Wednesday, May 19, 2010
பல பிழை செய்து களைத்தேனா?
அவரவர் செய்யும் செயலுக்கேற்ப தான் பயனும் இருக்கும். என்னை இன்று சிலர் திட்டுகிறார்கள்; எனக்குத் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால் அது நான் எப்போதோ எங்கோ செய்த வினைப்பயனே. ஆனாலும் தவறு செய்வதை நிறுத்துகிறேனா? இல்லையே. பல பிழைகள் செய்து கொண்டே தான் இருக்கிறேன். அந்த சுழலிலிருந்து தப்ப பாரதியார் ஒரு நல்ல வழியைக் கண்டு கொண்டிருக்கிறார். இந்தப் பாடலில் அதைச் சொல்கிறார் பாருங்கள்.
நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்
நாயேன் பல பிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்
வாயே திறவாத மௌனத்திருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்து ஒளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே
முதலில் நீயே சரணம் என்றார். அவன் பாராமுகமாக இருக்கிறான். இவ்வளவு குற்றங்கள் புரிந்துவிட்டு 'ஐயா நீயே சரணம்' என்றால் நீதிபதியான அவன் எப்படி மன்னிப்பான். பார்த்தார் பாரதியார். அடுத்து நினதருளே சரணம் என்று சொல்லிவிட்டார். அவனது வேண்டுதல் வேண்டாமை இலாத குணத்தை விட அருட்குணம் தானே அடியவரைக் காக்கிறது. அதனால் நினது அருளே சரணம் என்று சொல்லிவிட்டார். நாயைப் போன்ற நான் பற்பல பிழைகளைச் செய்து கொண்டிருந்தேன். இன்றோ அவற்றை செய்து செய்து களைத்து உன்னை நாடி உன் அருளை நாடி வந்தேன். எண்ணம், செயல், சொல் இம்மூன்றிலும் வேறு எந்த வித காரியமும் இன்றி உன்னருளையே எண்ணி மற்றவற்றைப் பற்றி வாயே திறவாத மௌனத்தில் இருந்து உன் மலர் போன்ற திருவடிகளுக்குத் தீயைப் போல் ஒளி விடும் தமிழ்க்கவிதைகளைச் செய்வேன் என்கிறார். அவரோ மகாகவி. மௌனத்தில் இருந்து தமிழ்க்கவிதை செய்வார். நாம்? அவர் கவிதைகளைப் படித்து அவன் மலரடிகளைப் பணிய வேண்டியது தான். கீதையில் கண்ணன் சொன்னதும் அது தானே. பரஸ்பரம் போதயந்த: என்னைப் பற்றி ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லிப் பொழுதை நன்முறையில் போக்குங்கள்.
இந்தப் பாடலில் ஒன்றைக் கவனிக்கலாம். யாரைப் பாடுகிறார் என்று சொல்லவில்லை. விநாயகர் நான்மணிமாலையில் வரும் பாடல் என்பதால் அவர் பாடும் போது விநாயகரை எண்ணியேப் பாடலை இயற்றினார் என்று சொல்லலாம்.
இந்தப் பாடலை எம்.எஸ்ஸின் அமுதக் குரலில் கேட்க
***
நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். முதல் பாடல் நீயே என்று நிறைவு பெற்றது. இந்த இரண்டாம் பாட்டு நீயே சரணம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் செய்குவனே என்று நிறைய அடுத்தப் பாடல் செய்யும் என்று தொடங்கும். இந்தப் பாடல் கலிப்பா வகையைச் சேர்ந்தது.
எதுகை: நீயே, நாயேன், வாயே, தீயே
மோனை: நீயே - நினதருளே, நாயேன் - நாடி, வாயே - மௌனத்திருந்து - மலரடிக்கு, தீயே - தமிழ்க்கவி.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஜீவா (Jeeva Venkataraman) said...
அப்போதே பார்த்தேன் குமரன் - ஆனால் நிதனமாக படித்து விட்டு பின்னூட்டம் இடலாம் என்றிருந்து விட்டேன்.
//நாயேன்...
