Monday, July 21, 2008

தென்னன் உடல் உற்ற தீப்பிணி தீர்த்த பாடல்கள்


ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றி - பெரும் வலிமை உடைய எருதின் மேல் ஏறும் மதுரையம்பதி உடைய சொக்கநாதரின் மடைப்பள்ளித் திருநீற்றைப் போற்றி

புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் - சீர்காழியைச் சேர்ந்த பூவுலகில் வாழ் தேவனாம் திருஞான சம்பந்தன்

தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் - தெளிவுடன் தென்னாட்டை உடைய மன்னனாம் பாண்டியன் தன் உடலில் உற்ற வெப்பு நோய் தீரும் படி

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே - மொழிந்த இப்பாடல்கள் பத்தும் வல்லவர் நற்குணங்களுடன் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்.

***

ஆளுடையபிள்ளையார் திருஞானசம்பந்தர் அருளிய திருவாலவாய்ப்பதி திருநீற்றுப் பதிகம் நிறைவுற்றது.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் 25 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

30 comments:

Anonymous said...
அன்புக் குமரா!
அருணகிரியார் " எதிரிலாத பக்தி தனைமேவி" ...எனும் திருப்புகழில்....முருகணை "வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே"!!!என்கிறார்....அப்போ முருகன் தான் ஞான சம்பந்தர் ஆகிறது.
தமிழ்க் கடவுள் தழிழைக் காக்க தமிழ் ஞானசம்பந்தராக அவதரித்துள்ளார்.
நான் நினைப்பது சரியென நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்

2:57 AM, November 27, 2006
--

குமரன் (Kumaran) said...
ஆம் ஐயா. சீர்காழிப்பிள்ளையாரான திருஞானசம்பந்தப் பெருமான் திருமுருகனின் அவதாரம் என்பதே ஆன்றோர் கருத்து. அதனாலேயே அம்மையின் முலைப்பாலை அருந்தும் பாக்கியம் சம்பந்தப் பெருமானுக்கு வாய்த்தது என்றும் சொல்வார்கள்.

3:20 AM, November 27, 2006
--

ஞானவெட்டியான் said...
அன்பு யோகன்,
இன்று இட்டுள்ள திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் "நூற்பயன்" எனும் தலைப்பில் வரும் பாடல்:

இருநாழி நெற்கொண்டு முப்பத்தி ரண்டறமும்
எங்குமுட் டாதளக்கும்
இறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகும்
எம்பிரான் இனிய பிள்ளைத்

நாழி = நான்கு உழக்கு அளவு
அறம் = தரும வகைகள்
முட்டாது = குறையாவண்ணம்

எட்டு உழக்கு நெல்லைக்கொண்டு முப்பத்தி இரண்டு வகை அறமும் எங்கும் குறைவுறாவண்ணம் படி அளக்கும் அன்னை உமையவளின் திருமுலைப்பாலுண்டு(ஞானப்பால்) அதனால் ஞானம் எப்பொழுதும் பெருகும் எம்பிரானின் இனிய பிள்ளைத்தமிழ்.

அங்கும் ஞானப்பால்; திருஞானசம்பந்தனுக்கும் ஞானப்பால்.
கண்டீரா!

5:07 AM, November 27, 2006
--

G.Ragavan said...
அருமையானதொரு தொடர் நிறைவுறுகிறதே! ஆயினும் என்ன பாலைத் தந்த குமரன் அடுத்துத் தேனைத் தரமலா போவார்!

குமரன் இந்தப் பாடலில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை ரசித்திருக்கிறார்கள். முழுவதும் ரசித்துக் கருத்துப் பதித்திருக்கிறார்கள்.

யாரும் சொல்லாத ஒரு சொல்லை எடுத்துச் சொல்கிறேன் நான் இப்பொழுது. தென்னன் என்ற சொல்தான் அது. இலக்கியத்தில் பாண்டியர்களுக்கு மட்டுமே தென்னன், தென்னவன் என்று வழங்கப்படுகிறது. தென்னவன் தீதிலன் தேவர்கோன் பெருவிருந்து ஆயினன் என்ற வரிகளையும் நினைவு கூர்க. சோழ சேரர்களுக்கு இந்தத் தென்மை கிடையாது. ஆனால் கம்பர் ஒருவனைத் தென் போட்டுச் சொல்கிறார். தென்னிலங்கைக் கோமான் என்று. ஒருவேளை இராவணனும் பாண்டியனோ!

