்பில்லாதது. அதனால் படித்துவிட்டு நீக்கிவிடவும்.
பெயர் சொல்லி எழுதினால் போதும். ஐயா என்றோ, சார் , அண்ணா என்றோ சொல்லத்தேவையில்லை, பெற்றோர் பெயர் வைப்பதே மற்றோர் அழைப்பதற்கு தானே. இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. என்னை பெரியவர்கள் பட்டியலில் சேர்த்துவிட வேண்டாம். நான் பத்தாம் வகுப்பு முடித்தது 1983ல். வயதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
பொதுவாக வலைப்பதிவில் மற்றவர் மதிப்பை குறைக்கும் உரிமையை அவர்களாகவே எடுத்துக் கொள்கிறார்கள், இந்த குறைகளை திரு தருமி, திரு ஞானவெட்டியான், திரு டிபிஆர் ஜோசப் மற்றும் திரு டோன்டு அவர்களைப் பற்றிய பல்வேறு பின்னூட்ட விளிப்புகளை பல்வேறு பதிவுகளில் படிக்க நேர்ந்ததால் எழுத நினைத்து எழுதியது.
வலைப்பதிவுகள் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரியும், ஆனால் எழுத ஆரம்பித்தது இரண்டு மாதங்களாகத்தான்.
May 24, 2006 9:08 PM
--
பொன்ஸ்~~Poorna said...
ஏன்னு தெரியலை, அஞ்சு மணிக்கு அலுவலகத்திலிருந்து வந்த உடன் நல்லா தூக்கம் வருது.. அதான் தாமதம் :)
//அப்போது, 'சுட்ட பழம்' இதுவும் வல்லினம்தானே!//
சுட்ட பழம் வினைத்தொகை!! அதற்கு ஒற்று மிகாது!
//மேலும் இந்த விதிகள் எல்லாம் 'தனிப்' பெயர்களுக்குப் பொருந்தாது!//
இது சொன்னீங்களே, இதை ஒப்புக் கொள்கிறேன்.. இப்போ குமரன் குமரண் நுதான் அவர் பெயரை எழுதுவேன் என்று சொன்னால், நான் ஒன்றும் கேட்க மாட்டேன்.. ஆனா நமது விவாதப் பொருள் வேறு. முத்துக்குமரன் எனப்படும் முருகப் பெருமானின் மற்றொரு பெயரில் க் வருமா வராதா? அவ்வளவுதான்.
//வேற்றுமை உருபுகளோடு சேர்ந்து வருவனவற்றிற்கு சரி!//
உருபு காணாம போனாத் தாங்க தொகை.. தொகைக்கு ஒற்று வருமா வராதா என்பது தானே இப்போதைய விவாதம்?
//[நான் மெல்லியலுகரம் எனச் சொதப்பியதை சரியாக ஒரு பிடி பிடித்தீர்கள் !!]//
ஹி ஹி :)
//இது போன்ற இரு பெயர்களைத் தனித்தனியே வருவனற்றிற்குப் பொருந்தாது! //
அதுக்குப் பெயர் இருபெயரொட்டுப் பண்புத்தொகைன்னு எங்க வாத்தியாரம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க :).. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் ஒற்று மிகுந்தும் மிக்காமலும் வரும்னு படிச்ச நினைவு.
//சிவ+குமரன் == சிவகுமரன் என்பது போலவே! //
//18. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வல்லினம் மிகாது. (உதாரணம்: காளி கோயில்)//
கேள்வி இன்னும் முழுமையாயப் பதிலளிக்கப்படவில்லை.. முத்துக்குமரன் என்பது என் கட்சி :)
May 24, 2006 9:45 PM
--
முத்துகுமரன் said...
