Monday, May 24, 2010

கற்பக விநாயகக் கடவுளே போற்றி!


கற்பக விநாயகக் கடவுளே போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக்கிறையவன், பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத்தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்!
குணமதில் பலவாம்; கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
துச்சமென்றெண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர்வீரே

வானுலகத்தில் இருக்கும் கற்பக மரம் வேண்டியதை எல்லாம் தரும் என்று புராணங்கள் சொல்கின்றன. விநாயகப் பெருமானும் அப்படியே. அதனால் அவருக்கு கற்பக விநாயகக் கடவுள் என்றே பெயர். 'கற்பகம் என வினை கடிது ஏகும் - கற்பகவிநாயகா என்று சொன்னால் நாம் செய்த தீவினைப் பயன்கள் எல்லாம் விரைவாக ஓடிவிடும்' என்று அருணகிரி பெருமானும் சொல்கிறார். அந்தக் கடவுளை கருத்தினில் வைத்தால் என்ன என்ன கிடைக்கும் என்று இனி சொல்லப் போவதால் தொடங்கும் போதே கற்பக விநாயகக் கடவுளே போற்றி என்று தொடங்குகிறார்.

இறைவன் அறிவே உருவானவன். அறிவின் விரிவுகளில் பல வகை இருக்கின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிரினங்களின் அறிவினைச் சொல்கிறார்கள். சித் என்பது அறிவைக் குறிக்கும் சொல். இந்த ஆறறிவிலும் மேலாக எல்லாவற்றையும் அறியும் பேரறிவாளனாக இறைவன் இருக்கிறான். அவனைச் சிற்பரன் என்கிறார். அறிவு விரிய விரிய அமைதி கூடுகின்றது. மேலான எக்குறையும் அற்ற அறிவினையுடையவனாக ஒருவர் ஆகும் போது அங்கே அமைதியுடன் மௌனமெனும் மோன நிலையும் கூடுகிறது. விநாயகப் பெருமானை சிற்பரன் என்றதோடு மோனத் தேவன் என்று சொல்லி அவனை வாழ்த்துகிறார் பாரதியார்.

முற்றறிவின், ஞானத்தின் அடையாளமாக யானையைக் கூறுவார்கள். இங்கே வாரணமுகத்தானும் (யானைமுகத்தானும்) அந்த ஞானத்தின் அடையாளமாகத் தான் நிற்கிறான். அவனுடைய மலர் போன்ற திருவடிகள் எங்கும் வெல்லட்டும். அறிவே எங்கும் வெல்லட்டும்.

முற்றறிவின் வெளிப்பாடாய் வெளிவரும் எல்லா நூல்களும் வேத நூல்களே. அவற்றினை தன் திருமுகமாகக் கொண்டவன் விநாயகன். வேதங்களைத்/ஆரணத்தைத் திருமுகமாகக் கொண்டிருக்கும் தேவனின் அருட்திருவடிகள் எங்கும் வெல்லட்டும். அறிவும் அருளும் எங்கும் வெல்லட்டும்.

கணபதி எல்லாப் படைப்புகளுக்கும் இறையவன். இறைவன் என்றால் சொத்தினை உடையவன் என்று பொருள். இங்கே படைக்கப்பட்ட எல்லாவற்றையும் உடையவன் கணபதி.

அறிவும் அருளும் அழகும் சேர்ந்து இயங்கும் இடம் கலைகளின் இடம். சிறந்த கலைகளில் இசைக்கலையும் ஒன்று. அந்த இசைக்கலையில் வல்லவர்களைப் பண்ணவர்கள் என்பர். அந்த இசைவாணர்களின் தலைவன் பண்ணவர் நாயகன் கணபதி.

நல்ல குணங்களை எல்லாம் தேவர்களாக உருவகித்தால் அந்த நற்குணங்களில் எல்லாம் சிறந்த குணமொன்றைத் தேவர் தலைவன் இந்திரன் எனலாம். கணபதி அந்த நற்குணங்கள் எல்லாம் பொருந்தியவன். இந்திரனுக்கும் குரு.

இதயத்தில் அன்பாக இருந்து அருளுபவனும் இறைவனே. அன்பும் அறனும் உடைத்தாயின் வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த அன்பும் அறனுமாக என் இதயத்துள் நின்று ஒளிர்பவன் கணபதி.

அறிவினைக் குறிக்கும் இன்னொரு சொல் மதி. மதி என்றால் சந்திரனுமாம். அந்த மதியினைத் திருமுடியில் சூடிய தலைவன் சந்திர மவுலித் தலைவன். கணபதி அந்தத் தலைவனின் மைந்தன்.

அப்படிப்பட்ட கணபதியின் திருவடிகளைக் கருத்தினில் நிலை நிறுத்துவோம்!
அப்படி நிலை நிறுத்தினால் பல பயன்கள் கிடைக்கும். அவற்றைக் கூறுகிறேன். கேளுங்கள்.

