Friday, August 22, 2008

*நட்சத்திரம்* - பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் தேவையா?

சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதே சில இடங்களில் சில சொற்கள் புரியாமல் போகும் நிலை இருக்கிறது. இது எல்லா மொழிகளுக்கும் உள்ள இயல்பு தான். எத்தனை சதவிகிதம் அப்படி புரியாமல் போகின்றது என்பதைப் பொறுத்தே அந்த மொழியின் வளர்ச்சியையும் தேய்வினையும் கூறிவிடலாம் என்று நினைக்கிறேன்.

என்றுமுள தென் தமிழின் சிறப்பியல்பு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பாடல் வரிகளை இன்று படித்தாலும் புரிவது தான். தமிழில் இருக்கும் பயிற்சிக்கு ஏற்ப அந்தப் புரிதல் சதவிகிதம் மாறும். நேரடியாக பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது புரிதல் குறை ஏற்பட இன்னொரு காரணமும் உண்டு. செய்யுள் இலக்கணத்திற்கு ஏற்பவும் புணர்ச்சி விதிகளுக்கு ஏற்பவும் சொற்கள் சேர்ந்தும் பிரிந்தும் இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும். அவற்றை நேரடியாகப் படிக்கும் போது அவை சட்டென்று புரியாது. அதே பாடல் தளை, சீர் போன்ற இலக்கணங்களைப் பொருட்படுத்தாமல் புணர்ச்சி விதிகளையும் பொருட்படுத்தாமல் தனித் தனிச் சொற்களாக பிரித்து எழுதப்படும் போது அவை விரைவில் புரிவதைக் காணலாம்.

சில நேரங்களில் எப்படி அந்தச் சொற்களைப் பிரித்து எழுதுவது என்றோ பிரித்து எழுதப்பட்டதை எப்படி தொடுப்பது என்றோ புரியாது. அப்போது துணை புரிவது முன்னோர் அந்த நூற்களுக்கு எழுதிய உரைகள் தான்.

மொழியின் இன்னொரு அழகும் சில நேரம் புரிதல் குறையை ஏற்படுத்தும். ஒரே சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பதும் பல சொற்களுக்கு ஒரே பொருள் இருப்பதும் என்பது மொழியின் அழகு. ஒரே சொல்லுக்குப் பல பொருட்கள் இருக்கும் போது எந்த பொருள் அந்த இடத்தில் பயின்று வருகின்றது என்று புரிந்து கொள்வதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக 'ஆழி' என்ற சொல்லிற்கு சக்கரம், கடல் என்ற இரு பொருளைக் கூறலாம். ஒவ்வொருவர் பார்வைக்கு ஏற்ப ஒவ்வொரு பொருள் தோன்றலாம். ஒவ்வொரு உரையாசிரியரும் ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொள்வதை இதனால் காணலாம். ஒரே பொருளுக்குப் பல சொற்கள் இருக்கும் போது வேறு வகையாக தடை ஏற்படுகிறது. அந்தப் பல சொற்களில் சில இன்றைக்குப் புழக்கத்தில் இருக்காது. அதனால் அவற்றின் பொருள் புரியாது. அந்தப் பொழுதிலும் கை கொடுப்பது முன்னோர் செய்த உரைகள் தான்.

சில நேரங்களில் சொற்களின் பொருள் காலவேகத்தில் மாறியிருக்கும். நாற்றம், காமம், கற்பு, களவு போன்ற சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவற்றிற்கு தற்கால பொருளைக் கொண்டால் இலக்கியத்தைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படும். கற்பு என்ற சொல்லை கல்வி என்ற பொருளில் எடுத்துக் கொள்ளாமல் தற்போதுள்ள பொருளில் எடுத்துக் கொண்டு 'கற்பழிக்கத் திருவுள்ளமே' என்று ஒரு ஆன்றோர் சொன்னதைத் தவறாகப் பொருள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அது போன்ற தடுமாற்றங்களும் குறை புரிதல்களும் நிகழும். அது போன்ற நேரங்களிலும் உரைகள் கை கொடுக்கும்.

இப்படி பழந்தமிழ் இலக்கியங்களைப் புரிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவியாக இருப்பது உரைகள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. பொருள் புரிந்து கொள்ள உதவுவதோடு உரை நூற்கள் இன்னொரு வகை நன்மையும் செய்கின்றன. அது என்ன என்று பார்ப்பதற்கு முன் உரை நூற்கள் எழும் சூழ்நிலைகளைப் பற்றி பார்க்கலாம்.

