Monday, July 28, 2008

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!


விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!
வினையனேனுடைய மெய்ப்பொருளே!
முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையில் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்ட
கடவுளே! கருணைமாக்கடலே!
இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே - தரும ரூபமான காளை மாட்டினை (விடையை) வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள, வானில் வாழும் தேவர்களுக்கெல்லாம் அரசனே!

வினையனேனுடைய மெய்ப்பொருளே - கரும வினையின் அடிமையாகிய எனக்கு வேறு கதி இல்லை. நீயே எனக்குக் கதியாகும் உண்மைப்பொருள்.

அடியேன் - உன் அடிமையாகிய நான்

முழுபுழுக் குரம்பையில் கிடந்து - முழுவதும் நுண்ணுயிரிகளால் (புழுக்களால்) நிரம்பிய (அதனால் துன்பங்களை அடைந்து துயர் உறும்) இந்த உடலில் கிடந்து

முடை விடாது - அதனால் எழும் கெட்ட நாற்றம் (வடமொழியில் வாசனா எனப்படுவது) விடாது

மூத்தற மண்ணாய் - முதுமை அடைந்து இறுதியில் ஒன்றுமே இல்லாத மண்ணாகி

கடைபடா வண்ணம் - கீழ்மை நிலை அடையாத வண்ணம்

காத்து என்னை ஆண்ட கடவுளே

கருணைமாக்கடலே - வினைப்பயன்கள் மற்றும் வாசனைகளின் அடிமையாகிய என்னை உன் அடிமையாக்கிய கருணை மாக்கடலே.

இடைவிடாது - எப்போதும்

உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கு எழுந்து அருளுவது இனியே!

வானில் வாழும் தேவர்களின் அரசனே! நீர் தருமத்தின் தலைவன். ஆதலினால் தரும ரூபமான ரிஷப தேவரை விரும்பி உம் வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ளீர். என் முன்வினைப் பயன்களால் பெரிதும் அலைப்புண்டு கலங்கி நிற்கும் எனக்கு நீரே மெய்யான கதி. உம் கடல் போன்ற கருணையால் என்னை இந்த கீழான வாழ்விலிருந்து கடைத்தேற்றினீர். நான் எப்போதும் உம் திருவடிகளை சிக்கெனப் பிடித்துள்ளேன். நீர் எங்கு செல்ல முயல்கிறீர்? நான் எப்போதும் உம் திருவடிகளைப் பற்றியுள்ளதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது.

4 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருவாசகம் ஓரடொரியோ' பதிவில் 1 நவம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

12 comments:

hameed abdulla said...
NEEVIR, EDUTTHEZUTHIYULLAP PADALIL PORULKUTRAM ULLATHU>>>>>

November 01, 2005 1:51 PM
--

குமரன் (Kumaran) said...
Enna Porul Kuttram enRu sollungal hameed abdulla...thavaraayin thiruththi ezhuthukiRen.

November 01, 2005 1:53 PM
--

சிவா said...
விடை என்றால் காளை மாடா?. புதிதாக இருக்கிறது பொருள். //**நான் எப்போதும் உம் திருவடிகளைப் பற்றியுள்ளதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது. **// இறைவனை இப்படி எல்லாம் மிரட்ட முடியுமா என்ன? :-)

November 01, 2005 9:22 PM
--

குமரன் (Kumaran) said...
சிவா,

திருஞானசம்பந்தரின் முதல் பாடலிலேயே 'விடை' என்பதை 'காளை' என்னும் பொருளில் பயன்படுத்தியுள்ளார். இது புதுமையான பொருள் இல்லை. இப்போது அவ்வளவாய் வழக்கில் இல்லாத பொருள்.

திருஞானசம்பந்தர் பாடல்...

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

November 02, 2005 6:01 AM
--

G.Ragavan said...
சிவபுராணம், விடை என்றால் காளை மாடும் கூட. விடையேறும் பெம்மான் என்றும் சொல்கின்றார்களே.

