
இன்று பாரதியின் நினைவு நாள். அவனது நினைவு நாளில் அவனது அழகான கவிதைகளில் ஒன்றை - பலரும் அறியாத கவிதைகளில் ஒன்றை - எடுத்துப் படித்துப் பார்ப்பது தான் அவனது நினைவிற்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலி என்று எண்ணுவதால் இதோ அவன் எழுதிய 'மனதிற்குக் கட்டளை' என்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறு கவிதை.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
தாயாம் சக்தி தாளினிலும்
தருமம் என யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
இந்தப் பாடல் மிக எளிமையான பாடல். மனம் என்பது அறிவு சொல்வதைக் கேட்காமல் உழலுவதை வேறு யாரும் சொல்லி நமக்குத் தெரிய வேண்டியதில்லை. எல்லோருக்கும் அந்த அனுபவம் உண்டு. அதனால் பாரதி தன் மனத்திற்குச் சொல்லும் இந்தக் கட்டளையை ஒவ்வொருவரும் தம் தம் மனத்திற்குச் சொல்லும் கட்டளையாகவும் அமைவது இயற்கை.
நம் மனம் தான் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருள், அதிலிருந்து வேறொரு பொருள் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறதே. சொல்லும் சொல்லை கேட்கிறதா என்ன? நல்லது இது; இதனைக் கொள்ளுவாய் என்றால் கேட்காமல் அதிலிருந்து நழுவுகிறது. இதை விட்டுவிடு என்றால் கேளாமல் அதிலேயே போய் விழுகின்றது. எதாவது புதுமையைக் கண்டால் அதனைப் பெற விரும்புகிறது. அது கிடைக்குமோ கிடைக்காதோ என்று அஞ்சுகிறது. சில நேரங்களில் புதுமையைக் கண்டவுடன் நமக்கு அது தீங்கு செய்துவிடுமோ என்று அஞ்சுகிறது. எத்திசையில் போகக் கூடாது என்று அறிவு சொல்கிறதோ அவ்வழியிலேயே அழைத்துச் செல்கிறது. அதனால் தான் பாரதி 'பேயாய் உழலும் சிறு மனமே' என்று விளிக்கிறான் போலும்.
ஆனாலும் அதற்கு இன்னொரு முறை அறிவுரை சொல்லிப் பார்க்கிறான். 'நினது தலைவன் நானே; நான் சொல்லுவதைத் தான் இனி மேல் நீ கேட்க வேண்டும்' என்று மிரட்டிப் பார்க்கிறான். 'அன்னை பராசக்தியின் திருவடிகளிலும், இதுவே சரி என்று நான் குறிப்பதிலும் மட்டுமே நீ ஓயாது நிற்க வேண்டும்' என்று கட்டளை இடுகிறான். 'எதற்கு நான் இதைச் செய்யவேண்டும்?' என்று எப்போதும் போல் திமிறி ஓடுமே - அதற்கு விடையாக 'சொல்லிவிட்டேன். உன் தலைவனான என் சொல் கேட்டு அடங்கி நடந்து கொண்டாய் என்றால் நீயும் உய்வாய். அதனால் நானும் உய்வேன்' என்று சொல்கிறான்.