இன்றைக்கும் அடியேனைப் போன்றவர்கள் பாடல்களுக்குப் பொருள் சொல்லுவதற்கு என்ன காரணம்? மேலே சொன்னது போல் தனித் தனிச் சொற்களாகப் பிரித்து புழக்கத்தில் இல்லாத சொற்களின் பொருளைச் சொல்வது அந்தப் பாடல்களைப் புரிந்து கொள்ள பலருக்கும் உதவியாக இருக்கும் என்பது தானே. சட்டென்று இது தானே முதன்மையான காரணமாகத் தெரிகின்றது. யாரிடம் கேட்டாலும் இதுவே பதிலாக இருக்கும்.

ஆனால் இன்னும் நுணுகிப் பார்த்தால் உரை செய்பவர்களின் தேவை இன்னும் ஆழமானது. எந்த ஒரு இலக்கியமும் படைப்பும் அந்த அந்த காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும் போது அது மக்களிடையே மிக இயல்பாக நடை போடும். பலரும் அந்த இலக்கியங்களை பயில்வார்கள். நவீன இலக்கியங்கள், பின்நவீன இலக்கியங்கள் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றில் சில இவ்வகையில் அடங்கும். பழைய இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள் போன்று வகைப்படுத்தப்படும் இலக்கியங்களில் சிலவும் இவ்வகையில் அடங்குவதைக் காணலாம். அது ஏன் என்று பார்த்தால் மக்களின் தற்கால வாழ்க்கையையும் புரிதல்களையும் ஒட்டியே அந்த இலக்கியங்கள் அமைந்திருப்பதே. எடுத்துக்காட்டாக உடனே நினைவிற்கு வருவது 'பொன்னியின் செல்வன்' புதினம். அந்தப் புதினம் எழுதப்பட்டு அரை நூற்றாண்டிற்கு மேல் ஆன பின்னரும் இன்னும் அது மக்களின் நடுவே பெரும் செல்வாக்கோடு இருப்பதற்குக் காரணம் அது இன்னும் மக்களின் வாழ்க்கையையும் புரிதல்களையும் கனவுகளையும் ஒட்டி இருப்பதே.

அப்படி அமையாமல் சில இலக்கியங்கள் கால மாற்றத்தில் மக்களின் பார்வையில் தற்காலத்திற்கு ஏற்றவை இல்லை என்ற நிலைக்குச் சென்றிருக்கும். ஒரு காலத்தில் மக்களின் புரிதல், நம்பிக்கை, வாழ்க்கை போன்றவற்றோடு ஒட்டியிருந்த அந்த இலக்கியம் தற்போது விலகி நிற்பதைப் போல் தோற்றமளிக்கும். அப்படி நிகழும் போது அவை தற்காலத்திலும் மக்களின் புரிதல், நம்பிக்கை, வாழ்க்கை இவற்றிற்கு ஒட்டியே இருக்கின்றன என்று காட்ட எழுவதே உரைகள். இதற்கு எடுத்துக்காட்டாக திருக்குறள், கீதை போன்ற நூற்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான உரைகள் எழுவதைக் காணலாம்.

இப்படி ஒவ்வொரு பழைய நூலுக்கும் இருக்கும் உரைகளை எல்லாம் படிக்கும் போது மூல நூலை மட்டுமின்றி உரைகள் எழுதப்பட்ட கால கட்டத்தையும் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டுகிறது.

உரைகள் எழுதப்பட்ட கால கட்டத்தைப் பற்றி மட்டும் இன்றி உரையாசிரியர்களைப் பற்றியும் அவர்களின் நம்பிக்கைகள், அரசியல், குறிக்கோள் போன்றவற்றை பற்றியும் கூட உரைகளைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள இயல்கிறது. எடுத்துக்காட்டாக திருக்குறளின் உரைகளான நச்சினார்க்கினியர் உரை தொடங்கி இடைக்கால பரிமேலழகர் உரை அண்மைக்கால தேவநேயப் பாவாணர் உரை, கலைஞர் உரை, சுஜாதா உரை என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதே போல் சங்க இலக்கியங்களுக்கு மறைமலையடிகள் எழுதிய உரைகளைப் படித்தால் அவருடைய தனிப்பட்ட நம்பிக்கைகள், அரசியல், உரைகளை எழுதியதன் குறிக்கோள் போன்றவை புரியும்.

