Tuesday, April 15, 2008

உடுக்கை இழந்தவன் கை - 12 (பாரி வள்ளலின் கதை)

"பெரியப்பா. சான்றோர்கள் மிகுந்திருந்ததால் மழை பொய்க்காமல் இருந்தது என்றீர்கள். இனி அவ்வாறு நடக்காது என்று நினைக்கிறீர்களா?"

"ஆமாம் சங்கவை. உன் தந்தை இல்லாத நாட்டில் இனி சான்றோர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் பாவம் இந்தப் பறம்பு நாடு தான் படாத பாடு படப் போகிறது.

எட்டாம் நாள் நிலவைப் போல் அரைவட்டமாக இருக்கும் குளங்கள் அழிந்து போவதைப் போல் முல்லைக்குத் தேர் தந்த பாரியின் நாடு அழிந்து போகப் போகிறது. ஐயோ பாவம்.

அறையும் பொறையும் அணந்த தலைய
எண்ணாட்டிங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பிற்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே
"

"குளங்கள் அழிவது போல் நாடு அழியும் என்றீர்களே. ஏன் பெரியப்பா?"

"மகளே. உன் தந்தை ஏந்திய கூர்வேலைப் போல் கூர்மையுடைய பாறைகளும் சிறு குன்றுகளும் நிறைய தெளிந்த நீர்க்குளங்கள் புரப்பவர் இருக்கும் வரை தெளிந்த நீரக் கொண்டிருக்கும். காப்பாற்றுவார் இல்லாத பொழுது நீரில் பாசி படர்ந்து குளம் அழிந்து போகும். கூரிய வேலைத் தாங்கிய உன் தந்தையின் பாதுகாப்பை இழந்த இந்த தண்பறம்பு நாட்டிற்கும் அதே கதி தானே என்று ஏங்குகிறேன்"

"அப்பா இறந்தாலும் ஆள்வதற்கு வேந்தர்கள் இருக்கிறார்களே பெரியப்பா. அவர்களின் ஆட்சியில் பாதுகாப்புடன் இந்த நாடு இருக்குமே. அவர்களுடன் சேர்ந்து சான்றோர்களும் இருப்பார்களே. அதனால் பறம்பு நாட்டிற்கு அழிவொன்றும் நேராது பெரியப்பா"

"சங்கவை. உன் தந்தை முரசினையுடைய இந்த மூவேந்தர்களைக் காட்டிலும் மிகுதியாக இரவலர்களுக்கு வழங்கியவன். நிழலே இல்லாத நீண்ட நெடிய வழியில் நிழல் தரும் தனி மரம் போல் இருந்தவன். அவன் நீங்கிய பின் சான்றோர் இங்கே நில்லார். அவன் ஆளும் போது மழை பெய்து நின்றபின்னர் புளிமாங்காயை மோரில் சேர்த்துச் சமைத்த புளிங்கறியை ஆசையுடன் உண்டோம். சான்றோர் நீங்கியதால் மழையும் பெய்யாது. ஆசையுடன் உண்ட புளிங்கறியும் கிடைக்காது.

கார்ப்பெயல் தலைஇய காண்பின் காலைக்
களிற்று முக வரியில் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்னலைப் புளித்து
மென்றினை ஆணர்த்து நந்தும் கொல்லோ
நிழலின் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே
"

"பெரியப்பா. நீங்கள் சொல்லச் சொல்ல வருத்தம் கூடுகிறது. நாம் இங்கேயே இருந்துவிடலாமே. நான் பிறந்த இந்த நாட்டின் நிலை இனி மேல் இப்படி கெட்டுப் போகும் என்றால் அதனை நிகழாமல் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாம் இங்கேயே இருந்துவிடலாம் பெரியப்பா"

"அம்மா. உன் தந்தைக்கு நான் தந்த உறுதிமொழியை நீ அறிவாய். உங்கள் இருவருக்கும் தகுந்த மணாளர்களைத் தேடித் தானே நாம் இப்போது வடக்கு நோக்கி செல்கிறோம். நான் தந்த உறுதிமொழியை நானும் மீற முடியாது. உங்கள் தந்தையாரின் விருப்பத்தை நீங்களும் மீறமுடியாது. அதனால் நாம் தொடர்ந்து நம் வழியே செல்வோம்"

தொடர்ந்து வடக்கு நோக்கி நடக்கின்றனர். வேளிர் ஆளும் நிலங்களுக்கு எல்லாம் சென்று பாரி மகளிரை மணக்கும் படி கபிலர் வேண்டுகிறார். மூவேந்தர்களுக்கு அஞ்சி எல்லோரும் மறுத்துவிடுகின்றனர். இப்படியே ஒவ்வொரு நாடாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

***


பாடற்குறிப்புகள்:

இரண்டு பாடல்களும் பொதுவியல் திணையிலும் கையறுநிலைத் துறையிலும் அமைந்திருக்கின்றன. இரண்டும் கபிலர் பறம்பு நாட்டைப் பாடியது.

1. அறையும் பொறையும் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 118ம் பாடல்.

பொழிப்புரை: பாறையும் சிறு குன்றுகளும் நிறைந்த அஷ்டமி (எட்டாம் நாள்) திங்களைப் போல் வளைந்த கரையையுடைய தெளிந்த நீர்க் குளம் பாதுகாப்பார் இன்மையால் அழிவது போல் கூரிய வேலையேந்திய திரண்ட தோள்களைக் கொண்ட தேரினை முல்லைக்கு வழங்கிய வள்ளலாகிய பாரியின் தண்பறம்பு நாடும் அழியுமோ?

