Friday, August 29, 2008

மதுரையம்பதிக்கு வணக்கம் (கேள்வி பதில் 6)

ஆன்மிகத்தில் எல்லையில்லா ஆர்வம் கொண்டவர், ஆசார்ய ஹ்ருதயத்தை அறிந்தவர், அன்னையின் அருட்பாலகர் மதுரையம்பதி வளர் சந்திரமௌலி அண்ணன் ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

அத்வைதம் / விசிஷ்டாத்வைதம் / துவைதம் ஆகிய மூன்றில் எதை நீங்க உங்களுக்கு ஏற்றதாக நினைக்கிறீங்க? [ஏதேனும் ஒன்றை மட்டும் சொல்லவும்]. ஏன் அது உங்களுக்கு ஏற்றதுன்னு நினைக்கிறீங்க?

இது தான் அவருடைய கேள்வி.

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே


என்று நம்மாழ்வார் அருளிய பாசுர வரிகள் தான் என் எண்ணமும். ஆனால் குறிப்பிட்டு ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் என்று பணித்திருப்பதால் சொல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டுகிறேன். :-)

இப்போது சுருக்கமாக மூன்று தத்துவங்களைப் பற்றியும் சொல்லுகிறேன் - மௌலிக்காக இல்லை. மற்றவருக்காக. :-)

அத்வைதம் சொல்வது - இறை (ப்ரம்மம்), உயிர் (ஜீவன்) இரண்டும் ஒன்றே. இறையொன்றே இருக்கிறது. உலகம் பொய்த்தோற்றம். உயிர் தானே இறையாக இருப்பதை உணர்வதே விடுதலை (முக்தி/மோக்ஷம்).

ஒன்றே உண்டு; வேறொன்று இல்லை என்று சொல்வதால் இந்தத் தத்துவத்திற்கு அத்வைதம் (அல்லிருமை) என்று பெயர்.

விசிஷ்டாத்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். உயிர்களும் உலகங்களும் இறையின் அங்கங்களாக இருக்கின்றன. அவ்வகையில் இறை ஒன்றே உண்டு. அங்கங்கள் முழுமைக்கு என்றும் அடங்கியவை என்று உயிர் உணர்ந்து தன் உண்மை உருவை அடையும் போது விடுதலை.

மூன்று பொருட்கள் உண்டு; ஆனால் அவற்றில் கடைசி இரண்டு முதலாவதான இறையின் அங்கங்கள் என்பதால் இறையொன்றே அங்கங்களுடன் உண்டு என்று சொல்வதால் இந்தத் தத்துவத்திற்கு விசிஷ்டாத்வைதம் (விதப்பொருமை) என்று பெயர்.

த்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். மூன்றும் வெவ்வேறானவை. உயிர்களும் உலகங்களும் இறைக்கு அடங்கியவை.

இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் (இருமை) என்று பெயர்.

மூன்று தத்துவங்களும் தென்னாட்டில் தோன்றியவை. அந்தத் தத்துவங்கள் தென்னாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தவை. அவற்றை வெளிக்கொணர்ந்து வேத நெறியும் அத்தத்துவங்களையே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்களையே இன்று நாம் அந்தத் தத்துவங்களைத் தோற்றுவித்தவர்களாக எண்ணிக் கொள்கிறொம்; ஆனால் அவை ஆதிசங்கரருக்கு முன்னரே, இராமானுஜருக்கு முன்னரே, மத்வருக்கு முன்னரே இருந்தவையே. இவர்கள் அந்த அந்த தத்துவங்களை தான் வேத நெறியின் முதன்மை நூற்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை மூன்றுமே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்கள். அவர்கள் அவற்றைத் தோற்றுவித்தவர்கள் இல்லை.

இந்த மூன்று நூற்களிலும் இம்மூன்று தத்துவங்களையும் கூறும் கருத்துகள் இருக்கின்றன. அபேத ஸ்ருதிகள் என்னும் 'உயிர், உலகம், இறை இவற்றிற்கிடையே வேறுபாடின்மையைக் கூறும் வாக்கியங்கள்' இருக்கின்றன. பேத ஸ்ருதிகள் என்னும் 'உயிர், உலகம், இறை இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறும் வாக்கியங்கள்' இருக்கின்றன. கடக ஸ்ருதிகள் என்னும் 'வேறுபாடின்மையையும் வேறுபாடுகளையும் கூறும் வாக்கியங்களை இணைக்கும் வாக்கியங்கள்' இருக்கின்றன.

அத்வைதிகள் அபேத ஸ்ருதிகளையும் அவற்றின் நான்கு மஹாவாக்கியங்களையும் முதன்மையாகக் கொண்டு அத்வைதத்தை நிலை நாட்டுகிறார்கள். அவர்கள் பேத ஸ்ருதிகளுக்குப் பொருள் சொல்வதில்லை.

த்வைதிகள் பேத ஸ்ருதிகளை முதன்மையாகக் கொண்டு த்வைதத்தை நிலை நாட்டுகிறார்கள். அவர்கள் அபேத ஸ்ருதிகளுக்குப் பொருள் சொல்வதில்லை.

விசிஷ்டாத்வைதிகள் கடக ஸ்ருதிகளை முதன்மையாகக் கொள்வதால் அதற்கேற்ப பேத ஸ்ருதிகளுக்கும், அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் கூறுகிறார்கள்.