தற்காலத்தில் ஒருவர் ஆய்வு என்று இறங்கி உரைகள் செய்தாலும் அப்படியே. அவர்களது தனிப்பட்ட நம்பிக்கைகள், அரசியல், குறிக்கோள்கள் போன்றவை தெளிவாகத் தெரியும். அடியேன் எழுதும் இலக்கிய உரைகளும் அப்படியே. :-)

முன்னுரை போதும் என்று நினைக்கிறேன். இவ்வளவு நீண்ட முன்னுரையா என்று கேட்காதீர்கள். :-) எழுத நினைத்தது தொல்காப்பியத்திற்கான இளம்பூரணரின் உரையையும் திருக்குறளுக்கான நச்சினார்க்கினியரின் உரையையும் படித்த போது கிடைத்த சில சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தான். முன்னுரை என்று எழுதத் தொடங்கி இவ்வளவு நீண்டுவிட்டது. ஆனால் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன். :-)

****

தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் திருக்குறளுக்கு இளம்பூரணர் எழுதிய உரையும் இணையத் தமிழ் பல்கலைகழகத்தின் நூலகத்தில் கிடைக்கிறது. இலக்கியத்தில் இறை என்ற தொடருக்காக தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் படிக்கத் தொடங்கினேன். அப்போது இந்த உரைகள் மிக உதவியாக இருந்தது/இருக்கிறது. அதில் கண்ட சில சுவையான தகவல்களை இங்கே தருகிறேன்.

1. தமிழ் எழுத்துகளில்னகரம் இறுதி எழுத்து என்று தொல்காப்பியம் சொல்கிறது. அதற்கு உரையெழுத வந்த இளம்பூரணர் 'னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது" என்று எழுதியிருக்கிறார். ஆண்பால் மட்டுமே வீடுபேற்றிற்குரியது என்ற கருத்தினைப் படித்தவுடன் பெரும் வியப்பு ஏற்பட்டது. நான் அறிந்திருந்த வரையில் எந்த இந்தியத் தத்துவமும் ஆண்பாலுக்கு மட்டுமே வீடு பேறு உண்டு என்று சொல்லவில்லை. அதனால் கொஞ்சம் இந்தியத் தத்துவங்களைத் துழாவினேன். அப்போது தான் தெரிந்தது சமணம்/ஜைனம் அப்படி சொல்கின்றதென்று. ஜைன தத்துவத்தின் படி ஆண்பாலரே முக்தி/வீடுபேறு பெற தகுதி உடையவர்கள். பெண்பாலருக்கு அந்த தகுதி இல்லை. அப்போது தான் கவனித்தேன். எல்லா ஜைன தீர்த்தங்கரர்களும் ஆண்பாலரே. உடனே இளம்பூரணரைப் பற்றி கூகிளாரைக் கேட்ட போது அவரும் ஒரு சமணர் என்று சொன்னது.

னகரம் எப்படி ஆண்பாலை உணர்த்துகிறது என்று தெளிவாக இன்னும் தெரியாது - அன் விகுதியைக் குறிக்கிறதோ என்ற எண்ணம் உண்டு. ஆனால் ஆண்பாலைக் குறிப்பதால் அதில் என்ன சிறப்பு என்றும் எதற்கு அது பின்வைக்கப்பட்ட காரணமாக அமைகிறது என்றும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

2. குறில், நெடில் வகைகளை எல்லாம் விளக்கிவிட்டு அவற்றின் மாத்திரை அளவுகளையும் சொல்லிவிட்டு மூன்று மாத்திரை கொண்ட எழுத்துகள் தமிழில் இல்லை என்று தொல்காப்பியம் சொல்கிறது. அப்படியே இரண்டிற்கும் மேற்பட்ட மாத்திரைகள் வேண்டுமென்றால் எழுத்தைக் கூட்டிக் கொள்க என்று சொல்கிறது. அப்படி சொல்லும் போது வரும் சூத்திரம்

நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்

இந்த சூத்திரத்தைப் படித்த போது சரி தெளிவாகப் புரிகிறது என்று நகன்று போயிருப்பேன். உரையைப் படித்த போது அளபெடையின் இலக்கணத்தைக் கூறும் போது எழுதல் என்று சொல்லி விடாமல் அங்கேயே எழூஉதல் என்று மும்மாத்திரையின் எடுத்துக்காட்டையும் சொல்லிச் சென்ற அழகு புரிந்தது. இப்படிப்பட்ட குறிப்புகள் எல்லாம் செய்யுளில் வரும் போது உரைகள் தான் அவற்றை வெளியே கொண்டு வந்து ஒரு தனிப்பட்ட இலக்கிய இன்பத்தை நல்குகிறது.

