Sunday, July 20, 2008

கல்விப் பெரும் செல்வப் பேறே


சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் - பேச்சுத் திறமையும் நல்ல கவனமும் கவிதைகளை எண்ணிய போதில் சொல்லவல்ல நல்வித்தையும் அருளி என்னை அடிமை கொள்வாய்

நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும் - தாமரையை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் செல்வியாம் இலக்குமியின் அருள் அரிதாகப் போய்விட்டதே என்று மனம் வருந்தும் நிலையில்லாமையை அருளும்

கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே - கல்வியெனும் பெரும்செல்வப் பேறே எல்லாக் கலைகளும் வல்லவளே!

***

சொல் விற்பனம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. மற்றவரைப் புண்படுத்தாமல் நல்ல சொற்களைச் சொல்லும் திறமை அவள் அருளின்றி அமைவதில்லை. அதே போல் கூர்மையான அறிவு வேண்டுமென்றால் நம்மைச் சுற்றி நடப்பதை கவனத்துடன் நோக்கினால் தான் முடியும்; அந்த அவதானமும் அவள் அருளின்றி அமைவதில்லை. எத்தனை எத்தனை கவிதைகளையும் செய்யுள்களையும் படித்தாலும் பொருள் உணர்ந்தாலும், மற்றவர் மனம் கவரும் வண்ணம் கவிதைகளைப் படைப்பதும் அவள் அருளே. அப்படி எல்லா விதமான கலைச் செல்வங்களையும் அருளி என்னை ஆட்கொள்ளவேண்டும் என்ற வேண்டுதல் இந்தப் பாடலில் இருக்கிறது.

வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பெரும் செல்வம் எது? கல்விச் செல்வம் தானே. அந்த செல்வம் இருந்தால் மற்றைய செல்வங்கள் தானே வரும். அதனைத் தான் அடுத்த வரிகளில் சொல்கிறார் குமர குருபரர். 'கல்வியெனும் பெரும் செல்வப் பேறை அருளும் சகலகலாவல்லியே! அந்த கல்வியெனும் பெரும் செல்வப் பேறு அலைமகளின் அருள் இல்லையே (பொருள் இல்லையே, பணம் இல்லையே) என்று மனம் நோகாத நிலையைக் கொடுக்கும்' என்கிறார்.

7 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சகலகலாவல்லிமாலை' பதிவில் 10 மார்ச் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

23 comments:

ஹரிஹரன்ஸ் said...
//வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பெரும் செல்வம் எது? கல்விச் செல்வம் தானே. அந்த செல்வம் இருந்தால் மற்றைய செல்வங்கள் தானே வரும்.//

எங்கயோ உதைக்குதே... புலமையும் வறுமையும் காலம் காலமாக ஒன்றாகத்தானே செல்கின்றன?

3:51 AM, March 10, 2006
--

குமரன் (Kumaran) said...
ஹரி அண்ணா. விளக்கத்தை எழுதும் போது எனக்கும் இந்த கேள்வி வந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கல்வி தானே செல்வத்தைப் பெற்று வாழ்வில் முன்னேற வழி வகுக்கிறது. அதனால் அந்தப் பொருளைக் கொண்டு விட்டேன்.

அதனால் நீங்கள் சொன்னதை 'புலமையும் வறுமையும் காலம் காலமாக ஒன்றாகத் தானே சென்றன' என்று மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். :-)

4:27 AM, March 10, 2006
--

johan -paris said...
ஓகோ, நளினம் என்பதற்கு தாமரை எனும் பொருளுமுண்டா? இன்றே அறிந்தேன். சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையுமேன்றாலும், புலமையால் வறுமை தள்ளி வைக்கப்படுவது உண்மையே!!
யோகன்
பாரிஸ்

5:21 AM, March 10, 2006
--

Merkondar said...
சரஸ்வதி சபதம் மறுபடியும் பார்க்கவேண்டும் கல்வியா? செல்வமா? வீரமா?

6:14 AM, March 10, 2006
--

ஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
//இலக்குமியின் அருள் அரிதாகப் போய்விட்டதே என்று மனம் வருந்தும் நிலையில்லாமை அருளும்//

மனம் வருந்தும் நிலையினும் தாழ்ந்தது "இலக்குமியின் அருள் அரிதாகப் போய்விட்டதே; இனி கிட்டாது" என மனமுடைந்த நிலை. அது வாராமல் காப்பாய் எனக் கொள்ளலாமே.