அதிலும் குமரன் குறிப்பிட்ட பதிகம் மிகப்புகழ் பெற்றது. "விடை ஏறி ஓர் தூவெண்மதி சூடி".
கொஞ்சம் வழக்கொழிந்த பெயராகி விட்டது உண்மைதான். ஆனால் தமிழ் ஆர்வலர்களுக்கு விடை என்றால் அது எருது என்று தெரியும்.

முடை என்ற சொல் இன்னும் பயனில் உள்ளது. முடை நாற்றம் என்று சொல்வோமே.

பல தமிழ்ச் சொற்கள் இன்னும் பயனில் உள்ளன. குமரன் போன்றவர்கள் பழைய பாக்களை விளக்கும் பொழுது ஒவ்வொன்றும் திரும்பக் கிடைக்கின்றன.

November 02, 2005 6:38 AM
--

குமரன் (Kumaran) said...
உதவிக்கு வந்ததற்கு மிக்க நன்றி ராகவன்.

November 02, 2005 11:22 AM
--

குமரன் (Kumaran) said...
ராகவன், ஹமீத் அப்துல்லா இதில் பொருட்குற்றம் இருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டு அது என்ன என்று சொல்லாமல் விட்டுவிட்டார். உங்களுக்கு ஏதாவது பொருட்குற்றம் தோன்றுகிறதா?

November 03, 2005 9:42 AM
--

குமரன் (Kumaran) said...
\\//**நான் எப்போதும் உம் திருவடிகளைப் பற்றியுள்ளதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது. **// இறைவனை இப்படி எல்லாம் மிரட்ட முடியுமா என்ன? :-)
\\

சிவா, இறைவனுடன் அவ்வளவு நெருக்கம் இருந்தால் இப்படி மிரட்ட முடியும் என்று நினைக்கிறேன். உங்கள் மகள் உங்கள் காலைப் பிடித்து விடாமல் அடம் பிடித்ததே இல்லையா? அந்த அளவு நெருக்கம் இருந்தால் முடியும்.

பாரதியார் 'சொல்லடி சிவசக்தி' என்று ஒருமையில் அழைக்கவில்லையா?

November 04, 2005 12:48 PM
--

G.Ragavan said...
// உங்களுக்கு ஏதாவது பொருட்குற்றம் தோன்றுகிறதா? //

முதற்கண் பாட்டை நீர் இயற்றினீரா?....சரி. சரி. ஜோக்ஸ் அப்பார்ட். எனக்கு ஒரு பொருட்குற்றமும் தெரியவில்லை. அனேகமாக "என்னை விட்டுத் தப்பிப் போகமுடியாது" என்ற அன்பை அவர் தவறாகக் கருதியிருக்கலாம். "அது எப்படி? இறைவனால் தப்பிப் போக முடியாதா? அவரால் முடியாததுண்டா?" என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை பாடலில் எந்தக் குற்றமும் இல்லை.

November 08, 2005 5:46 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி ராகவன்

November 08, 2005 4:19 PM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
Sri Kumaran good work. very interested read.indicates without reading all these things how many years i have wasted my life. thanks

November 09, 2005 10:26 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி திரு.TRC. அடிக்கடி வாருங்கள்.

November 09, 2005 7:17 PM

Kavinaya said...

இது குரங்குப்பிடி வகைச் சரணாகதியோ?

//முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையில் கிடந்து//

இதைப் படிக்கும்போது அச்சோ, எப்ப இதுலருந்து விடுதலைன்னு இருக்கு...

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடல்களில் இரண்டுவித பிடிகளும் இருக்கின்றன என்று நினைக்கிறேன் அக்கா. 'அவன் அருளாலே அவன் தாள் பணிந்து'ன்னு சொன்னவர் இவர் தானே. அதனால் அவன் அருளால் அவன் தன்னை அடிமைக் கொண்ட பூனைக்குட்டி வகை சரணாகதியைப் பற்றி சொல்வார்; அப்படியே 'சிக்கெனப் பிடித்தேன்' என்று குரங்குக்குட்டி வகை சரணாகதியையும் சொல்வார். இரண்டுமே வேண்டும் போல.

Mrs. Sundari Ramanathan said...

ஜனனி ஜனனி என்ற பாடலில் விடை வாகனமும் என்று வருகிறது.