Saturday, May 29, 2010

பேயாய் உழலும் சிறுமனமே!


இன்று பாரதியின் நினைவு நாள். அவனது நினைவு நாளில் அவனது அழகான கவிதைகளில் ஒன்றை - பலரும் அறியாத கவிதைகளில் ஒன்றை - எடுத்துப் படித்துப் பார்ப்பது தான் அவனது நினைவிற்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலி என்று எண்ணுவதால் இதோ அவன் எழுதிய 'மனதிற்குக் கட்டளை' என்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறு கவிதை.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
தாயாம் சக்தி தாளினிலும்
தருமம் என யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.


இந்தப் பாடல் மிக எளிமையான பாடல். மனம் என்பது அறிவு சொல்வதைக் கேட்காமல் உழலுவதை வேறு யாரும் சொல்லி நமக்குத் தெரிய வேண்டியதில்லை. எல்லோருக்கும் அந்த அனுபவம் உண்டு. அதனால் பாரதி தன் மனத்திற்குச் சொல்லும் இந்தக் கட்டளையை ஒவ்வொருவரும் தம் தம் மனத்திற்குச் சொல்லும் கட்டளையாகவும் அமைவது இயற்கை.

நம் மனம் தான் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருள், அதிலிருந்து வேறொரு பொருள் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறதே. சொல்லும் சொல்லை கேட்கிறதா என்ன? நல்லது இது; இதனைக் கொள்ளுவாய் என்றால் கேட்காமல் அதிலிருந்து நழுவுகிறது. இதை விட்டுவிடு என்றால் கேளாமல் அதிலேயே போய் விழுகின்றது. எதாவது புதுமையைக் கண்டால் அதனைப் பெற விரும்புகிறது. அது கிடைக்குமோ கிடைக்காதோ என்று அஞ்சுகிறது. சில நேரங்களில் புதுமையைக் கண்டவுடன் நமக்கு அது தீங்கு செய்துவிடுமோ என்று அஞ்சுகிறது. எத்திசையில் போகக் கூடாது என்று அறிவு சொல்கிறதோ அவ்வழியிலேயே அழைத்துச் செல்கிறது. அதனால் தான் பாரதி 'பேயாய் உழலும் சிறு மனமே' என்று விளிக்கிறான் போலும்.

ஆனாலும் அதற்கு இன்னொரு முறை அறிவுரை சொல்லிப் பார்க்கிறான். 'நினது தலைவன் நானே; நான் சொல்லுவதைத் தான் இனி மேல் நீ கேட்க வேண்டும்' என்று மிரட்டிப் பார்க்கிறான். 'அன்னை பராசக்தியின் திருவடிகளிலும், இதுவே சரி என்று நான் குறிப்பதிலும் மட்டுமே நீ ஓயாது நிற்க வேண்டும்' என்று கட்டளை இடுகிறான். 'எதற்கு நான் இதைச் செய்யவேண்டும்?' என்று எப்போதும் போல் திமிறி ஓடுமே - அதற்கு விடையாக 'சொல்லிவிட்டேன். உன் தலைவனான என் சொல் கேட்டு அடங்கி நடந்து கொண்டாய் என்றால் நீயும் உய்வாய். அதனால் நானும் உய்வேன்' என்று சொல்கிறான்.

10 comments:

குமரன் (Kumaran) said...

கவிநயா said...
எனக்குப் பிடிச்ச பாடல் இது. மனசு நான் சொல்றதை கேட்க மாட்டேங்குதென்னு தவிக்கிற எவருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன் :) நன்றி குமரா.
September 11, 2008 10:38 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் அக்கா.