7:59 AM, March 10, 2006
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. நளினம் என்றால் மென்மை, அழகு என்ற பொருள் தான். நளினத்தை உடைய தாமரை மலருக்கும் அதில் அமர்ந்திருக்கும் அலைமகளுக்கும் நளினி என்று பெயர். இங்கு நளின ஆசனம் என்று உள்ளதால் தாமரை என்ற பொருளைக் கொண்டேன்.

மிக்க நன்றி.

8:42 AM, March 10, 2006
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் என்னார் ஐயா. எனக்கும் இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லும் போது சரஸ்வதி சபதத்தின் கல்வியா? செல்வமா? வீரமா? தான் நினைவிற்கு வந்தது. :-)

8:44 AM, March 10, 2006
--

குமரன் (Kumaran) said...
ஞானவெட்டியான் ஐயா. நீங்கள் சொல்வது தான் சரியான பொருள். இங்கு சிதையாமை என்று தான் இருக்கிறது. அதற்கு வருந்தும் நிலையினும் தாழ்ந்து மனமுடைந்த நிலை என்பதே சரியான பொருள். திருத்தியமைக்கு மிக்க நன்றி.

ஹரிஹரன்ஸ் ஒரு தாயுமானவர் பாடலைத் தன் பதிவில் போட்டிருக்கிறார். பார்த்தீர்களா? அவர் சில சந்தேகங்கள் கேட்டிருக்கிறார். உங்களுக்கு விடைகள் தெரியும் என்று எண்ணுகிறேன்.

http://mahamosam.blogspot.com/2006/03/blog-post_114198793123333269.html

8:46 AM, March 10, 2006
--

Ram.K said...
//சொல் விற்பனம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. மற்றவரைப் புண்படுத்தாமல் நல்ல சொற்களைச் சொல்லும் திறமை அவள் அருளின்றி அமைவதில்லை. அதே போல் கூர்மையான அறிவு வேண்டுமென்றால் நம்மைச் சுற்றி நடப்பதை கவனத்துடன் நோக்கினால் தான் முடியும்;//

சொல்விற்பனமும் அவதானமும் - என்ற வார்த்தைகளுக்கான பொருள் இவ்வளவு ஆழம் மிக்கதா ? !!!

உங்கள் விளக்கம் அருமை.

9:57 AM, March 10, 2006
--

சிவமுருகன் said...
"அலஸ்ஸய குதோவித்யா அவித்யஸ்ய குதஹ தனம்,
அதனமஸ்ய குதஹ மித்ரம், அமித்ரஸ்ய குதஹ சுகம்?"

என்று நீதிஸ்லோகத்தில் சொல்லியபடி, அதாவது சோம்பேறிக்கு கல்விகிட்டாது, கல்வியறிவில்லாதவனுக்கு தனம் கிட்டா, தனமில்லாதவனுக்கு நன்பர்கள் அமையார், நன்பனில்லாதவனுக்கு சுகம் எப்படி கிடைக்கும்?.

நிலையான செல்வமான கல்விச்செல்வத்தை பெற்றவன் எல்லாசெல்வத்தையும் அடைய தகுதி பெறுகிறான், அடைந்தும் விடுகிறான் என்று அறியப்படுகிறது.

8:47 PM, March 12, 2006
--

ஜெயஸ்ரீ said...
// சொல் விற்பனம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. மற்றவரைப் புண்படுத்தாமல் நல்ல சொற்களைச் சொல்லும் திறமை அவள் அருளின்றி அமைவதில்லை. அதே போல் கூர்மையான அறிவு வேண்டுமென்றால் நம்மைச் சுற்றி நடப்பதை கவனத்துடன் நோக்கினால் தான் முடியும்; அந்த அவதானமும் அவள் அருளின்றி அமைவதில்லை //

என்ன சொல்ல ? வழக்கம் போலவே இனிமை, எளிமை, அருமை

//இலக்குமியின் அருள் அரிதாகப் போய்விட்டதே என்று மனம் வருந்தும் நிலையில்லாமை அருளும்//