இயக்க பெயருக்கு அடுத்து எனது பெயருமா :-)
முத்துக்குமரன் என்றுதான் வரவேண்டும். ஆனால் இன்றுவரை முத்துவின் குமரன் முத்துகுமரன் என்றுதான் இருக்கிறேன். மேலும் இது என் பெற்றோரின் விருப்பமாக இருப்பதால் அப்படியே பயன்படுத்துகிறேன். முத்துகுமரனின் தந்தை முத்து என்று பெயர் பெற்றுக் கொடுக்கும் போது ''க்''யைப் பயன்படுத்துவேன்.
நன்றி....
குமரன் இந்த பதிவில் ஏகப்பட்ட (தமிழ்)முத்துகளை நான் கண்டுகொண்டேன்:-)
குறிப்பாக எஸ்கேவின் தமிழ்புலமை. அவருக்கு எனது இனிய வாழ்த்துகள்
May 24, 2006 11:12 PM
--
பொன்ஸ்~~Poorna said...
முத்துவினது குமரன் என்றால் க் வராது :(
//18. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வல்லினம் மிகாது.//
எஸ் கே. நீங்க சரிதான் :(
May 25, 2006 7:48 AM
--
செந்தழல் ரவி said...
கோஷ்டிக்கு xxxx அப்படீன்னு மாத்திட்டதா கேள்விப்பட்டேன்...உன்மையா...
அப்படியே கொஞ்சம் அரசியல கொண்டுவந்த சதம் அடிச்சிடுவீங்க...
ஹி ஹி
May 25, 2006 9:02 AM
--
SK said...
அதற்கு ஏன் முகத்தை சோகமா வெச்சுக்கிறீங்க!
நல்ல முறையில் பேசித்தீர்த்துக் கொண்டதற்கு மகிழவல்லவோ வேண்டும்!!
இன்னும் எத்தனையோ இருக்கப் போகுது, நமக்குள்ளே!
சியர் அப் ப்ளீஸ்!:))
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, முத்துகுமரன் ['க்' இல்லை!]
பொன்ஸுக்கெ முழுப் பெருமையும்!
May 25, 2006 9:07 AM
--
H.Selva said...
சுட்டபழம் வினைத்தொகை அல்ல. சுடுபழம் என்றால்தான் விதொ. முத்துக்குமரன், அந்த வலைத்தளத்திலிருந்து இன்னும் அடிப்படை இலக்கணத்தைப் படிக்கவில்லையா? தமிழ்புலமை தவறு. தமிழ்ப்புலமை என்றிருக்க வேண்டும்.
May 25, 2006 9:34 AM
--
பொன்ஸ்~~Poorna said...
//அதற்கு ஏன் முகத்தை சோகமா வெச்சுக்கிறீங்க!
நல்ல முறையில் பேசித்தீர்த்துக் கொண்டதற்கு மகிழவல்லவோ வேண்டும்!!//
உண்மைதான்.. :))))))))))))))))))))) இது போதுமா ?:))))
// இன்னும் எத்தனையோ இருக்கப் போகுது, நமக்குள்ளே!//
நிச்சயம் எஸ் கே ஐயா.. இந்தமாதிரி விவாதங்களுக்கு நான் எப்போதும் தயார்.. நீங்கள் இன்னமும் முத்துப் போன்ற குமரன் = உவமைத் தொகைக்கு க் வரும் என்று ஒப்புக் கொள்ளவில்லை !! :)
//பொன்ஸுக்கெ முழுப் பெருமையும்! //
எஸ்கே, உங்களுக்குத் தான் முழுப் பெருமை.. நான் எல்லாம் இன்னும் கற்றுக் குட்டி தான் :). அத்துடன் இந்த வலைப்பதிவில் விவாதிக்க அனுமதித்த குமரனுக்கும் நன்றி சொல்ல வேண்டுமே!! :)
உவமைத்தொகையையும் ஒப்புக் கொள்ளுங்கள்.. அத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்வோம் :)
May 25, 2006 10:19 AM
--
பொன்ஸ்~~Poorna said...
