Friday, May 07, 2010

வந்தே மாதரம் - 1 & 2 - விளக்கம்

பாரதியார் 'வந்தே மாதரம்' பாடலை இருமுறை மொழிபெயர்த்திருக்கிறார். மூலத்தையும் பாரதியாரின் இரு மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் ஒவ்வொரு கண்ணியாக எடுத்து அருஞ்சொற்பொருள் விளக்கம் தரலாம் என்று எண்ணுகிறேன்.

***

வந்தே மாதரம்!
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

ஸுஜலாம் - அருமையான நீர்வளம் கொண்டவள்

ஸுபலாம் - அருமையான கனிவளம் கொண்டவள் (கனி - கனிமம் இல்லை; கனிகள்; பழங்கள்)

மலயஜ ஸீதளாம் - மலயத்தில் (பொதிகையில்) பிறந்த குளிர்ந்த தென்றலை உடையவள் (மலய + ஜ + ஸீதள - மலயத்தில் பிறந்த குளிர்)

ஸஸ்ய ஸ்யாமளாம் - பச்சை நிறப் பயிர்களை உடையவள் (ஸஸ்ய - பயிர்; ஸ்யாமள - கருமை; பசுமை)

இப்போது பாரதியாரின் மொழிபெயர்ப்புகளைப் படித்தால் நன்கு புரியும் என்று எண்ணுகிறேன். இதே முறையிலேயே எல்லா கண்ணிகளுக்கும் எழுத எண்ணியுள்ளேன். பாரதியாரின் கவிதைகளில் உள்ள சில அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள் தருகிறேன். மேல் விளக்கம் வேண்டுமென்றால் கேளுங்கள்.

தண் கால் - குளிர்ந்த காற்று

பைந்நிறம் - பச்சை நிறம்

பழனம் - வயல்கள்

கொழும்பொழில் - கொழிக்கும் வயல்கள்

***

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம் - வெண்ணிற நிலவொளியில் மகிழ்ந்து புலகிதமடையும் (சிலிர்க்கும்) இரவைப் போன்றவளே!

புல்லகுஸுமித த்ருமதள சோபினீம் - மணம் வீசும் மலர்கள் நிறைந்த மரங்களால் செழிப்புடன் திகழ்பவளே!

ஸுஹாசினீம் - இனிய புன்னகை உடையவளே!

ஸுமதுர பாஷினீம் - இனிமையும் மென்மையுமான சொற்களை உடையவளே!

ஸுகதாம் வரதாம் மாதரம் - இன்பமும் (சுகமும்) வரங்களும் தருபவளே! அன்னையே!

***

3 comments:

குமரன் (Kumaran) said...

Sivabalan said...
குமரன் சார்,

நல்ல பதிவு.

நன்றாக விளக்குயுள்ளீர்கள்.

நன்றி
November 02, 2006 8:48 PM
--

ஜடாயு said...
குமரன், நம் தேசிய உணர்வின் ஆன்மாவும் இதயமும் ஆனது வந்தே மாதரம் என்னும் கீதம். அதன் பொருளை விளக்கும் உங்கள் பதிவுகள் வாழ்க!

"ஸுமதுர பாஷிணீம்" என்பதற்கு "நல்ல அழகிய மொழிகளை உடையவளே" என்றும் பொருள் வரும். பாரத நாட்டின் மொழிகள் எல்லாவற்றையும் வாழ்த்தியதாகக் கொள்ளலாம்.

"வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை" என்பதற்கு வெண்ணிலாவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள் கொண்ட (இன்பமும் எழிலும் வாய்ந்த வாழ்க்கையை உடைய) பூமியே
என்றும் பொருள் உண்டு..
"Glory of moonlight dreams" என்று அரவிந்தர் அற்புதமாக இந்த வரியை மொழியாக்கம் செய்தார்.
November 02, 2006 10:21 PM
--

Sridhar Venkat said...
குமரன் அவர்களுக்கு,

மிக நன்றாக விளக்கியிருக்கின்றீர்கள். அர்த்ததுடன் பாடலைப் பாடுவது ஒரு தனி அநுபவம்தான். உங்கள் நேரத்திற்கும், முயற்சிகளுக்கும் நன்றிகள் பல!