இதுவரை இந்த மூன்று தத்துவங்களைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். அப்படிச் சொன்னதிலேயே என் மனத்திற்குகந்த தத்துவம் எது என்றும் அது ஏன் என்றும் குறிப்பாகச் சொல்லியிருக்கிறேன். இனி மேல் வெளிப்படையாகச் சொல்கிறேன்.

எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தத்துவங்களில் ஈடுபாடு இல்லை. எங்கள் குடும்பம் சிருங்கேரி மடத்தின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் நேரடித் தொடர்பு பல காலமாக இல்லை. அதனால் பிறப்பால் நான் அத்வைதி என்று தொடக்கத்தில் நினைத்துக் கொண்டேன். குலக்கடவுள் முருகப்பெருமான். பள்ளிக்காலம் முடியும் வரை அன்னையின் முருக பக்தி ஆட்கொண்டிருந்தது. தத்துவங்களில் அந்த வயதில் இறங்கவில்லை.

அன்னையின் மறைவிற்குப் பிறகு கல்லூரிக்காலத்தில் கண்ணனின் அறிமுகம் கிட்டியது. கீதையின் அறிமுகம் கிட்டியது; நாலாயிரத்தின் அறிமுகம் கிட்டியது; கண்ணனிடம் நெருக்கம் ஏற்பட்டது. குலக்கடவுளின் ஈர்ப்பினை ஒத்த ஈர்ப்பாக கண்ணனின் ஈர்ப்பும் இருந்தது. அதனால் அவன் என் காமக்கடவுள் (இஷ்டதெய்வம்) என்றும் சொல்லத் தொடங்கினேன்.

கீதையைப் படிக்கத் தொடங்கியவுடன் தத்துவ ஆராய்ச்சி தொடங்கியது. அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதங்களைப் படிக்கத் தொடங்கினேன். நாலாயிரத்தின் துணையுடன் அவற்றைப் படிக்கத் தொடங்கியதால் விசிஷ்டாத்வைதத்திலேயே மனம் பற்றுதல் கொண்டது. அத்வைதமும் த்வைதமும் மனத்திற்கு ஏற்புடையதாக இல்லை. அதற்குத் தமிழின் பால் கொண்ட பற்றுதலும் காரணமாக இருக்கலாம். அத்வைத த்வைத தத்துவங்களைப் படிக்க வடமொழி நூற்களே இருந்தன. நாலாயிரத்தைப் போல் தமிழ் கூறும் தத்துவம் இது என்று கூறும் வகையில் அவ்விரண்டும் இல்லை.

விசிஷ்டாத்வைதம் கடக ஸ்ருதிகளை எடுத்துக் கொள்வதால் முழுமையாக பேத அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் சொல்கிறது. அதனால் இதுவே முழுமையான தத்துவம் என்ற எண்ணமும் உண்டு.

சைவ சித்தாந்தத்தையும் அந்தத் தமிழார்வம் என்ற வகையிலேயே படிக்கத் தொடங்கினேன். விசிஷ்டாத்வைதமும் சைவ சித்தாந்தமும் ஏறக்குறைய ஒரே தத்துவம் தான் என்று படிக்கப் படிக்கத் தோன்றியது. விசிஷ்டாத்வைதம் பக்திக்கு முதன்மை இடம் கொடுக்க சைவ சித்தாந்தம் யோகத்திற்கு முதன்மை இடம் கொடுத்தது. அது ஒன்று மட்டுமே வேறுபாடு. மற்ற படி தத்துவம் என்று பார்த்தால் இரண்டும் ஒன்றே. இன்னொரு வேறுபாடும் உண்டு. விசிஷ்டாத்வைதம் விஷ்ணு பரம் சொல்லும்; சைவசித்தாந்தம் சிவபரம் சொல்லும்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் மௌலி கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொன்னால் அந்த பதில்: விசிஷ்டாத்வைதம் தான் என் மனத்திற்கு உகந்ததாக தற்போது இருக்கிறது. :-)

58 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

பதிலுக்கு நன்றி குமரன்...

//ஆன்மிகத்தில் எல்லையில்லா ஆர்வம் கொண்டவர், ஆசார்ய ஹ்ருதயத்தை அறிந்தவர், அன்னையின் அருட்பாலகர் //

இதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவர்...என்னை வச்சு சீரியஸ் பதிவுல காமெடி டிராக் கொண்டுவந்துட்டீங்க :)


நீங்க ஞானத்தன் அப்படின்னோ, அடியேன்னோ ஆங்காகே சொல்லிக்கற மாதிரி எனக்கு சொல்லிக்க தெரியல்ல...அதுக்கும் மேல அது ஏதோ ஈ-அடிச்சாங்காப்பி மாதிரியோ, இல்லை உங்க யாரையாவது இமிடேட் பண்றமாதிரியோ இருக்க கூடாதேன்னும் சொல்றதில்லை..ஆனா உண்மையில் இணையத்தில் ஆன்மிகம் எழுதும் பலருக்கு (நீங்களும் சேர்த்து) தெரிந்த அளவு எனக்கு ஆன்மிகம் தெரியாது அப்படிங்கறது தான் உண்மை.

ஆச்சார்ய ஹ்ருதயம் அறிந்தவர் - யார் ஆச்சார்யார்ன்னே தேடற லெவல்ல இல்லை இருக்கேன் நானு?.

