Thursday, August 21, 2008

*நட்சத்திரம்* - கண்ணன் என்னும் கருநிறக் கடவுள்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் என்று குதூகலம் கொள்ள வேண்டிய வாரம் இது. ஆமாம் இந்த வாரத்தில் தான் கண்ணனின் பிறந்த நாள் வருகிறது. சென்ற முறை தமிழ்மண விண்மீனாய் இருந்த போது குடியரசு தினம் வந்தது. இந்த முறை விண்மீனாய் இருக்கும் போது விடுதலை நாள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே; அந்த வாரத்தில் இந்த வாய்ப்பு கிடைக்காமல் அதற்கடுத்த வாரத்தில் கிடைக்கிறதே என்று நினைத்த போது அதை விடச் சிறப்பாக கண்ணனின் பிறந்த நாள் அமையும் வாரமாக அமைந்துவிட்டது.

கண்ணனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்கமாக இந்த இடுகை அமைகின்றது. கொண்டாட்டத்தின் தொடக்கம் என்று சொல்வதில் இருக்கும் குறிப்பு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொண்டாட்டத்தை வேறு இடங்களிலும் காணலாம். :-)

***

"அப்பா. முல்லை நிலக்கடவுள் மாயோன் என்பதை தொல்காப்பியம் சொல்கின்றது. முல்லை நிலத்தின் கருப்பொருளும் உரிப்பொருளும் எப்படியெல்லாம் கண்ணனுக்குப் பொருந்தி வருகின்றது என்பதையும் நீங்கள் முன்பு சொன்னீர்கள். சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல், பூவை நிலைத் துறை போன்ற இலக்கண இலக்கிய செய்திகளையும் கண்டோம்.

ஆரியத்தின் வருகைக்குப் பின்னர் ஆரியம் தமிழ்நெறியோடு செய்து கொண்ட உடன்பாடே மாயோனும் விஷ்ணுவும் இணைந்தது; சேயோனும் ஸ்கந்தனும் இணைந்தது; வாலியோனும் பலராமனும் இணைந்தது என்றெல்லாம் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் ஆரியம் வருவதற்கு முன்னரே தமிழ்நெறியில் ஸ்கந்தனுக்கு உரியவை, விஷ்ணுவுக்கு உரியவை, பலராமனுக்கு உரியவை என்று அவர்கள் வகுக்கும் செய்திகள் இருக்கின்றனவே. ஒரே குழப்பமாக இருக்கிறது"

புன்னகையுடன் "குமரா. நல்ல கேள்வி கேட்டாய். துவரைப்பதியிலிருந்து வந்த மன்னர் குடியினர் வேளிர்கள் என்று சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இருக்கின்றன. துவரைப்பதி என்றால் கண்ணன் ஆண்ட துவாரகையைக் குறிப்பதாகச் சிலரும் கருநாடகத்தில் இருக்கும் துவாரசமுத்திரத்தைக் குறிப்பதாகச் சிலரும் சொல்கிறார்கள். மூவேந்தர்களில் பாண்டியர்கள் மூத்த குடியினர் என்பது உனக்குத் தெரியும். பாண்டியர்களுக்கு இணையான தொன்மையுடன் இருப்பவர்களாக வேளிரையும் இலக்கியத் தரவுகள் சுட்டுகின்றன. அவர்கள் வடக்கிலிருந்து தெற்கே வரும் போது சில தொன்மங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அல்லது துவாரகையை ஆண்ட யாதவ குலத்தவர்கள் தமிழர்களாகவே இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தத் தொன்மங்கள் எல்லாம் தமிழர்களுடையதாகவே இருந்து ஆரியத்தில் பின்பு கலந்திருக்கலாம். என்றைக்கு ஆரியத் தொடர்பு ஏற்பட்டது, அது நிகழ்ந்த இடம் வடபுலமா தென்னகமா என்றெல்லாம் இன்னும் நுணுகிப் பார்க்கவேண்டும். உனக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் இறங்கி ஆய்வு செய்து பார்"

"நீங்கள் சொல்வது சரி தான் அப்பா. வெளிநாட்டிலிருந்து தங்கள் மதத்தைப் பரப்ப வந்தவர்கள் மேலோட்டமாக ஆராய்ந்து சொல்லிச் சென்ற சில செய்திகள் உறுதியான கருத்தாக்கங்களாக கொண்டு பல குழப்பங்கள் இருந்து வருவதை அறிகிறேன். அந்தப் பாதிரியார்கள் செய்த தமிழாய்வால் பல நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன; சில குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன"