6:12 AM, November 27, 2006
--

ஞானவெட்டியான் said...
அன்பு இராகவா,

"தென்னிலங்கை வேந்தன்" என்பதற்கு:

தென்னிலங்கை - விளக்கம்

>இடை பிங்கலை இமவானொடு இலங்கை
>நடு நின்ற மேரு நடு ஆம் சுழுனை
>கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
>படர் ஒன்றி என்னும் பரமாம் பரமே (திருமந்திரம் 2754)

>இதில் கண்டுள்ள இலங்கையின் பொருள்என்ன?

ஈங்கு இமவான் என்பது சிவனாகிய சீவனைக் குறிக்கும். இலங்கை என்பது இல் + அம் + கை எனப் பிரித்துப் பொருள்கொள்ள விளங்கும். அதாவது, இமவானொடுஇல் = இமவனாகிய இமயக் காவலன் கைலாயபதியாம் சிவனாகிய சீவனின் இல்லமாம்.

அம் என்றால் அழகிய எனப் பொருள்.

கை என்பது மூளையின் முகுளப் பகுதியாம்.

கலைகளை விளக்கப் போந்த திருமூலர், அதைவிட்டு தென்னிலங்கையில் மேருமலை உள்ளது என ஏன் கூறவேண்டும்?

அவர் கூறவந்தது சிவனாகிய சீவனின் இருப்பிடத்தைப் பற்றியே. அதை உன்னிநோக்க, சீவனிருக்குமிடமாம் முகுளத்தைக் குறிக்கவே இமவானொடு இலங்கை எனக் கூறியிருப்பதாய் உணருகிறேன்.

முகுளத்தின் நடுவே இருக்கும் மேரு தான் சுழுமுனையின் நடுப்பகுதி என்கிறார் திருமூலர். இது நாம் புரிந்துகொண்டது; சூக்கும விளக்கம்.

7:22 AM, November 27, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அப்போ முருகன் தான் ஞான சம்பந்தர் ஆகிறது//

யோகன் அண்ணா, குமரன்
சம்பந்தப் பெருமான் திருக்கை வேலும் இங்கு ஒப்பு நோக்குக!
ஆன்றோர் அனுபவித்தே சொல்லி உள்ளனர்!

//அருமையானதொரு தொடர் நிறைவுறுகிறதே! ஆயினும் என்ன பாலைத் தந்த குமரன் அடுத்துத் தேனைத் தரமலா போவார்!//

குமரன்,
அடுத்த தேன் என்னவோ?

8:51 AM, November 27, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// G.Ragavan said... பாண்டியர்களுக்கு மட்டுமே தென்னன், தென்னவன் என்று வழங்கப்படுகிறது.//

"தென்னன் தமிழினுடன் பிறந்த" என்ற பிள்ளைத்தமிழ் பாடலும் காண்க!
தென் பாண்டி நாடு, தென் பாண்டிச் சிங்கம்...என்று இப்படி எல்லாமே தெற்கானது சிறப்பு.

//சோழ சேரர்களுக்கு இந்தத் தென்மை கிடையாது//

சோழர்களுக்கு = வளவன்
சேரர்களுக்கு = ?

//ஆனால் கம்பர் ஒருவனைத் தென் போட்டுச் சொல்கிறார். தென்னிலங்கைக் கோமான் என்று. ஒருவேளை இராவணனும் பாண்டியனோ//

:-)))

9:03 AM, November 27, 2006
--

குமரன் (Kumaran) said...
ஆக திருச்செந்தூர் முருகனே சம்பந்தப்பெருமான் என்று ஒரு நல்ல எடுத்துக் காட்டுடன் சொல்லியிருக்கிறீர்கள் ஞானவெட்டியான் ஐயா. நன்றி.