புலமையும் வறுமையும் பெரும்பாலும் சேர்ந்தே இருந்திருக்கின்றன. சடையப்ப வள்ளலின் ஆதரவைப் பெற்றதால்தான் கம்பருக்குத் தன் காவியத்தை திருவரங்கத்தில் அரங்கேற்ற முடிந்தது. இன்னும் பல புலவர்களும் அரசர்களின் ஆதரவைப் பெற்றவர்களே. அப்படி அரசர்களால் ஆதரிக்கப்படாத புலவர்கள் பலர் வறுமையில் வாடினர். ஆனால் எவ்வளவு கொடிய வறுமையில் வாடிய போதும் (சில சமயம் அதற்காக மனம் வருந்தியிருக்கலாம், ஆனல் ஞானவெட்டியான் ஐயா சொல்வது போல மனம் உடையவில்லை)அவர்கள் படைத்த பாக்களும், காவியங்களும் எவ்வகையிலும் குறைந்தவை அல்ல. உண்ண உணவில்லதபோதும் அவர்களின் சொற்களில் வீரியம்குறையவில்லை. அவர்கள் படைப்புகள் காலத்தை விஞ்சியே நிற்கின்றன (தங்கள் வாழ்நாளில் புகழும் அங்கீகாரமும் கிட்டாவிட்டாலும்)

ஆனால் அதே கம்பர் குலோத்துங்க சோழனின் அரசவையில் இருந்தபோது சோழன் அவரை அவமதித்த போது சினம் கொண்டு

"மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?
உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்?
என்னை விரும்பி எற்றுக்கொள்ளாத வேந்துண்டோ?
உண்டொ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?"

அடுத்தவேளைக்கு உணவில்லாமல் போகும் என்ற நிலையிலும் நாடளும் மன்னனை, மூவேந்தர்களில் ஒருவனைப் பார்த்து "போய்யா நீ ஒருத்தன் தான் அரசனா ? உன்னை நம்பியா நான் தமிழ் படித்தேன்? என்னை விரும்பி வணங்கி ஏற்க ஆயிரம் மன்னர்களுண்டு" என்று சொல்லும் துணிவு அவரது தமிழுக்கு, அவர்கற்ற கல்விக்கு இருந்தது.

பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.

வீட்டில் ஒருமணி அரிசியும் இல்லாத நிலையிலும் , சுற்றத்தார் ஆதரவில் இருந்தபோதும், கைதாவதிலிருந்து தப்பிக்க புதிய இடத்தில் தஞ்சமடைந்தபோதும், ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட போதும் கூட

" நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? - பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத்
நீதமோ? - பிடி வாதமோ? "

என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களைப்ப் பார்த்து கர்ஜ்ஜிக்கவும்

" சிலவேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"

என்று பராசக்தியிடமே சவால் விடவும் முடிந்தது பாரதியால். இதைத்தான் வேண்டினாரோ குமரகுருபரர்?

8:38 AM, March 15, 2006
--

குமரன் (Kumaran) said...
பாராட்டுக்கு நன்றி இராமபிரசாத் அண்ணா.

12:32 PM, March 15, 2006
--

குமரன் (Kumaran) said...
அருமையான சுலோகத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் சிவமுருகன். மிக்க நன்றி.

12:40 PM, March 15, 2006
--

குமரன் (Kumaran) said...
நல்ல எடுத்துக் காட்டுகளுடன் சிறந்த விளக்கம் Jayashree. மிக்க நன்றி.

12:43 PM, March 15, 2006
--

தி. ரா. ச.(T.R.C.) said...
வித்யா ததாதி வினயம்

வினயம் ததாதி பாத்ரதாம்

பாத்ரத்துவாது தனம் ஆப்னதாம்

தனாதர்மம் ததத் சுகம்

கல்வி ஒருவனுக்கு பணிவைத்தருகிறது அந்தப்பணிவு நல்ல ஒழுக்கத்தைத் தருகிறது.நல்லஒழுகத்துடையவனை செல்வம் சேர்ந்தடைகிறது.அப்படிச் சேர்ந்த பணத்தை நல்ல வழிகளில் செலவு செய்பவனுக்கு சுகம் தானாக வந்தடையும் என்று சுபாஷிதானி என்ற வடாமொழி நூல் கூறுகிறது.நம்மவர் பலர் டாலரில் சம்பாதிப்பது கல்வியினால்தானே ? தி ரா ச

7:48 AM, March 19, 2006
--

குமரன் (Kumaran) said...
உண்மைதான் தி.ரா.ச. நாங்கள் எல்லாம் டாலரில் சம்பாதிப்பது கல்வியினால் தான்.

நீங்கள் தந்துள்ள சுபாஷிதானி நூலை மதுமிதா அக்கா மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.

