Tuesday, August 19, 2008

*நட்சத்திரம்* - தமிழா? ஆரியமா?

இந்தக் கேள்வி என் முன் அடிக்கடி வைக்கப்படுகிறது. தமிழார்வம் கொண்டவர்கள் எல்லாருக்கும் வடமொழி பிடிக்காது; பிடிக்கக்கூடாது என்ற ஒரு எண்ணம் தமிழக மக்களிடம் இருக்கிறது. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. தனித்தமிழ் இயக்கத்தின் பின், வடமொழியின் மேல் ஒரு இனம் தெரியாத வெறுப்பு தமிழர்களிடம் இருப்பதாய் தோன்றுகிறது. வடமொழியை வெறுக்காத தமிழார்வலர்களும் வடமொழியைக் கற்கவோ அதில் சொல்லப்பட்டிருப்பதை மொழிபெயர்ப்பின் மூலம் படிக்கவோ அவ்வளவாய் விருப்பம் இல்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பவர்கள் ஒரு அர்த்தத்துடன் தான் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விக்குப் பதில் கூறும் போது என் பின்புலத்தைக் கூறுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தமிழ்மணத்திலும் சில நண்பர்கள் இந்தக் கேள்வியை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டிருக்கிறார்கள். அதனால் என் பதிலை இங்கும் பதிவாய் இடுகிறேன்.

மதுரைவாழ் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சௌராஷ்ட்ரர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டுள்ள ஒரு குழுவினர். இவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தாலும், மதுரையில் தான் பெரும்பான்மையினராய் வசிக்கின்றனர். வீட்டில் சௌராஷ்ட்ரத்தில் பேசினாலும், வெளியே தமிழில் பேசி நிறைய பேர் மிக்கத் தமிழார்வத்துடன் நிறையத் தமிழ் தொண்டு ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தமிழ் இரண்டாம் தாய்மொழி. தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் ஒரு தமிழனுக்கு இணையான தமிழ்ப்பற்று இந்த மக்களிடம் காணலாம்.

நான் பிறந்தது ஒரு சௌராஷ்ட்ர குடும்பத்தில் தான். வீட்டில் இப்போதும் சௌராஷ்ட்ரத்தில் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். தமிழில் உள்ள ஆர்வம் போல் சௌராஷ்ட்ரர்களுக்கு ஆன்மிகத்தில் பெரும் ஆர்வம். நான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் என் நண்பர்களுடன் பொழுது போகவில்லையென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் போவோம். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது சென்று விடுவோம். அந்த ஆன்மிக ஈடுபாடும் தமிழார்வமும் தான் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியங்களைப் படிப்பதில் என் கவனத்தைச் செலுத்தியது. நான் நான்கு வயதாக இருக்கும் போதே கந்தர் சஷ்டி கவசத்தை மனப்பாடமாகச் சொல்வேன் என்று என் பெற்றோர்களும் மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உறவினர்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்டது எனக்கும் சற்று நினைவிருக்கிறது. அப்படி தமிழில் ஏற்பட்ட ஈடுபாடு எனக்குத் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர்களாலும் வளர்ந்தது.

ஏழாம் வகுப்பில் எனக்குத் தமிழ் சொல்லித்தந்தவர் சுரேந்திரன் ஐயா அவர்கள். தமிழை எவ்வளவு அழகாகச் சொல்லிக்கொடுக்க முடியும் என்பதை அவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அவர் ஒரு சௌராஷ்ட்ரர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு 'பட்டிமன்றத் தென்றல்' என்றப் பட்டம் பெற்றவர்.

பின்னர் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எனக்குத் தமிழாசிரியராய் வந்தவர் சக்திவேல் ஐயா. தமிழர். தமிழின் அழகை, தமிழின் இனிமையை சுரேந்திரன் ஐயா சொல்லிக் கொடுத்தார் என்றால், தமிழின் நுண்மையை தமிழின் பழமையை மற்றவர் தமிழில் செய்யும் தவறுகளை மிக நன்றாய்ச் சொல்லித்தந்தவர் சக்திவேல் ஐயா. இவர்கள் இருவருமே என் மேல் தனிப்பாசம் கொண்டு என் சந்தேகங்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாய் விளக்கம் கூறி என் தமிழறிவை நன்கு வளர்த்தார்கள்.

ஆன்மிகத்தில் எனக்கு இருந்த ஈடுபாடு சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வத்தை ஊட்டியது. சிறிது சிறிதாக சமஸ்கிருதத்தின் அழகையும் அனுபவிக்க ஆரம்பித்தேன். தமிழை முறையாகப் பள்ளியில் கற்றது போல் வடமொழியைக் கற்கவில்லை. தமிழிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்ப்புடன் கூடிய வடமொழி புத்தகங்களையே படித்தேன். அப்படிப் படித்ததில் வடமொழியில் சிறிது புலமை ஏற்பட்டது. வடமொழி ஆர்வம் சில புதிய நண்பர்களைக் கொண்டுவந்து சேர்த்தது. இப்படி நம் நாட்டின் செம்மொழி இரண்டின் மேலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தின் என்னிடம் கேட்கப்படும் 'உனக்கு தமிழ் அதிகமாய்ப் பிடிக்குமா? சமஸ்கிருதம் பிடிக்குமா?' என்ற கேள்விக்கு நான் கூறும் பதில், 'எனக்கு இரண்டு மொழிகளும் இரண்டு கண்களைப் போன்றவை. கண்களில் எதை அதிகமாய்ப் பிடிக்கும் என்று சொல்வது. இரண்டும் பிடிக்கும்' என்பதே.

சில நண்பர்களால் இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில நண்பர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் பார்த்திருக்கிறேன். வடமொழியே மூத்த மொழி; முதன்மையான மொழி; உயர்ந்த மொழி என்ற எண்ணம் கொண்ட நண்பர்களுக்கு தமிழை வடமொழிக்கு இணையாக நான் கூறுவது பிடிப்பதில்லை. தமிழில் ஈடுபாடு கொண்டு வடமொழியை வெறுக்கக் கற்றுக்கொண்ட நண்பர்களுக்கு வடமொழியை தமிழுக்கு இணையாக நான் சொல்வது பிடிப்பதில்லை. ஆனால் அதற்கு நான் என்ன செய்வது? எனக்கு இரண்டும் பிடித்திருக்கிறது. மதுரையில் பிறந்தததால் தமிழார்வம் வந்தது. சௌராஷ்ட்ரனாய்ப் பிறந்ததால் வடமொழியின் மேல் வெறுப்பு வரவில்லை. ஆன்மிகம் வடமொழியையும் கற்றுக்கொள்ள வைத்தது.

தமிழை விரும்பி வடமொழியை வெறுக்கும் ஒரு நண்பர், என்னிடம் ஒரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நான் சொன்ன 'இரண்டும் இரு கண்கள்' என்ற பதிலுக்குப் பின், 'சரி. அதில் வலக்கண் எது? இடக்கண் எது?' என்று கேட்டார். நான் அந்தக் கேள்வியில் உள்ள விவகாரத்தை அறியாமல் 'தமிழ் வலக்கண். ஆரியம் இடக்கண்' என்றேன். 'அப்படியென்றால் நீ வடமொழியை விட தமிழைத் தான் அதிகம் நேசிக்கிறாய்' என்று சொல்லிவிட்டார். நான் வாயடைத்து நின்றேன். உண்மை தானே?!

52 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை சென்ற முறை தமிழ்மண விண்மீனாய் இருந்த போது 28 ஜனவரி 2006 அன்று எழுதப்பட்டது. அப்போது வந்த சுவையான பின்னூட்டங்களை அந்த இடுகைக்குச் சென்று படித்துப் பாருங்கள்.

இது வெட்டிப்பயல் பாலாஜி, கவிநயா அக்கா இவர்களின் ஆலோசனையின் பேரில் இடப்படும் இரண்டாவது மீள்பதிவு. இவை தொடரும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது வெட்டிப்பயல் பாலாஜி, கவிநயா அக்கா இவர்களின் ஆலோசனையின் பேரில் இடப்படும் இரண்டாவது மீள்பதிவு. இவை தொடரும். :-)
//

யக்கா...பாலாஜி...
உங்கள யாரு இந்த மாதிரி ஐடியா கொடுக்கச் சொன்னது?
இப்ப பாருங்க, மீள்பதிவு, மீன்பதிவு-ன்னு இவரு மெயின் பதிவில் இருந்து எஸ் ஆவப் போறாரு!

குமரன் பின்னூட்ட விதி மாதிரி
கேஆரெஸ் மீள்பதிவு விதி-ன்னு ஒன்னு இருக்கு! தெரியும்ல குமரன்?

குமரன் (Kumaran) said...