3:45 AM, November 28, 2006
--

குமரன் (Kumaran) said...
//குமரன் இந்தப் பாடலில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை ரசித்திருக்கிறார்கள். முழுவதும் ரசித்துக் கருத்துப் பதித்திருக்கிறார்கள்.
//

இதனை அடியோங்கள் அறியச் சொல்லுங்கள் இராகவன்.

தென்னன் என்பவன் எங்கள் மதுரைக்கரசன் என்பது சொல்லாமலேயே விளங்கும் ஒன்று இராகவன். தென்னிலங்கைக் கோமான் என்றவுடன் உங்களுக்கு இராவணன் பாண்டியனோ என்று தோன்றுகிறது. எனக்கு தென்னிலங்கை என்று ஏன் சொன்னார்கள் வட இலங்கை ஒன்று இருக்கிறதோ? அதனிலிருந்து வேறுபடுத்திச் சொல்லவே தென்னிலங்கை என்றார்களோ என்று தோன்றுகிறது. தென் என்பது இலங்கைக்கு அடைமொழியாகத் தோன்றுகிறது.

3:48 AM, November 28, 2006
--

குமரன் (Kumaran) said...
சூக்கும விளக்கத்தைச் சொன்னதற்கு நன்றி ஞானவெட்டியான் ஐயா.

3:50 AM, November 28, 2006
--

குமரன் (Kumaran) said...
சம்பந்தப் பெருமான் திருக்கை வேல் பின்னர் கைமாறிவிட்டதாமே. தெரியுமா இரவிசங்கர்? :-)

அடுத்த தேன் எதுவாக இருக்கும் என்று உங்களுக்குத் தான் தெரியுமே. கோதையின் சங்கத் தமிழ் மாலை தான். :-)

3:51 AM, November 28, 2006
--

மதுரையம்பதி said...
உங்களுக்கு தெரியுமா?, இன்றும் மதுரை கோவில் மடப்பள்ளி சாம்பல் மருந்தாக உபயோகமாவது?....மதுரை மக்கள் மீனாஷி கோவில் சென்றால், முக்குறுணி வினாயகர் சன்னதியிலிருந்து வெளிவரும் (தெற்கு நோக்கியிருக்கும்) பெரிய வாயிலின் இருபுறமும் உள்ள பிறைகளில் இருக்கும் சாம்பலை நெற்றியில் பூசி, வயிறு மற்றும் தலையில் தரிப்பர். அந்த வாயிலின் இடதுபுரத்தில் மடப்பள்ளி உள்ளது.

4:06 AM, November 28, 2006
--

மதுரையம்பதி said...
உங்களுக்கு தெரியுமா?, இன்றும் மதுரை கோவில் மடப்பள்ளி சாம்பல் மருந்தாக உபயோகமாவது?....மதுரை மக்கள் மீனாஷி கோவில் சென்றால், முக்குறுணி வினாயகர் சன்னதியிலிருந்து வெளிவரும் (தெற்கு நோக்கியிருக்கும்) பெரிய வாயிலின் இருபுறமும் உள்ள பிறைகளில் இருக்கும் சாம்பலை நெற்றியில் பூசி, வயிறு மற்றும் தலையில் தரிப்பர். அந்த வாயிலின் இடதுபுரத்தில் மடப்பள்ளி உள்ளது.

4:06 AM, November 28, 2006
--

மதுரையம்பதி said...
ஞானவெட்டியான் அவர்களின் தென்னிலங்கை விளக்கம் புதியதாகவும், அறியதாகவும் இருக்கிறது.....நன்றி

4:07 AM, November 28, 2006
--

வல்லிசிம்ஹன் said...
குமரன்,நேற்று
அரோரா கோவிலில் அன்னையும் அப்பனும் வீற்றிருக்கும் சன்னிதியில் நீறு பூசியபோது உங்களை நினைத்துக் கொண்டேன்.
எத்தனை ஆறுதல் திருநீறு அளிக்கிறதோ அத்தனையும் உங்கள் பதிவிலும் கண்டு நிறைந்தேன்.
திருப்பாவையைக் காணப்போகும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.நன்றி.