9:37 AM, March 29, 2006
--

நாமக்கல் சிபி said...
//ஆனால் இன்றைய சூழ்நிலையில் கல்வி தானே செல்வத்தைப் பெற்று வாழ்வில் முன்னேற வழி வகுக்கிறது.//

குமரன்,
உண்மைதான். ஆனால் அந்த கல்வியைப் பெறுவதற்கே இன்று பொருட்செல்வம் வேண்டியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை அல்லவா?

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

9:44 AM, March 29, 2006
--

SK said...
இதை இப்படிப் பார்த்தால் என்ன?
"கல்வி அறிவு வந்ததும், நில்லாமையைக் குறிக்கும் இலக்குமி அளிக்கும் மற்றைய செல்வங்களை நாடுதல் எல்லாம் முறையற்றது என்னும் தெளிவினைக் கலைமகள் அருளுவதால், 'அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெரும் செல்வப் பேறு' என குமரகுருபரர் சொல்லியிருக்கலாமோ?

9:49 AM, March 29, 2006
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் சிபி. செல்வம் இருந்தால் தான் நல்ல கல்வி கிடைக்கிறது. நல்ல கல்வி இருந்தால் செல்வம் மேலும் சேருகிறது. உண்மை தான். ஆனால் செல்வம் எவ்வளவு இருந்தாலும் அன்னையின் கருணை இருந்தால் தான் கல்வி வரும். அதன் பின் அந்தக் கல்வியினால் மேலும் செல்வம் சேரும். பொருத்தமாக இருக்கிறதா நான் சொல்வது?

11:43 PM, March 29, 2006
--

குமரன் (Kumaran) said...
நல்ல பொருள் SK. மிக்க நன்றி.

11:44 PM, March 29, 2006
--

ஜெயஸ்ரீ said...
//நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை //

திருமகளின் அருள் கிட்டவில்லையே என்று மனம் உடையாமலிருக்க வேண்டும் என்று குமரகுருபரர் இந்தப் பாடலில் வேண்டுவது கவிஞர்களுக்காக மட்டுமே. கல்வி கற்ற எல்லாருக்காகவும் அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.
கலைமகள் புத்தகக் கல்விக்கும், தொழிற்கல்விகள் அனைத்துக்கும் மற்றும் நுண்கலைகளுக்கும்(fine arts) அதிதேவதை.

"வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
தரணி மீதறி வாகிய தெய்வம். "

தொழில் செய்வதற்கு உரிய கல்வியும், கைத்தொழில்களும் என்றும் திருமகளின் அருளை அள்ளித்தருபவையே. அதில் எந்த ஐயமும் இல்லை.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே இச்சா சக்தி (திருமகளின் அருள்), ஞான சக்தி (கலைமகளின் அருள்), க்ரியா சக்தி(துர்கையின் அருள்) என்ற மூன்றின் கலவையே. நுண்கலைகளுக்கு (சிற்பம் , ஓவியம், இசை, காவியம் போன்றவை) ஞான சக்தி (கலைமகளின் அருள்) அதிகம் தேவை. மிக உயர்ந்த ஓவியமோ, சிற்பமோ, காவியமோ படைக்கும் கலைஞர்களின் சிந்தனை முழுதும் அவர்கள் கலையின் மீதே இருப்பதால் பொருளீட்டுவதற்காக எந்தவித சமரசமும் செய்யமுடிவதில்லை. இதனால்தான் உலகின் மிக உன்னதமான கலைஞர்கள் பலர் தம் சொந்த வாழ்வில் பல தோல்விகளைச் சந்தித்திருக்கின்றனர்.

நுண் கலைகளிலேயே மிகவும் உயர்ந்தது காவியக்கலை.

// சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் //

என்று இந்தப் பாடலில் காவியம் படைக்கும் புலமை எனக்கு அருள்வாய் என்று வேண்டுகிறார். இந்தப் பாடலில் கூறப்படுவது கவிதை பாடும் புலமை மட்டுமே. புலமை வந்தால் பின்னாலேயே வறுமையும் வரக்கூடும் என்பதால்தான் 'நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை' வேண்டும் எனக் கேட்கிறார்.

