முன்பெல்லாம் நட்சத்திர வாரத்தில் இடப்படும் இடுகைகள் ஒவ்வொன்றையும் விடாமல் படித்துவிடுவது வழக்கம். தொடர்ந்து எழுதி வரும் பதிவர்களை முன்னிறுத்துவது தான் நட்சத்திர வாரத்தின் நோக்கம் என்ற புரிதல் இருப்பதால் அப்படி தொடர்ந்து செய்து வந்தேன். ஆனால் அண்மைக்காலமாக வேறு வேலைகள் (வேறென்ன - அலுவலக வேலைகளும் வீட்டு வேலைகளும் தான்) மிகுதியாகிவிட்டதால் தொடர்ந்து பதிவும் எழுத இயலுவதில்லை; விடாமல் நட்சத்திரங்களில் இடுகைகளைப் படிப்பதும் முடிவதில்லை.
வலைப்பதிவுகளில் ஒரு வெளிப்படையாகச் சொல்லாத கொடுக்கல் வாங்கல் கணக்கு உண்டு. ஒருவருடைய பதிவுக்குத் தொடர்ந்து சென்று பின்னூட்டம் இட்டால் தான் அவர் நம் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இடுவார். நீங்கள் பின்னூட்டம் இடாமல் படித்துவிட்டு மட்டும் வந்துவிட்டால் அவரும் அதையே செய்வார். சிலரே இந்த பின்னூட்ட கொடுக்கல் வாங்கல் கணக்கைப் பொருட்படுத்தாமல் செயல்படுபவர்கள். பெரும்பாலோனோர் பதிவுகளை கூகுள் ரீடரில் வைத்திருப்பதால் நேரம் தாழ்த்தியாவது அவர்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சில நேரங்களில் காலம் தாழ்த்தி இடப்படும் பின்னூட்டங்களை அந்த நண்பர்கள் மதிப்பதில்லை. சில நேரங்களில் காலம் தாழ்த்தி என்ன பின்னூட்டம் இடுவது என்று தெரியாததால் நானும் பின்னூட்டம் இடுவதில்லை. ஆகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான் அவர்களது இடுகைகளைப் படிப்பதே இல்லை என்றொரு தோற்றம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
கொடுக்கல் வாங்கல் கணக்கு பார்க்காமல் நான் காலம் தாழ்த்தியாவது பின்னூட்டம் இடும் பதிவர்கள் பலர் உண்டு. அவர்களில் யாருமே என் இடுகைகளுக்குப் பின்னூட்டங்கள் இப்போதெல்லாம் இடுவதில்லை. அதற்கு மேற்சொன்ன தோற்றம் ஏற்பட்டுவிட்டது தான் காரணம் என்று நினைக்கிறேன்.
இவை எல்லாம் மனத்தில் இருந்ததால் சென்ற முறை விண்மீன் ஆன போது கிடைத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையோ படிப்பவர்களின் எண்ணிக்கையோ இந்த முறை கிடைக்காது என்று தோன்றியது. அது மட்டுமின்றி என் மேல் ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொரு விதமான முத்திரை இப்போது விழுந்துவிட்டது. அதுவும் ஒரு தடையாக அமையும் என்று தோன்றியது. அதனால் இந்த வாரம் ஒரு மந்தமான வாரமாகத் தான் செல்லப்போகிறது என்ற எண்ணம் இருந்தது.
ஆனால் எதிர்பார்த்ததை விட இந்த வாரம் மிக சுவையாகவே சென்றது என்பது என் எண்ணமும் புரிதலும். சரி தானா? உங்களுக்கும் அப்படித் தான் தோன்றியதா?
முன்னோட்டத்தில் சொன்ன இடுகைகள் அனைத்தையும் இந்த வாரத்தில் இட முடியாவிட்டாலும் முக்கால்வாசிக்கும் மேல் இட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். முதல் விண்மீன் வாரத்தில் இட்ட நான்கு இடுகைகளை இந்த வாரத்தில் மீள்பதிவாக்கமும் செய்தேன். அவையும் சுவையாக இருந்தன என்று எண்ணுகிறேன்.