அதென்ன மீள்பதிவு விதி இரவிசங்கர்? எனக்குத் தெரியாதே. சொல்லுங்கள். கிண்டல் செய்யவில்லை. உண்மையிலேயே கேட்கிறேன்.

மீள்பதிவு இல்லாத இடுகைகள் மூன்று இட்டுவிட்டேனே இந்த வாரத்தில். நேற்றிரவு இட்டதை நீங்கள் தான் இன்னும் படிக்கவில்லை (அ) படித்துவிட்டு பின்னூட்டம் இடவில்லை. :-) அதெப்படி கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் வெறும் மீள்பதிவாகவே போட்டு நேரத்தைக் கழிப்பேனா? இன்று மாலை அடுத்த இடுகை வரும். அது புதிய இடுகை. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

மிக சுவாரஸ்யமான பதிவு குமரன் :-)

// வீட்டில் சௌராஷ்ட்ரத்தில் பேசினாலும், வெளியே தமிழில் பேசி நிறைய பேர் மிக்கத் தமிழார்வத்துடன் நிறையத் தமிழ் தொண்டு ஆற்றிக்கொண்டிருக்கின்றனர்.//

உண்மை, நானும் மதுரையில் வசித்த காலத்தில் உணர்ந்திருக்கிறேன்.

//நான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் என் நண்பர்களுடன் பொழுது போகவில்லையென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் போவோம். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது சென்று விடுவோம். //

இதுவும் உண்மையே...தினமும் திருவனந்தலுக்கும், பள்ளியறை பூஜைக்கும் வரும் பல செளராஷ்டிர நண்பர்கள் எனக்கும் உண்டு. மதுரைக் கோவிலுக்கும் இச்சமூகத்திற்கும் இருக்கும் தொடர்பு அலாதியானது.

//சுரேந்திரன் ஐயா அவர்கள். தமிழை எவ்வளவு அழகாகச் சொல்லிக்கொடுக்க முடியும் என்பதை அவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அவர் ஒரு சௌராஷ்ட்ரர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு 'பட்டிமன்றத் தென்றல்' என்றப் பட்டம் பெற்றவர்//

எனக்கு தா.கு.சுப்பிரமணியன் என்று ஒரு தமிழ் பேராசிரியர், மதுரைக் கல்லூரியில் பணியாற்றுபவர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நீங்கள் சொல்வது போல அவரும் சொல்வார். அவரும் நன்றாக வடமொழி அறிந்தவர். அவரும் பட்டிமன்றம், தொலைக்காட்சிகளில் வருகிறார்.

Kavinaya said...

நல்லது குமரா. இந்த விவரங்களை கேள்வி பதில் பகுதி மூலமாக அறிந்து கொண்டிருக்கிறேன். உங்கள் மீது மதிப்பு வளர காரணமாக இருந்த செய்திகள் இவை. வழக்கம்போல பின்னூட்டங்களையும் நகல் எடுத்து இங்கே போட்டிருக்கலாமே? இன்னும் வசதியாய் இருந்திருக்கும் :)

Kavinaya said...

//யக்கா...பாலாஜி...
உங்கள யாரு இந்த மாதிரி ஐடியா கொடுக்கச் சொன்னது?
இப்ப பாருங்க, மீள்பதிவு, மீன்பதிவு-ன்னு இவரு மெயின் பதிவில் இருந்து எஸ் ஆவப் போறாரு!//

அடடா, அவரு இந்திய நேரப்படி புது பதிவா குடுக்கலாம்னு பார்க்கிறார் போல :)

ப்ரசன்னா said...

//'தமிழ் வலக்கண். ஆரியம் இடக்கண்' என்றேன். 'அப்படியென்றால் நீ வடமொழியை விட தமிழைத் தான் அதிகம் நேசிக்கிறாய்' என்று சொல்லிவிட்டார். நான் வாயடைத்து நின்றேன். உண்மை தானே//

அதெப்படி குமரன் எனக்கு புரியலையே? நம் இடக்கண்ணை விட வலக்கண் சிறந்ததா??? விளக்குங்களேன்..

வெட்டிப்பயல் said...

//யக்கா...பாலாஜி...
உங்கள யாரு இந்த மாதிரி ஐடியா கொடுக்கச் சொன்னது?
இப்ப பாருங்க, மீள்பதிவு, மீன்பதிவு-ன்னு இவரு மெயின் பதிவில் இருந்து எஸ் ஆவப் போறாரு!//

அதுல என்ன தப்பு? மூணு வருஷத்துக்கு முன்னாடி குமரன் எழுதனது இப்ப பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால சில நல்ல பதிவுகளை போடறதும் நல்லது தான். நேரமில்லைனு வாய்ப்பை தவற விடறதுக்கு பதிலா இந்த மாதிரி பயன்படுத்தறது விவேகமானதும் கூட :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@பாலாஜி
//அதுல என்ன தப்பு? மூணு வருஷத்துக்கு முன்னாடி குமரன் எழுதனது இப்ப பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால சில நல்ல பதிவுகளை போடறதும் நல்லது தான்.//

தப்பே இல்லை!
இதோ கேஆரெஸ் மீள்பதிவு விதி:

1. நட்சத்திர வாரத்தில் (நட்சத்திர வாரத்தில் மட்டுமே) இரண்டுக்கும் மேற்பட்ட மீள்பதிவுகள் செய்யலாகாது!

2. அப்படி நல்ல சில மீள்பதிவுகள் தந்தே ஆக வேண்டிய கட்டாயம் வந்தால்....
ஒரு மீள்பதிவுக்கு, இரண்டு புதுப்பதிவுகள் என்ற விகிதத்தில் அதே வாரத்தில் தரப்பட வேண்டும்!

KRSPC-Section 12 Article 356

:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையில் பிறந்தததால் தமிழார்வம் வந்தது. சௌராஷ்ட்ரனாய்ப் பிறந்ததால் வடமொழியின் மேல் வெறுப்பு வரவில்லை.//

அருமை! அருமை!

இந்திய மெய்யியலில் தெய்வத்தமிழ் மற்றும் வடமொழித் தொன்மங்கள் - இவை இரண்டும் வகிக்கும் பெரும் பங்கு பற்றி முருக பக்தர், பாம்பன் சுவாமிகள், மிக அருமையான கருத்துக்கள் கொண்டு விளக்குவார்!

இப்போ பணியில் கொஞ்சம் ஆணி! மாலையில் வந்து மேலும் சில சொல்லுகிறேன்!

Raghav said...

//மதுரையம்பதி said...
மிக சுவாரஸ்யமான பதிவு குமரன் :-)
//

ரிப்பீட்டே..

//// வீட்டில் சௌராஷ்ட்ரத்தில் பேசினாலும், வெளியே தமிழில் பேசி //

நான் அப்படியே உல்டா.. எங்க ஊர்ல, நாங்க மற்றும் இரு குடும்பம் மற்றும் தான் தமிழ். மீதி அனைவரும் செளராஷ்ட்ரா. அதனால எங்க வீட்டுல மட்டும் தான் தமிழ், வெளியில் முழுவது செள்ராஷ்ட்ரா தான். பள்ளி மற்றும் கல்லூரிகளில் என்னையும் ஒரு செளராஷ்ட்ரா வாகத்தான் பார்த்தனர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தச் சமயத்தில் அடியேனும் என் தமிழாசிரியர்கள்
* செஞ்சொற் கொண்டல் டேனியல் ஐயாவையும்,
* பங்குத் தந்தை ரோசோரியோ கிருஷ்ணராஜையும்
நினைவு கூர்ந்து வணங்கிக் கொள்கிறேன்!

தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியமும், நீதிநெறி இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தான் இருக்கும்!

இவர்கள் மாற்று மதத்தினராய் இருந்தாலும் கூட, பக்தி இலக்கியப் பிரவாகத்தில் ஒரு குறையும் வைத்ததில்லை! அதுவும் டேனியல் ஐயா பிரபந்தங்களைப் பாடியே காட்டுவாரு!

அப்படியே திருமங்கை ஆழ்வார் குதிரை மேல் வருவது போலவே இருக்கும்! அப்பர் சுவாமிகள் பாடி, வகுப்புக்குள் பாம்பு வந்துரிச்சோ-ன்னு கூட பார்த்திருக்கேன்! :)

கிறித்துவத் தமிழ் இலக்கியம் பிற்பட்ட காலம் தான்!
ஆனாலும் முன்னிறுத்துகிறேன் பேர்வழி-ன்னு அடாவடிகள் எல்லாம் செய்யாது, எனக்கு மட்டும் தான் தொன்மம் சொந்தம்-ன்னு எல்லாம் பேசாது....
உள்ளது உள்ளபடி தரும் பாங்கு - என்னைச் சிறு வயதிலேயே கவர்ந்தது இது தான்!

