Thursday, May 06, 2010

வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியாரின் பாடல்கள் எப்படி தமிழக நாட்டுப் பற்றாளர்களுக்கு உணர்ச்சியூட்டும் பாடல்களாக இருந்தனவோ அப்படியே இந்திய நாட்டுப் பற்றாளர்கள் எல்லோருக்கும் 'வந்தே மாதரம்' என்னும் வங்க மொழிப் பாடல் மிகவும் உணர்ச்சியூட்டும் பாடலாக இருந்தது. அந்தப் பாடலுக்கு பாரதியார் இருமுறை மொழிபெயர்ப்புக் கவிதை இயற்றியிருக்கிறார். 'வந்தே மாதரம்' பாடலின் மூலத்தையும் பாரதியாரின் மொழிபெயர்ப்புகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு கண்ணியாக எடுத்து இனிவரும் பதிவுகளில் விளக்கம் தருகிறேன். கேள்விகள் ஏதேனும் இருந்தால் இப்போதே கேளுங்கள். அவற்றிற்கு வரும் பதிவுகளில் விடை சொல்ல நல்ல வாய்ப்பாக அமையும்.

***

வந்தே மாதரம்!
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!

கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே
அபலா கேனோ மா எதோ பாலே
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதலவாரிணீம் மாதரம்!
வந்தே மாதரம்!

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா
த்வம் ஹி ப்ராணா: ஷரீரே

பாஹுதே துமி மா சக்தி
ஹ்ருதயே தும் மா பக்தி
தொமார இ ப்ரதிமா கடி
மந்திரே மந்திரே!

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ
கமலா கமலதல விஹாரிணீ
வாணீ வித்யாதாயினீ நமாமி த்வாம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்!

ஸ்யாமளாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம்!

***

பாரதியாரின் முதல் மொழிபெயர்ப்பு:

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

முப்பது கோடி வாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடி தோளுயர்ந்துனக்காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திறலுடையாய்! அருளினை போற்றி!
பொருந்தலர் படை புறத்தொழித்திடும் பொற்பினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நீயே வித்தை! நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத்திருக்கும் உயிருமன் நீயே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தடந்தோளகலாச் சக்தி நீ அம்மே!
சித்தம்தீங்காதுரு பக்தியும் நீயே!
ஆலயந்தோறும் அணி பெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்குனதே!
வந்தே மாதரம் வந்தே மாதரம்!

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல்லிதழ்களில் களித்திடும் கமலை நீ!
வித்தை நன்கருளும் வெண்மலர்த் தேவி நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

போற்றி வான்செல்வி! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப்பெருக்கினை இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனிய புன்முறுவலாய்! இலங்கு நல்லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

***

பாரதியாரின் இரண்டாம் மொழிபெயர்ப்பு:

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல் படை தாங்கு முன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?
ஆற்றலில் மிகுந்தனை, அரும்பதம் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை ஓட்டுவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ!
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,
ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்திதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

திருநிறைந்தனை, தன்னிகர் ஒன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளம் சார்ந்தனை!
மருவு செய்களின் நற்பயன் மல்குவை!
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை!
பெருகுமின்பம் உடையை குறுநகை
பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநிலத்து வந்து எம்முயிர் தாங்குவை
எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம்!


இந்த இரண்டாம் மொழிபெயர்ப்பின் பகுதியை இசையரசி எம்.எஸ். பாடியிருக்கிறார்.

5 comments:

குமரன் (Kumaran) said...

ஜெயஸ்ரீ said...
முழுப்பாடலையும் அளித்ததற்கு நன்றி குமரன்.

// கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே
அபலா கேனோ மா எதோ பாலே //

இந்த வரிகள் மூலப்பாடலில் பங்கிம் சந்திரர் எழுதியபடி

"சப்த கோடி கண்ட நினாத கராலே
த்வி சப்த கோடி புஜைந்திர்திரித கர கரவாலே"

என்றே இருந்தன. (சப்த கோடி- ஏழு கோடி அன்றைய வங்காள மாநிலத்தின் மக்கள் தொகை ஏழு கோடி)

மகாகவி பாரதி இதை தன் முதல் மொழி பெயர்ப்பில் மொழி பெயர்க்கும்போது

"முப்பது கோடி வாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடி தோளுயர்ந்துனக்காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவரே செப்புவர்?"