3. உயிர் எழுத்துகளுக்கும் மெய் எழுத்துகளுக்கு அப்பெயர்கள் ஏன் ஏற்பட்டன என்று இளம்பூரணர் மிக அருமையாக விளக்குகிறார். உயிர்மெய்யெழுத்துகளில் மெய்யெழுத்து வெளி நிற்க உயிர் மறைந்து நின்ற ஆனால் அந்த மெய்யெழுத்துகளை இயக்குவதால் மறைந்து நிற்கும் எழுத்துகள் உயிர் எழுத்துகள் என்று வெளிப்பட்டு நிற்பவை மெய்யெழுத்துகள் என்றும் பெயர் பெற்றன என்கிறார். எவ்வளவு அருமையான விளக்கம் பாருங்கள்.

அப்படி சொல்லி வரும் போதே அவருடைய சமய நம்பிக்கையைச் சொல்லும் இன்னொரு கருத்தையும் சொல்கிறார். மெய்யெழுத்துகள் தனித்து இயங்காதவை. உயிர் எழுத்துகள் தனித்து இயங்குபவை. உடம்பின்றியும் உயிர்கள் இயங்குவதைப் போல் இவ்வெழுத்துகள் இயங்குவதால் இவை உயிர் எழுத்துகள் என்று பெயர் பெற்றன என்கிறார்.

4. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்னும் திருக்குறளின் முதற்குறளின் விளக்கத்தில் இளம்பூரணரின் விளக்கத்தை ஒட்டிய விளக்கத்தைத் தருகிறார் நச்சினார்க்கினியர். எல்லா எழுத்துகளுக்கும் அகரம் முதன்மையாக இருப்பதைப் போல் உலகங்களுக்கெல்லாம் ஆதிபகவன் முதன்மையாக நிற்கிறான் என்பது தானே நமக்கு இப்போது தெரிந்திருக்கும் பொருள். நச்சினார்க்கினியர் சொல்வது அடுத்த நிலைக்கு இந்தக் குறளின் பொருளைக் கொண்டு செல்கிறது. இறைவன் தனித்தும் இயங்குகிறான்; எல்லா உயிர்களின் உள்ளே நின்று அவற்றையும் இயக்குகிறான். அதனால் அவன் அகரத்தைப் போன்றவன். இது நச்சினார்க்கினியர் தரும் உரை. பாருங்கள் அவருடைய சமய நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது.

இப்படி படிக்கப் படிக்கச் சுவைக்கின்றன தமிழ் இலக்கியங்களும் அவற்றின் உரைகளும். இதுவரை எழுந்துள்ள உரைகளை எழுதிய எல்லா பெரியவர்களின் திருவடிகளையும் வணங்கி இந்த அணிலோன் அமைகிறேன்.

14 comments:

MSATHIA said...

//உயிர் எழுத்துகளுக்கும் மெய் எழுத்துகளுக்கு அப்பெயர்கள் ஏன் ஏற்பட்டன என்று இளம்பூரணர் மிக அருமையாக விளக்குகிறார். உயிர்மெய்யெழுத்துகளில் மெய்யெழுத்து வெளி நிற்க உயிர் மறைந்து நின்ற ஆனால் அந்த மெய்யெழுத்துகளை இயக்குவதால் மறைந்து நிற்கும் எழுத்துகள் உயிர் எழுத்துகள் என்று வெளிப்பட்டு நிற்பவை மெய்யெழுத்துகள் என்றும் பெயர் பெற்றன என்கிறார். எவ்வளவு அருமையான விளக்கம் பாருங்கள்.
//

ஆகா.. ஆகா.. இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் தரினும் விரும்பேன்.

தமிழ் said...