சென்ற முறை 'எழுத வந்த மூன்றே மாதத்தில் கிடைத்த வாய்ப்பு' என்ற கிளர்ச்சி மனத்தில் இருந்தது போலும். அதனால் வீட்டிலும் அலுவலகத்திலும் அதன் பாதிப்பு நன்கு தெரிந்தது. மனக்குறைகளும் எழுந்தன. இந்த முறை அந்த கிளர்ச்சி இல்லை போலும். வீட்டில் நேற்று 'இந்த வாரம் விண்மீன் வாரம் நினைவிருக்கிறதா?' என்று கேட்ட பின்னர் தான் 'ஆமாம். சொன்னீங்கல்ல? நிறைய எழுதலையா?" என்று கேட்டார்கள். 'அப்பாடா. இந்த முறை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என்று மகிழ்ந்தேன். ஆனால் அலுவலகத்தில் நிறைய வேலை முடிக்க வேண்டியிருக்கிறது. திரும்பவும் வழக்கமான நிரலுக்கு வர நான்கு வாரங்களாவது ஆகும் என்று நினைக்கிறேன்.
சில இடுகைகளுக்கு வலுவான மாற்றுக் கருத்துகளும் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒரே ஒரு இடுகைக்கு மட்டும் என் பதிவுகளுக்கு அவ்வளவாய் வராத புதியவர்கள் (அவர்கள் எல்லோரும் அறிந்த பதிவர்கள் தான். என் பதிவுகளுக்குப் புதியவர்கள்) வந்து பின்னூட்டங்கள் இட்டு கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக நிறைய கருத்து சொல்லும் நண்பர்கள் வெளியூர் சென்று விட்டார்கள் போலும். இருப்பவர்களும் ஏதோ காரணத்தால் ஒரு பின்னூட்டத்தோடு நிறுத்திக் கொண்டார்கள். சிலர் என் மூன்றாவது கண்ணிற்கு (நெற்றிக்கண் = சினம்?) பயந்தோ என்னவோ வாயே திறக்கவில்லை. :-)விண்மீன் வாரம் முடியட்டும்; ஒரு கை பார்க்கலாம் - என்று இருப்பவர்களும் நேரம் கிடைக்காததால் இன்னும் படிக்காதவர்களும் இனி மேல் வந்து படித்துப் பின்னூட்டங்கள் இட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். :-)
நான் அவர்கள் இடுகைகளுக்கு வருகிறேனோ இல்லையோ பின்னூட்டங்கள் இடுகிறேனோ இல்லையோ அதனை எல்லாம் மனத்தில் கொள்ளாமல் இந்த வாரத்தில் எழுதப்பட்ட பெரும்பான்மையான இடுகைகளைப் படித்து தங்கள் கருத்துகளைச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். நான் உங்கள் இடுகைகளுக்கு வருவதில்லை என்று எண்ணிக் கொண்டு படித்தோ படிக்காமலோ சென்ற நண்பர்களே - உங்கள் இடுகைகளுக்கு விரைவில் வந்து பின்னூட்டங்கள் இடுகிறேன் - குறை கொள்ள வேண்டாம்.
இந்த வாரம் எனக்கு எப்படி இருந்தது என்று சொல்லுவதை விட உங்களுக்கு எப்படி இருந்தது என்று சொன்னால் சுவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இந்த வாரத்தில் இருந்த நிறைகுறைகளையும் சொல்லுங்கள். அப்படியே வலப்பக்கம் இருக்கும் தேர்விலும் உங்களுக்குப் பிடித்த இடுகைகளைப் பற்றி சொல்லுங்கள்.
மீண்டும் முன்னாள் விண்மீன் ஆகிறேன். தமிழ்மணத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. என்னை விட அதிக துடிப்புடன் இந்த வாரத்தை நடத்திச் சென்ற கிசுகிசுக்கள் என்று தலைப்பிட்டு புதிரா புனிதமா இடுகை இட்ட நண்பர் இரவிசங்கருக்கும், என்னுடைய பதிவுலக ஆளுமைக்குறிப்பை(Biodata) இட்ட நண்பர் சிவமுருகனுக்கும், எல்லா இடுகைகளையும் விடாமல் படித்துப் பின்னூட்டம் இட்ட கவிநயா அக்காவிற்கும் சிறப்பு நன்றிகள்.
