Thursday, May 27, 2010
கணபதியைப் போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்குப்
புணர்வீர் அமரர் உறும் போகம் - கணபதியைப்
போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்
அறிவொன்றே தெய்வம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துபவர் பாரதியார். சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுபவர். இறைவன் அறிவு மயமாக இருக்கிறான் என்பது ஆன்மிகம் மீண்டும் மீன்டும் வலியுறுத்தும் கருத்து. எந்த அறிவைப் பெற்ற பின் வேறு எதுவும் தெரிய வேண்டியதில்லையோ அந்த அறிவே பிரம்மம் என்று வேதங்களும் பேசும். அந்த அறிவு அன்பின் அடிப்படையில் ஆன அறிவாக இருக்கும் போது இன்னும் மேன்மை. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் என்று அன்பு, சிவம், அறிவு மூன்றையும் ஒரே மூச்சில் இணைப்பார் திருமூலர். அப்படி அன்பும் அறிவும் இணைந்த உருவாக கணபதியைப் போற்றிப் பணிந்திடுங்கள் என்று இங்கே சொல்கிறார்.
இதனை ஏன் 'உணர்வீர் உணர்வீர்' என்று இருமுறை சொல்லி வலியுறுத்தவேண்டும்? உலகத்தவர் எல்லா போகங்களையும் தேடி அலைகின்றார்கள். அதனை எந்த முறையிலேனும் அடைந்து விடத் துடிக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம் ஒரு முறைக்கு இருமுறை வலியுறுத்தினாலாவது கேட்க மாட்டார்களா என்று நினைத்தார் போலும்.
கணபதியை போத வடிவாகப் போற்றிப் பணிந்தால் 'இனி மேல் என்றோ ஒரு நாள் வருங்காலத்தில்' அமரர்கள் அடையும் இன்பத்தை அடையலாம் என்று சொல்லவில்லை அவர். இங்கேயே இப்போதே அமரர் உறும் போகத்தை புணரலாம் என்று அறுதியிடுகிறார். அறிவொன்றே தெய்வம் என்ற தெளிவு வந்த பின் வேறெதையும் தேடி அலையாத மனம் கிடைத்துவிடுமே. அந்த நிலை அடைந்தால் ஆனந்தம் தானே வருமே. அதனால் 'இனி மேல்' என்றோ 'வேறுலகில்' என்றோ சொல்லாமல் இங்கேயே புணர்வீர் என்று சொல்கிறார்.
அறிவுடன் இருப்பது என்பது இறைவனுக்கு உருவம் உண்டா என்ற கேள்வியை எழுப்புவது என்றதொரு கருத்து வலிவுடன் இருக்கிறது. எல்லா உருவங்களும் ஆன இறைவனுக்கு ஓருருவம் ஒரு பெயர் என்று கற்பித்தல் மட்டுமே தவறு; ஆயிரம் உருவங்களும் ஆயிரம் பெயர்களும் இருப்பது இயற்கை. அதுவே பகுத்தறிவாக இருக்க முடியும். அறிவு வடிவமாக கணபதியைப் போற்றுங்கள் என்னும் போது அந்த அறிவு உருவமான தெய்வத்திற்கு 'உருவம்' உண்டு என்பதைக் காட்டுவது போல் 'மென்மையான மலர்க்கால்களை'ப் பணிந்திடுங்கள் என்று சொல்கிறார்.
எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக இன்னொன்றையும் சொல்லுகிறார். கண்பதியை அறிவு வடிவாகப் போற்றிப் பணிந்திட்டால் மட்டுமே போதுமா? முக்கியமான ஒன்று குறைகிறதே. அந்த ஒன்று இருந்தால் தானே நிறைவு பெற முடியும். காதலுடன், அன்புடன், பக்தியுடன் அவன் திருவடிகளைத் தொழ வேண்டும் என்கிறார். அந்தக் காதல் இன்றி அறிவே உயர்ந்தது என்று எவ்வளவு தான் கூறினாலும் அது தெய்வத்தைத் தொழுவது ஆகாது. அன்புடன் கூடிய அறிவே தெய்வம் என்பதை மீண்டும் இங்கே ஒரு முறை வலியுறுத்துகிறார்.