இன்றளவும் இவர்களின் பரந்த தமிழ் மனமே, பரந்து விரிந்த தமிழ் மனமே, அடியேனை வழி நடத்திக் கொண்டிருக்கு!

Daniel Ayya & Fr. Rosario Krishnaraj - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'இரண்டும் இரு கண்கள்' என்ற பதிலுக்குப் பின், 'சரி. அதில் வலக்கண் எது? இடக்கண் எது?' என்று கேட்டார்//

எந்தக் கண் துடிச்சா நல்லது குமரன்? :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'தமிழ் வலக்கண். ஆரியம் இடக்கண்' என்றேன். 'அப்படியென்றால் நீ வடமொழியை விட தமிழைத் தான் அதிகம் நேசிக்கிறாய்' என்று சொல்லிவிட்டார்.//

வல மார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!

வலக் கண்ணில் வாழ்கின்ற தமிழ் நங்கையும் பல்லாண்டே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கல்லூரி வந்த பின், இன்னுமுள ஆசிரியர்கள்,
* பேராசிரியர் மதி ஸ்ரீநிவாசன்,
* டாக்டர் MA வேங்கட கிருஷ்ணன்,
* பேராசிரியர் எம். நடராஜப் பிள்ளை
இவர்களையும் நினைவு கூர்ந்து வணங்கிக் கொள்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by the author.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆபீஸ் வா வா என்றழைக்கிறது! இதுக்கு மேல தாங்காது!
மீதியைத் தம்பி பாலாஜி பாத்துக்கிடட்டும்! :)

Sridhar Narayanan said...

//எந்தக் கண் துடிச்சா நல்லது குமரன்? :)))//

எக்கண் துடித்தாலும், அக்கணமே, மருத்துவர்கண் செல்வது நல்லது. :-))

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. சிவமுருகன் அடிக்கடி பள்ளியறை பூசைக்கு செல்வேன் என்று சொல்லியிருக்கிறார். நான் சில முறை சென்றிருக்கிறேன்.

எனக்கு தா.கு. சுப்பிரமணியன் அவர்களை நேரடியாகத் தெரியாதென்றாலும் அவருடைய பட்டிமண்டபப் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். தொலைக்காட்சிகளிலும் பார்த்திருக்கிறேன். நகைச்சுவை ததும்ப பேசுவார்.

குமரன் (Kumaran) said...

சேம்பேறித்தனம் தான் காரணம் கவிநயா அக்கா. இதோ அங்கிருக்கும் பின்னூட்டங்களை எடுத்துப் போடுகிறேன்.

Kavinaya said...

வேணாம். படிச்சுட்டேன் :)

குமரன் (Kumaran) said...

35 comments:

Samudra said...
குமரன் அவர்களே,

எந்த மொழியும் இனிது தான்.
அதை முழுதாக படித்து அதில் எழுதபட்ட காவியங்களை படித்தால்.

எப்போது எனது மொழி, எனது மதம் உனது மொழியை/மதத்தை விட நல்லது/மேலானது என்று ஒரு சமுதாயமே கூட்டாக பிரகடனம் செய்கிறதோ அப்பொதே அதற்க்கு கேடு காலம் அரம்பித்துவிட்டது.

மேலும் ஆரிய theoryகளை பற்றி சில அறிவியல் பூர்வமான கேள்விகள் - எனது பதிவில்.

January 28, 2006 6:08 AM
--

கொழுவி said...
நட்சத்திரம் பற்றி இராம.கி.அவர்கள், தான் நட்சத்திரமாயிருந்தபோது நாட்காட்டு என்று ஒரு பதிவு போட்ட ஞாபகம். அங்கு நிறைய விவரங்கள் கிடைக்கலாம்.

January 28, 2006 6:44 AM
--

சிவா said...
எங்கப்பா அந்த தார் டின்ன..இங்கே ஏதோ வடமொழின்னு சத்தம் கேட்குது :-)).

நம்ம ஆளுங்க தமிழ் பற்று தான் ஊர் அறிந்த விசயம் ஆயிற்றே. எனக்கும் வடமொழி எதுவும் தெரியாது குமரன் :-)). கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏதும் கிடைக்க வில்லை

January 28, 2006 7:43 AM
--

மணியன் said...
குமரன் அவர்களே, நல்ல கேள்வி கேட்டீர்கள். இந்திய துணைக் கண்டத்தின் இருசெம்மொழிகளில் சிவாஜி/எம்ஜியார், கமல்/ரஜினி சண்டை போல ஏதாவது ஒன்றையே ஆதரிக்க வேண்டுமென்று ஒரு எழுதப் படாத கட்டாயம் நிகழ்கிறது.

மற்ற நாட்டு மொழிகளில் எல்லாம் தேர்ச்சிபெறும், அவர்களின் இலக்கியத்தை இன்புறும் நாம் நமது தொன்மையான வடமொழிமேல் வெறுப்பு கொள்வதும், அருமையான இலக்கியச் சுவையை இழப்பதும் எவ்வளவு அறிவீனம்?

பார்ப்பனர்கள் வடமொழி பேசுகிறார்கள் என்பதால் அம்மொழியையே வெறுப்பது,முள்படர்ந்த தோலிற்காக பலாச்சுளைகளை தவிர்ப்பது போன்றது.
பிடிக்காத வேதங்களை விட்டுவிடலாம்; மந்திரங்களை விட்டுவிடலாம், ஆனால் காளிதாசனின் காவியங்களை ரசிக்க வேண்டாமா ? சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை அர்த்தமாக்கிக் கொள்ள வேண்டாமா?

தனித்தமிழ் இயக்கத்திற்கும் வடமொழி பயில்வதற்கும் கூட தொடர்பு இல்லை. இன்றையதினம் ஆங்கில கலப்பினை தவிர்க்க ஆங்கிலமே வேண்டாமென்கிறோமா ?தனித் தமிழ் பற்றிருந்தால் வடமொழிக்கலப்பினை இந்நாளில் ஆங்கிலக் கலப்பினை தவிர்ப்பது போல் தவிர்த்து விடலாம்.

January 28, 2006 8:05 AM
--

Anonymous said...
http://www.sabha.info/research/aif.html

Aryan Invasion Fantasy

Origin of Master Aryan Race Theory
(Scanned pages from Hindu Manners, Customs and Ceremonies by Abbe J.A. Dubois.

Manuscript first completed in 1806, English translation first published in 1816.)

Dubois: We must undermine Hindu civilization
Dubois says brahmins originated in Caucasus!
Dubois introduces philology and says brahmins are descendents of Japheth!
Dubois says Hinduism is just allegories
Max Muller's prefatory note to Dubois' book

January 28, 2006 8:09 AM
--

கயல்விழி said...
மொழிப்பற்றாளர்களுடன் மிகவும் கஸ்டப்பட்டுள்ளீர்கள் போல் உள்ளது. இந்தியாவில் சமஸ்கிருதம் போன்று இலங்கையில் சிங்களம்.. பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்க மறுத்தவர்கள் பலர் கூறிய அனுபவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். சமஸ்கிரிதத்தில் புலமை உள்ளவர் என்பதால் கேட்கிறேன். தமிழில் பல சமஸ்கிரிதச் சொற்களை நாங்கள் பயன்படுத்துகிறோமே.. உதாரணமாய் அதிஸ்டம்.. கஸ்டம் போன்றவைபோல் சமஸ்கிரிதத்தில் தமிழ்ச்சொற்கள் மருவி கலந்து இருக்கிறதா..??

January 28, 2006 8:39 AM
--

ஜோ / Joe said...
குமரன்,
சவுராஸ்டிர மொழி எந்த மாநிலத்தை சேர்ந்தது?

January 28, 2006 10:05 AM
--

தாணு said...
குமரன் ரெண்டு நாளா கம்ப்யூட்டர் ரிப்பேராகிப் போனதால் பதிவுகள் வாசிக்க லேட்டாகிவிட்டது.
தமிழர் என்று மார்தட்டிக் கொள்பவர்களே அநேக நேரம் ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார்கள். எனக்கும் தமிழ்மீது ஆழ்ந்த பிடிப்பு உண்டுதான். ஆனாலும் என் நண்பன் தொலைபேசியை எடுத்ததும் `வணக்கம்’ என்று சொல்லும்போது கூட ஹலோ என்ற ஆங்கில பதம் வந்து விழுந்துவிடும். அதனால் தமிழைப் புறக்கணிப்பதாக ஆகுமா? தமிழ் ஆர்வம்கூட வெறியாக மாறும்போது ஏற்றுக் கொள்ளப் படாததுதான்.