அன்னையின் அருட்பாலகர் - ஆமாங்க எங்கம்மாவுக்கு நான் கடைசி பிள்ளை, அதனால சின்ன வயசிலிருந்தே கொஞ்சம் சலுகை/பிரியம் அதிகம் தான், ஆனால் அருட்பாலகனா?...அப்படி தெரியல்லை...பீடா-பாலகன் அப்படின்னு சொன்னா சரியா இருக்கும்:))

மெளலி (மதுரையம்பதி) said...

//சுருக்கமாக மூன்று தத்துவங்களைப் பற்றியும் சொல்லுகிறேன் - மௌலிக்காக இல்லை. மற்றவருக்காக.//

ஏன் எனக்காக சொல்ல மாட்டீரோ?.. :)

சுருக்கிச் சொல்லி விளங்க வைத்த ஸ்வாமிகள் அப்படின்னு உமக்கு இன்று பட்டம் கொடுக்கிறோம் :)

மெளலி (மதுரையம்பதி) said...

"அல்லிருமை -விதப்பொருமை -இருமை"

இது அருமை!!!.. நான் இப்படி வார்த்தைகளை அறிந்ததே இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்லி...தெரியவைத்தமைக்கு நன்றியும் சொல்லிக்கறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//அவற்றை வெளிக்கொணர்ந்து வேத நெறியும் அத்தத்துவங்களையே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்களையே இன்று நாம் அந்தத் தத்துவங்களைத் தோற்றுவித்தவர்களாக எண்ணிக் கொள்கிறொம்; ஆனால் அவை ஆதிசங்கரருக்கு முன்னரே, இராமானுஜருக்கு முன்னரே, மத்வருக்கு முன்னரே இருந்தவையே. இவர்கள் அந்த அந்த தத்துவங்களை தான் வேத நெறியின் முதன்மை நூற்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை மூன்றுமே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்கள். //

இது உண்மை !!!

மெளலி (மதுரையம்பதி) said...

பேத-அபேத-கடக ஸ்ருதிகள் பற்றி சொல்லி உமது நாலெட்ஜ்-லெவலையும் சொல்லிவிட்டீர் :))

உமது நாலெட்ஜ்க்குத் தலை-வணங்குகிறேன். :))

மெளலி (மதுரையம்பதி) said...

//பிறப்பால் நான் அத்வைதி என்று தொடக்கத்தில் நினைத்துக் கொண்டேன்////


//காமக்கடவுள் = இஷ்டதெய்வம் //

சூப்பர் :))

//நாலாயிரத்தின் துணையுடன் அவற்றைப் படிக்கத் தொடங்கியதால் விசிஷ்டாத்வைதத்திலேயே மனம் பற்றுதல் கொண்டது....அத்வைத த்வைத தத்துவங்களைப் படிக்க வடமொழி நூற்களே இருந்தன. நாலாயிரத்தைப் போல் தமிழ் கூறும் தத்துவம் இது என்று கூறும் வகையில் அவ்விரண்டும் இல்லை. //

எனக்கு தெரிந்தவரையிலும் இதுவும் சரியே!!!

மெளலி (மதுரையம்பதி) said...

//விசிஷ்டாத்வைதம் கடக ஸ்ருதிகளை எடுத்துக் கொள்வதால் முழுமையாக பேத அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் சொல்கிறது.//

இதைப் பற்றி நாம தனியா ஒரு கச்சேரி வச்சுக்குவோம் சரியா? :)

மெளலி (மதுரையம்பதி) said...

//மௌலி கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொன்னால் அந்த பதில்: விசிஷ்டாத்வைதம் தான் என் மனத்திற்கு உகந்ததாக தற்போது இருக்கிறது. //

மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கிறேன் :)

குமரன் (Kumaran) said...

இதென்ன இரவிசங்கரின் வியாதி உங்களுக்கும் வந்துவிட்டதா மௌலி? அடுத்தடுத்து இவ்வளவு பின்னூட்டங்கள். :-) விட்டால் ஒரு தனி இடுகையே இட்டுவிடலாம். :-)

கோவி.கண்ணன் said...

குமரன்,

இறை நம்பிக்கை என்பது 'நம்பிக்கை' என்பது போல் இறைத் தத்துவங்கள் என்பது கொள்கைதானே ?

தத்துவங்கள் என்றால் உண்மை மற்றும் இயற்பியல் தொடர்புடையவை என்றே நினைக்கிறேன்

'தத்துவங்கள்' என்றால் மாறாத என்ற பொருள் பொருந்தும் என நினைக்கிறேன். இங்கே தந்துவங்கள் என்ற பெயரில் சொல்லப்படுபவை கொள்கைகள் தானே ?

இங்கே தத்துவங்களின் வழி சொல்லப்படுபவைகளில் கோட்பாடு அல்லது காட்டப்படும் வழி என்பதைத் தவிர்த்து, அது உண்மையா ? பொய்யா ? என்று அறிந்தவர் எவரும் இல்லை. அவற்றை தத்துவம் என்று சொல்லிற்குள் அடக்குவது சரியா ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா
இது உங்கள் பதிவு!
அடியேன் உள்ளே வரலாமா? :)

//மதுரையம்பதி said...
//விசிஷ்டாத்வைதம் கடக ஸ்ருதிகளை எடுத்துக் கொள்வதால் முழுமையாக பேத அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் சொல்கிறது.//

இதைப் பற்றி நாம தனியா ஒரு கச்சேரி வச்சுக்குவோம் சரியா? :)//

அந்தக் கச்சேரியில் அடியேன் அத்வைதத்தின் பக்கம் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மௌலி கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொன்னால் அந்த பதில்: விசிஷ்டாத்வைதம் தான் என் மனத்திற்கு உகந்ததாக தற்போது இருக்கிறது. //

உய் உய் உய் ! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//...பீடா-பாலகன் அப்படின்னு சொன்னா சரியா இருக்கும்:))
//

கண்கண்ட சாட்சி நான்!
இதைக் கன்னா பின்னா வென்று வழி மொழிகிறேன்!