என்றே மொழி பெயர்த்தார். பாடல் எழுதப்பட்ட போது அது முழு இந்தியாவையும் நினைவில் கொண்டு எழுதப்படவில்லை. ஆனால் அதை முதல் முதலில் தேசியப்பாடலாக மொழி பெயர்த்தது நம் மகாகவியே என நினைக்கிறேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகே "சப்த கோடி" என்பது "கோடி கோடி" என்று மாற்றப்பட்டது.

பின்னாட்களில் முதலிரண்டு பத்திகள் மட்டுமே தேசியப்பாடலாகப் பாடப்பட்டதால் இது அதிகம் கவனிக்கப்படாமல் போனது.

October 08, 2006 5:30 PM
--
Sivabalan said...
குமரன் சார்,

நல்ல பாடல்.

பதிவுக்கு நன்றி

October 08, 2006 6:05 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்,

பாரதியின் இரண்டாவது மொழிபெயர்ப்பை, இசைக்குயில் எம்.எஸ். தனது தேன் குரலில் மிகவும் உருகிப் பாடியிருக்கிறார்கள்.
அதுவும்
//நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்//
கொஞ்சு தமிழில், சரியான உச்சரிப்புடன்!

இதோ சுட்டி
http://www.musicindiaonline.com/p/x/GqbsAwzF-t.As1NMvHdW/

October 08, 2006 6:16 PM
--
Merkondar said...
குமரன் இதைத் தான் நான் தேடினேன் வழங்கியதற்கு நன்றி

October 09, 2006 5:03 AM
--

Johan-Paris said...
குமரன் !
இதன் மூலத்தை அப்பப்போ கேட்டுள்ளேன். மொழிபெயர்ப்புடன் படிக்க ,இது பற்றி இப்போ ஏன் ஓர் புதுச் சர்ச்சை வந்தது எனப் புரியவில்லை..
பதிவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

October 09, 2006 7:53 AM
--

இலவசக்கொத்தனார் said...
நல்ல பதிவு குமரன்.

கே.ஆர்.எஸ். அளித்த சுட்டியில் இன்னும் பாடலைக் கேட்கவில்லை. அதையும் செய்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

October 09, 2006 8:19 AM
--

குமரன் (Kumaran) said...
ஜெயஸ்ரீ,

பாரதியார் இன்னொரு பாடலிலும் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடியிருக்கிறாரே. ஒரு வேளை இந்தப் பாடலில் தோன்றிய எண்ணமோ?

உண்மை. வந்தே மாதரம் முழு இந்தியாவையும் மனதில் கொண்டு எழுதப்படவில்லை என்று தான் தோன்றுகிறது. நம் மகாகவியும் 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்று தமிழையும் தமிழர்களையும் பாரத நாட்டிற்கு முன் வைத்துப் பல பாடல்கள் பாடியிருக்கிறாரே. அது போலவே வந்தே மாதரம் பாடலையும் எடுத்துக் கொள்ளலாம். அது பின்னர் பாரதம் முழுதும் பாடப்படும் போது மாற்றம் நிகழ்ந்தது மிக இயற்கை. பாரதியார் மொழிபெயர்ப்பதற்கு முன்னரே அந்த மாற்றம் நிகழந்து அதற்குப் பாரதியார் மொழிபெயர்ப்பு செய்திருக்கலாமே?

October 09, 2006 8:30 AM
--

குமரன் (Kumaran) said...
உங்கள் பாணி பின்னூட்டத்திற்கு நன்றி சிவபாலன். :-)

October 09, 2006 8:31 AM
--

குமரன் (Kumaran) said...
இந்தப் பாடலை எம்.எஸ். பாடிக் கேட்டிருக்கிறேன் ரவிசங்கர். பாடலில் சுட்டியைக் கொடுத்ததற்கு நன்றி. பதிவிலும் சேர்த்துவிடுகிறேன். நன்றி.

October 09, 2006 8:34 AM
--
குமரன் (Kumaran) said...
தேடிக் கொண்டிருந்தீர்களா என்னார் ஐயா. என்னிடம் பாரதியார் கவிதைகள் புத்தகம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது பாரதியார் பாடல் வேண்டுமென்றால் சொல்லுங்கள். தனிமடலில் அனுப்புகிறேன்.