"இருக்கலாம் மகனே. ஆனால் அவர்கள் அந்தக் குழப்பங்களை வலிந்து செய்தார்கள் என்று எண்ண இடமில்லை. அவர்களுக்குக் கிடைத்த தரவுகளின் படி அவர்களின் புரிதலைச் சொல்லிச் சென்றார்கள். அதனை அடுத்து மேன்மேலும் உள்ளே சென்று பல விதமான தரவுகளைத் தேடி மற்ற செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனைச் செய்யாமல் அவர்களின் அரைகுறைப்புரிதல்களின் மேலாக ஒரு பெரும் கட்டடத்தையே கருத்தாக்கம் செய்துவிட்டார்கள். அது தமிழின் போகூழே. ஒரே மூச்சில் தமிழின் தமிழரின் தொன்மைப்பெருமையைப் பேசிக் கொண்டே அடுத்த நொடியே அந்நியர்கள் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள் என்று தன்னிரக்கம் பேசி மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்படுகிறார்கள் தமிழர்கள். ஒரே நேரத்தில் பேரறிவினராகவும் அ‍ன்‍னியர்களால் ஏமாற்றப்பட்ட ஏமாளிகளாகவும் நம் முன்னோர்கள் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்வது நகைப்பிற்குரியது. இதெல்லாம் பேசித் தீராது. வேறேதும் இருந்தால் சொல். பேசலாம்"

"உண்மை தான் தந்தையே. இவை பேசித் தீரப் போவதில்லை. பேசினாலும் புரிந்து கொள்பவர் மிகக்குறைவு. அந்த நேரத்தை நல்லபடியாக இலக்கிய ஆய்வில் செலவழிக்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் பற்பல இடங்களில் கரு‍‍ நிறக் கடவுளான மாயோனைப் பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் சிலவற்றை சொல்லுங்கள் அப்பா."

"சேந்தன் தாதை. முன்பே சொன்னது போல் நீயே கற்று தெளிவதே நல்லது. மற்றவர் சொல்வதும் உரை நூல்களும் கடின சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் உதவியாக இருக்கலாம். ஆனால் உண்மையை உணர வேண்டும் என்ற ஆர்வம் இருப்பின் நீயே உள் நுழைந்து பார்ப்பதே நல்லது"

"தந்தையே. அப்படியே சொல்கிறேன். உள்ளே இறங்குவதற்கு முன் கரையோரம் நின்று நீரைச் சோதிப்பதைப் போல் சோதிக்க நினைக்கிறேன். அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். இருக்கும் நேரத்தில் எதையெல்லாம் கோடி காட்ட முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லுங்கள்"

"மகனே. நீ வேண்டிக் கேட்பதால் சொல்கிறேன். கண்ணனை இலக்கியம் எங்கெல்லாம் குறிப்பிடுகிறது என்று பட்டியல் இடத் தொடங்கினால் பட்டியல் நீளும். சட்டென்று நினைவிற்கு வருபவற்றில் சிலவற்றைச் சொல்கிறேன். கேட்டுக் கொள்.

முதலில் நினைவிற்கு வருவது பரிபாடல். எட்டுத் தொகை நூற்களில் ஒன்றான பரிபாடல் தொகுப்பில் எழுபது பாடல்கள் இருந்தன என்றும் தற்போது இருபத்தி இரண்டு பாடல்களே கிடைக்கின்றன என்றும் படித்திருக்கிறேன். அந்த இருபத்தி இரண்டில் முருகன் மேல் எட்டு பாடல்களும் வையை நதி மீது எட்டு பாடல்களும் மாயோன் மீது ஆறு பாடல்களும் இருக்கின்றன. அந்த ஆறு பாடல்களையும் சொல்லத் தொடங்கினால் வெகு நேரம் செல்லும். அவற்றை இன்னொரு நாள் பார்க்கலாம். அதனால் வேறு நூற்களில் இருக்கும் குறிப்புகளை மட்டும் சொல்லிச் செல்கிறேன்.