9:30 AM, March 30, 2006
--

ஜெயஸ்ரீ said...
//நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை //

திருமகளின் அருள் கிட்டவில்லையே என்று மனம் உடையாமலிருக்க வேண்டும் என்று குமரகுருபரர் இந்தப் பாடலில் வேண்டுவது கவிஞர்களுக்காக மட்டுமே. கல்வி கற்ற எல்லாருக்காகவும் அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.
கலைமகள் புத்தகக் கல்விக்கும், தொழிற்கல்விகள் அனைத்துக்கும் மற்றும் நுண்கலைகளுக்கும்(fine arts) அதிதேவதை.

"வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
தரணி மீதறி வாகிய தெய்வம். "

தொழில் செய்வதற்கு உரிய கல்வியும், கைத்தொழில்களும் என்றும் திருமகளின் அருளை அள்ளித்தருபவையே. அதில் எந்த ஐயமும் இல்லை.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே இச்சா சக்தி (திருமகளின் அருள்), ஞான சக்தி (கலைமகளின் அருள்), க்ரியா சக்தி(துர்கையின் அருள்) என்ற மூன்றின் கலவையே. நுண்கலைகளுக்கு (சிற்பம் , ஓவியம், இசை, காவியம் போன்றவை) ஞான சக்தி (கலைமகளின் அருள்) அதிகம் தேவை. மிக உயர்ந்த ஓவியமோ, சிற்பமோ, காவியமோ படைக்கும் கலைஞர்களின் சிந்தனை முழுதும் அவர்கள் கலையின் மீதே இருப்பதால் பொருளீட்டுவதற்காக எந்தவித சமரசமும் செய்யமுடிவதில்லை. இதனால்தான் உலகின் மிக உன்னதமான கலைஞர்கள் பலர் தம் சொந்த வாழ்வில் பல தோல்விகளைச் சந்தித்திருக்கின்றனர்.

நுண் கலைகளிலேயே மிகவும் உயர்ந்தது காவியக்கலை.

// சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் //

என்று இந்தப் பாடலில் காவியம் படைக்கும் புலமை எனக்கு அருள்வாய் என்று வேண்டுகிறார். இந்தப் பாடலில் கூறப்படுவது கவிதை பாடும் புலமை மட்டுமே. புலமை வந்தால் பின்னாலேயே வறுமையும் வரக்கூடும் என்பதால்தான் 'நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை' வேண்டும் எனக் கேட்கிறார்.

9:30 AM, March 30, 2006
--

குமரன் (Kumaran) said...
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி Jayashree.

4:27 AM, April 05, 2006

Kavinaya said...

//எத்தனை எத்தனை கவிதைகளையும் செய்யுள்களையும் படித்தாலும் பொருள் உணர்ந்தாலும், மற்றவர் மனம் கவரும் வண்ணம் கவிதைகளைப் படைப்பதும் அவள் அருளே. //

அவள் அருளன்றி ஓரணுவும் அசையுமோ. பாடல் வரிகளுக்கு நேரடிப் பொருள் சொல்வது மட்டுமின்றி நீங்கள் இன்னும் விரித்துச் சொல்லும்போது மிகவும் அருமையாய் இருக்கிறது குமரா!

திவாண்ணா said...

கொஞ்சம் தயக்கத்தோட எழுதறேன். தமிழ்ல நான் அவ்வளோ கெட்டி இல்லை.

//நிலையில்லாமை அருளும் //
ஏதோ வேண்டுகோள் விடுப்பதாக முதல்ல தோன்றியது. அப்புறம்தான் அது ஸ்டேட்மென்ட்ன்னு புரிஞ்சது.

"நிலையில்லாமையை அருளும்" ன்னு இருந்து இருக்கலாமோ?

Geetha Sambasivam said...

முன்னேயே படிச்சிருக்கேன், அருமையான படம், அருமையான உரை! நல்ல இடுகை திரும்பத் திரும்ப எத்தனை முறை படிச்சாலும் நல்லாவே தான் இருக்கு! நன்றி குமரன், திரும்பவும் இவற்றை நினைவு கூர வைத்தமைக்கு.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா. கவிதைகளை படைக்கும் உங்களுக்கு அன்னையின் அருள் முழுமையாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொன்ன மாற்றத்தைச் செய்துவிட்டேன் திவா அண்ணா. ஐ உருபு தொக்கி இல்லாமல் வெளிப்படையாக இருந்தால் இன்னும் தெளிவாக இருக்கும் தான். அதனால் 'நிலையில்லாமையை அருளும்' என்று மாற்றிவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி கீதாம்மா.