Kavinaya said...

//ஆன்மிகத்தில் எல்லையில்லா ஆர்வம் கொண்டவர், ஆசார்ய ஹ்ருதயத்தை அறிந்தவர், அன்னையின் அருட்பாலகர் //

நன்று, நன்று.

மற்றபடி நீங்க இவ்வளவு விளக்கமா சொல்லியும் என் மரமண்டையில ஒண்ணும் ஏறலைன்னு சொல்லிட்டு வருத்தத்தோட விலகிக்கிறேன் :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அல்லிருமை -விதப்பொருமை -இருமை//

குமரன்
விதப்பொருமை என்பதா?
விதப்பு அல்லிருமை என்பதா?

விதப்பு அல்லிருமை என்று இராம.கி ஐயா புழங்கியதாகவும் நினைவு!

குமரன் (Kumaran) said...

விளக்கமா எல்லாம் சொல்லலை கவிநயா அக்கா. ஏற்கனவே இவற்றை எல்லாம் நிறைய படித்திருந்தால் தான் இங்கே சுருக்கமாக நீட்டி முழக்கியிருப்பது புரியும். அதனால் வருத்தமும் வேண்டாம். விலகுதலும் வேண்டாம். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்கண்ட சாட்சி நான்!
இதைக் கன்னா பின்னா வென்று வழி மொழிகிறேன்!//

அச்சோ!
இதுக்குச் சிரிப்பான் போட மறந்துட்டேன்! :)

குமரன் (Kumaran) said...

//விதப்பொருமை என்பதா?
விதப்பு அல்லிருமை என்பதா?
//

பூவை மலரென்றும் சொல்லலாம் அலரென்றும் சொல்லலாம். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//இதென்ன இரவிசங்கரின் வியாதி உங்களுக்கும் வந்துவிட்டதா மௌலி? அடுத்தடுத்து இவ்வளவு பின்னூட்டங்கள். :-) விட்டால் ஒரு தனி இடுகையே இட்டுவிடலாம். :-)//

அச்சோ குமரன், என்ன இது, கே.ஆர்.எஸுக்கு நான் சொன்ன காமாலைக்கண் எனக்கும் வந்துடுச்சுங்கறீங்களா?, சேச்சே...அப்ப கூட அவரை என்னுடன் கம்பேர் பண்ணலாமா?...

அவர் மஹா வித்துவான்...அடியேன், அவரது தொண்டரடிப் பொடியேன், பான் - பீடா பாலகன்...:))

மெளலி (மதுரையம்பதி) said...

//விட்டால் ஒரு தனி இடுகையே இட்டுவிடலாம். :-)//


நான் கேட்ட ஒரு கேள்விக்கு நீங்க தனிப்பதிவு போட்டுட்டீங்க...நான் அதுக்கு மரியாதை பண்ண வேண்டாமா?...அதிலும் ஸ்டார் பதிவின் முடிவுல ஏதோ பின்னூட்டம் பத்தியெல்லாம் வேற சொல்லியிருந்தீங்க...ஏதோ என்னாலானது :))

மெளலி (மதுரையம்பதி) said...

//விதப்பொருமை என்பதா?
விதப்பு அல்லிருமை என்பதா?

விதப்பு அல்லிருமை என்று இராம.கி ஐயா புழங்கியதாகவும் நினைவு//

வந்துட்டாருய்யா குழப்ப...ஏதோ அவர் சொன்னதே ஈசியா, ரிதமிக்கா இருந்துச்சு...:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பூவை மலரென்றும் சொல்லலாம் அலரென்றும் சொல்லலாம். :-)//

அலர் மலர், மலர் அலர்-ன்னு வினைத்தொகையாகவும், ஒரு பொருட் பன்மொழியாகவும் சொல்லலாம்! :))

மெளலி (மதுரையம்பதி) said...

//அச்சோ!
இதுக்குச் சிரிப்பான் போட மறந்துட்டேன்! :)//

யோவ் கே.ஆரெஸ், தனியா சிரிப்பான் போட்டு ஏதோ சொல்லவரீங்க, சரி, அதுக்கு எங்கே சிரிப்பான்...? :)) (அப்பாடி, நான் மறக்காம இங்கேயே சிரிப்பானை போட்டுட்டேன்)

மெளலி (மதுரையம்பதி) said...

//அந்தக் கச்சேரியில் அடியேன் அத்வைதத்தின் பக்கம் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)//

அப்பறமென்ன, ஆரம்பிச்சு வைங்க கே.ஆர்.எஸ்.நீங்க, குமரன்...கட்சிக்கு ஒருத்தர் ஆச்சு...பார்வையாளன்....நானிருக்கேன்... :))

மெளலி (மதுரையம்பதி) said...

////விதப்பொருமை என்பதா?
விதப்பு அல்லிருமை என்பதா?
//

பூவை மலரென்றும் சொல்லலாம் அலரென்றும் சொல்லலாம்.//

தெரியாமத்தான் கேட்கறேன், அப்ப இதெல்லாம் நீங்களா கண்டுபிடிக்கற வார்த்தைகளா?....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வந்துட்டாருய்யா குழப்ப...ஏதோ அவர் சொன்னதே ஈசியா, ரிதமிக்கா இருந்துச்சு...:))//

அப்பாடா...
மெளலி அண்ணனைத் தூய தமிழ்ப் பெயர்களை ஒத்துக்க வைக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு! :)

அண்ணே, இனி அல்லிருமை என்றே பலுக்கவும், புழங்கவும்! :)))

மெளலி (மதுரையம்பதி) said...