எட்டுத்தொகை நூற்களில் இன்னொன்று நற்றிணை. அதன் கடவுள் வாழ்த்தாக 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற சங்கப்புலவர் பாடிய பாடல் ஒன்று மாயோனின் மீது இருக்கிறது. விட்டுணு என்ற வடசொல் விண் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்ததாக தமிழறிஞர் சிலர் சொல்வார்கள். விட்டுணு என்னும் வடசொல்லிற்கு எங்கும் நிறைந்தவன்; அண்ட உருவாக இருப்பவன் என்று பொருள். இந்தப் பாடல் மாயோனை அண்ட உருவாகக் காட்டுகிறது. அந்த வகையில் விட்டுணு என்ற பெயரின் அடிப்படைக் கருத்து இந்தப் பாடலில் சொல்லப் பட்டிருக்கிறது எனலாம்.

மாநிலம் சேவடியாகத் தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாகத் திசை கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே.
"

"ஆகா. பாடல் மிக எளிமையாக இருக்கிறது அப்பா. அப்படியே சுருக்கமான பொருளும் சொல்லிவிடுங்கள்"

"குமரா. எளிதாக இருக்கிறது என்று சொல்கிறாய். பின் ஏன் பொருள் உரைக்கச் சொல்கிறாய்?"

"முழுவதுமாகப் புரியவில்லை அப்பா. அதனால் தான்"

"சரி சுருக்கமாகச் சொல்கிறேன் கேள். உலகம் திருவடிகளாக, கடல் உடையாக, வானம் திருமேனியாக, திசைகள் கைகளாக, சூரியனும் சந்திரனும் திருக்கண்களாக, எல்லா உயிர்களும் உலகங்களும் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் வேத முதல்வன் சக்கரத்தைக் கையில் கொண்டிருக்கும் மாயோனே என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். இது தான் சுருக்கமான பொருள்"

"மிக்க நன்றி அப்பா. அடுத்தப் பாடலைக் கூறுங்கள்"

"பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் ஒரு இடத்தில் மாயோனின் கொப்பூழிலிருந்து நான்முகன் தோன்றிய செய்தியைக் கூறுகிறது.

நீல நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டு...


என்று செல்லும் அந்தப் பாடல் வரிகள். இதன் பொருள் புரிகிறதா?"

"நன்கு புரிகிறது அப்பா"

"நல்லது. அடுத்தப் பாடலைச் சொல்கிறேன் கேள். பதினெண்கீழ்கணக்கு நூற்களில் ஏதாவது ஒன்றைச் சொல் பார்ப்போம்"

"என்ன அப்பா இப்படி கேட்டுவிட்டீர்கள்? திருக்குறளும் நாலடியாரும் பதினெண்கீழ்கணக்கு நூற்கள் தானே"

"ஆமாம் மகனே. அந்தப் பதினெட்டு நூற்களில் ஒன்று திரிகடுகம் என்பது. அதன் கடவுள் வாழ்த்தும் மாயோனைப் போற்றுகிறது.

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி


இந்த வெண்பாவின் பொருள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்"

"மேலோட்டமாகப் புரிகிறது அப்பா. சொல்கிறேன். சரியா என்று பாருங்கள். வாமனனாக வந்து திருவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்ததும், கண்ணனாக வந்த போது குருந்த மரத்தை உதைத்துச் சாய்த்ததும், அப்போது நெருங்கி வந்த மாய வண்டிச்சக்கரத்தை உதைத்ததும் பூவைப்பூ வண்ணம் கொண்ட மாயோனின் திருவடிகளே. சரியா அப்பா?"

"சரி தான் மகனே. இப்படியே இன்னும் இருக்கும் பாடல்களையும் படித்துப் பார்த்தால் பழந்தமிழர் மாயோனை எப்படி போற்றியிருக்கின்றார்கள் என்று புரியும்"

"இன்னும் இருக்கும் பாடல்களைச் சொல்லுங்கள் அப்பா"

"இன்னும் இரு பாடல்களைச் சொல்கிறேன். பின்னர் நான் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்"

"அப்படியே ஆகட்டும் அப்பா. இன்னும் இரு பாடல்களை மட்டும் சொல்லுங்கள். உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்"

"புறநானூறு ஐம்பத்தி ஆறாம் பாடல் பழந்தமிழகத்தின் நாற்பெரும் தெய்வங்களைப் பற்றி சொல்கிறது.

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர்சடை
மாற்றரும் கணிச்சி மணி மிடற்றோனும்
க்டல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்...


எந்த நான்கு கடவுளர்களைப் பற்றி சொல்கிறது இந்தப் பாடல் தெரிகிறதா குமரா?"

"நன்றாகத் தெரிகிறது அப்பா. சிவபெருமான், பலராமன், திருமால், திருமுருகன் என்ற நால்வரைத் தானே இந்தப் பாடல் குறிக்கிறது?"

