Tuesday, May 18, 2010

எங்கள் தாய்!!நித்யஸ்ரீ பாடிய இந்த பாரதியார் பாடலின் ஒளி-ஒலிப்பேழையை யோகன் ஐயா தன் பதிவில் அண்மையில் இட்டிருந்தார். அந்தப் பாடல் எளிதான பாடல் என்றாலும் ஆங்காங்கே சொற்பொருள் கொடுக்கலாம் என்று தோன்றியதால் அந்தப் பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன்.தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!


(முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணரும் பல கல்வி கற்றவர்களும் இவள் என்று தோன்றியவள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவள் எங்கள் தாய்)

யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்

(எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரியாக வகுத்துச் சொல்ல முடியாத அளவு வயதினை உடையவள் எங்கள் தாய். ஆனாலும் இந்த உலகில் எப்போதும் ஒரு கன்னிகை போல் இருப்பாள் எங்கள் தாய்)

முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்

(முப்பது கோடி மக்களை உடையவள் - தற்போது நூறு கோடிக்கும் மேலாகச் சென்றுவிட்டது - ஆனாலும் உயிர் எல்லோரிடமும் சேர்ந்து ஒரே உயிராக உடையவள். இவள் பேசுகின்ற மொழிகள் பதினெட்டாக இருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருக்கிறாள்)

நாவினில் வேதமுடையாள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் - தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

(இவள் நாவினில் வேதத்தைக் கொண்டிருக்கிறாள். கையில் நன்மை விளங்கும் வாளினைக் கொண்டிருக்கிறாள். அவளை அடைந்தவர்களுக்கு இன்னருள் செய்பவள். தீயவர்களை வீழ்த்திடும் வலிமையுடைய தோளினை உடையவள்)

அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள்
செய்து கிடத்துவள் தாய்

(அறுபது கோடி நீண்ட வலிமையான கைகளாலும் எல்லாவித அறங்களையும் நடத்துகிறாள் எங்கள் தாய். தன்னை அழிக்க விரும்பி யாராவது வந்தால் அவர்களை தூள் தூளாக்கி ஒழித்துவிடுவாள் எங்கள் தாய்.)

பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
தோமிழைப்பார் முன் நின்றிடும் கார் கொடும்
துர்க்கை அனையவள் தாய்

(பூமியை விட பொறுமையில் சிறந்தவள். பெரும் புண்ணியம் செய்யும் மனத்தை உடையவள் எங்கள் தாய். ஆனாலும் அவளுக்குக் குற்றம் இழைப்பவர் முன் நிற்கும் கரிய கொடிய துர்க்கையைப் போன்றவள் எங்கள் தாய்.)

கற்றை சடைமதி வைத்த துறவியைக்
கைதொழுவாள் எங்கள் தாய் - கையில்
ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகாளும்
ஒருவனையும் தொழுவாள்

(கற்றைச் சடையையும் நிலவையும் தலையில் வைத்திருக்கும் துறவியாம் சிவபெருமானைக் கைதொழுவாள் எங்கள் தாய். கையில் தன்னிகரில்லா ஆயுதமாம் சக்கரத்தை வைத்திருக்கும் ஒருவனாம் பெருமாளையும் தொழுவாள்)

யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறிவாள் - உயர்
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்

(யோகங்களிலே நிகரில்லாதவள். உண்மையாம் இறை ஒன்று தான் என்பதை நன்கு அறிவாள். உயர்ந்த போகங்களிலேயும் நிறைவுடையவள். எண்ணி மாளா பொற்குவை (செல்வங்கள்) உடையவள்)

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்

(நல்லறம் நாடிய மன்னர்களை வாழ்த்தி நல்லதைப் புரிவாள் எங்கள் தாய். அவர்கள் கெட்டவர்கள் ஆயின் அவர்களை அழித்துப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்)

வெண்மை வளர் இமயாசலன் தந்த
விறன்மகளாம் எங்கள் தாய் - அவன்
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்
சீருறுவாள் எங்கள் தாய்

(வெண்ணிறம் கொண்ட இமயமலை தந்த மகளாம் எங்கள் தாய். அந்த இமயத்தின் திண்மை குறைந்தாலும் தான் மறையாத திண்மையுடையவள்; தினமும் மேன்மேலும் சீர்களைப் பெறுவாள் எங்கள் தாய்.)