//மெளலி அண்ணனைத் தூய தமிழ்ப் பெயர்களை ஒத்துக்க வைக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு! :)//

ஆமாம், நான் எங்கயோ தூய தமிழ்ப் பெயர்களை ஒத்துக்கமாட்டேன்னு இவர் கிட்ட வந்துசொன்ன மாதிரியும், இப்போதான் ஒத்துக்கற மாதிரியும்...என்னய்யா பேச்சு இது..? :)) (அப்பாடி இதுக்கும் சிரிப்பான் போட்டுட்டேன்)


ஏதாச்சும் கொஞ்ச-நஞ்சம் தெரிஞ்சாத்தானே எதிர்க்கவோ-ஏற்கவோ?...அடியேன் தான் பான் -பீடா பாலகனாச்சே :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்னொரு வேறுபாடும் உண்டு. விசிஷ்டாத்வைதம் விஷ்ணு பரம் சொல்லும்; சைவசித்தாந்தம் சிவபரம் சொல்லும்.//

விஷ்ணு பரமா?
நாராயண பரம் அல்லவா சொல்லும்?

கேள்விகள்:
1. அத்வைதம் சொல்லும் பரம் எது?

2. த்வைதம் சொல்லும் பரம் எது?

குமரன் (Kumaran) said...

//ஏன் எனக்காக சொல்ல மாட்டீரோ?.. :)//

நினைத்தேன். இப்படி கொக்கி போடப்போகிறீர்கள் என்று. :-) உங்களுக்கு இதெல்லாம் ஏற்கனவே தெரியும் என்று தான் அதற்குப் பொருள். இரவிசங்கருக்காகவும் இல்லை என்று போட்டிருக்க வேண்டும். :-)

//"அல்லிருமை -விதப்பொருமை -இருமை"

இது அருமை!!!.. நான் இப்படி வார்த்தைகளை அறிந்ததே இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்லி...தெரியவைத்தமைக்கு நன்றியும் சொல்லிக்கறேன்.

//

இதெல்லாம் இராம.கி. ஐயா பரிந்துரைத்த சொற்கள். புழங்கத் தொடங்கியிருக்கிறேன். அவ்வளவு தான். நன்றிகள் போகட்டும் இராமகிருஷ்ணருக்கு. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

3. //த்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். மூன்றும் வெவ்வேறானவை.//

இப்படி மூன்றாய்ச் சொல்லும் போது த்வைதம் என்ற பெயர் ஏன் வந்தது என்று பல முறை யோசித்துள்ளேன்!
இறை, இறையல்லாத இரண்டு என்பதாலா?

அத்வைதம்=பரமாத்மா, மாயை, ஜீவாத்மா
விசிஷ்டாத்வைதம்=ஈஸ்வரன், சேதன, அசேதனம் (இறை, உயிர், உலகம்)
துவைதம்=ஈஸ்வரன், சேதன, அசேதனம் (இறை, உயிர், உலகம்)
சைவ சித்தாந்தம் = பசு, பதி, பாசம்

இப்படி எல்லாமே மூன்று தான்!

குமரன் (Kumaran) said...

// காமக்கடவுள் //

இஷ்டதெய்வத்திற்கு இந்தச் சொல்லைத் தந்தது சங்க காலம். பரிபாடலிலும் சிலம்பிலும் வருகிறது இந்தத் தொடர். :-)

//இதைப் பற்றி நாம தனியா ஒரு கச்சேரி வச்சுக்குவோம் சரியா? :)//

வாய்ப்பே இல்லை. :-) நான் வரலை அந்த விளையாட்டுக்கு. :-)

பழத்தைப் பறிச்சு தின்னாம இலையையும் பூவையும் கிளையையும் கொம்பையும் எண்ணிக்கிட்டு இருக்கவா? :-)

Kavinaya said...

//பழத்தைப் பறிச்சு தின்னாம இலையையும் பூவையும் கிளையையும் கொம்பையும் எண்ணிக்கிட்டு இருக்கவா? :-) //

ஹைய்யா! எனக்கே புரியற மாதிரி ஒண்ணு சொல்லீட்டிங்களே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அச்சோ குமரன், என்ன இது, கே.ஆர்.எஸுக்கு நான் சொன்ன காமாலைக்கண் எனக்கும் வந்துடுச்சுங்கறீங்களா?,//

பாரதியாருக்கு வராத காமாலைக் கண்ணா மெளலி அண்ணா?
பார்க்கும் மரங்களில் எல்லாம் பச்சை நிறம் தோனுறா மாதிரி தான்! :)

ஒரு வேளை காசுமாலை-யின் கண் என்பதில் சுகரம் விட்டுப் போய் காமாலை என்று சொன்னீரோ? :))

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்,

நம்பிக்கை என்றால் பொய் என்றா பொருள்? நீங்கள் அந்தச் சொல்லைப் புழங்கியிருப்பதைப் பார்த்தால் என்னவோ நம்பிக்கை என்றால் உண்மையில்லை என்று பொருள் என்று சொல்வது போல் இருக்கிறது. ;-)