"ஆமாம் மகனே. பாடல்வரிகள் முழுவதும் புரிகின்றனவா?"

"இல்லை அப்பா. சுருக்கமாகப் பொருள் சொல்லுங்கள்"

"எருதினைக் கொடியாகக் கொண்ட தீ போன்ற சடைமுடி கொண்ட எதிர் நிற்க முடியாத மழுப்படையையுடைய நீல மணி போன்ற திருத்தொண்டையை உடைய சிவபெருமானும், கடலில் வளரும் வலம்புரி சங்கைப் போன்ற வெண்ணிறம் கொண்ட திருமேனியை உடையவனும் வெற்றி பெறும் கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனும் பனைக்கொடியை உடையவனும் ஆன பலராமனும், கருமணியைப் போல் திருமேனியின் நிறம் கொண்டவனும் விண் வரை உயர்ந்த கருடக் கொடியைக் கொண்டவனும் பெரும் திறன் கொண்டவனும் ஆன மாயோனும், மயிற்கொடியை உடையவனும் எதிரிகள் இல்லாத வெற்றியை உடையவனும் பிணிமுகத்தை ஊர்தியாகக் கொண்டவனும் ஆன செவ்வேளும் என்று நான்கு கடவுளர்களைச் சொல்கிறது இந்தப் பாடல்"

"திருமுருகாற்றுப்படையில் பலராமனைத் தவிர்த்து மற்ற மூவரைச் சொல்லுவதை ஏற்கனவே படித்திருக்கிறேன் அப்பா. இன்று இந்த நால்வரைப் பற்றிய பாடலை அறிந்தேன்."

"மகிழ்ச்சி. இதோ இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் கடைசி பாடல். புறநானூறு ஐம்பத்தி ஏழாம் பாடல் மாயோனைப் பற்றி பேசுகிறது.

வல்லாராயினும் வல்லுநராயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன்..."


"புரியவில்லையே அப்பா"

"கல்வியே இல்லாதவர்களோ கல்வியில் வல்லவர்களோ புகழ விரும்புபவர்களுக்கு மாயோனின் புகழினைப் பாடுதல் மிக அரிது என்றும் அவ்விருவர்களில் யார் அவனைப் புகழ விரும்பினாலும் அந்த விருப்பம் ஒன்றே அவன் அருளைப் பெறுதற்குப் போதும் என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள்"

"மாயோனைப் பற்றிய பழந்தமிழ் குறிப்புகளைச் சொன்னதற்கு மிக்க நன்றி அப்பா. இதே போல் மற்ற கடவுளர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று வரும் நாட்களில் சொல்ல வேண்டும்"

"அப்படியே செய்கிறேன் குமரா. அதற்குள் நீயே கொஞ்சம் இலக்கியம் படிப்பதும் நன்று"

25 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா!

me the firshtuuuuu? happy birthday kanna! :)

மதுரையம்பதி said...

குமரன்...திகிரியோன் அப்படின்னா கண்ணனா?......சூரியனா?.

Raghav said...

மிக மிக அழகான, அரூமையான பதிவு குமரன். மாயனின் நாமத்தை சொன்னாலே போதுமே... கொண்டாட்டங்கள் தொடங்கட்டும். கண்டுகளிக்கவும், கண்ணனின் வாழ்த்துக்கள் பெறவும் காத்துள்ளேன்.

"கண்ணே என் கருமணியே கற்பகமே முத்தே
பூத்த புதுமலரே, பொக்கிஷமே முத்தே எங்கள் கண்ணா" ஊன் அடி பணிகிறேன், காப்பாற்றுவாயே திருவேங்கடேசா..

Raghav said...

//கொண்டாட்டத்தை வேறு இடங்களிலும் காணலாம். :-)//

எல்லா இடங்களுக்கும் சென்று நாங்கள் சேவிக்க காத்திருக்க்கிறோம்.

வெட்டிப்பயல் said...

அருமையான பதிவு குமரன்...

கவிநயா said...

அருமை குமரா. நீங்கள் கற்றவைகளின் நீள அகலங்கள் மட்டுமின்றி ஆழங்களும் அயர வைக்கின்றன! பூவைப்பூ என்றால் என்ன பூ?

//வல்லாராயினும் வல்லுநராயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோ...//

- னுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

ஓகை said...

அருமை!

நா.கண்ணன் said...

ஆயும் மனமுள்ள பிள்ளையிடம் அப்பா ஆராயச் சொல்வது சரியே!