இந்தப் பாட்டைப் பாடி பதியலாம் என்று பார்த்தால் சரியாக வர மாட்டேன் என்கிறது. பாடி, பாடியதைக் கேட்கும் போது சரியாக இருக்கிறது - ஆனால் எம்பி3 சரியாக இல்லை. கரகர என்று இருக்கிறது. :-(

நீங்கள் பாடித் தருகிறீர்களா? :-)
September 11, 2008 10:57 AM
--

ஜீவா (Jeeva Venkataraman) said...
உங்கள் நற்செயலில் நானும் இன்று
பாரின் அதியன், பாரதியின் கவியைப் படித்து விட்டேன், ஆகா, மிக்க நன்றி!
September 11, 2008 6:45 PM
--

கவிநயா said...
அதென்ன,
"நீங்கள் பாடித் தருகிறீர்களா?" அப்படின்னு கேட்டுட்டு கூடவே ஒரு சிரிப்பான்? :) நான் பாடித் தர மாட்டேன்னு அவ்வளவு நம்பிக்கையா :)
September 11, 2008 8:57 PM
--

குமரன் (Kumaran) said...
மொத்தமா அதற்குச் சிரிப்பான்னு பெயர் வச்சிட்டோம். நான் விட்டது நகைப்பான் இல்லை; புன்னகைப்பான். :-) இப்பவும் புன்னகை தான்.

I was not laughing at you; only smiling...
September 11, 2008 8:59 PM
--

குமரன் (Kumaran) said...
மகிழ்ச்சி ஜீவா. நன்றி.
September 11, 2008 8:59 PM

அ.முத்து பிரகாஷ் said...

குமரன் ....
பாரதியோட நினைவு நாளுன்னு மறந்தே போயிடுச்சு ...
வேறு சில ஆற்றாமைகள் ....
பேயாய் உழலும் சிறுமனமே! ...
கேள்விப்பட்ட வரி ..
மத்தேல்லாம் எனக்கு புதுசு ..
நன்றி தோழர் ...

குமரன் (Kumaran) said...

நண்பரே. செப்டம்பர் 11 தான் பாரதியார் நினைவுநாள். இன்று இல்லை. எனது 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் 2008 செப்டம்பர் 11 இந்த இடுகையை இட்டேன். அங்கிருந்து இப்போது எல்லா இடுகைகளையும் ஒவ்வொன்றாக இந்தப் பதிவிற்கு மாற்றிக்கொண்டிருக்கிறேன். அப்படி மாற்றும் போது வரிசையில் இன்று வந்தது இந்த இடுகை. குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

தக்குடு said...

அழகான ஒரு பகிர்வு குமரன் அண்ணா!!

குமரன் (Kumaran) said...

நன்றி தக்குடு/தம்பி! விருதுகளுக்கு வாழ்த்துகள்!

sury siva said...

// நீங்கள் பாடித் தருகிறீர்களா? :‍) //

என்னிடம் கேட்கமாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் ஒரு பாரதி பாடலைப்
பார்த்துவிட்டு, இந்தக்கேள்வியையும் பார்த்துவிட்டு சும்மா இந்த சுப்பு தாத்தா இருக்க முடியுமோ ?

பாரதியே வந்து , கோவிச்சுப்பார்.

அதனாலே, அடாணாவிலெ அடியேன் பாடிப்பார்த்தேன். நன்றாகவே வருகிறது.

இன்னும் சற்று நேரத்தில் எனது வலையில் பார்க்கலாம்..கேட்கலாம்.

பாரதி பாடலை என் பதிவினில் போட இதை விட சிறந்த வாய்ப்பு எப்படி கிடைக்கும்?

சுப்பு தாத்தா

http://vazhvuneri.blogspot.com

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடலைப் பாடித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா. மிக நன்றாக இருக்கிறது!

சித்திரவீதிக்காரன் said...

இது போன்ற சில பாரதியின் பாடல்களை அவ்வப்போது சொல்லும் போது வரும் உற்சாகமே தனி. பகிர்விற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி சித்திரவீதிக்காரரே.

Unknown said...

அருமையான பாரதியின் வரிகள் நன்றி