//சுட்டபழம் வினைத்தொகை அல்ல. சுடுபழம் என்றால்தான் விதொ. //
ஆமாம் செல்வா.. தப்பாச் சொல்லிவிட்டேன்.. அப்புறம் ஏன் ஒற்று வரவில்லை? அகர ஈற்று வினையெச்சத்துக்கு ஒற்று மிகவேண்டுமே?!!
May 25, 2006 10:26 AM
--
குமரன் (Kumaran) said...
இப்ப செல்வா vs பொன்ஸா? நடக்கட்டும் நடக்கட்டும். :-)
May 25, 2006 10:30 AM
--
SK said...
//மேலும் இந்த விதிகள் எல்லாம் 'தனிப்' பெயர்களுக்குப் பொருந்தாது!
வேற்றுமை உருபுகளோடு சேர்ந்து வருவனவற்றிற்கு சரி!//
அதுதான் நேற்றே ஒப்புக்கொண்டு விட்டேனே!
நாம் எடுத்துக்கொண்டது, நண்பர் முத்துகுமரனின் பெயர் என்ற அளவில் நான் சரி!
முத்துவின் குமரன் என்ற் அளவில் அவர் சரி!
உவமைத்தொகையாகச் சொன்ன வகையில் நீங்கள் சரி!!
சரிதானே!
இப்போது மலர்ந்ததா?
எப்படியோ பின்னூட்டம் பயனுள்ள வகையில் ஏறினால் சரி, இல்லையா, குமரன்!! ;))
May 25, 2006 10:58 AM
--
குமரன் (Kumaran) said...
//எப்படியோ பின்னூட்டம் பயனுள்ள வகையில் ஏறினால் சரி, இல்லையா, குமரன்!! ;))
//
அதிலென்ன ஐயம் எஸ்.கே.
முத்து தொடங்கி வைத்தது நன்றாகவே செல்கிறது. உங்கள் மூவரின் தயவால். யாரந்த மூவர் என்று கேட்கமாட்டீர்களே?1 :-)
May 25, 2006 11:03 AM
--
பொன்ஸ்~~Poorna said...
குமரன், யாரந்த மூவர்னு சந்தேகமா இருக்குங்க.. வவ்வாலை விட்டுட்டீங்களா, இல்லை முத்துகுமரனையே விட்டுட்டீங்களா?
எஸ்கே ஐயா, நீங்க சொல்லும் முன்பே மலர்த்துவிட்டேன்.. :) இப்போது இன்னும் அதிக மகிழ்ச்சி.. உங்கள் நாட்டுக்கு வந்த சின்னப் பெண் என்று விட்டுக் கொடுத்து விடவில்லையே? உவமைத் தொகையெனில் உண்மையாக க் வரும் தானே?!!
May 25, 2006 11:44 AM
--
குமரன் (Kumaran) said...
முத்துகுமரன் எங்கே விவாதித்தார்? அவரைக் கணக்கில் சேர்க்கவில்லை. அந்த மூன்றாமவர் வவ்வாலகவும் இருக்கலாம்; செல்வாவாகவும் இருக்கலாம். எல்லாம் யார் வந்து விவாதத்தைத் தொடர்கிறார்கள் என்பதைப் பொறுத்து. :-)
இருவருமே வரவில்லையென்றால்? பார்ப்போம்.
May 25, 2006 11:49 AM
--
SK said...
உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் !
உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் !
உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் !
உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் !
உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் !
:)))))))))))))))))))
Satisfied?
May 25, 2006 11:56 AM
--
SK said...
உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் ! உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் ! உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் ! உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் ! உவமைத் தொகையெனில் உண்மையாக 'க்' வரும் !
Satisfied?!!
:)))))))))))))
May 25, 2006 11:58 AM
--
பொன்ஸ்~~Poorna said...
அய்யையோ.. எஸ் கே.. உணர்ச்சி வசப்படாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை :)
May 25, 2006 12:02 PM
--
H.Selva said...