October 09, 2006 9:36 AM
--

SK said...
நல்ல பாடல். அதற்கு பாரதியின் நல்ல விளக்கம்!
நன்றி குமரன்.

October 09, 2006 9:38 AM
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. இந்தப் பாடலில் ஒரு பத்தியில் முப்பெரும் தேவியரைப் பற்றி வருகிறதல்லவா? அது இந்தப் பாடலை இந்து சமயப் பாடல் ஆக்கிவிடுகிறது; அதனால் இதனைத் தேசியப் பாடல் என்று சொல்லி எல்லார் மீதும் திணிக்கக் கூடாது என்ற சர்ச்சை இருக்கிறது.

October 09, 2006 9:38 AM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். பாடலையும் கேட்டுட்டு வந்து சொல்லுங்க.

October 09, 2006 9:39 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி எஸ்.கே.

October 09, 2006 9:40 AM

குமரன் (Kumaran) said...

G.Ragavan said...
வங்கத்திலும் மிக அருமையான பாடல். ஐதராபாத்காரர்களை அந்த ஊர் பிரியாணி தவிர எந்த பிரியாணி போட்டும் சமாதானப்படுத்த முடியாது என்பார்கள். தமிழர்களை நம்மூர்ச் சாம்பார் தவிர எந்தூர்ச் சாம்பாரும் திருப்திப் படுத்தாது. அதுபோல வங்காளிகளுக்கு இந்தப் பாடலை யார் பாடினாலும் திருப்தி இருக்காது. அவர்களே பாட வேண்டும். எனக்கு இசைஞானம் என்பது வெறும் கேள்வியறிவு.

வங்கத்தில் ஒரு நண்பன் வீட்டிலிருந்த பொழுது அவன் இந்தப் பாட்டைப் பாடினான். கூட நான் பாடும் பொழுது உச்சரிப்பிலும் ராகத்திலும் நூறு திருத்தம். சரி...அவனே பாடட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு அவனும் அவனுடைய அம்மாவும் அப்பாவும் வந்தே மாதரம் பாடலை ஏ.ஆர்.ரகுமான் போட்டதிற்கும் பாரம்பரிய இசை அமைப்பிற்கும் என்ன வேறுபாடுகள் என்று பேசத் தொடங்கி விட்டார்கள். நான் பப்பரப்பாங்பாங். :-)

ஒரு பாடலை முழுமையாக ருசிக்க ரசிக்க மொழியறிவு மிகத்தேவை. வங்காளிகள் இந்தப் பாடலின் ஒவ்வொரு எழுத்தையும் ருசித்து ருசித்து அந்தச் சுவையிலே ஊறி வெளிவரயியலாமல் இன்புற்றிருக்கிறார்கள்.

ஆனால் நாம்...எந்தத் தமிழ்ப் பாடலையாவது சொல்லி...........எங்கள் தமிழர் இந்தப் பாடலை நாடி நரம்போடு ஊனும் உயிரோடும் களிக்கிறார்கள் என்று சொல்ல ஆசை மட்டுந்தான் படமுடிகிறது.

ஒரு தமிழ்ப்பாவை ரசிப்பதைத் தடுக்க எத்தனையெத்தனை காரணிகள். கருத்தை ஏற்பதும் விடுப்பதும் வேறு. ரசிப்பது என்ற அளவிற்குக் கூட தமிழ்பற்று தலைவிரித்து ஆடுகிறது. என் வயிற்றெரிச்சல். உச்சரிப்பு பிழையாகப் பேசினால் வீட்டில் திருத்துகிறார்கள். நம்மூரில்...வளம் என்பதை வலம் என்று உச்சரித்த நண்பனைத் திருத்தினால் மொழியின் பங்கு அதைக் கொண்டு செல்வதோடு முடிந்து விடுகிறது என்று பேசுகிறான்.

பாரதியின் தீந்தமிழ் மொழிபெயர்ப்பும் மிகச் சிறப்பு. வரிமாற்றம் செய்யாமல் மொழிமாற்றம் செய்திருப்பது அவரது தமிழறிவின் பெருமை.

