Wednesday, August 06, 2008

பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து பூங்கழல் காட்டியப் பொருளே!


பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!

பாச வேர் அறுக்கும் - பந்த பாசங்கள் எனும் பற்றுதல்களின் வேரினை அறுக்கும்

பழம்பொருள் தன்னைப் - எல்லாவற்றிற்கும் மூத்ததான பழம்பொருளாகிய இறைவனைப்

பற்றுமாறு அடியனேற்கருளிப் - பற்றுமாறு அடியவனுக்கு அருளி

பூசனை உகந்து - என் சிறிய வழிபாட்டினை மகிழ்ந்து விரும்பி ஏற்றுக் கொண்டு

என் சிந்தையுள் புகுந்து - என் உள்ளத்துள் புகுந்து

பூங்கழல் காட்டியப் பொருளே! - தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய நிலையான பொருளே!

தேசுடை விளக்கே! - ஒளியுடன் கூடிய விளக்கே

செழுஞ்சுடர் மூர்த்தி! - விளக்கினில் தோன்றும் சுடர் வடிவானவனே!

செல்வமே! - என் ஒரே செல்வமே!

சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!
- என் தலைவனான சிவபெருமானே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். என்னை விட்டு நீ எங்கும் செல்ல முடியாது.

பந்த பாசங்கள் எனும் பற்றுதல்களின் வேரினை அறுக்கும் எல்லாவற்றிற்கும் மூத்ததான பழம்பொருளாகிய இறைவனைப் பற்றுமாறு அடியவனுக்கு அருளி என் சிறிய வழிபாட்டினை மகிழ்ந்து விரும்பி ஏற்றுக் கொண்டு என் உள்ளத்துள் புகுந்து தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய நிலையான பொருளே! ஒளியுடன் கூடிய விளக்கே! விளக்கினில் தோன்றும் சுடர் வடிவானவனே! என் ஒரே செல்வமே! என் தலைவனான சிவபெருமானே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். என்னை விட்டு நீ எங்கும் செல்ல முடியாது.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியொ' பதிவில் 16 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே!//

பூசையின் நோக்கம் என்ன என்று தெளிவாகச் சொல்கிறார் மணிவாசகர்.
"பூசனை உகந்து, சிந்தையுள் புகுந்து"
சிந்தையில் புகவே பூசை.
புகுந்த பின், பூசையைக் காட்டிலும் இறைஅன்பே மேலோங்கி நிற்கும். ஆனால் அதனைப் படிப்படியாகவே அடைய முடியும்; பூவாகி, காயாகித் தான் கனிய முடியும்!

மேலும், இதே போல் ஒவ்வொரு பாட்டிலும், "சிக்கென", "சிக்கென" என்றே பாடுகிறார்.
அகப்படுவாயா, அகப்படுவாயா என்று எங்கும் ஓடி விடாதபடி, அகப்படுமாறு, நம் அகம் படுமாறு, பிடிக்க வேண்டும். நல்ல டெக்னிக் சொல்லிக் கொடுக்கிறார் நம் மணிவாசகப் பெருமான்.

"சேரும் தண் அனந்தபுரம் ""சிக்கெனப்"" புகுதீர் ஆகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்"
என்று நம்மாழ்வாரும் அதே "சிக்கென" என்ற சொல்லைப் பயன்படுத்துவது மிகவும் வியப்பு அளிக்கிறது!

மனங்கள் ஒன்றுபட்டால், வார்த்தையும் ஒன்றாகும் என்பது இது தானோ? சிவசிவ!!

October 16, 2006 1:24 PM
--


வல்லிசிம்ஹன் said...
அஞ்ஞானம் அகல சிவனை நாட வேண்டும்.
சிவஞானம் இருந்தால் பற்றும் விபூதியுடன்
மற்ற பாசங்கள் அகலும்.

விளக்கும் அவனே, ஒளியும் அவனே.
சுடரும் அவனே என்றதால்

ஆத்மாவின் தளைகள் அந்த தழலில் தூசாகும்.நன்றி குமரன்.

October 16, 2006 11:35 PM
--

SK said...
திரு. ரவி,
நான் செய்யும் பூசனையால் நீ உகந்து, மகிழ்ந்து என் சிந்தையுள் புக வேண்டும் அப்படிப் புகும் போது தந்திரமாக சிக்கென உன்னைப் பிடித்து வைத்துக் கொள்வேன் என்று சொல்லுகிரார் எனஒப் படித்தென்.

நீங்கல் சொல்லும் பொருளும் நன்றாகத்தான் இருக்கிறது.

October 17, 2006 12:08 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
நல்ல பாடல் நல்ல விளக்கம்.கே.ஆர்.ஸின் ஒப்பு உவமையும் அருமை.

October 17, 2006 12:38 AM
--

குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். நன்கு அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். இந்த பாடலின் அடியேன் அனுபவத்தை அடுத்தப் பதிவில் எழுதுவேன். திருவாசகத்திற்கு மட்டும் முதல் பதிவில் பொருளை மட்டும் சொல்லிவிட்டு அடுத்தப் பதிவில் (பதிவுகளில்) அனுபவத்தைக் கூறிக்கொண்டிருக்கிறேன். முந்தையப் பாடல்களையும் பாருங்கள்.

October 20, 2006 12:39 PM
--

குமரன் (Kumaran) said...
நன்கு சொன்னீர்கள் வல்லியம்மா. நன்றிகள்.

October 20, 2006 12:40 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. தந்திரங்கள் செய்வதில் இராஜாவான (இராஜதந்திரியான) அவனிடமே தந்திரமா? அது தம் திறமா? நடப்பதைப் பேசுவோமே. :-) சகாதேவனிடம் ஒருமுறை அகப்பட்டான் என்றால் ஒவ்வொருமுறையும் அகப்படுவான் என்று என்ன கட்டாயம்? :-)

October 20, 2006 12:41 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி தி.ரா.ச.

October 20, 2006 12:42 PM

Kavinaya said...

//பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து பூங்கழல் காட்டியப் பொருளே!//

எனக்கு ரொம்பப் பிடித்த வரிகள். படிக்கப் படிக்கச் சுவை. சுகம். நன்றி குமரா.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் அக்கா. மிகச் சிறந்த வரிகள்.