***

இந்தப் பாடலின் சில செய்யுள்களை மட்டுமே பாடகர் பாடியிருக்கிறார். ஆனால் யோகன் ஐயாவின் குறிப்பின் படி எல்லா செய்யுள்களையும் இங்கே கொடுத்திருக்கிறேன்.

***

இந்தப் பாடலை திருமதி. டி.கே. பட்டம்மாள் பாடியும் திரு.இராஜேஷ் வைத்யா வீணையில் இசைத்தும் கேட்கலாம்.

3 comments:

குமரன் (Kumaran) said...

Anonymous said...
ஒரே வண்ண மயமாக இருக்கிறது.
March 11, 2007 9:19 PM
சிறில் அலெக்ஸ் said...
இது எப்ப ஆரம்பிச்சீங்க.
ரெம்ப நல்ல முயற்சி குமரன்.
இனி அடிக்கடி வருவேன்.

:)
March 11, 2007 11:30 PM
கீதா சாம்பசிவம் said...
பாரதி பாட்டும் கேட்டேன். அடுத்து வந்த தேவாரப் பாடலும் கேட்டேன். இரண்டுமே நல்லா இருக்கு. உங்களோட அர்த்தமும் சேர்ந்து.
March 12, 2007 1:05 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் அனானி நண்பரே. வண்ணமயமாகத் தான் இருக்கிறது. ஆனால் கண்ணை உறுத்தவில்லை தானே?! :-)
March 12, 2007 6:32 AM
குமரன் (Kumaran) said...
இந்தப் பதிவைத் தொடங்கி ரொம்ப நாளாச்சு சிறில். நவம்பர் 2005ல் தொடங்கிய பதிவு இது. அண்மையில் நிறைய இடுகைகள் இதில் இடவில்லை. அடிக்கடி வந்து படிங்க. :-)
March 12, 2007 6:33 AM
குமரன் (Kumaran) said...
நன்றி கீதாம்மா.
March 12, 2007 6:33 AM

குமரன் (Kumaran) said...

வல்லிசிம்ஹன் said...
ரொம்ப நல்லா இருந்தது குமரன்.
முன்னாளில் டி.கே.பட்டம்மாள் அம்ம,எம்.எஸ் அம்மா பாடும்போது ( எங்களுக்கெல்லாம் மேடையில் பாரத அன்னை வேடம் கொடுக்கப்படும்.)
அந்த உணர்ச்சிகள் அப்படியே மனதில் நிற்கும்.இப்போதும் இந்தப் பதிவைப் பார்க்கும்போது அன்னை இருக்கிறாள்,நமக்கும் நல்ல காலம் வரும் என்றே தோன்றுகிறது.
அருமையான நாட்களை மீட்டுக் கொடுங்கள்.
மிக்க நன்றி.
March 12, 2007 6:36 AM
குமரன் (Kumaran) said...
வல்லி அம்மா. நீங்கள் சொன்ன பிறகு தான் பெரியவங்க எல்லாம் இந்தப் பாட்டைப் பாடியிருக்காங்க என்பது நினைவிற்கு வந்தது. அவங்க பாடுனதுக்கும் சுட்டிகள் கிடைத்தால் இடுகிறேன்.
March 12, 2007 6:41 AM
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அன்புக் குமரன் !
பாரதமாதா படம் போல் பாடல்களும் வண்ணமயமாக இருப்பது அழகாக உள்ளது. எனக்குப் பதிவில் வண்ணம் சேர்ப்பது பிடிக்கும்.
சிலசொற்களின் பொருளும் தெரிந்தது. உங்களுக்கு மிக லாவகமாகப் பொருள்கூற வருகிறது.
சிறப்பாகக் கொடுத்துள்ளீர்கள்.
March 12, 2007 8:38 AM
G.Ragavan said...
நல்ல விளக்கம். தொடரட்டும். ஒரு சிறிய கருத்து குமரன்.