அம்மா பொன்ஸ்,
சுட்ட பழத்தில், பழமே சுடுகிறதா இல்லை பழம் சுடப்பட்டதா என்ற மயக்கம் இருப்பதால் பொருளுக்கு ஏற்றபடி ஒட்டலாம் வெட்டலாம். சட்டப்பகுதி என்றால் இந்த மயக்கம் இல்லாததால் தானாய் ஒட்டும்.
May 25, 2006 12:11 PM
--
வெற்றி said...
ஆகா! திருவிளையாடல் படத்தில் சிவனும் [நடிகர்திலகம்] நக்கீரனும்[இயக்குனர் நாகராஜன்] அரச சபையில் வாதாடியது போல் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது பொன்சுக்கும் SK க்கும் இடையில் நடக்கும் விவாதம். தமிழ் இலக்கணம் ஒழுங்காகத் தெரியாதவன் என்றபடியால் உங்கள் இருவரின் விவாதங்களையும் ஒர் ஒரமாக நின்று இரசித்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் உங்கள் விவாதம்.
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அதுபோல் நல்ல ஒரு கலகத்தை துவக்கி வைத்த நாரதருக்கு[குமரன்] என் நன்றிகள். :))
May 25, 2006 12:17 PM
--
குமரன் (Kumaran) said...
வெற்றி. நன்மையில் முடியும் கலகத்தைத் தொடங்கி வைத்த நாரதர் நான் இல்லைங்க. அது முதல் பின்னூட்டம் போட்ட நம் நண்பர் முத்து தான். அவர் கேட்ட கேள்வியால பின்னூட்டங்கள் இரு பிரிவாய் பிரிந்து சென்றது. சரியான நேரத்தில் கோவி கண்ணன் அநாகரிகப் பின்னூட்டங்கள் பற்றிய பதிவைப் போடவும் அதனைப் படித்து நான் தமிழ்மண அரசியலை அடிப்படையாகக் கொண்ட பின்னூட்டங்களை அழித்தேன். பின்னர் ஒரே தடத்தில் ஒன்று தொட்டு ஒன்றாகச் செல்கிறது. எல்லாப் பெருமையும் முதல் பின்னூட்டம் இட்டவருக்கே.
அதுல பாருங்க. பதிவுல சொன்னதைப் பத்தி பேசுன பின்னூட்டங்கள் ரொம்பக் குறைவு தான். ;-(
May 25, 2006 12:22 PM
--
பொன்ஸ்~~Poorna said...
//சுட்ட பழத்தில், பழமே சுடுகிறதா இல்லை பழம் சுடப்பட்டதா என்ற மயக்கம் இருப்பதால் //
நன்றி செல்வா, வினைமுற்றா, வினையெச்சமா என்ற மயக்கம் சரியா?
வெற்றி, என்னங்க நீங்க, பெரியவங்களோட எல்லாம் என்னை ஒப்பிட்டுகிட்டு.. ஏதோ இலக்கண வகுப்பில் தூங்காமல் இருந்ததால் ஒப்பேற்றிக் கொண்டு இருக்கிறேன் :)!! சரி என்னை நக்கீரன்னு சொல்றீங்களா? இல்லை சிவாஜின்னு சொல்றீங்களா? அது தான் புரியலை :)
//தொடரட்டும் உங்கள் விவாதம். //
நெற்றிக்(வெற்றி) கண்ணைத் திறக்கும் முன்னே விவாதம் முடிந்துவிட்டது..:) இனி புதுப் பதிவு போட்டால் தான் புது விவாதம் தொடங்க வேண்டும் :)
//அதுல பாருங்க. பதிவுல சொன்னதைப் பத்தி பேசுன பின்னூட்டங்கள் ரொம்பக் குறைவு தான். ;-( //
அந்த விதத்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி குமரன்..உங்கள் பதிவின் விவரங்களைப் பற்றிய விவாதங்கள் தவறான திசையில் திரும்பும் அபாயம் இருப்பதாக முதல் முதல் படித்தபோது தோன்றியது.. என் கருத்துதான்.. மற்றவர் கருத்து வேறாக இருக்கலாம்.