4:25 AM, November 28, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சம்பந்தப் பெருமான் திருக்கை வேல் பின்னர் கைமாறிவிட்டதாமே. தெரியுமா இரவிசங்கர்? :-) //

முருகப் பெருமான் வைணவம் தழைக்க ஆசைப்பட்டு, ஆசி வழங்கி ஆழ்வார் திருக்கைகளுக்கு மாற்றி விட்டானோ! :-)
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!

8:35 AM, November 28, 2006
--

ஜெயஸ்ரீ said...
விளக்கங்களும் மேல் விளக்கங்களும் பல புதிய செய்திகளைத்
தருகின்றன.

தொடரை அளித்ததற்கு நன்றி குமரன்.

10:54 AM, November 28, 2006
--

குமரன் (Kumaran) said...
மௌல்ஸ். அடியேனும் மதுரைக்காரன் தான். அம்மன் கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அந்த மடப்பள்ளிச் சாம்பலை அள்ளிப் பூசிக் கொண்டு தான் நாங்கள் (நானும் நண்பர்களும்) வருவோம். கண்ணில் அந்த மடப்பள்ளிச் சாம்பல் விழுந்து எத்தனை நாள் ஆனந்தக் கண்ணீர் சிந்தியிருப்பேன் (அப்படித் தான் யாராவது கேட்டா சொல்றது.).

1:20 PM, November 30, 2006
--

குமரன் (Kumaran) said...
திருக்கோவிலில் அடியேனை நினைத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி வல்லியம்மா.

திருப்பாவையை விரைவில் மீண்டும் தொடங்குகிறேன். இந்த வாரம் தொடங்குவதாக எண்ணம் இருந்தது. ஆனால் நண்பர்கள் சிலரின் அறிவுறுத்தலின் பேரில் திருமலையான் திருப்பள்ளியெழுச்சியில் வரும் அன்னை திருமகளின் பெருமைகளைப் பேசப் புகுந்துவிட்டேன். அதனால் திருப்பாவையை அடுத்த வாரம் தொடங்கமுடியும் போல் இருக்கிறது.

1:24 PM, November 30, 2006
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் ஜெயஸ்ரீ. அடியேன் சொன்ன விளக்கங்களும் அதற்கு நீங்களும் மற்ற நண்பர்களும் சொன்ன மேல் விளக்கங்களும் நன்றாக இருந்தன. அடியேன் நிறைய கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி.

1:29 PM, November 30, 2006
--

மதுரையம்பதி said...
குமரன்:
நீங்க ஏன் தினம் ஒரு திருப்பாவை, அப்படின்னு மார்கழி முழுவதும் செய்யக்கூடாது?....இன்னும் சிறப்பாக இருக்கும்மல்லவா?....மேலும் என்போன்ற சோம்பேறிகளுக்கு ஒசில சிறிது புண்ணியமும் கிடைக்கும்?.

3:36 AM, December 01, 2006
--

குமரன் (Kumaran) said...
மௌல்ஸ். போன வருடம் இராகவனும் அதற்கு முந்தைய வருடம் தேசிகனும் தினம் ஒரு திருப்பாவை என்று மார்கழி மாதம் முழுவதும் எழுதினார்கள். அடியேன் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும் என்று எண்ணியதால் அப்படியே செய்கிறேன். போன வருடம் தொடங்கியது அப்படியே நிற்கிறது. விரைவில் மீண்டும் தொடர்கிறேன்.

முடிந்தால் போன வருடம் எழுதியதை இங்கே படித்துப் பாருங்கள் மௌல்ஸ்.

http://godhaitamil.blogspot.com/

இராவனின் திருப்பாவைப் பதிவுகளை அவரது 'இனியது கேட்கின்' வலைப்பூவிலும் தேசிகனின் பதிவில் அவரது திருப்பாவைப் பதிவுகளையும் படிக்கலாம். அடியேன் எழுதும் போதும் அவற்றிற்குச் சுட்டி கொடுக்கிறேன்.