இந்த ஆரியம் எனும் பயன்பாடு மொழியியல் சார்ந்ததா? இல்லை மானுடவியல் சார்ந்ததா? பாரதி தமிழர்களை "ஆரிய புத்திரன்" என்பான். கூடல் புராணத்தில் "ஆரியத் தமிழ்" எனும் பயன்பாடுமுண்டு. இது மொழியியல் ரீதியில் "ஆரியம் என்றால் உயர்வான" என்று பொருள்படும்.

வேதகால மக்களை விந்தியத்திற்குக் தெற்கே போகவேண்டாம், அது மிலேச்ச தேசம் என்று சொல்வதாக வேத மேற்கோளை சிலர் காட்டுவதுண்டு. இந்த வேதகால மக்கள் யார்?

இந்தியா முழுமையும் திராவிட கலாச்சாரமாக இருந்தது என்பதை சிந்துவெளி ஓடுகள் தமிழகத்தில் கிடைப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அப்படியெனில் கண்ணன் வழிபாடு திராவிட வழிபாடாக இருந்து பின்னால் வேதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? பலராமன், கண்ணன் வழிபாடு ஆதித்தமிழ் வழிபாடு என்பதற்கு சங்கச் சான்றுகள் நிரம்ப உண்டு.

ஆரியமும், திராவிடமும் இந்திய குடிகளின் பண்பாடுதானே! ஆரியர்கள் அந்நியர்களா? வேதம் எப்படி நமக்கு அந்நியமாகும்!

ஆராய்ந்து சொல் மகனே!

குமரன் (Kumaran) said...

என்ன இரவிசங்கர்? பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டுச் சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை. இடுகையைப் படித்தீர்களா இல்லையா? :-)

குமரன் (Kumaran) said...

மௌலி.

திகிரின்னா சக்கரம். சூரியனுக்குத் திகிரியோன்னு பெயர் இருக்கிறதா தெரியலை. திருமாலுக்குத் தான் அந்த பெயர் வழங்கி வந்திருக்கு.

உங்களுக்கு 'ஞாயிறு போற்றுதும்'ன்னு தொடங்குற சிலப்பதிகார கடவுள் வணக்கப் பாடலால் இந்த ஐயம் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். அங்கே திகிரிங்கற சொல் இருக்கு. முழுசா பார்த்தா அங்கேயும் கதிரவனை திகிரியோன்னு சொல்லலைன்னு தெரியும்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்.

காவிரி நாடனான சோழனின் ஆணைச்சக்கரத்தைப் போல் பொற்சிகரத்தைக் கொண்ட மேரு மலையை சுற்றி வருவதால் ஞாயிற்றைப் போற்றுவோம் ஞாயிற்றைப் போற்றுவோம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// துவாரகையை ஆண்ட யாதவ குலத்தவர்கள் தமிழர்களாகவே இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தத் தொன்மங்கள் எல்லாம் தமிழர்களுடையதாகவே இருந்து ஆரியத்தில் பின்பு கலந்திருக்கலாம்//

Point Noted!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பதிவில் குமரன் யாரோடு பேசுகிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குங்கள் சேந்தன் தாதையே! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே//

வேத முதல்வனா?
வேதத்தில் மூலமாக, முதல்வனாக யாரேனும் சொல்லப்பட்டு இருக்கிறார்களா குமரன்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அந்தப் பதினெட்டு நூற்களில் ஒன்று திரிகடுகம் என்பது. அதன் கடவுள் வாழ்த்தும் மாயோனைப் போற்றுகிறது.
//

திரிகடுகம் சமண நூல் தானே குமரன்? அது எப்படி மாயோனை வாழ்த்தும்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மயிற்கொடியை உடையவனும் எதிரிகள் இல்லாத வெற்றியை உடையவனும் பிணிமுகத்தை ஊர்தியாகக் கொண்டவனும் ஆன செவ்வேளும்//

சேவல் கொடி அல்லவா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லாராயினும் வல்லுநராயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன்...//

அடியேன் வல்லேன் ஆயினும்

மாயோன் என்னும் என் கருநிறக் கடவுளை,

முனியே நான்முகனே முக்கண்ணப்பா! என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் ***கரு மாணிக்கமே*** என்று வணங்கிக் கொள்கிறேன்!

வடுவூர் குமார் said...

முடிந்தால் இங்கு பாருங்கள் உங்கள் ஊரை.
இந்த பதிவை எழுதும் போது உங்கள் ஞாபகம் வந்தது.