ஒரு சிறிய சந்தேகம்... 'வந்தே மாதரம்' என்றால்... 'வணங்குகிறேன் அன்னையை' என்று நினைத்திருந்தேன். உங்கள் மொழி பெயர்ப்பில்
//ஸுகதாம் வரதாம் மாதரம் - இன்பமும் (சுகமும்) வரங்களும் தருபவளே! அன்னையே!//

என்று 'விளி வேற்றுமையில்' அமைந்திருக்கின்றதே... அதுதான் சரியோ?

எனக்கு வங்காள மொழி தெரியாது. ஆனால் கொஞ்சமே கொஞ்சம் வடமொழி இலக்கணம் தெரியும். அதனால்தான் குழப்புகிறேனோ?
November 02, 2006 10:25 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
November 03, 2006 5:44 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை ஜடாயு ஐயா. ஸுமதுர பாஷிணீம் என்பதற்கு நல்ல இனிமையான மொழிகளை உடையவளே என்றும் பொருள் உண்டு.

அரவிந்தரின் மொழிபெயர்ப்பை படித்ததில்லை. இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். ஒரு வேளை அரவிந்தரிடம் தான் பாரதியார் இந்தப் பாடலின் பொருளை சரிபார்த்துக் கொண்டாரோ? பாரதியாருக்கு வடமொழி தெரியும் என்பது தெரியும்; வங்காளமும் தெரியுமா என்று சரியாகத் தெரியவில்லை.
November 03, 2006 5:48 AM
--

குமரன் (Kumaran) said...
Sridhar Venkat,

வடமொழி வல்லுனர்கள் தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.

மாதரம் என்பது வெறும் பெயர்ச்சொல் என்றே எண்ணுகிறேன். இடத்திற்குத் தகுந்த படி வேற்றுமைகளைச் சேர்த்துக் கொள்கிறோம். வந்தே மாதரம் என்னும் போது அன்னைக்கு வணக்கம் செய்கிறேன் என்றும் அன்னையை வணங்குகிறேன் என்றும் பொருள் சொல்லக் கண்டுள்ளேன். ஸுகதாம் வரதாம் மாதரம் என்னும் போது சரியாக மொழிபெயர்ப்பதென்றால் 'சுகம் கொடுப்பவள்; வரம் கொடுப்பவள்; அன்னை' என்பதோடு நிற்கவேண்டும். இங்கே விளித்தலாக மாற்றியது இது அன்னையை நோக்கிப் பாடுவதைப் போல் அமைந்திருப்பதால். எனக்கும் வங்காள மொழி தெரியாது. வடமொழியிலும் கேள்வி ஞானம் மட்டுமே. தெரிந்த சிறிதளவை வைத்தே பொருள் சொல்ல முயன்றிருக்கிறேன். அதனால் குறைகள் மலிந்திருக்க பெரும் வாய்ப்புகள் உண்டு.
November 03, 2006 5:52 AM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ஜடாயு ஐயா & Sridhar Venkat
November 03, 2006 5:53 AM
--

ஜெயஸ்ரீ said...
//குமரன், நம் தேசிய உணர்வின் ஆன்மாவும் இதயமும் ஆனது வந்தே மாதரம் என்னும் கீதம் //

அதன் பொருளை வரிக்கு வரி படித்து அதன் இனிமையை உணர வைக்கும் உங்கள் முயற்சி போற்றத்தக்கது.