January 28, 2006 10:29 AM
--

குமரன் (Kumaran) said...
சமுத்ரா அவர்களே. மொழிகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன். இந்தப் பதிவில் மொழிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். அதனால் விவாதத்தை அதனை ஒட்டியே வைத்துக் கொள்வோம். ஆரிய திராவிட இனங்களைப் பற்றிய விவாதங்களை இன்னொரு நாள் பார்ப்போம். நீங்கள் மொழியைப் பற்றியும் இந்தப் பின்னூட்டத்தில் இட்டிருப்பதால் இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்க வேண்டியதாயிற்று.

January 28, 2006 12:32 PM
--

குமரன் (Kumaran) said...
கொழுவி அண்ணா. நான் வலைப்பதிக்கத் தொடங்குவதற்கு முன் இராம.கி. அவர்கள் தமிழ்மண விண்மீனாய் இருந்திருக்கிறார். அண்மையில் தான் அவர் வலைப்பூவை அறிந்தேன். அடுத்த வாரம் முதல் அவருடைய எல்லாப் பதிவுகளையும் படிக்கவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். வழக்கொழிந்த பழந்தமிழ் சொற்களையும் புதுப் புதுத் தமிழ்க் கலைச் சொற்களையும் அங்கு கற்கலாம் என்று தோன்றுகிறது.

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

January 28, 2006 12:35 PM
--

குமரன் (Kumaran) said...
சிவா. வடமொழியை எதிர்த்து தார் டின் போராட்டம் நடந்ததாத் தெரியலையே. அது இந்தியை எதிர்த்து அல்லவா நடந்தது. வடமொழியாகிய சமஸ்கிருத எதிர்ப்பு எல்லாம் இன்னும் இலக்கிய வட்டங்களில் தான் இருக்கிறது. இன்னும் அரசியல் ஆகவில்லை. அதனால் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்காது என்பதால் அரசியல் ஆவதற்கும் வாய்ப்பில்லை.

நம்ம ஆளுங்க தமிழ்பற்று நன்றாக இருக்கட்டும் சிவா. அது மிக முக்கியமான உணர்வு. தாய்ப்பாசம் போன்றது அது. ஆனால் என் அம்மாவை நான் விரும்பவேண்டும் என்றால் அடுத்தவன் அம்மாவை வெறுக்கவேண்டும் என்று அர்த்தம் அன்று.

பதிவில் சொன்ன மாதிரி என் தாய் மொழி சௌராஷ்ட்ரம். தமிழும் வடமொழியும் வளர்த்த தாய் மொழிகள். பெற்றவள் மேலும் பாசம் உண்டு. வளர்த்தத் தாயார்கள் மேலும் பாசம் உண்டு. அதனைத் தான் சொல்ல முயன்றேன்.

January 28, 2006 12:42 PM
--

குமரன் (Kumaran) said...
மணியன் சார். ரொம்பச் சரியாச் சொன்னீங்க. :-) தமிழா ஆரியமா என்ற கேள்வி எம்ஜியாரா சிவாஜியா, ரஜினியா கமலா சண்டைகள் போல் தான் இருக்கிறது. உங்கள் கருத்துக்கள் எல்லாம் என் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. தெளிவாக எடுத்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

January 28, 2006 12:46 PM
--

குமரன் (Kumaran) said...
அனானிமஸ் நண்பரே. மேலே சமுத்ரா அவர்களுக்குச் சொன்னதே உங்களுக்கும். நான் இனத்தைப் பற்றிய விவாதத்தை இங்கு தொடங்க விரும்பவில்லை. இங்கு மொழிகளைப் பற்றியே பேசுகிறோம்.

மட்டுறுத்தல் போட்டதால் இதனை வேறு விளக்க வேண்டியிருக்கிறது - ஏன் உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தேன் என்று. சமுத்ரா இட்டப் பின்னூட்டத்தை அனுமதித்ததால் உங்கள் பின்னூட்டத்தையும் அனுமதித்தேன்.

நண்பர்களே. இந்தப் பதிவில் இனிமேல் ஆரிய திராவிட இனத்தைப் பற்றிய விவாதங்களைப் பின்னூட்டமாய் இடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

January 28, 2006 12:50 PM
--

குமரன் (Kumaran) said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி. மொழிப்பற்றாளர்களிடம் கஷ்டமெல்லாம் படவில்லை கயல்விழி. என் அதிர்ஷ்டம் தமிழ் மேல் மட்டும் பற்று கொண்ட நண்பர்களும் கிடைக்கிறார்கள். வடமொழி மேல் மட்டும் பற்று கொண்ட நண்பர்களும் கிடைக்கிறார்கள். அதனால் இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப் படுகிறது. அதனையே இங்கே சொன்னேன்.

தமிழில் வடமொழிச் சொற்கள் இருப்பது மட்டுமன்று. வடமொழியிலும் தமிழ்ச்சொற்கள் நிறைய உண்டு. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இரண்டு மொழிகள் ஒன்றுகொன்று நெருங்கிப் பழகும் போது அந்த மாதிரி கொடுக்கல் வாங்கல் நிறைய நடப்பது இயற்கை. ஞானவெட்டியான் ஐயா, இராம.கி. ஐயா, இராகவன் இவர்களைக் கேட்டால் நிறைய எடுத்துக் காட்டுவார்கள்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தருகிறேன். தமிழ் என்பது வடமொழியில் தமிளம், த்ரமிளம், த்ரவிடம் என்று திரிந்து கடைசியில் த்ராவிடம் என்று மாறிவிட்டதாக மொழியறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதனையே திருப்பிப் போட்டு த்ராவிடம் என்ற வடமொழிச் சொல்லின் திரிதலே தமிழ் என்பதே என்று கூட சில அறிஞர்கள் சொல்வதைப் படித்திருக்கிறேன். வடமொழிப் பற்றாளர்களுக்கு திராவிடம் ---> தமிழ் சரி போன்று தோன்றும். தமிழ்ப் பற்றாளர்களுக்கு தமிழ் --> திராவிடம் சரி போன்று தோன்றும். இதுவும் ஒரு முடிவில்லாத விவாதம். இவர்கள் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் சொல்வதை இவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. :-)

January 28, 2006 1:02 PM
--

குமரன் (Kumaran) said...
ஜோ, சௌராஷ்ட்ரம் என்பது தற்போதைய குஜராத்தின் ஒரு பகுதி. ஆனால் தற்போது சௌராஷ்ட்ரம் பேசுபவர்கள் குஜராத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் தான் இருக்கிறார்கள். சௌராஷ்ட்ரத்தைப் பற்றியும் சௌராஷ்ட்ரர்களைப் பற்றியும் எழுதவேண்டும் என்று அப்டிபோடு அக்காவும் நண்பர் முத்துக் குமரனும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அந்த விஷயத்தை எதிர்காலத்தில் எழுதுவேன். தற்போதைக்கு இந்தச் சுட்டிகளைப் பாருங்கள். http://www.palkar.org/
http://www.sourashtra.com/

January 28, 2006 1:09 PM
--

குமரன் (Kumaran) said...
உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன் தாணு அக்கா. மெதுவாக மற்றப் பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். செந்தமிழும் நாப்பழக்கம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். ஹலோ என்று வந்து விழுவதும் பழக்கத் தோஷம் தான் :-)

சில நேரங்களில் எழும் போதும் உட்காரும் போதும் நான் கண்ணன் நாமங்களைச் சொல்வேன். அதனைக் கேட்டு யாராவது 'ஆஹா. என்ன பக்தி' என்றால் நான் சிரித்துக் கொண்டே சொல்வது 'பக்தியெல்லாம் இல்லை. எல்லாம் பழக்கத் தோஷம்'. :-)

January 28, 2006 1:13 PM
--

Anonymous said...
மன்னித்துக் கொள்ளுங்கள் குமரன். உங்கள் பதிவைத் திசை திருப்ப அந்த உரல்களைத் தரவில்லை. ஆரிய திராவிட இனவாதத்தை எப்படி வெள்ளைக்காரன் கொண்டுவந்தான் என்பதற்கு அந்தப்புத்தகமே சாட்சி. இந்துமதமே வெளிநாட்டிலிருந்து வந்தது, அவன் கும்பிடுற சாமியெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தது என்று தமிழனைக் குழப்பினால் வெளிநாட்டு இறக்குமதியான தங்கள் மதத்தைப் பரப்ப சௌகரியமா இருக்கும் என்ற ஒரே நோக்கத்தில் தோற்றுவிக்கப் பட்டதுதான் இந்த ஆரியதிராவிட இனவாதம். அதிலிருந்து கிளம்பியதுதான் அத்தனை துவேஷங்களும்.