பாரதி.........நீ எங்கள் ஆசான். உன் தமிழ் எங்கள் உணவு. ஏன் உணவு தெரியுமா? உள்ளே போன மூச்சு வெளியே வந்திடும். உள்ளே போகும் உணவு நன்றாயின் உடலோடு தங்கும். அல்லன மட்டுமே வெளியேறும்.

October 09, 2006 10:44 AM
--

இராம் said...
குமரன்,


அருமையான பதிவு,

நன்றி...

October 09, 2006 10:54 AM
--

மதுமிதா said...
நன்றி குமரன்
தொடருங்கள் பாரதி பணியினை

October 10, 2006 4:56 AM
--

செயபால் said...
"வந்தே மாதரம்" தமிழல்லவே? அந்தத் தொடரை பாரதியார் ஏன் மொழி பெயர்க்கவில்லை? சிறு நெருடல் தான்.

October 10, 2006 6:22 AM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
இராகவன். நீங்களும் சொல்லின் செல்வன் ஆகிவிட்டீர்கள். :-) 'கண்டேன் கற்பினுக்கணியை' என்றானே கம்பனின் சொல்லின் செல்வன் அது போல் நீங்களும் 'வங்கத்திலும் மிக அருமையான பாடல்' என்று ஒற்றை வரியில் பாரதியாரின் மொழிபெயர்ப்புகளைப் பாராட்டிக் கொண்டே வங்கத்தின் முதற்பாடலையும் பாராட்டிவிட்டீர்கள். :-)

நானும் ஹைதராபாத்திற்குச் சென்ற போது அந்த ஊர் பிரியாணி சாப்பிடணும்ன்னு ஆசைப்பட்டு சார்மினார் பக்கத்துல ஒரு உணவு விடுதியில் உண்டேன். கொண்டு வந்து வைத்ததில் எடுத்து வைத்துச் சாப்பிட சாப்பிட வந்து கொண்டே இருந்தது. அவ்வளவு வைத்திருந்தார்கள். சுவை எப்படி இருந்தது என்று இப்போது மறந்துவிட்டது. +2 படிக்கும் போது சென்றது.

சாம்பாரைப் பற்றி நீங்கள் சொன்னதும் உண்மை. நம்மூர் சாம்பார் தான் தகுந்த காரமும் புளிப்பும் கொண்டு இருக்கிறது. மற்றவர்கள் செய்யும் சாம்பாரில் இனிப்புச் சுவையும் வருகிறது. பிடிப்பதில்லை.

வங்காளிக்கு மட்டும் இல்லைங்க. சௌராஷ்ட்ரர்களுக்கும் தான். எங்கே சௌராஷ்ட்ர மொழிப் பாடலை டி.எம்.எஸ். பாடியதை வைத்து நீங்கள் பாடுங்கள். நான் ஒத்துக் கொள்கிறேனா என்று பார்க்கிறேன். :-)

October 10, 2006 6:37 AM
--

குமரன் (Kumaran) said...
இராகவன்,

ஒரு பாடலை முழுமையாக ரசிக்க மொழியறிவு தேவை என்பது முழுக்க முழுக்க உண்மை. நம்மவர்களும் ஊனும் உயிரும் களிக்கச் சில பாடல்களைப் பாடுகிறார்கள் என்று தான் நினைக்கிறேன். திருக்குறளில் சில பாக்கள் (முதல் பா மட்டுமாவது) இதில் வரும் என்று நினைக்கிறேன்.

தமிழ் எங்கள் உணவு தான். :-)

October 10, 2006 6:40 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி ராமசந்திரப்பிரபு (என்கிற ராம்) :-)

October 10, 2006 6:40 AM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
நன்றி மதுமிதா அக்கா. நீங்கள் ஏற்கனவே இட்டது தான் இந்த ஜாதீய கீதங்கள். ஆனால் அவற்றைக் கொஞ்சம் அலசிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கு முன்னுரையாகத் தான் இந்தப் பதிவு.