இயற்பியல் தொடர்புடையவை எல்லாமும் முடிந்த முடிவான உண்மைகளா? அவையும் மாறிக் கொண்டே தானே இருக்கின்றன? நியூட்டன் ஒன்று சொன்னார், அவர் சொன்னதை மாற்றி ஐன்ஸ்டீன் ஒன்று சொன்னார், அவர் சொன்னதை மாற்றி ஹாக்கின்ஸ் ஒன்று சொல்கிறார், இப்படியே மாறிக் கொண்டே தானே இருக்கின்றன. அவையும் தத்துவங்களே. இவையும் தத்துவங்களே. அவை இயற்பியல் தத்துவங்கள். இவை மறையியல் தத்துவங்கள். எது அடிப்படை பொருளோ அதனைத் தத்துவம் என்று சொல்வது மரபு. அடிப்படைப் பொருட்களைப் பற்றி பேசும் எல்லாமும் தத்துவங்களே.

அப்படி சொல்வதில் உங்களுக்கு ஏற்பில்லை என்றால் நீங்கள் தத்துவம் என்று நினைக்கும் எல்லாமும் கூட (நியூட்டன் கொள்கை, ஐன்ஸ்டீன் கொள்கை, ...) என்று அவையும் கொள்கைகள் தான். :-)

//அது உண்மையா ? பொய்யா ? என்று அறிந்தவர் எவரும் இல்லை//

இது உங்கள் நம்பிக்கை. உறுதியான உண்மை இல்லை. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//பழத்தைப் பறிச்சு தின்னாம இலையையும் பூவையும் கிளையையும் கொம்பையும் எண்ணிக்கிட்டு இருக்கவா? :-)//

என்ன சொல்றீங்க குமரன்?, அது நானு....நீங்களும் கே.ஆர்.எஸும் தான் வாதாடப்போறீங்க...ஹஹஹஹா

தம்பியுடையோன் படைக்கஞ்சான்...தம்பி கே.ஆர்.எஸ் வந்து அவர் அத்வைதம் பக்கம் இருப்பதாக சொன்னதை கவனிக்கல்லையா...சோ அவர் அத்வதத்துக்க்காக வாதாடுவார் உங்களிடம் :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆமாம், நான் எங்கயோ தூய தமிழ்ப் பெயர்களை ஒத்துக்கமாட்டேன்னு இவர் கிட்ட வந்துசொன்ன மாதிரியும்,
இப்போதான் ஒத்துக்கற மாதிரியும்...என்னய்யா பேச்சு இது..? :))//

சிவக்கொழுந்து அம்மையே போற்றி போற்றி! :)))

மெளலி அண்ணா
அப்போ, சிவன் பாட்டு பதிவில், மாணிக்கவாசகர்-தமிழ் அர்ச்சனை பின்னூட்டம் போடும் அனானி ஐயா நீங்க இல்லையா? :)))

மெளலி (மதுரையம்பதி) said...

//ஒரு வேளை காசுமாலை-யின் கண் என்பதில் சுகரம் விட்டுப் போய் காமாலை என்று சொன்னீரோ? :))//

நானெங்கும் சுகரம் விட்டுப்போனதாச் சொல்லவில்லை...தம்பியின் கண் காசுமாலையிலிருப்பின் தவரொன்றும் இல்லை...:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பழத்தைப் பறிச்சு தின்னாம இலையையும் பூவையும் கிளையையும் கொம்பையும் எண்ணிக்கிட்டு இருக்கவா? :-)//

அப்போ
பழத்தைப் பறிச்சி தின்ன பிறகு, அடுத்த பழம் சாப்பிடும் வரை, இலையையும் பூவையும் கிளையையும் கொம்பையும் எண்ணிக்கிட்டு இருக்கலாம் தானே? அடுத்த பழம் எங்க இருக்குன்னு கண்டு புடிக்க:))

அதைத் தான் மெளலி அண்ணாவும் குமரனும் செய்யப் போறாங்க!

அடியேன் அத்வைதத்தின் பக்கம், அப்படி என்றால், மெளலி அண்ணா பக்கம் நின்னுக்கிட்டு பழம் சாப்பிட்டுக்கிட்டே இதை வேடிக்கை பார்ப்பேன்! :)

குமரன் (Kumaran) said...

//அந்தக் கச்சேரியில் அடியேன் அத்வைதத்தின் பக்கம் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)//

கச்சேரி நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் இரவி. :-)

//குமரன்
விதப்பொருமை என்பதா?
விதப்பு அல்லிருமை என்பதா?
//

நேரடியாக சொல்லை மொழி பெயர்த்தால் விசிஷ்ட + அத்வைதம் என்று பிரித்து விதப்பல்லிருமை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் பொருள் அளவில் ஒருமையும் அல்லிருமையும் ஒரே பொருள் தானே தருகிறது. இராம.கி. ஐயாவின் பதிவில் பார்த்து தான் விதப்பொருமை என்று சொன்னேன். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//சிவக்கொழுந்து அம்மையே போற்றி போற்றி! :)))//

நல்ல புரிதல்...அவர் வைத்த பெயருக்கும் நீங்க அதை தமிழாக்கம் செய்த விதத்துக்கும் எந்த தொடர்புன்னு சொன்னா அதை நான் ஏற்க முடியும்....எனக்கு தெரிந்து சிவக்கொழுந்துன்னு மதுரையில் ஒரு ஆண் டாக்டர் இருக்கறது தெரியும்...அதை நினைவு படுத்திய பெயர் அதனால் அதை விமர்சிச்சேன்.