ஆரியன் / திராவிடன்
வடநாட்டான்/தமிழன்
வடமொழி/தமிழ்
பிராமணன்/நான்பிராமணன்
இப்படி ஒரு பைனரிகாம்ப்ளெக்ஸை ரொம்பத் திறமையா வேரூன்றச் செய்திருக்கிறார்கள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் நீங்க வடமொழி வெறுப்பைப் புரிந்து கொள்ள முடியாது. அப்பொ ஆரியன் என்று இனமில்லையா? பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனைத்தான் கேட்க வேண்டும். திராவிடன் என்று? ராகுல்திராவிடரைத்தான் கேட்க வேண்டும். :-)

January 28, 2006 10:42 PM
--

முத்துகுமரன் said...
குமரன் நல்ல பதிவு.

தமிழ் மொழியை ஆதரிப்பது என்பது எந்த மொழியையும் எதிர்ப்பதென்று ஆகாது. சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமஸ்கிருதம்தான் உயர்ந்தது என்று தூக்கிப் பிடிக்கும் போது இல்லை என் தமிழ்மொழி இருக்கிறது என்று சொல்கிறோம். எந்த மொழியானாலும் அதற்கு சிறப்பியல்புகள் இருக்கும். ஆழ்ந்த இலக்கியங்கள் இருக்கும். அவைகளை யாரும் மறுக்கப்போவதில்லை. அந்த இலக்கியங்கள் சொல்லும் செய்திகளும் கவனத்தில் கொள்ளபட வேண்டியது தவிர்க்க முடியாதது.

அப்புறம் மொழியின் பெயரால், மந்திரங்களின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தும் போது அதற்குண்டான எதிர்வினைகள் வலிமையாக இருந்திருப்பது எந்த தவறும் இல்லை. இனிமையான இலக்கியங்களுக்காக நஞ்சையும் சேர்த்து ஏற்க வேண்டும் என்று நினைத்தால் அது எந்த வகையிலும் நேர்மையானதாக இருக்காது.

January 29, 2006 12:05 AM
--

கைப்புள்ள said...
//தமிழ்பற்று நன்றாக இருக்கட்டும் சிவா. அது மிக முக்கியமான உணர்வு. தாய்ப்பாசம் போன்றது அது. ஆனால் என் அம்மாவை நான் விரும்பவேண்டும் என்றால் அடுத்தவன் அம்மாவை வெறுக்கவேண்டும் என்று அர்த்தம் அன்று. //

நன்றாகச் சொன்னீர்கள் குமரன். பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது நாம் அறியாத இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்வதற்கான ஒரு கருவி என்று கொண்டாலே போதும்.

January 29, 2006 7:19 AM
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி கைப்புள்ள. பல மொழிகளைக் கற்றுக் கொள்வதால் இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

January 29, 2006 7:26 AM
--

குமரன் (Kumaran) said...
அனானிமஸ் & முத்துக்குமரன். நீங்கள் தொடரலாம். என் கருத்துக்களைப் பின்னர் சொல்கிறேன். இந்த வாரம் முடியட்டும்.

January 29, 2006 7:27 AM
--

G.Ragavan said...
குமரன், பிறப்பால் மட்டுமே ஒருவர் தமிழராக முடியாது. நம்மிடையில் தமிலர்களும் தமிளர்கலும் பலருண்டு. என்னுடைய குடும்பத்திலும் தமிளர்கள் உண்டு.

தமிழ் உணர்வோடு கலந்தது. கலப்பது. ஆகையால் நீங்கள் தமிழர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

எனக்கும் தமிழ்ப்பற்று உண்டு.

வடமொழி......அதன் மீது எனக்கு எந்தத் தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. வடமொழி கற்பதற்கு வாய்ப்பும் தேவையும் இருக்கவில்லை. அதனால் கற்கவில்லை. அவ்வளவே. எனக்கும் காளிதாசனின் குமாரசம்பவம் (மறுபடியும் முருகனான்னு நீங்க நெனைக்கிறது புரியுது) படிக்கனுமுன்னு ரொம்ப நாளா ஆசை. வடமொழி தெரியாதே...அதுனால பேசாம உக்காந்திருக்கேன். உங்களுக்குத்தான் வடமொழிப் பழக்கம் உண்டே. குமாரசம்பவம் பத்திச் சொல்றது.

நச்சு இலக்கியக்கங்கள் எந்த மொழியிலும் உண்டு. அதற்காக ஒரு மொழியை விலக்கத் தேவையில்லை. வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்ளும் பக்குவமும் நமக்கு வரவேண்டும். வடமொழியில் நல்ல இலக்கியங்களும் உண்டு என்பதும் உண்மையே.

அதே நேரத்தில் தமிழகத்தில் வடமொழிக்கு இருக்கும் எதிர்ப்பிற்கு வேறொரு காரணமும் உண்டு. கண்ணாடி போல இருக்க வேண்டிய அயல்மொழி கண்ணைப் போல இருப்பதுதான். திருக்கோயில்களில் அதற்கு இருக்கும் இடம்தான். தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் அது இருப்பதால்....அதன் மீது லேசான எதிரெண்ணம் வருவது உண்மைதான். கிருத்துவர்கள் கூட தமிழில் தொழுகை நடத்துகின்றார்கள். நமக்குத்தான் ஒரு குறிப்பிட்ட மொழியில் தொழுகை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. பிறகும் என்ன தயக்கமோ! என்னைப் பொருத்த வரையில் தமிழா ஆரியமா என்றால்....இதுதான் தோன்றுகிறது.

January 29, 2006 5:50 PM
--

ஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
வடமொழி, தமிழ் ஆகியவைகளை வைத்து நடத்தும் போராட்டங்களாலும், விவாதங்களாலும் எனக்குக் கால விரயம் ஆகின்றது.

ஆகவே, நான் இந்த இடுகைக்குப் பின்னூட்டு தர இயலவில்லை.

January 29, 2006 10:06 PM
--

வழவழா_கொழகொழா said...
குமரன்...
அது என்ன தமிழா சமஸ்கிருதமா என்று கேட்காமால்
தமிழா ஆரியமா என்று கேட்கிறீர்கள்? அப்படிப்பார்த்தால் சரியாத்தான் கேக்குறீங்க ஒரு வகையில..

நம்ம அம்மாவை விரும்புறதுக்காக யாரும்
மத்த அம்மாக்களை வெறுக்கச் சொல்லவில்லை.

நம்ம அம்மாவுக்கு சீலையில்லாதபோது,
அடுத்த அம்மாவுக்கு சூடிதார் நாம் வாங்கித் தரக்கூடாது அல்லவா?

இதுக்கும் மொழிய நேசிக்கிறதுக்கும், இலக்கியங்களை
பூசிக்கிறதுக்கும் நெறய வித்தியாசமிருக்கு..

உங்களுக்குச் சொல்லலை..பொதுவான தமிழ்நாட்டி நிலவரத்துக்காக சொல்றன்..

January 30, 2006 1:24 PM
--

Dharumi said...
"மதுரையில் பிறந்தததால் தமிழார்வம் வந்தது."//
- கொஞ்சம் குற்ற மனப்பான்மை வருகிறதே, குமரன்.

January 30, 2006 10:18 PM
--

மதுமிதா said...
அப்ப நடனகோபால் சுவாமிகள் பாடல் வந்ததும் நான் ரசித்ததும் யூகித்ததும் சரிதானே
தொடர்ந்து எழுதுங்க
எனக்கு அந்தப் பாடல் விளக்கத்துடன் கூடிய புத்தகம் தேவை குமரன்

February 09, 2006 9:38 AM
--

குமரன் (Kumaran) said...
பாடல் புத்தகம் இருக்கிறது அக்கா. ஆனால் விளக்கங்கள் இருக்கான்னு தெரியலை. என்னோட 'மதுரையின் ஜோதி' வலைப்பூவைப் பாருங்க. முடிஞ்ச வரைக்கும் நாயகி சுவாமிகளின் பாடல்களுக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

February 09, 2006 11:35 AM
--

வெளிகண்ட நாதர் said...
வடக்கு வாழ்கிறது, தெற்கு தெய்கிறதுன்லாம் நம்ம தினா, மூனா, கானா அரசியல்வாதிங்க போடற் சத்தம் தான், நான் கூட தெலுங்கு தான், ஆனா உளமாற தமிழ் ஆர்வத்தில சின்ன புள்ளயிலருந்தே ஒரு ஈடுபாடு குமரன், மொழி என்பது கருத்து பரிமாறல் கொள்ள, பேசவதற்கு உண்டான மார்க்கமே தவிர, சர்ச்சைக்குறிய விஷயமில்லையே!

February 09, 2006 2:15 PM
--

குமரன் (Kumaran) said...
சரியா சொன்னீங்க வெளிகண்ட நாதர். மொழி என்பது சர்ச்சைக்குரிய விஷயமில்லை. ஆனால் அது பற்றி எனக்கு வந்த கேள்விகளைப் பார்த்து தான் இங்கு இந்தப் பதிவை இட்டேன்.