நாட்டைத் தாயாகப் பார்த்தது உண்மைதான். அது உருவகம். அது தொடர்பான பாடலுக்கு விளக்கம் சொல்லும் பொழுது இப்படிச் சொல்ல வேண்டும் என்பது என் கருத்து. ஒரு எடுத்துக்காட்டு கீழே.

// நாவினில் வேதமுடையாள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் - தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

(இவள் நாவினில் வேதத்தைக் கொண்டிருக்கிறாள். கையில் நன்மை விளங்கும் வாளினைக் கொண்டிருக்கிறாள். அவளை அடைந்தவர்களுக்கு இன்னருள் செய்பவள். தீயவர்களை வீழ்த்திடும் வலிமையுடைய தோளினை உடையவள்) //

நாவில் வேதமுடையாள் - வேதம் என்பது மறைமொழி. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். அப்படிப் பெருமை தக்க மொழியினரைப் பேசும் மக்களைக் கொண்ட நாடு.

கையில் நலந்திகழ் வாளுடையாள் - கையில் ஆயுதம் உண்டு. ஆனால் அது நல்வழியில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதி கொண்ட உள்ளத்திறமுடையோர் இங்குண்டு.

மேவினர்க்கு இன்னருள் செய்பவள் - ம்ம்ம்ம்....இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எக்கச்சக்கமாக கனவு கண்டிருக்கிறான் பாரதி. ஆனால் அவன் கனவில் சிறிதும் நாம் நிறைவேற்றவில்லை என்பதுதான் சோகம். இதைப்போல கலைவாணரும் ஒரு படத்தில் 1960களில் இந்தியா மிகவும் மாறிவிடும் என்று பாடுவார். ஆனால் அந்தக் கனவும் இப்படித்தான். ம்ம்ம்..என்ன செய்வது!
March 12, 2007 10:23 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
அன்பு யோகன் ஐயா. வண்ணமயமாக இந்த இடுகை இருந்தது உங்களுக்குப் பிடிந்திருந்ததா? மகிழ்ச்சி. தொடக்கத்தில் ஒரு இடுகையில் இப்படி பல வண்ணங்களில் எழுதுனேன்; அப்போது சில நண்பர்கள் கண் கூசுகிறது என்று சொன்னதால் அப்புறம் ஒன்றிரண்டு வண்ணங்களுடன் நிறுத்திவிடுவேன். இந்த இடுகையில் மீண்டும் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. கண் கூசியதற்குக் காரணம் இப்போது புரிகிறது. அப்போது ஒரே பத்தியில் பல்வேறு வண்ணங்களில் இட்டிருந்தேன். அது கட்டாயம் கண்ணைக் கூசவைக்கும்.

சுருக்கமாகப் பொருள் சொல்லியிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டது போல் ஒரு வரிக்கு ஒரு பத்தி விளக்கம் சொல்லலாம் தான். பாருங்கள் இராகவனும் அப்படித் தான் பொருள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். நேரம் இருந்தால் செய்வதில் தடையில்லை. இப்போதைக்குச் சுருக்கமாக சொல்வதே போதும் என்று எண்ணினேன்.
March 12, 2007 12:25 PM
குமரன் (Kumaran) said...
இராகவன். விரிவான விளக்கத்திற்கு நன்றி. இந்த இடுகையில் சுருக்கமாகவே பொருளைத் தர விழைந்தேன். விரிவாகச் சொல்லியிருந்தால் நீங்கள் சொன்னது போல் சொல்லியிருப்பேன் என்று எண்ணுகிறேன்.
March 12, 2007 12:27 PM
குமரன் (Kumaran) said...
இடுகையின் இறுதியில் இரண்டு சுட்டிகளைப் புதிதாக இணைத்துள்ளேன்.
March 12, 2007 12:39 PM