/உயிர் எழுத்துகளுக்கும் மெய் எழுத்துகளுக்கு அப்பெயர்கள் ஏன் ஏற்பட்டன
என்று இளம்பூரணர் மிக அருமையாக விளக்குகிறார்.
உயிர்மெய்யெழுத்துகளில் மெய்யெழுத்து வெளி நிற்க
உயிர் மறைந்து நின்ற ஆனால் அந்த மெய்யெழுத்துகளை இயக்குவதால்
மறைந்து நிற்கும் எழுத்துகள் உயிர் எழுத்துகள் என்று வெளிப்பட்டு
நிற்பவை மெய்யெழுத்துகள் என்றும் பெயர் பெற்றன என்கிறார்.
எவ்வளவு அருமையான விளக்கம் பாருங்கள்./

/மெய்யெழுத்துகள் தனித்து இயங்காதவை. உயிர் எழுத்துகள்
தனித்து இயங்குபவை. உடம்பின்றியும் உயிர்கள் இயங்குவதைப் போல் இவ்வெழுத்துகள்
இயங்குவதால் இவை உயிர் எழுத்துகள் என்று பெயர் பெற்றன என்கிறார்./

இதனாலே தமிழ்
இலக்கியங்களைப் படிக்க படிக்க
இனிமையாக
இருக்கிறது



/இறை என்ற தொடருக்காக தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் படிக்கத் தொடங்கினேன்/

அண்மையில்
"கடவுளின் நினைவலைகள்"
குறளில் என்ற நூலைப் படித்தேன்.
அதில் இறை என்ற தொடருக்கு
அருமையான விளக்கம் கூற கண்டேன்

Kavinaya said...

உரைகளும் தேவை. உரை எழுத நீங்களும் தேவை! :) என்னன்னு சொல்ல. நீங்க சொன்ன ஒவ்வொண்ணுக்கும் அட, ஆமா, உண்மை, இப்படியே சொல்லிக்கிட்டே படிச்சேன்னா பாத்துக்கோங்க :)

"என் தமிழ் என்கின்ற போதில் என் உயரம் ஓரடி யேனும் கூடும்" அப்படின்னு ஆரம்பிக்கிற ஒரு கவிதை தமிழ் பற்றி எழுதினேன். அது இப்போ நினைவு வந்தது. தமிழ் படிக்கிறப்பவும், தமிழ் பற்றிப் படிக்கிறப்பவும் ஏற்படும் பெருமிதத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. நீங்க படிச்ச சுவையான விவரங்களை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி குமரா.

ஜீவி said...

இந்த மாதிரி மொழியின் வளப்பம் குறித்த ஆழ்ந்த அக்கரை கொண்ட பதிவுகளுக்கு, பதிவர்களில் இதே தன்மைத்தான அக்கரை கொண்ட ஆர்வலர்களும் தங்கள் கருத்தைச் சொல்லி வளமை சேர்த்தால் அது குறிப்பிட்ட எந்த மொழியின் வளர்ச்சிக்கும் தோன்றாத் துணையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பழந்தமிழ் சொற்களை வழக்கத்தில் கொண்டு வருவதற்கு நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வம், உங்களது பல பதிவுகளிலும்,
பின்னூட்டங்களிலும் காணக் கிடைக்கிறது. உங்களது முயற்சிகளுக்கும், அயராத ஆர்வத்திற்கும் என் வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

சரியாகச் சொன்னீர்கள் சத்தியா. நன்றி.

குமரன் (Kumaran) said...

உண்மை திகழ்மிளிர். நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

ரொம்ப மகிழ்ச்சி கவிநயா அக்கா. நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி ஜீவி ஐயா.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல பார்வை..

னகரம் எவ்வாறு ஆண்பாலைக் குறிக்கும்?நீங்கள் சொல்வது போல அன் விகுதி ஒன்றுதான் காரணமாக இருக்கக் கூடும்...

மற்றபடி வீடுபேற்றுகுரிய செய்திகள் புதிதானவை..

நல்ல வாசிப்பு தரும் பதிவு...

குமரன் (Kumaran) said...

ஆமாம் அறிவன். நானும் அப்படித் தான் நினைக்கிறேன். மற்ற காரணங்கள் வேறு இலக்கியம் படிக்கும் போது தென்படலாம்.

நன்றிகள்.

RATHNESH said...