27 comments:
இந்த இடுகையை இரண்டாவதாக இடவேண்டி வந்தது. முதல் முறை இட்டத்தில் ஏதோ பிரச்சனை. தமிழ்மணத்திற்கு அனுப்ப இயலவில்லை. அதனால் இரண்டாம் முறை இட்டு தமிழ்மணத்திற்கு அனுப்பினேன்.
முதல் முறை இட்ட இடுகையில் கவிநயா அக்கா இட்ட பின்னூட்டம் இதோ:
உங்களிடம் எனக்கு பிடிச்சதே மனசில பட்டதை அப்படியே சொல்லுவதுதான் :) எனக்கும் ஆசைதான், ஆனா இவ்வளவு அழகா தெளிவா சொல்ல தெரியாது! நீங்க பின்னூட்டம் பற்றி சொன்னதெல்லாம் நானும் உணர்ந்திருக்கேன். நமக்கு வேணும்கிறதை, பிடிச்சதை படிக்கிறோம். ரெண்டு வார்த்தை நல்லதா சொன்னா எழுதினவங்களுக்கு மகிழ்ச்சி. மற்றபடி நீங்கள் விண்மீனா எழுதினாலும் மண்மீனா எழுதினாலும் நான் எப்பவும் படிப்பேன் :) உங்க நட்சத்திர வாரம் என்னை பொறுத்த வரை அசத்தலாக இருந்தது, என்னமோ எங்க வீட்டு விசேஷம் போல! (எனக்கும் வேலை ஜாஸ்தி குடுத்துட்டீங்க!) வாழ்த்துகள்!
சுவைஞனாக இருப்பவருக்கு
கொடுக்கல் வாங்கல் கணக்கு தெரியாது
/உங்களிடம் எனக்கு பிடிச்சதே மனசில பட்டதை அப்படியே சொல்லுவதுதான் :) எனக்கும் ஆசைதான், ஆனா இவ்வளவு அழகா தெளிவா சொல்ல தெரியாது! நீங்க பின்னூட்டம் பற்றி சொன்னதெல்லாம் நானும் உணர்ந்திருக்கேன். நமக்கு வேணும்கிறதை, பிடிச்சதை படிக்கிறோம். ரெண்டு வார்த்தை நல்லதா சொன்னா எழுதினவங்களுக்கு மகிழ்ச்சி. மற்றபடி நீங்கள் விண்மீனா எழுதினாலும் மண்மீனா எழுதினாலும் நான் எப்பவும் படிப்பேன் :)/
கவிநயா அக்காவின்
கருத்தே எனதும்
//சிலர் என் மூன்றாவது கண்ணிற்கு (நெற்றிக்கண் = சினம்?) பயந்தோ என்னவோ வாயே திறக்கவில்லை. :-)//
அது எப்படி மிகச் சரியாகச் சொல்கிறீர்கள் ?
இதுதான் புரிந்துணர்வு
:)
வெற்றிகரமாக எண்ணியதை படைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள். உங்களின் நிழல்படம் ஒன்றை போட்டிருக்கலாம். பழைய பதிவர்களுக்கு உங்கள் புகைப்படம் தெரிந்திருக்கும், புதியவர்களுக்கு தரிசனம் தந்திருக்கலாமே ? முதலிலேயே சொல்ல நினைத்தேன். வற்புறுத்தல் போல ஒலித்துவிட்டால் ... அதனால் கேட்கவில்லை.
அலோ...
என்ன இது நட்சத்திரமே? கேட்பார் யாருமில்லை-ன்னு நினைச்சீங்களா?
இன்னும் ஒரு நாள் பாக்கி இருக்கே! அதுக்குள்ள யாரு ஒங்கள இந்த இடுகையைப் போடச் சொன்னா?
Teacher-Ask Kumaran to satnd up on the bench! :)
//திரும்பவும் வழக்கமான நிரலுக்கு வர நான்கு வாரங்களாவது ஆகும் என்று நினைக்கிறேன்.
//
No post star-week blues! :)))
Athellam appo! Ippo neenga seasoned star!
*********
மேலே போட்டது நட்சத்திரப் பின்னூட்டம்! :)
எண்ணிப்பாருங்க!