//மெளலி அண்ணா
அப்போ, சிவன் பாட்டு பதிவில், மாணிக்கவாசகர்-தமிழ் அர்ச்சனை பின்னூட்டம் போடும் அனானி ஐயா நீங்க இல்லையா? :)))//

எனக்கு எங்கும் அனானியாக போட வேண்டிய அவசியம் இல்லை கே.ஆர்.எஸ்...வாழ்க உமது நினைப்புக்களும், எதிர்பார்ப்புக்களும் :))

குமரன் (Kumaran) said...

இரவி,

அத்வைதம் நிர்குண பிரம்மத்தைப் பற்றியே பேசுகிறது. சகுணமாக (பெயர், குணம், உருவம் கொண்டு இருத்தல்) ஈசுவரனாக இருக்கும் பிரம்மம் பல உருவங்கள் கொள்கின்றது. வேதத்தின் படி நாராயணனே சகுண பிரம்ம பரம் என்பது அத்வைதத்தின் கருத்து.

த்வைதம் 'ஹரி சர்வோத்தமன்; வாயு ஜீவோத்தமன்' என்று சொல்கிறது. அங்கு வேறு கேள்விகளே இல்லாமல் நாராயண பரம் தான்.

சைவ வைணவ என்று தானே சொல்கிறோம். அதனால் விசிஷ்டாத்வைதத்தில் விஷ்ணு பரம் என்று சொன்னேன். ஆனால் விஷ்ணு என்ற சொல் 'எங்கும் நிறைந்தவர்' என்ற பொருள் தந்து பெருமாளைப் போல் எல்லோரையும் குறிக்கலாம். அதனால் விதப்பாக நாராயண பரம் என்று சொல்லியிருக்க வேண்டும். :-)

Raghav said...

குமரன், மெளலி அண்ணா, ரொம்ப நன்றி.. நான் இரண்டு முறை பொறுமையாக படித்தேன்.. கொஞ்சம் புரிகிற மாதிரி தெரிகிறது.. ஆனாலூம் படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்க கொஞ்சம் அவல் மாதிரி இருக்கு..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோவி அண்ணா
//'தத்துவங்கள்' என்றால் மாறாத என்ற பொருள் பொருந்தும் என நினைக்கிறேன். இங்கே தந்துவங்கள் என்ற பெயரில் சொல்லப்படுபவை கொள்கைகள் தானே ?//

கொள்+கை=அடிப்படையில் இருந்து நிறுவிக் "கொள்" வது கொள்கை!

தத்+துவம்; தத்=அது, 'அதில்' இருந்து கொள்வது=அதுவும் கொள்கை தான்!

தத்து கொடுத்தல் என்று சொல்கிறோமே! அடிப்படையான ஒன்றை நாம் நமக்கென்று நிறுவிக் கொள்ளுதல் தத்துவம்!

தத்துவம் அன்று தகவேல் ஓர் எம் பாவாய் என்பதையும் ஒப்பு நோக்கவும்!

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆவலை உண்டாக்க கொஞ்சம் அவல் மாதிரி இருக்கு...//

ஆஹா, வாங்கய்யா...ராகவய்யா...:))
நீர் என்ன சொல்லப்போகிறீர் கண்ணன்பாட்டுல தெலுங்கு பாடல் பற்றி நான்அனானியா ஏதாச்சும் சொல்லியிருப்பேனே?....பார்த்துச் சொல்லுமைய்யா... :))))

யக்கா, கவிக்கா, நீங்க ஏதாச்சும் அம்மன் பாட்டுல அனானியா சொன்னதை எடுத்து விடுங்க... :))

ஹாஹாஹா...

குமரன் (Kumaran) said...

//இப்படி மூன்றாய்ச் சொல்லும் போது த்வைதம் என்ற பெயர் ஏன் வந்தது என்று பல முறை யோசித்துள்ளேன்!//

எல்லா தத்துவங்களையும் (அடிப்படைப் பொருட்களையும்) இரண்டிரண்டாக எதிரெதிரில் வைத்து விளக்குவதால் இதற்கு த்வைதம் என்று பெயர் வந்தது இரவி. இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள வேறுபாடுகள், இறைவனுக்கும் உலகத்திற்கும் உள்ள வேறுபாடுகள், உயிருக்கும் உலகத்திற்கும் உள்ள வேறுபாடுகள், உயிர்களுக்குள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு இருக்கும் வேறுபாடுகள், உலகப் பொருட்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு இருக்கும் வேறுபாடுகள் என்று பேதத்தை முதன்மையாக வைத்து இரண்டிரண்டாக இந்தத் தத்துவம் பேசும்.

மற்ற படி அடிப்படைத் தத்துவங்கள் என்று மூவகைகளைத் தான் அல்லிருமை, விதப்பொருமை, இருமை, சிவச்சிந்தனை முடிபுகள் (சைவ சித்தாந்தம்) எல்லாமும் சொல்கின்றன.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கே.ஆர்.எஸ்...வாழ்க உமது நினைப்புக்களும், எதிர்பார்ப்புக்களும் :))//

ஹா ஹா ஹா
நன்றிங்கண்ணோவ் நன்றி!
சரி கலாய்த்தல் ஸ்டாப்! கருத்துரையாடல் ஸ்டார்ட்!

மெளலி அண்ணா
கடக ஸ்ருதி என்றால் என்ன?