February 09, 2006 2:21 PM
--

Anonymous said...
இந்த தலைப்புல எழுதுரதுக்கு ரொம்ப தான் தில்லு தலை. இவ்ளோ நாள் பாக்கலையே இதை.

பம்பு

July 13, 2006 10:12 PM
--

Anonymous said...
சமஸ்கிருதமாவது வெங்காயமாவது!

இன்று பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஹிந்தி மெதுவாக சமஸ்கிருதமாகி வருகிறது.
இந்தியாவின் ஆட்சிமொழியாக ஹிந்தியைக் காட்டி சமஸ்கிருதத்தை நுழைக்கிறார்கள்.

"உனக்கு சமஸ்கிருதம் பெரிதென்றால் எனக்கு தமிழ்தான் பெரிது".

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை ஆக்குங்கள்.
அனைவரும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளலாம்.ஜெர்மனி.பிரெஞ்சு,சைனீஸ் அனைத்தும் கற்கலாம்.

நீ உனது மொழியை கட்டாயமாக்க நினைப்பதினால் உன் மொழி மீதும் உன் மீதும் வெறுப்பு வரக் காரணம்.

உனது கருத்துகளை,சடங்குகளை,மொழியை மற்றவர்கள்மேல் திணிப்பதோடல்லாமல்
மற்றவர்களை இழிவாக நினைப்பதும்,பேசுவதும் கூட உன்னை வெறுக்கத் தூண்டுகிறது.

("நீ" என்பது இங்கு பிராமணர்களைக் குறிக்கும்")

July 13, 2006 11:02 PM
--

வெற்றி said...
குமரன்,
படித்தேன்.

July 14, 2006 12:40 AM
--

Vajra said...
குமரன்,

தமிழும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள இலக்கண அடிப்படையில் உள்ள ஒற்றுமை, அக்ஷர மாலா (சமஸ்கிருதத்திலும்) அதே போல் தழிழ் எழுத்துக்கள் வரிசை இருப்பது பற்றியும் நல்ல தமிழ் தெரிந்த நீங்கள் எழுதுனீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும் என்று எனக்குப் படுகின்றது.

இன்றய தேதியில் பல தமிழ் பல்கலைக்கழகங்களில் "கழகக் கண்மணிகள்" தான் தமிழாராய்ச்சி என்ற பெயரில் எதையோ உளரிக்கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் கருத்து.

July 14, 2006 7:29 AM
--

இராம் said...
குமரன்,
தமிழ் பற்றி அருமையான கருத்தை பதித்திருக்கிர்கள்.எனக்கும் பல சவுராஷ்டரா நண்பர்கள் உண்டு.அம்முறையிலேயே நான் உங்களை ததா என அழைத்தேன்.மற்றொரு விசயம் உங்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை.சில தினங்களில் அதையை பதிவாக இடுகிறேன்.

நன்றி,

July 14, 2006 8:11 AM
--

குமரன் (Kumaran) said...
இப்போது புரிந்தது ராம் நீங்கள் ஏன் என்னை ததா என்று அழைத்தீர்கள் என்று.

எப்போது உங்கள் விரிவான பதிவை எழுதப் போகிறீர்கள்? எழுதியதும் சொல்லுங்கள்.

August 30, 2006 12:53 PM

குமரன் (Kumaran) said...

ஆமாம் கவிநயா அக்கா. அப்படித் தான். புதிய இடுகை போட்டாச்சு. நாளைக்கும் ஒரு மீள்பதிவும் புதிய இடுகையும் வரும்.

குமரன் (Kumaran) said...

ப்ரசன்னா,

கண்களைப் பொறுத்தவரை இரு கண்களும் சமமான அளவில் முக்கியமானவையே. ஆனால் உலக வழக்கில் உடம்பின் வலப்பகுதியை உயர்ந்ததாகவும் இடப்பகுதியை அவ்வளவு உயர்வில்லாததாகவும் சொல்வது இருக்கிறது. பணத்தை வலக்கையால் கொடுப்பதும் வாங்குவதும், வலக்கையாலேயே உண்பதும் எல்லா நல்ல செயல்களையும் செய்வதும், இடக்கையால் கால் கழுவுவதும், வலதுகால் எடுத்து முதன்முதலாக ஒரு வீட்டில் நுழைவதும் என்று பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

இலக்கிய மரபில் வலக்கண்ணுக்கு முதன்மை தருவார்கள். மனோன்மணியம் சுந்தர்ம் பிள்ளை 'கலைவாணி பகலவன் உதிக்கும் திசை நோக்கி நின்றால் அவளுடைய வலக்கண் தென்றிசையில் பேசப்படும் தமிழாகவும் இடக்கண் வடக்கே பேசப்படும் மொழியாகவும் அமைவதைக் காண்பவர்கள் தமிழின் பெருமையை உணர்வார்களே' என்று தமிழ்த்தாய் வாழ்த்தில் சொல்லுவார். அந்த வரிகளே என் நெஞ்சில் நின்று அந்த நண்பரிடம் அந்தப் பதிலைச் சொல்ல வைத்தது போலும்.

குமரன் (Kumaran) said...

ஆதரவிற்கு நன்றி பாலாஜி. இது வரை இரு மீள்பதிவுகள் வந்துவிட்டன. இன்னும் இரண்டாவது வரும். :-)

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். உங்கள் விதிகளில் முதல் விதி இந்த வாரத்தில் மீறப்படும். இரண்டாவது விதியைப் பின்பற்ற முயல்கிறேன். அவ்வளவு கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். :-) இதுவரை இரு மீள்பதிவுகளும் நான்கு புதிய இடுகைகளும் இட்டாயிற்று. உங்கள் இரண்டாவது விதி இதுவரை மீறப்படவில்லை. :-)

குமரன் (Kumaran) said...

பணிச்சுமை குறைந்த பின்னர் மீண்டும் வருக இரவிசங்கர்

குமரன் (Kumaran) said...

இராகவ்,

எனக்கும் பள்ளியில் அப்படித் தான். நிறைய சௌராஷ்ட்ர சிறுவர்கள் என்னுடன் படித்தார்கள். அதனால் பெரும்பாலும் பள்ளியில் கூட சௌராஷ்ட்ரத்திலேயே பேசிக் கொள்வோம். பக்கத்தில் இருக்கும் தமிழ்ச்சிறுவர்கள் தான் பாவம். சில நேரம் கடுப்பாகி 'வந்துட்டாய்ங்கடா காய்ரா பூய்ரான்னுக்கிட்டு' என்று கத்துவார்கள். :-)

குமரன் (Kumaran) said...

உங்கள் தமிழாசிரியர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் இரவிசங்கர்.

எந்த கண் துடித்தால் நல்லது என்று கேட்டிருக்கிறீர்கள். ஆண்களுக்கு வலக்கண்ணும் பெண்களுக்கு இடக்கண்ணும் துடித்தால் நல்லது என்று சகுனம் பார்ப்பவர்கள் சொல்வார்கள். அதன்படி பார்த்தால் எனக்குத் தமிழென்றால் துடிக்க வேண்டும் தானே. :-)

குமரன் (Kumaran) said...

ஸ்ரீதர் நாராயணன் சொன்னது மெத்தச் சரி. :-)

Raghav said...

//'வந்துட்டாய்ங்கடா காய்ரா பூய்ரான்னுக்கிட்டு' என்று கத்துவார்கள். :-)/

ஹா..ஹா.. அதே தான் எனககும். இப்பவும் ஆபீசில், நான் என் நண்பர்காளுடன் தொலைபேசியில், செளராஷ்ட்ராவில் உரையாடினால், காய்ரா மாய்ரா என்று தான் கமெண்ட் அடிப்பார்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஸ்ரீதர் நாராயணன் said...
//எந்தக் கண் துடிச்சா நல்லது குமரன்? :)))//
எக்கண் துடித்தாலும், அக்கணமே, மருத்துவர்கண் செல்வது நல்லது. :-))//

அண்ணாச்சி
நான் கேட்டது ரோட்டில் போகும் போது எதிர் வரும் அழகைப் பார்த்து எக்கண் துடித்தால் நல்லது-ன்னு கேட்டேன்!

அக்கணமே மருத்துவர் கண் வேண்டாம்! மருத்துவர் பெண் போதும்! :))

அக்கணமும் இக்கணமும் எக்கணமும், அழகினிலே சொக்கணும்! என்ன கண்ணு துடிக்கா? இல்லை கை துடிக்கா? :))

ப்ரசன்னா said...

அருமையான விளக்கம் குமரன். விளக்கியதற்கு நன்றி.

தமிழ் said...