பல நேரங்களில் நம்மை நெருங்கி இருந்து யாராவது சொல்லும் சொற்கள் கூட நம் காதில் விழுவதில்லை. கவனம் எங்கோ சென்று விடுகிறது. அப்படி இருக்க, சொல்லாமல் சொல்லும் பல சொற்கள் நம் காதில் விழுந்தால் அப்படி சொல்லாமல் சொன்னவற்றைக் கேட்டு பல விதங்களில் அவர்களுக்கு நன்மைகள் செய்யலாமே. கணபதியைக் கருத்தினில் வைத்தால் காதால் கேட்க முடியாத நுண்மையான ஒலிகளையும் கேட்கும் படியான உட்செவி திறக்கும்.

கண்ணெதிரே நடக்கும் காட்சிகளில் பலவும் கவனத்தில் நிற்பதில்லை. அப்படி இருக்க எங்கேயோ நடக்கும் காட்சிகளும் அகக் கண்களுக்குத் தெரிந்து அதற்கேற்ப நாம் செயல்பட்டு மற்றவருக்கு உதவினால்? கணபதியைக் கருத்தினில் வைக்க அப்படிப்பட்ட அகக்கண்ணும் திறந்து ஒளி தரும்.

இப்படி உட்செவியும் அகக்கண்ணும் செயல்பட எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாருக்கும் உதவிகள் செய்து அவர்கள் மனங்களை எல்லாம் வென்று வெற்றிக் கொடி நாட்டலாம்.

எல்லோரும் நண்பர்கள் எனும் நிலை வந்த போது யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையின்றிப் போகும். துஷ்ட மிருகங்களும் அன்புடன் பழகும். கண்ணையே செவியாக உடைய நல்ல பாம்பினையும் அன்புடன் கையிலே எடுக்கலாம்.

இந்த நிலை ஏற்பட விடத்தைக் கண்டு பயமில்லை; நோவைக் கண்டு பயமில்லை; கொடிய பகையொன்றும் இல்லாததால் பகையைக் கண்டு பயமில்லை. எல்லாவற்றையும் துச்சமென்று எண்ணி எந்தவித துயரமும் இன்றி மகிழ்ச்சியுடன் தினமும் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் ஒருவராக வைக்கப்பட்டு நிலை பெற்று ஓங்கலாம்.

எந்த வித பயமும் இன்றித் தீரும்.

உடலில் இருக்கும் யோக சக்கரங்கள் ஏழில் உச்சந்தலையில் இருக்கும் ஆயிரம் தாமரைச் சக்கரமாகிய சஹஸ்ராரத்திலிருந்து அமுதம் பொங்கும்.

எல்லா விதமாக கலைகளும் கை கூடி வரும்.

மற்றவருக்காக வாழும் வாழ்க்கையே வேள்வி எனும் இறைச்சொல்லிற்கு ஏற்ப வாழும் வாழ்க்கையாம் வேள்வி ஓங்கும்.

என்றும் நிலையாக வாழும் இறப்பிலா வாழ்வினையும் எய்தி இங்கு நாம் வாழலாம்.

இதனை உணர்வீராக.


இந்தப் பாடலை எம்.எஸ்ஸின் அமுதக் குரலில் கேட்க

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். மூன்றாம் பாடல் கற்பகமே என்று நிறைய இந்த நான்காம் பாடல் கற்பகவிநாயக என்று தொடங்கும் தொடங்குகிறது. இந்தப் பாடல் இஃதுணர்வீரே என்று நிறைய அடுத்தப் பாடல் உணர்வீர் என்று தொடங்கும். இந்தப் பாடல் அகவல் பாவகையைச் சேர்ந்தது.

எதுகை: கற்பக - சிற்பர, வாரண - ஆரண, இந்திர - சந்திர, கணபதி - குணமதில், அக்கினி - திக்கெல்லாம், கட்செவி - விடத்தையும், துச்சம் - நிச்சல் - அச்சம்.

மோனை: கற்பக - கடவுளே, சிற்பர - தேவன், வாரண - மலர்த்தாள், ஆரண - அருட்பதம், படைப்பு - பண்ணவர், இந்திர - இதயம், சந்திர - தலைவன், கணபதி - கருத்திடை, குணமதில் - கூற, அக்கினி - ஆண்மை, கட்செவி - கையிலே, விடத்தையும் - வெம்பகை, துச்சம் - துயரிலாது, நிச்சலும் - நிலை, அச்சம் - அமுதம், வித்தை - வேள்வி, இங்கு - இஃது.

4 comments:

குமரன் (Kumaran) said...