குமரன்,

//பழந்தமிழ் சொற்களை வழக்கத்தில் கொண்டு வருவதற்கு நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வம், உங்களது பல பதிவுகளிலும்,
பின்னூட்டங்களிலும் காணக் கிடைக்கிறது. உங்களது முயற்சிகளுக்கும், அயராத ஆர்வத்திற்கும் என் வாழ்த்துக்கள்.//

என்கிற ஜிவி அவர்களின் வார்த்தைகளில் அப்படியே எடுத்துக் கொள்கிறேன், எனக்குப் பொருந்தி வரும் ஒரே ஒரு திருத்தத்துடன்.

"......ஆர்வத்திற்கும் என் வணக்கங்கள்."

வீடுபேறு ஆண்களுக்கு மட்டுமே என்பது ஜைன மதம் சொல்லி இருப்பது தான். அதன் லேசான தாக்கத்தினால் தான் புத்தர் கூட தன் சங்கங்களில் பெண்களைச் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை என்பார்கள். நேரடியாகப் படித்த அனுபவம் இல்லை; கேள்விப்பட்டது தான்.

குமரன் (Kumaran) said...

வாங்க இரத்னேஷ். வாழ்த்துகளோ வணக்கங்களோ ரெண்டுக்குமே என் நன்றிகள்.

'இன்னுமொரு நூற்றாண்டு இரும்' என்று ஆசிரியர்களை வாழ்த்துவதும் 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்று ஆண்டவனை வாழ்த்துவதும் நம் மரபு தானே. அதனால் வாழ்த்துகள் சொன்னாலும் எல்லோருக்கும் பொருத்தமே. :-)

வீடுபேறு ஆண்களுக்கு மட்டுமே உண்டு என்று இன்றைக்கும் இந்துமதத்தின் ஒரு பிரிவு போல் செயல்படும் ஆனால் நவீன கால தோற்றமான ஒரு பிரிவு சொல்லிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? ஒரு க்ளூ வேண்டுமென்றால் சொல்கிறேன் - நம் குடியரசுத் தலைவர் சிக்கிய முதல் சர்ச்சையில் தொடர்புடைய இயக்கம் அது. சமண மதத்தின் தாக்கம் இந்த இயக்கத்திற்கு இருக்கிறது என்று நினைக்கிறேன் - ஏனென்றால் இந்த இயக்கம் தோன்றிய மாநிலத்தில் தற்போது ஜைனர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஜமாலன் said...

//இப்படி பழந்தமிழ் இலக்கியங்களைப் புரிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவியாக இருப்பது உரைகள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. //

உரை என்பது ஒரு இலக்கியப் பிரதிக்கான நுழைவாயில் என்பார் முனைவர். தமிழவன். உரை என்பது ஒரு தனிச்சிறப்பான அனுகுமுறை. அதாவது தொல்காப்பியம் சொல்லும் “வாயில்கள்“ போன்றவை. அதில் உள்ள அரசியல் மற்றும் உரையாசிரியரின் மத நோக்கு பற்றிய உங்கள் உதாரணங்களும் விளக்கமும் அருமை. தற்காலத்தில் சொல்லப்படும் வாசகப்பிரதி (reader text) போன்று உரையாளர் ஒரு வாசகனாக பிரதியை நமக்கு உருவாக்கி காட்டும் முறை அது.

சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள்.

//அதன் லேசான தாக்கத்தினால் தான் புத்தர் கூட தன் சங்கங்களில் பெண்களைச் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை என்பார்கள்.//

நண்பர் ரத்ணேஷின் மேற்கண்ட கருத்து ஓரளவு உண்மை என்றாலும் ஆரம்பத்தில் பெண்களை மடத்தில் துறவிகளாகவும் மடத்தின் தலைமைத் துறவிகளாளகவும் அனுமதித்த புத்தமதம் பிற்காலத்ததில் நிகழ்ந்த பாலியல் “சீரழிவுகளால்“ மடம் சிதைந்துபோகும் நிலை உருவாகியதால் அதை தடை செய்தது. புத்தர் ஆனந்தரிடம் கூறியதாக சொல்வார்கள். “நான் பெண்களை அனுமதித்ததால் 500 ஆண்டுகள் மட்டுமே நமது கோட்பாடுகள் தழைத்திருக்கும் அனுமதிக்காமல் இருந்திருந்தால் 1000 ஆண்டுகள் தழைத்திருக்கும்” என்று.