/இந்தப் பின்புலத்தின் என்னிடம் கேட்கப்படும் 'உனக்கு தமிழ் அதிகமாய்ப் பிடிக்குமா?
சமஸ்கிருதம் பிடிக்குமா?' என்ற கேள்விக்கு நான் கூறும் பதில்,
'எனக்கு இரண்டு மொழிகளும் இரண்டு கண்களைப் போன்றவை.
கண்களில் எதை அதிகமாய்ப் பிடிக்கும் என்று சொல்வது. இரண்டும் பிடிக்கும்' என்பதே./

தாங்கள்
செல்வது முற்றிலும் உண்மை

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரண்டாவது விதியைப் பின்பற்ற முயல்கிறேன். அவ்வளவு கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். :-) இதுவரை இரு மீள்பதிவுகளும் நான்கு புதிய இடுகைகளும் இட்டாயிற்று. உங்கள் இரண்டாவது விதி இதுவரை மீறப்படவில்லை. :-)//

என்ன விளையாடூறீங்களா குமரன்?
2. அப்படி நல்ல சில மீள்பதிவுகள் தந்தே ஆக வேண்டிய கட்டாயம் வந்தால்....

வழமையாக இடும் நட்சத்திரப் புதுப் பதிவுகளோடு கூடவே...

ஒரு மீள்பதிவுக்கு, இரண்டு எக்ஸ்ட்ரா புதுப்பதிவுகள் என்ற விகிதத்தில் அதே வாரத்தில் தரப்பட வேண்டும்!

போதுமா? :)
KRSPC-Section 12 Article 356Amendment-01

ஓகை said...

ஆரியமும் தமிழும் இரண்டு கண்கள் என்று சொல்வது தமிழைத் (முதல்) தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு சாத்தியம்தான்.

ஆனால் தமிழ் பேசினால் தீட்டு என்று எங்காவது படிக்கும் போது உங்கள் இரண்டு கண்களும் கலங்கும் என்றுதான் நான் நம்புகிறேன்.

ஆரியம் வெறுப்புக்குள்ளாவது இப்படி சிலர் பேசுவதால்தான்.

ஆரியத்தை உயர்த்த தமிழைப் பழிக்கத் தேவையில்லை என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையென்றால் அதனால் இழப்பு ஆரியத்துக்குத்தான்.

காரியார்த்தமாக ஆரியத்தைப் பழிப்பவர்கள் இந்துமதத் தமிழ் நாத்திகர்கள் மட்டும்தான். ஆனால் ஆத்திகர்களாலும் அளவற்ற பக்திப் பெருக்கை அள்ளித்தருகிற தமிழின் சுவையை உணரக் கூடியவர்களாலும் கூட தமிழ் சில நேரம் இழிவுக்குள்ளாகும் போது தமிழ்க் கண்கள் இரத்தம் சுரக்கின்றன.

ஆரியத்துடன் தமிழைச் சொல்லும்போது எங்கிருந்தோ வந்து ஒரு தேள்கொடுக்கு நாநுனியில் ஒட்டிக் கொள்கிறதே அது ஏன்?

இது ஆரியத்துக்குத்தான் இழப்பு.

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி ப்ரசன்னா.

குமரன் (Kumaran) said...

நன்றி திகழ்மிளிர்.

குமரன் (Kumaran) said...

இந்த முறை நான் எழுத வேண்டும் என்று எண்ணிய இடுகைகள் இப்போது பதிந்து வரவில்லை இரவிசங்கர். வேறு இடுகைகளையே புதிதாக எழுதி வருகிறேன். அதனால் உங்கள் இரண்டாவது விதியும் மீறத்தான் வேண்டும் போலிருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

ஓகை ஐயா.

//ஆரியமும் தமிழும் இரண்டு கண்கள் என்று சொல்வது தமிழைத் (முதல்) தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு சாத்தியம்தான்.//

இந்த வரிகள் சொல்லும் கருத்தான தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு ஆரியம் கண் என்று சொல்ல இயலாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இன்னும் சில நண்பர்கள் அப்படி சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆரியத்தின் பாற்பட்ட பிராகிருத மொழிகளில் ஒன்றான சௌரசேனியின் வழியில் வந்தது சௌராஷ்ட்ரம். அதனைத் தாய்மொழியாகக் கொண்ட எனக்கு அப்படி சொல்வது இயற்கை என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றிகள்.

//ஆனால் தமிழ் பேசினால் தீட்டு என்று எங்காவது படிக்கும் போது உங்கள் இரண்டு கண்களும் கலங்கும் என்றுதான் நான் நம்புகிறேன்.
//

கட்டாயமாக. கலங்க மட்டும் இல்லை குருதிக் கண்ணீரும் சொரியும்.

//ஆரியம் வெறுப்புக்குள்ளாவது இப்படி சிலர் பேசுவதால்தான்.
//

இது அவன் செய்வதால் நான் செய்கிறேன் என்று சொல்லும் அறிவின்மையைப் போல் தோன்றினாலும் நடைமுறையில் இப்படித் தான் எல்லோரும் செய்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். என்னை ஒருவர் திட்டும் போது என் அறிவினையும் மீறி திட்டியவரை நான் திருப்பித் திட்டுகிறேன்.

குமரன் (Kumaran) said...

//ஆரியத்தை உயர்த்த தமிழைப் பழிக்கத் தேவையில்லை என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையென்றால் அதனால் இழப்பு ஆரியத்துக்குத்தான்.
//

இது இரு பக்கமும் செல்லும் ஐயா. தமிழை உயர்த்த ஆரியத்தைப் பழிக்கத் தேவையில்லை என்பது அடிப்படை அறிவு தானே. அங்கும் இழப்பு ஏற்படுவது யாருக்கு?

//ஆரியத்துடன் தமிழைச் சொல்லும்போது எங்கிருந்தோ வந்து ஒரு தேள்கொடுக்கு நாநுனியில் ஒட்டிக் கொள்கிறதே அது ஏன்? //

இது என்ன என்று புரியவில்லை. எனக்கு அப்படி தேள் கொடுக்கு நா நுனியில் ஒட்டிக் கொள்வதில்லை.

ஓகை said...

//..//ஆரியத்துடன் தமிழைச் சொல்லும்போது எங்கிருந்தோ வந்து ஒரு தேள்கொடுக்கு நாநுனியில் ஒட்டிக் கொள்கிறதே அது ஏன்? //

இது என்ன என்று புரியவில்லை. எனக்கு அப்படி தேள் கொடுக்கு நா நுனியில் ஒட்டிக் கொள்வதில்லை.//

தமிழ்ப்பணியும் ஆன்மிகப் பணியும் சிறப்பாக இணையத்தில் ஆற்றிவரும் உங்களை நான் அப்படிச் சொன்னால் நரகம் என்னை விரைந்தழைக்காதா?

இணையத்தில் சில கட்டுரைகளும் நான் நேரில் பேசும்போது சிலரும் தெரிவிக்கும் கருத்துகள்தான் என்னை அவ்வாறு எழுதத் தூண்டுகிறது. தமிழும் தமிழில் இருப்பவையும் செங்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்னும் பொய்க்கருத்து செங்கிருத மையல் கொண்ட பலர் மனதில் வேர் ஊன்றியிருக்கிறது.

//இது இரு பக்கமும் செல்லும் ஐயா. தமிழை உயர்த்த ஆரியத்தைப் பழிக்கத் தேவையில்லை என்பது அடிப்படை அறிவு தானே. அங்கும் இழப்பு ஏற்படுவது யாருக்கு?//

தமிழ் இழிவுபடுத்தப்படும் அளவுக்கு செங்கிருதம் இழிவுப்படுத்தப்படுவதில்லை.

//காரியார்த்தமாக ஆரியத்தைப் பழிப்பவர்கள் இந்துமதத் தமிழ் நாத்திகர்கள் மட்டும்தான்.//

என்ற ஒரு கருத்தை நான் கூறியிருந்தேன். நாத்திகர்களின் கருத்துகள் சிந்திக்கத் தக்கவை. உண்மைகளை வெளிக்கொணரும் சக்தி கொண்டவை. இவர்களால் எந்த மொழியும் பழிக்கபெறாது. ஆனால் இந்துமத தமிழ் நாத்திகர்கள் கபடர்கள். இவர்கள் சொல்வதை நான் பொருட்படுத்துவது கிடையாது. பெண் தெய்வங்களுக்கு மாதவிடாய் வருமா என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்பவர்கள் அதே இழையில் செங்கிருதத்தையும் இழிவு படுத்திப் பேசுவதை பொருட்படுத்தினால் அவர்கள் சொல்லும் மற்றவற்றையும் பொருட்படுத்தவேண்டும்.

ஆனால் இவர்கள் கூட செங்கிருதம் தீண்டத் தகாதது என்று கூறவில்லை என்பதைக் கவனிப்பீர்களாக!