2. கார்ப்பெயல் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 119ம் பாடல்.

பொழிப்புரை: கார்காலத்து மழை பெய்து முடித்த பின்னர் யானையின் முகத்தில் இருக்கும் வரிகளைப் போல் தோன்றும் புளிமாங்காயின் பூக்கள் நிறைய பூக்க அந்த செம்மை மிகுந்த மரத்தில் விளைந்த காயை இனிய மோருடன் கூட்டிச் செய்த புளிங்கறியை மெல்லிய தினையுடன் சுவைத்த நாட்கள் குறைந்து போகுமோ? நிழலில்லாத நீண்ட வழியில் தனியாக நிற்கும் மரத்தைப் போல் பெரும்படையுடன் முரசினையும் உடைய வேந்தர்களை மிகுத்து இரவலர்களுக்கு ஈயும் வள்ளன்மை உடைய பாரியின் நாடும் அது போல் குறைந்து போகுமோ?

10 comments:

சிவமுருகன் said...

கபிலரின் வார்த்தையில் இருக்கும் வருத்தம், தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் தொகுப்பு.

அதை நீங்கள் சொன்ன விதம்.
இங்கிலீஷ்ல சொன்னா சூப்பர், தமிழ்ல்ல சொன்னா தூள்!

குமரன் (Kumaran) said...

என்ன சிவமுருகன் பெங்களூருவுக்கு வந்த பின்னர் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதையும் விடாமல் பார்க்கிறீர்கள் போலிருக்கிறதே. அதான் லாரன்ஸ் ராகவேந்த்ராவோட நச் பாராட்டைப் போட்டிருக்கிறீர்கள். :-)

பாராட்டுகளுக்கு நன்றிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
நாட்டிலும் மக்களிலும் பற்றுள்ள மன்னர்கள், மக்களின் நலனுக்காக
குளங்களைத் தூர்வாருவார்களே தவிர
வீடுகட்டி விற்கமாட்டார்கள்.
பாரி மக்கள் நலம் விரும்பி..அவர் இல்லையோ, தூர்வார ஆளின்றி குளம் வற்றும்
பாரியின் ஆட்சியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டான பாடல்.
நன்று

மெளலி (மதுரையம்பதி) said...

புளிங்கறின்னா என்ன குமரன்?. மாங்காயா?. மோருடன் சமைத்துன்னெல்லாம் சொல்லியிருக்கீங்களே, ஆனா எனக்கு பாட்டுல அந்த மாதிரி புதசெவி. கொஞ்சம் விளக்கினா நானும் தமிழ் தெரிஞ்சுக்குவேனே?. :))

பாச மலர் / Paasa Malar said...

குளம் வற்றுவதற்கும் அரசனின் ஆட்சிக்குமான உவமை மிகச் சிறப்பு..புளிமாங்காய்..பொழிப்புரை அருமை..நல்ல தமிழ்ப் பாடல்களைப் புரிந்து ரசிக்க உதவும் பதிவுகள்..நன்றி மட்டும் பாராட்டுகள்.

G.Ragavan said...

// அறையும் பொறையும் அணந்த தலைய //

இந்த வரிகளுக்குப் பொருள் என்ன குமரன்?

// எண்ணாட்டிங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பிற்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே" //

தேர் வண் பாரி தண் பறம்பு நாடே... இதுல தண் அப்படீங்குறதுக்கு என்ன பொருள். தன் என்று வந்திருக்க வேண்டுமோ? அல்லது தண் என்பது குளுமை என்ற பொருளில் வந்திருக்குமோ. சரி.. இதுல முல்லை எங்க வந்திருக்கு?

குமரன் (Kumaran) said...

இராகவன்,

அறையும் பொறையும் அணந்த தலைய என்பதற்கு இணையத் தமிழ்ப்பல்கலைகழக நூலகத்தில் இருக்கும் உரையில் 'பாறையும் சிறுகுன்றுகளும் நிறைந்த' என்று பொருள் கூறியிருக்கிறது. அதனையே நானும் இங்கே சொன்னேன்.

தண்பறம்பு என்பது குளுமையான பறம்பு என்ற பொருளில் தான் வந்திருக்கிறது இராகவன். தேர் வண் பாரி என்பதில் தான் முல்லை மறைந்து வந்திருக்கிறது. தேரினைத் தந்த வள்ளல் (வண்மை = வள்ளல்தன்மை) பாரி என்று சொன்ன இடத்தில் தான் முல்லைக்குத் தேர் தந்தான் என்று வேறிடத்தில் கூறியதை இங்கே தொக்கி வந்திருக்கிறது என்று நினைத்துப் பொருள் சொன்னேன். சரி தானா?

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஐயா. மிக நல்ல கருத்துள்ள பாடல்கள்.

குமரன் (Kumaran) said...

புளிப்பான கறி தான் புளிங்கறி மௌலி. மாங்காயை மோருடன் சேர்த்து சமைத்த பச்சடி போன்றது. மோர்க்குழம்பு என்றும் சொல்லலாம். மோர்க்குழம்பைப் பற்றி இன்னொரு இடத்திலும் சங்க இலக்கியத்தில் படித்ததாக நினைவு.

உரையாசிரியர்களின் கருத்துப்படி 'செம்புற்று ஈயலின் இன்னலைப் புளித்து' என்ற வரியில் தான் இந்தத் தகவல் இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

நன்றி பாசமலர்.