6:42 PM, December 02, 2006
--

வெற்றி said...
/* ஆளுடையபிள்ளையார் திருஞானசம்பந்தர் அருளிய திருவாலவாய்ப்பதி திருநீற்றுப் பதிகம் நிறைவுற்றது */

குமரன்,
ஐயய்யோ! திருநீற்றுப் பதிகம் நிறைவுற்றதா? இப்போதுதான் இப்பதிவு கண்ணில் பட்டது. சில காலம் நாட்டில் இல்லாததால் பல அருமையான பதிவுகளைத் தவற விட்டுவிட்டேன் போலும்.
குமரன், உண்மையில் அருமையான விளக்கம். வரிக்கு வரி நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் பின்னூட்டம் மூலம் இராகவன், ஞானவெட்டியான் ஐயா, ரவி போன்றவர்கள் சொன்ன கருத்துக்களும் படித்துப் பயன் பெற்றேன். என் போன்ற தமிழ்ப் பாமரர்களுக்கு உங்களின் பதிவு ஒரு வரப்பிரசாதம். மிக்க நன்றி.

/* ஒருவேளை இராவணனும் பாண்டியனோ! */

இராகவன், இதில் என்ன ஐயம்? இராவணன் சுத்தத்[pure]தமிழன் தான். அந்நாளிலும் சரி இந்நாளிலும் சரி ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சைவமே முதன்மை மதமாக இருக்கிறது. இராவண மன்னன் வழிபட்டு வந்த திருக்கோணேஸ்வரம் தட்சண கையிலாயம் என்றே அழைக்கப்பட்டு வருவதும் நோக்கத்தக்கது. இராவணன் பாண்டியனோ சோழனோ சேரனோ நானறியேன். ஆனால் அவர் தமிழர் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

7:16 PM, December 02, 2006
--

குமரன் (Kumaran) said...
வெற்றி. பதிகம் நிறைவு பெற்றுவிட்டால் என்ன? நீங்கள் தான் பொறுமையாக எல்லாவற்றையும் படித்துப் பார்க்கிறீர்களே. மிக்க நன்றி.

5:32 PM, December 18, 2006
--

தாசன் said...
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

11:16 PM, November 21, 2007
--

குமரன் (Kumaran) said...
நன்றி தாசன்.

8:01 PM, November 22, 2007
--

Data Converters said...
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே

திருநீற்று பதிகத்தில், "நீறு" என்ற இடத்தில் எல்லாம் "நீர்" என்று மாற்றினாலும் அர்த்தமுல்லதாகபடுகிறது. அதவாது ஒரு வரிக்கு இரண்டு அர்த்தம் கொள்ளலாம்.

மந்திரமாவது நீர் (you, the lord Siva) வானவர் மேலது நீர்
சுந்தரமாவது நீர் துதிக்கப்படுவது நீர்
தந்திரமாவது நீர் சமயத்திலுல்ளது நீர்
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீரே (you the lord Shiva)


Hopefully, Sambanandar is a great saint, he is very comprehensive in singing a song.

Similarly, the last song on this pathigam,

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

The word பூசுரன has only meaning பூவுலகில் வாழ் தேவனாம் but also sounds like applying on his body. So he is saying, I am applying (I am doing it).

4:12 PM, March 30, 2008
--

குமரன் (Kumaran) said...
Data Converters,

உங்கள் பின்னூட்டத்தின் முதல் பகுதி புரிகிறது. இரண்டாவது பகுதி (பூசுரன்) புரியவில்லை.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

11:26 AM, April 01, 2008
--

Vijay said...
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

6:34 AM, June 18, 2008
--

குமரன் (Kumaran) said...
விஜய். வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி. விரைவில் வந்து பார்க்கிறேன்.

7:48 AM, June 18, 2008

Kavinaya said...

தென்னவன் நீறு மதுரை மன்னவன் நீறு மீனாள் கண்ணவன் நீறு முக்தி அருளிடும் நீறு.

அரும்பணிக்கு அரிய நன்றிகள் குமரா.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.