Friday, May 28, 2010

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்!

எந்தத் தருணத்தில் பாரதியார் இந்தப் பாடலை எழுதியிருப்பாரோ என்று பல முறை எண்ணுவதுண்டு. பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று எழுதி அதில் வலுவான பல காரணங்களை அடுக்குவதற்குத் தகுந்த தருணமாக எது இருந்திருக்கக் கூடும். 'வாய்ச்சொல்லில் வீரரடி' என்று மிதவாத பேராயக் கட்சியினரைப் பழித்த பாரதியார் பின்னர் 'வாழ்க நீ எம்மான்' என்று மிதவாதிகளின் தலைவரைப் போற்றும் வகையில் மனமாற்றம் பெற்ற போது எழுதப்பட்டப் பாடலாக இருக்கலாம் என்றொரு ஊகம் உண்டு.

புகை நடுவினில் தீ இருப்பதைப் போல் பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் இருக்கிறான் என்று சொல்வது முதற்கொண்டு வாழ்க்கையில் என்னைப் பலமுறை சிந்தை செய்யத் தூண்டிய பல கருத்துகள் இந்தப் பாடலில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக என் விளக்கத்தைச் சொல்ல நினைத்தாலும் அது நுனிப்புல் மேய்வதாகவே அமையும். ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட இந்தப் பாடலைப் படிப்பவர்கள் என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்
(பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? - நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? - நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ?
(பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் - நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? - நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ?
(பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)

2 comments:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன் said...
Its a great Song in the Bharathiyaar's poem. I sang this sone in my school day in a poem contest. I took part not for prize just for familier with the stage.

This is the first song of Bharathi which I can sing the whole song ever in my Life.

Before that I know some songs of Panchali Sabatham, Kannan Songs, Kottu murase but only some stanza. After getting this song I learnt some more songs, Kaani nilam vEndum, Kannamma songs - chinannj chiri pen pOle etc.

Thanks for the same.
February 28, 2008 9:59 PM

--

குமரன் (Kumaran) said...
வாங்க சிவமுருகன். வேலை அதிகமோ? பார்க்கவே முடிவதில்லை. இப்போதும் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.

போட்டியில் பாட ஒரு நல்ல பாட்டு தான் இது. பல பாடல்களை மனப்பாடம் செய்திருப்பீர்கள் போலிருக்கிறதே. கொஞ்சம் நேரம் ஒதுக்கி முன்பு போல் தொடர்ந்து பதிவுகளில் எழுத முடியவில்லையா? எழுதினால் நன்றாக இருக்கும். பெங்களூருவில் நேரம் கிடைப்பதில்லை போலும்.

நீங்கள் சொல்லும் கண்ணம்மா பாட்டு 'சின்னஞ்சிறு கிளியே' பாடலா?
February 29, 2008 6:04 AM
--

ஜீவா (Jeeva Venkataraman) said...
குமரன் - இந்தப் பாடலை 'நல்லதோர் வீணை செய்து...' பாடலின் தாக்கத்தில்தான் பார்க்கிறேன்.
'வல்லமை தாராயோ...' என சிவசக்தியைக் கேட்டவர், வாழ்வை நினைத்தவன் தாழ்வை நினைப்பானோ என்கிறார். இந்தப்பாடலின் இன்னும் ஒரு படி மேலே சென்று, பகைவனுக்கும் தாழ்வை நினைக்கலாகாது என்கிறார்.

புகை நடுவில் தீ : நெருப்பு கனன்று கொண்டு இருந்தாலும், அதைச் சுற்றி புகை சூழ்ந்திருப்பதால், தீ இருப்பது தெரியவில்லை. அதுபோல, நம் அக இருள் அதற்கு நடுவே, பரமன் இருப்பதும் நம் அகக்கண்களுக்கு தெரிவதில்லை.

இவ்வளவுதான் எனக்குத் தோன்றுகிரது குமரன்.
February 29, 2008 7:22 AM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
வாங்க ஜீவா. வாழ்வை நினைப்பவர் தாழ்வை நினைப்பாரோ என்று சொல்வது நீங்கள் குறிப்பிட்டதைப் போல் தனக்கும் தாழ்வு எண்ணக்கூடாது; பகைவனுக்கும் தாழ்வை எண்ணக்கூடாது என்ற இரு பொருளிலும் வருகிறது.

பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் என்பதற்கு உட்பகைவர்களான அக இருளின் நடுவே பரமன் இருக்கிறான் என்று விளக்கம் சொல்கிறீர்கள். அருமை. இந்த விளக்கத்தைப் பாடல் முழுவதும் கூட விரித்துக் கொண்டு போகலாம் என்று நினைக்கிறேன்.

இதே மாதிரி விளக்கத்தைத் தான் நீங்கள் அபிராமி அந்தாதி பாடல் ஒன்றிற்கும் தந்திருப்பீர்கள் என்று சொல்லியிருந்தேன். பார்த்தீர்களா? இல்லை என்றால் இதோ சுட்டி.

http://abiramibhattar.blogspot.com/2008/02/79.html
February 29, 2008 8:32 AM
--

ARUVAI BASKAR said...
சார்
பாரதியார் பாடல்களில் மிகவும் அர்த்தமுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று .
அதனை இன்று நினைவூட்டியதற்கு நன்றி
அன்புடன்
அருவை பாஸ்கர்
June 09, 2008 10:17 AM
--

குமரன் (Kumaran) said...
மிக்க மகிழ்ச்சி பாஸ்கர்.
June 12, 2008 3:28 PM
--

அகரம்.அமுதா said...
பாரதியை நான் எப்போதும் விரும்பிப் படிப்பதுண்டு. அவருடைய நாட்டுப்பற்றுப் பாடல்களும் பாஞ்சாலி சபதமும் எனக்கு மிகவும் பிடிக்கும் சிலகவிதைகள் மனனமும் கூட. நல்ல பாடலை அறியத் தந்தீர்கள். வாழ்த்துகள்.
July 25, 2008 7:35 AM
--

Vinavu said...
http://vinavu.wordpress.com
August 01, 2008 1:21 PM
--

குமரன் (Kumaran) said...
வினவுகிறவரே. உங்கள் பதிவிற்குச் சுட்டி தந்திருக்கிறீர்கள். ஆனால் பதிவில் ஒன்றையும் இன்னும் எழுதவில்லையே?!
August 01, 2008 5:14 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி அகரம்.அமுதா.
August 06, 2008 7:26 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி தமிழ்ப்பையன்.
August 06, 2008 7:27 AM