October 10, 2006 6:41 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் ஜெயபால். 'வந்தே மாதரம்' என்ற மந்திரச் சொல்லை பாரதியார் மொழிபெயர்க்காமல் விட்டுவிட்டார். ஆனால் சில சொற்களை மொழிபெயர்க்காமல் விட்டுவிடுவதே சிறந்தது. அவர் காலத்தில் இந்த சொற்றொடருக்கு இருந்த வலிமையைக் கருதியும் அதனை மொழிபெயர்க்காமல் விட்டிருக்கலாம்.

October 10, 2006 6:42 AM
--


G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
இராகவன். நீங்களும் சொல்லின் செல்வன் ஆகிவிட்டீர்கள். :-) 'கண்டேன் கற்பினுக்கணியை' என்றானே கம்பனின் சொல்லின் செல்வன் அது போல் நீங்களும் 'வங்கத்திலும் மிக அருமையான பாடல்' என்று ஒற்றை வரியில் பாரதியாரின் மொழிபெயர்ப்புகளைப் பாராட்டிக் கொண்டே வங்கத்தின் முதற்பாடலையும் பாராட்டிவிட்டீர்கள். :-) //

ஹா ஹா ஹா சொல்லைக் கொடுப்பவன் வேலன். வேலனின் செல்வன் என்று வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. :-) அவர்கள் அந்தப் பாடல் மட்டுமல்ல ஒவ்வொரு வங்கப் பாடலையும் ரொபீந்தர ஷொங்கீத் என்னும் ரவீந்திரரின் பாடல்களையும் மற்ற வங்கப் பாடல்களையும் எப்படிச் சுவைக்கிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒரு சிறிய புத்தக அலமாரியாவது இருக்கிறது. ம்ம்ம்.

// நானும் ஹைதராபாத்திற்குச் சென்ற போது அந்த ஊர் பிரியாணி சாப்பிடணும்ன்னு ஆசைப்பட்டு சார்மினார் பக்கத்துல ஒரு உணவு விடுதியில் உண்டேன். கொண்டு வந்து வைத்ததில் எடுத்து வைத்துச் சாப்பிட சாப்பிட வந்து கொண்டே இருந்தது. அவ்வளவு வைத்திருந்தார்கள். சுவை எப்படி இருந்தது என்று இப்போது மறந்துவிட்டது. +2 படிக்கும் போது சென்றது. //

நான் பத்து மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். ஆகையால் சுவை நினைவிலுண்டு. :-) அதுவுமில்லாமல் பெங்களூரில் ஆந்திர நண்பர்கள் பிரியாணி சரியில்லை என்று புலம்புவதும் தமிழர்கள் சாம்பார் சரியில்லை என்று புலம்புவதும் தினப்படி வாடிக்கை.

// சாம்பாரைப் பற்றி நீங்கள் சொன்னதும் உண்மை. நம்மூர் சாம்பார் தான் தகுந்த காரமும் புளிப்பும் கொண்டு இருக்கிறது. மற்றவர்கள் செய்யும் சாம்பாரில் இனிப்புச் சுவையும் வருகிறது. பிடிப்பதில்லை. //

எனக்குப் பழகி விட்டது. ஒருமுறை நண்பர்களை வீட்டிற்குச் சாப்பிட அழைத்திருந்தேன். தமிழ் முறை உணவுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவர்களின் கட்டாயம் வேறு. சோறு, சாம்பார், ரசம், அவியல், தயிர் என்று வைத்திருந்தேன். சாப்பிட்டு முடிந்து விட்டு lord of the rings பார்த்துக் கொண்டிருந்தோம். மும்பைத் தோழி ஒருத்தி திடீரென "R, can i ask u something?" என்றால் R என்றுதான் என்னை அழைப்பார்கள். எல்லா நண்பர்களுக்கும் முதலெழுத்து மட்டும்தான் பெயர். நானும் என்ன என்று கேட்டேன். "Can I hv a cup of sambar to drink?" என்று கேட்டாள். நான் வியந்து போனேன். ஏனென்று கேட்டால் பெங்களூரில் சாம்பார் என்று இத்தனை நாள் அவளை ஏமாற்றி விட்டார்களாம். சாம்பார் இதுதான் என்று இத்தனை நாள் தெரியாமல் போனதே என்று வருத்தப்பட்டாள். நான் கொடுத்த சாம்பார் குறிப்பு நொய்டா கொல்கத்தா என்று மணந்து கொண்டிருக்கிறது என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். :-)))))