***
நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். நான்காம் பாடல் இஃதுணர்வீரே என்று நிறைய இந்தப் பாடல் உணர்வீர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கால் என்று நிறைய அடுத்தப் பாடல் காலைப் பிடித்தேன் என்று தொடங்கும். இந்தப் பாடல் வெண்பா வகையைச் சேர்ந்தது.
எதுகை: உணர்வீர் - புணர்வீர் - கணபதியை, போதவடிவாக - காதலுடன்.
மோனை: உணர்வீர் - உணர்வீர் - உலகத்தீர், புணர்வீர் - போகம், போத - போற்றி - பணிந்திடுமின், காதலுடன் - கஞ்சமலர் - கால்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஜீவி said...
நீங்கள் இங்கு அறிவு என்று குறிப்பிடுவதை மெஞ்ஞானம் என்று பொருள் கொள்ளலாமா, குமரன்? சுத்த அறிவு என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் அது தானா?
November 21, 2007 6:19 PM
--
ஜீவா (Jeeva Venkataraman) said...
மெய்ஞானம் வேண்டி நின்றார்பின் வேறொன்று கொள்வாரோ?
என்று மாற்றி எழுத்தத் தோன்றுகிறது, இதைப்படித்த உடன்!
//இங்கேயே இப்போதே அமரர் உறும் போகத்தை புணரலாம் என்று அறுதியிடுகிறார். //
மிக்க நன்று குமரன்.
November 21, 2007 6:20 PM
--
குமரன் (Kumaran) said...
ஜீவி ஐயா. போதம் என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளையே பெரும்பாலும் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பொருளையே இங்கும் பாரதியார் கொண்டார் என்று சொல்வதில் மறுப்பில்லை. கணபதியை மெய்ஞான வடிவாகப் பணிந்து போற்றுங்கள் என்று பாரதியார் சொன்னார் என்று இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லலாம். ஜீவாவும் அந்தப் பொருளையே எடுத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
நான் போதம் என்பதற்கு இன்னொரு பொருளாகிய அறிவு என்ற பொருளைக் கொண்டேன். ஞானம் என்பதும் அறிவு தான். ஞானம் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலே அதில் ஒரு வேற்றுலகத் தொனி வந்துவிடுகிறது. அறிவு என்பது இந்த உலகத் தொனியைக் கொண்டிருக்கிறது. நான் அந்தப் பொருளைக் கொண்டேன்.
அறிவு என்பதற்கு நாம் எல்லோரும் சாதாரணமாகக் கொள்ளும் பொருளை இங்கே எடுத்துக் கொண்டேன். நம் எல்லோரிலும், எல்லா உயிர்களிலும் அறிவாக - சைதன்யம் - சித் - உணர்வு - என்றெல்லாம் சொல்லப்படுவதாக இருக்கும் ஒன்றையே இங்கே பாரதியார் குறிப்பதாகக் கொண்டேன். அதற்குக் காரணம் பல. இறைவன் சித் ரூபமாக இருக்கிறான்; சைதன்யமாக இருக்கிறான் என்றெல்லாம் நம் தத்துவங்கள் கூறுகின்றன. பாரதியாரும் 'அறிவொன்றே தெய்வம்' என்றும் 'சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ' என்றும் பாடியிருப்பதால் இங்கே போதம் என்று அறிவைக் குறித்தார் என்று எடுத்துக் கொண்டேன்.
November 21, 2007 8:23 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி ஜீவா. வீரச் சுதந்திரம் வேண்டி நின்றார் பின் வேறொன்று கொள்வாரோ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கட்டாயம் 'மெய்ஞானம் வேண்டி நின்றார் பின் வேறொன்று கொள்வாரோ' என்று சொல்லலாம் தான். :-)
November 21, 2007 8:25 PM
--
Anonymous said...
You are doing a very good job. Do not stop. Continue at any cost.
January 06, 2009 1:37 PM
--
குமரன் (Kumaran) said...
Thanks. Will do as and when I could find some time. Thanks again.
January 07, 2009 4:04 PM
Post a Comment