வாயே திறவாத...//
இந்த இரண்டும் சொல்லில் எதுகை மட்டுமல்லாமல் -
பொருளிலும் 'வாயே திறவாத நாயுண்டா?' என்றபடியும் அமைந்திருப்பது கவனத்தை ஈர்த்தது!
தொடர்ந்து...
'உன் மலர் போன்ற திருவடிகளுக்குத் தீயைப் போல் ஒளி விடும்' என்கிற இடத்திலும்!
August 18, 2007 6:03 PM
--
வெற்றி said...
/* ஆனாலும் தவறு செய்வதை நிறுத்துகிறேனா? இல்லையே. பல பிழைகள் செய்து கொண்டே தான் இருக்கிறேன்.*/
குமரன் அருமையான வரிகள். இவ் வரிகள் எனக்கு மிகவும் பொருந்தும். :-))
இனிமேல் இப்படிப் பிழை செய்யக் கூடாது என்று சபதம் எடுத்தாலும், அடுத்த நாள் புதுப் பிழை ஏதாவது செய்வது வாடிக்கையாகி விட்டது.
மகாகவியின் அருமையான பாடல். உங்களின் எளிமையான விளக்கம்.
யாழ்ப்பாண யோகர்சுவாமிகளும் கிட்டத்தட்ட இப்படி ஒரு பாடலைப் படித்திருக்கிறார் என நினைக்கிறேன்.
அருமையான பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
August 18, 2007 10:53 PM
--
G.Ragavan said...
நல்ல பாடல். நல்ல விளக்கம். பிழைகளைக் களை என்று இறைவனை வேண்டுதல் சரிதானே!
August 19, 2007 11:08 AM
--
குமரன் (Kumaran) said...
ஜீவா. நன்கு இரசித்திருக்கிறீர்கள். நன்றி. :-)
August 20, 2007 9:30 PM
--
குமரன் (Kumaran) said...
வெற்றி, யோகர் சுவாமிகளின் பாடல் கிடைத்தால் தாருங்கள். பிரபாவும் யோகர் சுவாமிகளின் பாடல்களை அவர் தந்தையார் தினமும் சொல்வார் என்று எழுதியிருந்தார். படிக்க ஆவலாக இருக்கிறது.
பல பிழை செய்து களைக்கவில்லை தான். செயல்பட வேண்டிய நேரத்தில் செய்யாமல் இருப்பதும் செயல்படக்கூடாத நேரத்தில் செயல்படுவதும் பிழை தானே. ஐயன் வள்ளுவனும் சொல்லியிருக்கிறானே அதனைப் பற்றி. ஆனால் அப்படிப் பட்ட பிழைகளை பல முறை செய்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
August 20, 2007 9:32 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். பிழைகள் செய்து களைத்து வந்ததாகச் சொல்கிறார் பாரதியார். நானெல்லாம் பிழைகளைச் செய்து களைக்கவில்லை இன்னும். அதனால் பிழைகளை களை என்று இறைவனையே வேண்டுகிறேன்.
August 20, 2007 9:34 PM
--
வெற்றி said...
/* வெற்றி, யோகர் சுவாமிகளின் பாடல் கிடைத்தால் தாருங்கள். */
குமரன்,
இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்.
சில அன்பர்கள் நூலகத்திட்டம் எனும் பெயரில் பல ஈழத்து நூல்களை இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள். நவாலியூர் சோமசுந்தரப் புலவர், யோகர் சுவாமிகள் போன்றோரின் புத்தகங்களும் இங்கு இருக்கிறது. நானும் இங்கு சென்றுதான் வாசிப்பது.
நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்.
August 20, 2007 10:21 PM
--
குமரன் (Kumaran) said...
வெற்றி. நூலகச் சுட்டிக்கு மிக நன்றி. முன்பொரு முறை இந்தப் பக்கத்திற்குச் சென்றிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆனால் இப்போது சென்ற போது படிக்க மிக்க சுவையுள்ள பல மின்பொத்தகங்கள் கிடைத்தன. சேமித்து வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.
August 22, 2007 9:37 PM
Post a Comment