// வங்காளிக்கு மட்டும் இல்லைங்க. சௌராஷ்ட்ரர்களுக்கும் தான். எங்கே சௌராஷ்ட்ர மொழிப் பாடலை டி.எம்.எஸ். பாடியதை வைத்து நீங்கள் பாடுங்கள். நான் ஒத்துக் கொள்கிறேனா என்று பார்க்கிறேன். :-) //

அட நீங்க வேற. அவரு தமிழ்ல பாடுன பாட்டுகளையே என்னால ஒழுங்கா பாட முடியாது. இதுல சௌராஷ்ட்டிரம் வேறையா...நீங்க வேற....நான் இன்னும் தாள் தூப் சே-யத் தாண்டலை. :-)

// ஒரு பாடலை முழுமையாக ரசிக்க மொழியறிவு தேவை என்பது முழுக்க முழுக்க உண்மை. நம்மவர்களும் ஊனும் உயிரும் களிக்கச் சில பாடல்களைப் பாடுகிறார்கள் என்று தான் நினைக்கிறேன். திருக்குறளில் சில பாக்கள் (முதல் பா மட்டுமாவது) இதில் வரும் என்று நினைக்கிறேன்.

தமிழ் எங்கள் உணவு தான். :-) //

அறிவேன். நான் அறிவேன்.

October 10, 2006 10:26 AM
--

குமரன் (Kumaran) said...

rnateshan. said...
குமரன் இதை நம் முத்தமிழ் மற்றும் நம்பிக்கை குழுமத்தில் இடமுடியுமா!!இடவும்.

October 10, 2006 11:08 AM
--

சிவமுருகன் said...
பாரதியின் ஒரு நல்ல பாடல்,

அவரது பன்மொழி நிபுணத்துவத்திற்க்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பாடல்.

October 10, 2006 12:25 PM
--
குமரன் (Kumaran) said...
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி R. உங்கள் சாம்பார் செய்முறை உலகில் எல்லா மூலைகளுக்கும் பரவ என் வாழ்த்துகள். :)

நாலைஞ்சு முறை கேளுங்க. தாள் தூப் என்ன அதுக்கு மேலயும் பாடமுடியும். :-)

October 11, 2006 5:19 AM
--

குமரன் (Kumaran) said...
இதோ நம்பிக்கை குழுமத்தில் இடுகிறேன் நடேசன் ஐயா. நான் முத்தமிழ் குழுமத்தில் இல்லை. அதனால் நீங்கள் முத்தமிழ் மன்றத்திற்கு அனுப்புங்கள்.

October 11, 2006 5:22 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் சிவமுருகன். பல மொழிகள் தெரிந்திருந்தால் நம் மொழியின் அருமை இன்னும் புரியும் என்பது என் சொந்த அனுபவம். :-)

October 11, 2006 5:25 AM
--

வாய்சொல்வீரன் said...
பாரதியாரின் மொழிபெயர்ப்புகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குமரன்.

October 11, 2006 5:27 AM
--

குமரன் (Kumaran) said...
படித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி வாய்சொல்வீரன்.

October 15, 2006 8:35 AM
--

மடையன் said...
குமரன் அவர்களே,

ஒரு சிறிய திருத்தம். //உண்மை தான் ஜெயபால். 'வந்தே மாதரம்' என்ற மந்திரச் சொல்லை பாரதியார் மொழிபெயர்க்காமல் விட்டுவிட்டார். // பாரதியார் 'வந்தே மாதரம்' என்ற சொல்லை மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு முறை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் 'வந்தே மாதரம்' என்போம் "எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்று முழங்கி இருக்கிறார்.

August 15, 2007 12:28 PM
--

குமரன் (Kumaran) said...
திருத்தத்திற்கு நன்றி 'மடையன்' என்ற பெயரில் எழுதும் நண்பரே. அந்த வரிகளைப் பாடலிலும் அமைத்துப் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் வந்தே மாதரத்தை மொழிபெயர்க்கவில்லை என்று சொன்னேன். மற்றபடி நீங்கள் சொல்வது போல் வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்று பாடியிருக்கிறார்.

மிக்க நன்றி.

August 17, 2007 6:06 AM