மதுமிதா said...
///உட்செவியும் அகக்கண்ணும் செயல்பட எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாருக்கும் உதவிகள் செய்து அவர்கள் மனங்களை எல்லாம் வென்று வெற்றிக் கொடி நாட்டலாம்.///

ந‌ன்று
ந‌ல்ல‌து சொன்னீர் கும‌ர‌ன்.
October 12, 2007 9:34 PM
--

cheena (சீனா) said...
எனது நண்பன் கற்பகவினாயகனைப் பற்றிய பதிவு மிக அருமை. படித்தேன் நெகிழ்ந்தேன் - நன்றி

நாத்திகம் பற்றி அதிகம் பேசும் வலைப்பூக்கள் உலகினில் ஆத்திகம் பேசும் அருமையான பதிவு.
October 12, 2007 9:35 PM
--

ஜீவா (Jeeva Venkataraman) said...
இந்தச் செய்யுளில் நேரடியாகவே விநாயகரை வாழ்த்தி விட்டார் போலும், வாழ்க நீ எம்மான்!
October 12, 2007 10:13 PM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
நன்றி மதுமிதா அக்கா. வெகுநாட்களாக உங்களைக் காணவில்லை. இன்று காற்றுவெளியிடைக் கண்ணம்மாவை அந்தப்பாட்டு பாடிய கவிஞன் கூட்டி வந்துவிட்டான் போலும். :-)
October 14, 2007 7:32 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
இதோ எம்.எஸ் பாடும் கற்பக விநாயக கடவுளே போற்றி!
பதிவிலும் சேர்த்து விடுங்கள்!

http://www.musicindiaonline.com/p/x/Tqp2rDYv19.As1NMvHdW/
October 14, 2007 10:57 PM
--

குமரன் (Kumaran) said...
சீனா ஐயா. ஆத்திகம் பேசுபவர்கள் நிறைய பேசாமல் ஏதோ சில பேர் எழுதியதைப் படித்துவிட்டுச் சென்று விடுகிறார்கள் போலும். ஆத்திகம் தவிர்த்து மற்றவற்றைப் பேசுபவர்கள் நிறைய எழுதவும் பேசவும் செய்கிறார்கள். அதனால் ஆத்திகத்தை விட மற்றவற்றை அதிகம் வலைப்பூக்கள் பேசுவதாகத் தோன்றுகின்றன. ஆத்திகம் என்பது எழுதப்படும் பல விதயங்களில்/பிரிவுகளில் ஒரு பிரிவு என்ற வகையில் பார்த்தால் ஆத்திகமும்/ஆன்மிகமும் தனக்குரிய இடத்தை வலைப்பூக்களில் பெற்றுள்ளது என்றே தோன்றுகிறது.

உங்கள் நண்பரை பார்க்கும் போது என்னைப் பற்றியும் கொஞ்சம் சிபாரிசு செய்யுங்கள். :-)
October 16, 2007 12:27 PM
--

குமரன் (Kumaran) said...
ஏனுங்க ஜீவா அப்புடி சொல்றீங்க? இதுக்கு முன்னாடி வந்த 'விநாயகர் நான்மணிமாலை'ப் பாடல்களில் எல்லாம் நேரடியா விநாயகரை வாழ்த்தலைன்னு சொல்றீங்களா?
October 16, 2007 12:28 PM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
ஆமாம் இரவிசங்கர். நானும் பல முறை எம்.எஸ். அம்மா இந்தப் பாடலைப் பாடியுள்ளதைக் கேட்டிருக்கிறேன். இடுகையிடும் போது நினைவிற்கு வரவில்லை. பாடலின் சுட்டிக்கு நன்றி.
October 16, 2007 12:29 PM
--

கோபி said...
http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்
October 16, 2007 1:10 PM
--

குமரன் (Kumaran) said...
கோபி.

உங்கள் பின்னூட்டம் புரியவில்லை.
October 16, 2007 1:42 PM
--

கோபி said...
குமரன், தமிழில் domain பெயர்கள் உருவாக்குவதற்கான சோதனை முயற்சிகள் ICAAN இனால் தொடங்கப்பட்டுள்ளன.

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

போன்ற URLகள் வழியாக அந்தப் பக்கங்களை அடையலாம். இது தொடர்பில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நன்றி.
October 16, 2007 1:45 PM
--

ஜீவா (Jeeva Venkataraman) said...
அதுவா குமரன்,

//நடுவில் யானை முகனே என்று வரும் ஒரு சொல்லை மட்டும் எடுத்துவிட்டால் இது முழுக்க முழுக்க பிரம்ம தேவனைப் போற்றும் பாடலாகவே தோன்றும்.//
என்று "செய்யும் தொழில் உன் தொழிலே.." வில் சொல்லி இருந்தீர்கள் அல்லவா, அதனால்தான்.
October 25, 2007 7:37 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் ஜீவா. நன்றி.
October 27, 2007 1:29 PM

Sri Kamalakkanni Amman Temple said...

ந‌ல்ல‌து சொன்னீர்
மிக்க நன்றி!