ஆன்மிக வழியில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட நாம் இதே நம்பிக்ககை கொண்டவர்களால் தமிழ் குறைத்துப் பேசப்படும் போது உரத்து கண்டிக்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

//இணையத்தில் சில கட்டுரைகளும் நான் நேரில் பேசும்போது சிலரும் தெரிவிக்கும் கருத்துகள்தான் என்னை அவ்வாறு எழுதத் தூண்டுகிறது.//

விளக்கத்திற்கு நன்றிகள் ஓகை ஐயா.

//தமிழ் இழிவுபடுத்தப்படும் அளவுக்கு செங்கிருதம் இழிவுப்படுத்தப்படுவதில்லை.//

இது பார்க்கும் பார்வையைப் பொறுத்தது என்று நினைக்கிறேன் ஐயா. தமிழை குறிப்பாகக் கூட தாழ்த்திப் பேசினால் தமிழரான உங்களுக்கும் தமிழை இரண்டாம் தாய் மொழி என்கின்ற எனக்கும் உடனே புரிகிறது; மனது எரிகிறது. ஆனால் செங்கிருதத்தை நேரடியாகக் கிண்டலும் கேலியும் செய்யும் பல பதிவுகளும் பேச்சுகளும் வரும் போது நமக்கு எரிவதில்லை. ஆரியத்தை இன்னொரு கண் என்னும் என்னால் அதனையும் உணர் முடிகிறது. எத்தனை திரைப்படங்களில் ஆரியம் நகைச்சுவை என்ற பெயரில் கிண்டலடிக்கப்படுகிறது என்று நான் சொல்லவும் வேண்டுமா? தேங்காய் சினிவாசன் முதல் விவேக் வரை செய்வது தானே. பூவராகன் என்று ஒரு தலித்திற்குப் பெயர் வைத்துவிட்டார்கள் என்று அது தலித்தைப் பன்றி என்று சொல்கிறார்கள் என்று ஆயிரம் பொருள் கண்டு கொள்பவர்களால் இந்தக் கிண்டல் கண்டு கொள்ளப்படாமல் தானே இருக்கிறது. மொழி, சாதி, வர்க்கம் என்று எந்த விதமான பிரிவுகளைப் பார்த்தாலும் இரண்டு பக்கமும் எல்லா பக்கமும் ஒருவரை மற்றொருவர் இழிவு செய்வது என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. நமக்கும் நாம் இழிவுபடுவது மட்டுமே தெரிகிறது. :-)

குமரன் (Kumaran) said...

//நாத்திகர்களின் கருத்துகள் சிந்திக்கத் தக்கவை. உண்மைகளை வெளிக்கொணரும் சக்தி கொண்டவை. இவர்களால் எந்த மொழியும் பழிக்கபெறாது. ஆனால் இந்துமத தமிழ் நாத்திகர்கள் கபடர்கள். //

ஏறக்குறைய என் எண்ணமும் அது தான். :-) அவர்கள் சொல்வதில் பல நகைச்சுவையாகப் படிக்க நன்றாக இருக்கும். :-)

//ஆனால் இவர்கள் கூட செங்கிருதம் தீண்டத் தகாதது என்று கூறவில்லை என்பதைக் கவனிப்பீர்களாக!
//

இவர்கள் சொல்வதில்லை. நேரடியாக செயலில் தான் இறங்குகிறார்கள். முதல் முறை நான் தமிழ்மண விண்மீனாக இருந்த போது தான் இந்த 'தமிழும் செங்கிருதமும் என் இரு கண்கள்' என்று சொன்னேன். அதிலிருந்து என் மேல் தொடுக்கப்பட்ட கேவலமான தாக்குதல்களையும் அந்த தாக்குதல் தொடுத்தவர்களையும் அவர்களின் நண்பர்களையும் மறக்க இயலாது. மன்னிக்க வேண்டுமானால் செய்ய முடியும். அவர்களின் செயல்களும் எண்ணங்களும் பேச்சுகளும் மிக மிகத் தெளிவாக செங்கிருதம் தீண்டத் தகாத மொழி என்று அவர்கள் சொல்லுவதைக் காட்டும்.

குமரன் (Kumaran) said...

//ஆன்மிக வழியில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட நாம் இதே நம்பிக்ககை கொண்டவர்களால் தமிழ் குறைத்துப் பேசப்படும் போது உரத்து கண்டிக்க வேண்டும்.//

பதிவுலகிலும் மெய்யுலகிலும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது ஐயா.

கோவி.கண்ணன் said...

குமரன்,

உங்களோட மூன்றாவது கண்தான் உங்களது தனிச்சிறப்பு !

உண்மைத்தமிழன் said...

மதுரையில் கீழவாசல், தெற்குவாசல், வண்டியூர், தபால்தந்தி நகர் வழியாகச் செல்கின்ற பஸ்களின் கண்டக்டர்களும், டிரைவர்களும்கூட சமயங்களில் செளராஷ்டிரா மொழி பேசி நோகடிப்பார்கள் குமரன்..

எனக்கு உற்ற நண்பர்கள் இரண்டு பேர் செளராஷ்டிரா சமூகத்தினர். நான் இன்றும் உரிமையுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று தங்கி வருகிறேன்.. அவ்வளவு அருமையாக வெளி ஆட்களிடம் பழகுகிறார்கள். என்ன கொஞ்சம் உறவுகளுக்கும் நெருக்கமில்லாமல், செட்டியார்களைப் போல் நடந்து கொள்வதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.(நான் பார்த்தவரையில்)

தமிழ், சமஸ்கிருதத்தைவிட மூன்றாவது கண்ணான உங்களது ஆன்மீகப் பற்றுதான் எனக்கு மிகவும் பிடித்தது..

கடவுளை எந்த மொழியில் வணங்கினால் என்ன? அவனவனுக்கு எது பிடிக்கிறதோ அதைச் சொன்னால் போதுமே.. குமரன் மலையிறங்கி வர மாட்டானா..?

வாழ்க வளமுடன்

cheena (சீனா) said...

அன்பின் குமரன்,

மீண்டும் ஒரு மீள்பதிவு - நன்று - அக்காலத்திற்குப் பிறகு வந்தவர்கள் படிப்பதர்கு வசதியாக நல்ல பதிவுகளை மீள்பதிவுகளாக வெளியிடுவது தவறில்லை. கேயாரெஸ்ஸின் அன்பான கட்டளைகள் - விதிமுறைகள் தங்களைக் கட்டுப்படுத்தாது.

அருமையான பதிவு. தமிழ் - சம்ஸ்கிருதம் - இரண்டும் ஆன்மீகம் பேசுபவை. ஆன்மீகப் பதிவர்களால் எந்த ஒன்றினையும் தவிர்க்க இயலாது. தவிர்க்க வேண்டிய தேவையுமில்லை. சிறு வயதிலேயே இறை அருள் பெற்ற தங்களுக்கு நல்வாழ்த்துகள்.

நான் தற்பொழுது மதுரையில் வசிப்பதாலும், எனது பள்ளி வாழ்க்கை மதுரையில் கழிந்ததாலும், எனக்கு சௌராஷ்ட்ர நண்பர்கள் பலர் உண்டு.

தற்பொழுது கூட அருமை நண்பன் சிவ முருகன் பெங்களூரிலிருந்து வந்து பார்த்து, உரையாடிச் சென்றான்.

நல்ல பதிவு - நல்வாழ்த்துகள்

Geetha Sambasivam said...

அருமையான இடுகைகளைத் தேடித் தந்திருக்கின்றீர்கள், பெண்களுக்கு இடப்பக்கம் தானே??? :)))))))))) ஆண்களுக்கு வேண்டுமானால் வலப்பக்கமாய் இருக்கலாம்! :P

குமரன் (Kumaran) said...

உண்மைத் தமிழன்.

உறவினர்களுடன் நெருக்கமான நடந்து கொள்ளாமல் இருந்தால் அது குறைபட்டுக் கொள்ள வேண்டிய ஒன்று தான். ஆனால் அதற்கு ஏன் 'செட்டியார்களைப் போல்' என்று சொன்னீர்கள் என்று புரியவில்லை. செட்டியார்களை தவறாகக் குறித்ததாக அது இருந்தால் அந்தப் பின்னூட்டம் என் பதிவில் இருப்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

என் மூன்றாவது கண்ணைப் பற்றி கோவி.கண்ணனும் சொல்லியிருக்கிறார். நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். இருவரும் ஒன்றையே சொல்லவில்லை என்று நினைக்கிறேன். ;-)

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சீனா ஐயா. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இரு மொழிகளும் தவிர்க்க இயலாதவை என்று பெரும் உண்மை.

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் தான் நல்லது என்று கூறுவது சகுண சாத்திரம். அது மட்டும் இல்லாமல் தமிழ் மரபும் அப்படித் தான் சொல்கிறது என்று ஹரியண்ணா இப்போது மின் தமிழில் தரவுகளுடன் சொல்லியிருப்பதை நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். :-)