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவ். எல்லா இடங்களிலும் சென்று குழந்தை கண்ணனைப் பார்த்தீர்களா?

குமரன் (Kumaran) said...

நன்றி பாலாஜி.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா. பூவைப்பூ என்றால் காயாம்பூ என்று சொல்லியிருக்கிறார்கள். எந்த பூ என்று எனக்குத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களிலும் திவ்விய பிரபந்தங்களிலும் அதன் வண்ணம் கொண்டவனாக மாயோன் சொல்லப்படுகிறான். திருப்பாவையில் 'பூவைப்பூவண்ணா' என்று ஆண்டாளும் சொல்லுவாள். எல்லா இடங்களிலும் காயாம்பூ என்று தான் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி ஓகை ஐயா.

குமரன் (Kumaran) said...

வாங்க கண்ணன் ஐயா.

நீங்கள் அறிந்தது போல் ஆரியம் என்றால் பல பொருட்கள் இருக்கின்றனவே. சில இடங்களில் அதனை வடமொழியான சங்கதம்/செங்கிருதம் என்ற பொருளில் புழங்குகிறேன். சில இடங்களில் அதனை ஆரிய மொழியைப் பேசிய இனத்தார் என்ற பொருளில் புழங்குகிறேன். நீங்கள் சொன்னது போல் 'ஆரியம் என்றால் உயர்வான' என்ற பொருளையும் அறிவேன். அந்தப் பொருளை இங்கே புழங்கவில்லை.

நீங்கள் சொல்லும் வேத மேற்கோளை நான் படித்ததில்லை ஐயா. அப்படி படிக்கும் போது நேராக மூலத்தில் சென்று படிக்க வேண்டும் என்று ஆவல். பல படிகளில் மொழிபெயர்க்கப்பட்டு படிக்கும் போது சொற்களின் பொருள் மாறிவிடுவதைக் காண்கிறேன். வேதங்களைப் பற்றி நாம் படிப்பவை பெரும்பாலும் வடமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை.

கண்ணன் வழிபாடு மட்டுமின்றி இன்றைக்கு ஆரியக்கலாச்சாரம் என்று ஆரியத்துவேஷிகளால் அடையாளம் காட்டப்படுபவை பலவும் தமிழ்ப்பண்பாட்டிலும் இருந்திருக்கின்றன என்றே தமிழ் இலக்கியங்கள் காட்டுவதாக அடியேனுடைய புரிதல். இன்னும் ஆழ்ந்து படித்து உணரவேண்டும். பலராமன், கண்ணன் வழிபாடுகளைப் பற்றி சங்க இலக்கியங்கள் காட்டுபவற்றை இனி மேல் தொடர்ந்து எழுத எண்ணம் உண்டு.

இந்த இடுகையில் மகன் ஆரியர்களை அந்நியர்கள் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்பவர்களின் கருத்தினை தந்தையார் கண்டிக்கிறார். அவ்வளவு தான். :-)

நன்றி கண்ணன் ஐயா.

குமரன் (Kumaran) said...

அந்தப் பாயிண்ட் மட்டும் தான் நோட்டடா இரவிசங்கர்? இன்னும் நிறைய சொல்லியிருக்கிறேனே. :-)

சேந்தன் தாதையான குமரன் அவன் அப்பனுடன் பேசுகிறான் இரவிசங்கர். அது தான் தெளிவாகத் தெரிகிறதே. இன்னும் என்ன வெளிச்சம் தேவைப்படுகிறது? :-)

வேதத்தில் மூலமாக முதல்வனாக யாரைச் சொல்லியிருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் தான் நன்றாக இருக்கும் இரவி. :-)

குமரன் (Kumaran) said...

திரிகடுகம் சமண நூலா? எனக்குத் தெரியாது இரவிசங்கர். திரிகடுகத்தைப் பற்றி மேலும் படித்துப் பார்க்கிறேன்.

சூரனைக் கொல்வதற்கு முன்னர் பிணிமுகத்தை (யானையை) ஊர்தியாகவும் மயிலைக் கொடியாகவும் கொண்டிருந்தான் போலும் செவ்வேள். மணி மயிலைக் கொடியாகவும் பிணிமுகத்தை ஊர்தியாகவும் கொண்டவன் செய்யோன் என்று தான் இந்தப் புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.

குமரன் (Kumaran) said...

உங்கள் இடுகையைப் படித்தேன் வடுவூர் குமார். நன்றி.