Sridar Venkat அவர்களே,

//ஒரு சிறிய சந்தேகம்... 'வந்தே மாதரம்' என்றால்... 'வணங்குகிறேன் அன்னையை' என்று நினைத்திருந்தேன். உங்கள் மொழி பெயர்ப்பில்
//ஸுகதாம் வரதாம் மாதரம் - இன்பமும் (சுகமும்) வரங்களும் தருபவளே! அன்னையே!//

என்று 'விளி வேற்றுமையில்' அமைந்திருக்கின்றதே... அதுதான் சரியோ? //

எனக்குத் தெரிந்த வரையில் "மாதரம்" என்றால் "அன்னையை" என்றே பொருள். அது இரண்டாம் வேற்றுமை. விளி வேற்றுமை அல்ல. உதாரணத்துக்கு
"வாத்ஸல்யாதி குணோஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம் - வெங்கடேச ஸுப்ரபாதம் "
வந்தே ஜகன் மாதரம் என்பதற்கு உலகனைத்துக்கும் தாயானவளை வணங்குகிறேன் என்பதே பொருள்.

சுகதாம் வரதாம் மாதரம் - இன்பமும் சுகமும் அள்ளித்தரும் அன்னையை வணங்குகிறேன் என்பதுதான் word to word translation

ஆனால் கவிதையை மொழிபெயர்க்கும்போது அதன் பொருள்சிதையாமால் இருத்தல் தேவை. ஆனால் சொற்களின் கட்டமைப்பு மொழிக்கு மொழி மாறுபடும்.

//இன்பமும் (சுகமும்) வரங்களும் தருபவளே! அன்னையே!//

இப்படி மொழிபெயர்க்கும்போது
"இன்பமும் வரமும் அள்ளித்தரும் அன்னையை வணங்குகிறேன்"

என்பதைவிட அழகாக படிக்க இனிமையாக இருக்கிறதல்லவா?
November 03, 2006 9:41 AM
--

ஜெயஸ்ரீ said...
//வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை" என்பதற்கு வெண்ணிலாவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள் கொண்ட (இன்பமும் எழிலும் வாய்ந்த வாழ்க்கையை உடைய) பூமியே
என்றும் பொருள் உண்டு..
"Glory of moonlight dreams" என்று அரவிந்தர் அற்புதமாக இந்த வரியை மொழியாக்கம் செய்தார்.
//
,
இந்த வரிக்கான பாரதியின் இரண்டாவது மொழிபெயர்ப்பில்

"தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்"

எவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கிறது!!.

இரண்டாவது மொழிபெயர்ப்பு மிக மிக சிறப்பு. மூலப்பாடலின் பொருட்செறிவும் , பாவமும் சிறிதும் குறையாமல் முத்துமுத்தாய்த் கோர்க்கப்பட சொற்கள். எத்தனை முறை படித்தாலும் வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.
November 03, 2006 10:11 AM
--

குமரன் (Kumaran) said...

சிவமுருகன் said...
அண்ணா,
ஒரு சிறந்த தமிழாசிரியராக வரவேண்டிய நீங்கள் எப்படி பொறியாளர் ஆனீர்கள், அது சரி தமிழ் கற்ற அனைவரும் புண்ணியரே! அதை மற்றவர்களுக்கு எடுத்து கொடுக்கும் உங்களால் பொன்விழா கண்ட தமிழகம் பெருமை கொள்கிறது.

அருமையான விளக்கங்கள்.
November 04, 2006 7:06 AM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வைரம் பட்டை தீட்ட தீட்ட ஒளிரும் என்பார்கள்; அது போல் நம் பாரதி அவர் வரிகளை அவரே பட்டை தீட்டிக் கொள்கிறார்; இரண்டாவது மொழிபெயர்ப்பு இன்னும் ஜொலிக்கிறது!

//ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்//
என்று இரண்டாய்ச் சொன்னதை,
நம் பாரதி எப்படி ஒன்றாக்கி விட்டார் பாருங்கள்!
//புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்//
சிரித்த முகத்துடன் சிறந்த மொழிகளைப் பேசுவது;
புன்னகை வேறு, மொழி வேறு என்று இல்லாமல், இரண்டும் ஒன்றாய் அமைவது எவ்வளவு சிறப்பு!

காணாத பாரத அன்னையை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்!