கோளறு திருப்பதிகம் வந்துரும்! :)
//என்னை விட அதிக துடிப்புடன் இந்த வாரத்தை நடத்திச் சென்ற நண்பர் இரவிசங்கருக்கும்//
இதுல கிலோ கணக்கு இல்ல டன் கணக்குல உகு, வெகு எல்லாம் இருக்கு என்பதை மட்டும் சொல்லிக்கறேன்! :)
கொத்ஸ், ஹெல்ப் ப்ளீஸ்! :)
இந்தவாரம் அநேகமா எல்லாருக்கும் ஒலிபிக்ஸ்லே ஆணி பிடுங்கவேண்டியதாப் போச்சு. அதனால் சும்மாப் படிச்சுட்டு ஓடுனேன்.
மத்தபடி நல்ல வாரம்தான்.
இடுகைக்கள் எல்லாம் படிக்க நன்றாக இருந்தது குமரன்...வாழ்த்துக்கள்.
இடுகைக்கள் எல்லாம் படிக்க நன்றாக இருந்தது குமரன்...வாழ்த்துக்கள்.
குமரன், நிறைய விஷயங்கள் நான் உங்க நட்சத்திர வாரத்தில தெரிஞ்சுகிட்டேன். இனிமே தான் உங்களோட முந்தைய(2006,2007) இடுகைகளை எல்லாம் படிக்கனும்.
அதானே, என்னடா பின்னூட்டம் follow-up போட மறந்துட்டேனோன்னு நினைச்சேன்... :)
நிறைவானதொரு வாரத்தை தந்தமைக்கு நன்றிகள் குமரன். இப்போதென்றில்லை, உங்கள் இடுகைகள் எப்போதுமே நிறைவாக இருக்கின்றன.
அடுத்த வாரம் நான் இந்த நட்சத்திரக் குப்பையைக் கொட்டவிருக்கிறேன். உங்களைத் தொடர்ந்து piggy back செய்வதில் மகிழ்ச்சி!
மனமார்ந்த வாழ்த்துகள் ஜீவா. அப்ப எனக்கு விண்மீன் வாரம் அடுத்த வாரத்திலும் தொடர்கிறதா? விடாமல் உங்கள் இடுகைகளை இந்த வாரத்திலேனும் இட்டவுடன் படித்துவிட வேண்டும். அதைச் சொல்கிறேன். :-)
வாழ்த்துகள் ஜீவா!
விண்மீன் வாழ்த்துகள் மீண்டும். இந்த வாரம் நல்லாப் போச்சு. அகலிகை பதிவு எனக்குப் பிடிச்சிருந்தது. பின்னூட்டம் எழுத நேரமில்லை, ஆனாலும் சட்டாம்பொண்ணு வேலைக்கு வந்தாச்சு.
டீச்சர் வந்தும் பெஞ்சில் ஏறி நிற்கச் சொல்ல மறந்து விட்டதால், தம்பி சொல்படி, ஏதேனும் பார்க் பெஞ்சில் / கார்டன் பெஞ்சில் ஏறி நின்று ஆதாரமாக ஃபோட்டோ வெளியிடவும். ஹிஹி.
இந்த வாரம் விருந்தளித்த உங்களுக்கும், வரும் வாரம் விருந்தளிக்கவிருக்கும் ஜீவாவுக்கும் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி கவிநயா அக்கா. நன்றி. :-)
மிக நன்றாகச் சொன்னீர்கள் திகழ்மிளிர். நன்றி.
புதியவர்களில் பார்க்க விரும்புபவர்களுக்குப் புகைப்படம் தருவதில் மறுப்பில்லை கோவி. கண்ணன். அப்படி விரும்புபவர்களுக்குத் தனிமடலில் அனுப்புகிறேன். நன்றி.
இன்னும் வழக்கமான நிரலுக்கு வரவில்லை இரவிசங்கர். ஆனால் விண்மீன் வாரத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று வாரங்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்வது இந்த முறை தேவைப்படவில்லை. :-)
நன்றி துளசி அக்கா.
நன்றி மௌலி.
நன்றி கெக்கேபிக்குணி அக்கா. தம்பிக்கு ஏற்ற தமக்கையாக இருக்கிறீர்களே. :-)
நன்றி ஜீவி ஐயா.
Post a Comment