அதான் பேத ஸ்ருதிகளுக்கும், அபேத ஸ்ருதிகளுக்கும் சேர்த்தே பொருள் சொல்லியாகி விட்டதே! அப்புறம் தனியாக கடக ஸ்ருதி என்ற ஒன்றுக்கும் சொல்கிறார்களா?

மெளலி (மதுரையம்பதி) said...

//மெளலி அண்ணா
கடக ஸ்ருதி என்றால் என்ன?

அதான் பேத ஸ்ருதிகளுக்கும், அபேத ஸ்ருதிகளுக்கும் சேர்த்தே பொருள் சொல்லியாகி விட்டதே! அப்புறம் தனியாக கடக ஸ்ருதி என்ற ஒன்றுக்கும் சொல்கிறார்களா?//

இதென்ன கொடுமை கே.ஆர்.எஸ், பதிவிட்டவர் குமரன்....அவரிடம் கேக்கணும் இந்த கேள்வியை... எனக்குத்தான் குணானுபவங்களை எல்லாம் பகிர்ந்துக்க தெரியாதே :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ணன்பாட்டுல தெலுங்கு பாடல் பற்றி நான் அனானியா ஏதாச்சும் சொல்லியிருப்பேனே?....//

ஹா ஹா ஹா
மெளலி அண்ணா! ச்ச்ச்ச்சும்ம்மா!
தம்பி உங்க கிட்ட வெளையாடக் கூடாதா? பதிவு ஃபுல்லா பேத ஸ்ருதி, அபேத ஸ்ருதின்னே பேசிக்கிட்டு இருந்தா எப்படி? அதான் அனானி ஸ்ருதி! :))

என்னை அனானியா வந்த கனபாடிகள்-ன்னு சொல்லி ஒரு முறை விளையாடுனீங்களே! ஞாபகம் இருக்கா? :))

இப்பவும் சொல்லுறேன்!
எங்க மெளலி அண்ணா=அனானி!
அ+த்வைதம் மாதிரி, அ+நானி!
"நான்" அல்லாதவன்! "நான்"-ஐக் கடந்தவன்!

ஆன்மிகத்தில் எல்லையில்லா ஆர்வம் கொண்டவர்,
ஆசார்ய ஹ்ருதயத்தை அறிந்தவர்,
அன்னையின் அருட்பாலகர்
மதுரையம்பதி வளர்
மெளலி அண்ணா=அ+நானி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதென்ன கொடுமை கே.ஆர்.எஸ், பதிவிட்டவர் குமரன்....அவரிடம் கேக்கணும் இந்த கேள்வியை...//

நோ வே!
இந்தப் பதிவின் தலைப்பு என்ன?
"மதுரையம்பதிக்கு வணக்கம் (கேள்வி பதில்)"
எனவே கேள்வி உங்களிடம் தான்!

//எனக்குத்தான் குணானுபவங்களை எல்லாம் பகிர்ந்துக்க தெரியாதே :))//

ஹா ஹா ஹா!
அடியேன் கை இப்போ பெங்களூரு வரைக்கும் நீளுது! :)))
எதுக்கா?
அண்ணனை அடிக்க இல்ல!
அண்ணனிடம் குணானுபவம் வேண்டிப் பெற!

மெளலி (மதுரையம்பதி) said...

//என்னை அனானியா வந்த கனபாடிகள்-ன்னு சொல்லி ஒரு முறை விளையாடுனீங்களே! ஞாபகம் இருக்கா?//

அப்போது நான் உங்களிடம் மட்டும் கேட்கவில்லை, அம்பி-தம்பியிடமும் கேட்டேன்.

அது-இதுன்னு கடைசில மெளலி=அனானி அப்படிங்கறீங்க...நல்லாயிருங்கய்யா, நல்லாயிருங்க.. :)) (மறக்காம சிரிப்பான் போட்டிருக்கேன், கவனிக்கவும்)

மெளலி (மதுரையம்பதி) said...

சரி, மொய் 51 வச்சுட்டு நான் தூங்க போறேன்...

சர்வம் க்ருஷ்ணார்பணம். :))

இலவசக்கொத்தனார் said...

மௌலி அண்ணா பதிவைப் படிச்சா மாதிரி இருக்கு!! :))

Geetha Sambasivam said...

//மற்றபடி நீங்க இவ்வளவு விளக்கமா சொல்லியும் என் மரமண்டையில ஒண்ணும் ஏறலைன்னு சொல்லிட்டு வருத்தத்தோட விலகிக்கிறேன் :(

August 29, 2008 12:14 PM //

ஒரு ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏ போட்டுட்டுப் போயிடறேன், கவிநயாவுக்கு நன்னி! :))))))

சிவமுருகன் said...

நல்லவேளை மூன்றையும் நல்ல விளக்கினீர்கள். புரிந்து கொள்வதை விட அதை தெரிந்து கொள்வது, தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கினால் மகிழ்ச்சி இராகவ். :-)

குமரன் (Kumaran) said...

அட என்ன இப்படி சொல்லிட்டீங்க கொத்ஸ். இது அவர் இடுகை தானே. :-) இரவிசங்கர் யார்கிட்ட கேள்வி கேட்குறார் பாருங்க. :-)

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. இப்படி எல்லாம் சொன்னா நம்பிடுவோமா என்ன? :-)

குமரன் (Kumaran) said...

ரொம்ப நன்றி சிவமுருகன். மகிழ்ச்சியும். இன்னொரு முறை படித்துப் பாருங்கள். புரிந்துவிடும். :-)