நன்றி குமரன்!
நன்றி ஜெயஸ்ரீ, சுப்ரபாதத்தில் வரும் வந்தே மாதரம் பற்றிச் சொல்லியமைக்கு!
November 04, 2006 11:35 AM
--

Sridhar Venkat said...
குமரன் மற்றும் ஜெயஸ்ரீ அவர்களுக்கு,

தங்கள் விளக்கத்திற்கு மிக நன்றி.

அரவிந்தரின் மொழி பெயர்ப்பில் கூட - 'Mother, I bow to thee!' என்றுதான் வருகின்றது. அப்படியே மொழி பெயர்த்தால் 'I bow thy Mother' என்றல்லவா வர வேண்டும்...

A R Rehman கூட 'தாய்மண்ணே... வணக்கம்' என்றே பாடுகிறார்.

வந்தே என்ற வார்த்தையை ஆத்மனேபதம் என்று சொல்வார்கள். அதாவது active voice. 'வணங்குகிறேன்' என்றுதான் பொருள் வரும்.

வேறு யாராவது கடுப்பாகி என்னை திட்டுவதற்குள்... நானே நிறுத்திவிடுகின்றேன் இந்த nitpicking-ஐ... :-)))
November 04, 2006 12:56 PM
--

G.Ragavan said...
மிக அருமை. மிக அருமை. மிக அருமை.
November 06, 2006 6:30 AM
--

குமரன் (Kumaran) said...
ஜெயஸ்ரீ,

தங்களின் பாராட்டிற்கும் விளக்கத்திற்கும் நன்றிகள்.
November 09, 2006 1:33 PM
--

குமரன் (Kumaran) said...
ஜெயஸ்ரீ, நன்கு இரசித்து எழுதியிருக்கிறீர்கள்.
November 09, 2006 1:34 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன். பொறியியல் இளநிலை முடித்ததும் எம்.ஏ. தமிழ் படிக்கமுடியுமா என்று விசாரித்தேன். அதற்குள் எம்.ஈ.யிலும் இடம் கிடைத்துவிட்டதால் பொறியல் செய்வதிலேயே தொடர்ந்துவிட்டேன். :-) உங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி.
November 09, 2006 1:36 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை இரவிசங்கர். முதல் கவிதையை விட இரண்டாவது கவிதையே நன்கு இருக்கிறது. முதல் கவிதை மொழிபெயர்ப்பு என்பதைத் தெளிவாகக் காட்டிவிடுகிறது. இரண்டாவது கவிதை மொழிபெயர்ப்பு என்றால் நம்ப இயலாத அளவிற்கு இருக்கிறது. :-)
November 09, 2006 1:37 PM
--

குமரன் (Kumaran) said...
தங்களின் nitpickingக்கு மிக்க நன்றி Sridhar Venkat. அது இங்கே வரவேற்கப்படுகிறது. :-)
November 09, 2006 1:39 PM
--

குமரன் (Kumaran) said...
இராகவன். அருமையாகவா இருக்கிறது? எளிமையாக இருக்கிறதாக எண்ணினேனே? :-)

மிக்க நன்றி. மிக்க நன்றி. மிக்க நன்றி.
November 09, 2006 1:41 PM
--

செல்வன் said...
Thanks for the post kumaran.Great explanations about vande matharam
November 09, 2006 2:08 PM
--

ஜடாயு said...
பாரதியின் மொழியாக்கம் மூலத்தைப் போன்றே இனிமையானது. ஐயமில்லை.

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி" என்பதற்கிணங்க, நானும் எளிய கவிதை வடிவில் இப்பாடலைத் தர முயன்றேன். பழைய திண்ணை இதழ் ஒன்றின் வெளிவந்தது -
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30308151&format=html
November 09, 2006 7:04 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி செல்வன்.
November 10, 2006 11:16 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி ஜடாயு ஐயா. உங்களின் மொழியாக்கத்தை ஏற்கனவே திண்ணையில் படித்திருக்கிறேன்.
November 10, 2006 11:19 AM