May 25, 2006 12:42 PM
--
SK said...
//சுட்ட பழத்தில், பழமே சுடுகிறதா இல்லை பழம் சுடப்பட்டதா என்ற மயக்கம் இருப்பதால் //
இன்னொரு 'சுட்ட பழம்' கூட உண்டு, H.செல்வா!
"என்னா, சுட்டுக்கிட்டு வந்துட்டியா"ன்னு கேப்பாங்களே, தெரியுமா?:))
May 25, 2006 1:24 PM
--
SK said...
அதானே, இப்ப, இதுல யாரு சிவாஜி, யாரு ஏ.பி.என்.??:)
100??
May 25, 2006 1:25 PM
--
SK said...
100??
;)))))))))))
May 25, 2006 1:25 PM
--
வவ்வால் said...
எங்க ஊர்ல "க்" வச்சு பேசுறதுன பொடி வச்சு பேசுறது ...நேரா பார்த்த ஒரு அர்த்தம் அப்புறம் மறைவா பார்த்த ஒரு பொருள் வரும் அதன் இவங்க எல்லாம் அதிகமா "க்" வைக்கவும் தலைகீழா தொங்கிட்டு வேடிக்கை பார்க்கிறேன் :-))).(எப்போ வருவேன் எப்படி வருவேனு தெரியாது எனக்கு எதாவது இரை மாட்டினா தாவி வருவேன்)
May 25, 2006 3:04 PM
--
குமரன் (Kumaran) said...
நண்பர்கள் மிக நல்ல விவாதத்தை இங்கு நடத்தினர். ஒவ்வொரு பின்னூட்டமாகப் படித்துக்கொண்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் 'படித்துக் கொண்டு' வருகிறேன். உருப்படியான 100 பின்னூட்டங்கள் வாங்கிய பதிவுகள் மிக அருமையாக இருக்கின்றன. அவற்றுள் இந்தப் பதிவும் ஒன்று என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. :-) பின்னூட்டங்களில் சொல்லப்பட்டவை எல்லாவற்றையும் முடிந்த அளவு கற்றுத் தேர்ந்துவிட்டு பின்னர் பதில் பின்னூட்டங்கள் போடுகிறேன். :-)
May 26, 2006 1:48 PM
--
முத்து(தமிழினி) said...
குமரன்,
எப்படி போகிறது? ஏதாவது மேல் உதவி வேண்டுமா? :)
June 22, 2006 9:24 AM
--
குமரன் (Kumaran) said...
நான் உதவி வேண்டும் என்று கேட்கவும் வேண்டுமா? எப்போது எனக்கு உதவி தேவைப்படும் என்று உணர்ந்து நீங்களே வந்து செய்ய மாட்டீர்களா என்ன? :-)
June 26, 2006 2:37 PM
--
Anonymous said...
Good One.
May 23, 2007 8:09 PM
--
குமரன் (Kumaran) said...
Thanks Anony. :-)
March 24, 2008 7:55 PM
எஸ்.கே., பொன்ஸ்., வவ்வால் மூவரும் சுட்ட ஜாங்கிரிகளை அப்போதும் முழுவதுமாகப் படிக்கவில்லை. இப்போதும் படிக்கவில்லை. பொறுமையாக உட்கார்ந்து படித்துத் தேறவேண்டும் போலிருக்கிறது.
ஆனால் இவற்றை எல்லாம் படிக்கும் போது அவ்வப்போது பெருமூச்சுகள் வந்ததென்னவோ உண்மை. அது அந்தக் காலம் என்று சொல்லலாம். எப்படி எல்லாம் பொன்ஸும், வவ்வாலும் எஸ்.கே ஐயாவும் செல்வாவும் என நண்பர்கள் உருப்படியான விவாதங்கள் செய்தார்கள்!!!
Post a Comment