//வீடுபேறு ஆண்களுக்கு மட்டுமே உண்டு என்று இன்றைக்கும் இந்துமதத்தின் ஒரு பிரிவு போல் செயல்படும் ஆனால் நவீன கால தோற்றமான ஒரு பிரிவு சொல்லிக் கொண்டிருக்கிறது. //

பெண் கணவனுக்கு பணிவிடை செய்வதே, அதாவது பதிவிரதா தர்மமே பெண்ணின் அவசியம் என்று கூறுகிறது மனுதர்மம். அதாவது மணைவியாக கணவனுக்கு தொண்டூழியம் புரிவதே பெண்ணின் கடமை என்கிறது. குறிப்பாக பெண் மோச்சம் பற்றி எந்த மதமும் கவலைப்பட்டதில்லை. பெண் என்பவள் ஆணிண் துணை உருப்பு அல்லது அதீத பாலியல் ஆற்றல் கொண்ட பாபமான “வளர்ப்பு மிருகம்” என்கிற கருத்தையே எல்லா மத தத்துவ நம்பிக்கைகளும் வளர்த்து வந்துள்ளன. இது குறித்து விரிவாக உமாசக்ரவர்த்தியின் 'Gendering Caste" என்கிற நூல் பேசுகிறது. இது குறித்த எனது கட்டுரை ஒன்றை பதிவில் சீக்கிரம் வெளியிடுகிறேன். இஸ்லாம் பெண்ணிற்கு பர்தா போட்டதைப்போல பிராமண வேத தர்மங்கள் இந்துப் பெண்ணிற்கு கண்ணுக்கத் தெரியாத பதிவிரதா என்கிற கருத்தியல் பர்தாவைப் (idelogical purdah) போட்டுள்ளது என்கிறார் உமாசக்ரவர்த்தி. மதங்களின் தோற்றத்திற்கான மூல காரணங்களில் ஒன்று பெண்ணை அடக்குதல் என்பதுதான். விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி ஜமாலன்.

பதிவிரதா தர்மங்கள் ஸ்திரி தர்மமாக வடமொழி நூற்களில் இருக்கின்றன. அதனை மத அடிப்படையிலும் பார்க்கலாம். பண்பாட்டு அடிப்படையிலும் பார்க்கலாம். ஏன் அப்படி சொல்கின்றேன் என்றால் வடமொழி நூற்களில் சொல்லப்பட்டவற்றை மட்டும் சமய அடிப்படையில் பார்த்துவிட்டு தமிழ் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டவற்றை சமுதாய/பண்பாட்டு அடிப்படையில் பார்ப்பது பலருக்கும் வழக்கமாகப் போய்விட்டது. வடமொழி நூற்களையும் சமூக அடிப்படையில் பார்க்கலாமே? அப்படிப் பார்த்தால் பிராமண வேத தர்மங்கள் என்று சொல்வதை விட வடநாட்டுப் பண்பாட்டு நிலை என்று சொல்லலாம்.

சங்க இலக்கியங்களில் பரத்தையர், குல மகளிர் என்ற வரையறைகள் என்னவிதமான பெண்ணடிமையைப் பேசுகின்றன என்றும் ஆயவேண்டும்.

சமய அடிப்படையோ பண்பாட்டு அடிப்படையோ வேறு ஏதோ ஒன்றோ பெண்ணடிமை என்பது வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளிலும் இருந்திருக்கின்றது/இருக்கின்றது. நல்லது மட்டுமே ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் சென்றது; கெட்டதெல்லாம் மறுபக்கத்திலிருந்து இப்பக்கம் வந்தது என்பது சரியான பார்வை இல்லை.

பர்தாவை ஒத்தது பதிவிரதா தருமம் என்ற கருத்தியல் என்பது நல்லதொரு ஒப்பீடு.

நான் இலக்கியப் பதிவுகளாகவே இட்டு வருவதாகத் தோன்றினாலும் தரவுகளின் அடிப்படையில் பல ஆய்வுகளையும் 'போகிற போக்கில்' செய்து வருகிறேன். அவற்றை எல்லாம் நீங்களும் ஆய்வுகளில் ஆர்வம் உள்ள அனைவரும் படித்து கருத்துகள் சொன்னால் ஒரு நல்ல உரையாடலும் அதில் இருந்து தோன்றும் புரிதல்களும் கிடைக்கும். அந்த உதவியைச் செய்ய உங்களையும் மற்றவர்களையும் வேண்டுகிறேன்.