Tuesday, June 04, 2013

கருப்பூரம் நாறுமோ?! (கோதையின் கதை)

சங்காழ்வான் பெற்ற பேறு தான் என்னே? மாயவன் திருப்பவள வாய்ச்சுவையை என்றும் அனுபவிக்கும் பேறு வேறு யாருக்குக் கிடைத்துள்ளது? பெரிய பிராட்டி, பூமிபிராட்டி, இளையபிராட்டி என்றிவர்க்குப் பொதுவாய் இருக்கும் இந்த அதரச்சுவையை அடையும் பேறு கடலில் பிறந்து பஞ்சசனன் என்னும் அரக்கன் உடலில் வளர்ந்த இந்த சங்குக்குக் கிடைக்கும் என்றால் இந்தக் கோதைக்கும் அது நிச்சயம் கிடைக்கும். ஏன் அப்பா இப்படி கலங்குகின்றாரோ? மாதவன், பக்தியுடைய அடியவர்க்கு எளியவன் அல்லவா? அதனால் அவனை அடைதல் கடினமன்று. கடிதின் நடக்கும்.

கடலில் பிறந்த வெண் சங்கே! குவலயாபீடம் என்னும் யானையை கம்சன் ஏவிவிட அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்ற திருமகளார் கேள்வன் மாதவன் தன் வாய்ச்சுவையையும் நறுமணத்தையும் விரும்பிக் கேட்கிறேன். அது கருப்பூரத்தின் நறுமணம் கொண்டிருக்குமோ? இல்லை தாமரைப்பூ மணமோ? அந்த பவளம் போன்ற சிவந்த திருவாய் தான் தித்தித்திருக்குமோ? நீ எனக்கு சொல்வாயா?

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே


நல்ல சங்கே. நீ கடலில் பிறந்தாய். பஞ்சசனன் உடலில் வளர்ந்தாய். அந்த இழிவைக் கருதாது, என்றும் இருக்கும் இறைவன் திருக்கரங்களில் சென்று குடியேறி தீய அசுரர்கள் நடுக்கம் கொள்ளும் படி முழுங்கும் தோற்றம் கொண்டு விளங்குகிறாய்.

கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய அசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

அழகிய பெரிய சங்கே. நீண்ட கரிய மலையின் மேலே இரண்டு சிகரங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் தோன்றும், மேகங்கள் மறைக்காத வைகாசி மாத நிலவைப் போல, நீயும் பச்சைமா மலை போல் மேனி கொண்ட வடமதுரை மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருக்கிறாய்.

தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ்சங்கே

வலம்புரி சங்கே. வட்ட நிலவினைப் போல தாமோதரன் கையில் எந்தத் தடையுமின்றி குடியேறி அவன் காதில் ஏதோ மந்திரம் சொல்வது போல் வீற்றிருக்கிறாய். நீ அடைந்த இந்த செல்வம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் கிட்டாதது.

சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்
அந்தரமொன்றின்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே

பாஞ்சசன்னியமே. உன்னைப்போல் கடலில் பிறந்து வளரும் பலவிஷயங்களைப் பற்றி யாரும் எந்தவிதக் கவலையும் கொள்வதில்லை. நீயோ நிலைத்த செல்வமாகிய மதுசூதனன் வாயமுதத்தை பல நாள்களாக உண்கின்றாய். நீ பெற்ற பேறு தான் என்னே?

உன்னோடுடனே ஒருகடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே

வலம்புரியே. நீ எந்த புனித தீர்த்தங்களிலும் நீராடவில்லை. ஆனாலும் என்ன புண்ணியம் செய்தனையோ? வரிசையாய் நின்ற ஏழு மரங்களை ஒரே அம்பால் சாய்த்த சிவந்த கண்களுடைய திருமாலின் திருக்கரங்களில் குடிகொண்டு அவன் வாய்த்தீர்த்தம் என்றும் உன்னுள் பாய்த்தாடும் பேறு பெற்றாய்.

போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே

சங்குகளின் அரசனே (சங்கு அரையா). நீ பெற்ற பேறு தான் பெரும்பேறு. சிவந்த தாமரை மலர்மேல் அமர்ந்து அந்த மலரில் உள்ள தேனைப் பருகும் வெண்ணிற அன்னம் போல், செங்கண் கருமேனி கொண்ட வாசுதேவனுடைய அழகிய சிவந்த திருக்கரங்களில் ஏறி வெண்ணிறம் கொண்ட நீ வசிக்கிறாய்.

செங்கமல நாண்மலர்மேல் தேனுகரும் அன்னம் போல்
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்
சங்கரையா உன்செல்வம் சாலவழகியதே

பாஞ்சசன்னியமே. நீ உண்பதோ உலகளந்தான் வாய் அமுதம். நீ உறங்குவதோ கடல்வண்ணன் கைத்தலத்தில். அந்த மகிழ்ச்சியில் நீ பலவிதமான இசைகளை எழுப்புகிறாய். பெரும் படைப் போன்ற பெண்கள் நீ பெற்ற பேறு கண்டு உன் மேல் கோபம் கொண்டுள்ளனர்.

உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே

பெரும் பேறாகிய செல்வம் பெற்ற சங்கே. கண்ணனின் பதினாறாயிரம் திருத்தேவியர்களுக்குப் பொதுவான மாதவன் தன் வாய் அமுதத்தை அவர்கள் பார்த்திருக்கும் போதே, தேனினை உண்பது போல் நீ நடுவில் புகுந்து உண்டால், உன் மேல் அவர்கள் கோபமும் பொறாமையும் கொள்ளாரோ?

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு செல்வப் பெருஞ்சங்கே

இந்த வகையில் பாஞ்சசன்னியமாம் பெருஞ்சங்கின் பெருமையை, அது பத்மநாபனோடு கொண்ட நெருக்கத்தை விளக்கிய புதுவை நகராம் வில்லிபுத்தூரில் வாழும் பெரும் புகழ் கொண்ட பட்டர்பிரான் திருமகளாகிய கோதை சொன்ன இந்த பத்து பாடல்களும் பொருளோடு சொல்லி வணங்குபவர்கள் எல்லாரும் இறைவனுக்கு நெருக்கமான தொண்டராய் இருப்பர்.

பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெருஞ்சுற்றமாக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதைத் தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

8 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

15 comments: G.Ragavan said...
இறைவனை அடைவதற்கும் எதுவும் தடையாக இருக்க முடியாது. அப்படித்தான் கடலில் கிடந்த சங்கிற்கும் வாழ்வு. அந்த வாழ்வு இறைவன் பெயரையே சொல்லிச் சொல்லி உருகும் தமக்குத் தகாதா என்று கோதை கேட்பது நியாயமே! அற்புதமான விளக்கம் குமரன். மிகச் சிறப்பு.

December 14, 2005 6:22 AM
பத்மா அர்விந்த் said...
விளக்கத்துடன் பாடல் வரிகளையும் தந்தமைக்கு நன்றி குமரன்.

December 14, 2005 6:47 AM
மதுமிதா said...
நன்று
நற்பேறு பெற்ற குமரா
ரசித்து ரசித்து தமிழ்க்கடலில் மூழ்கி,பக்திரசம் ஊற
சாறாய் பொழிந்து தரும் குமரா
நன்றி

December 14, 2005 7:30 AM
ஜயராமன் said...
thanks for this wonderful essay.

Jayaraman

December 14, 2005 8:55 AM
குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். உங்கள் அடுத்தப் பதிவு திருப்பாவை தான் என்று நினைக்கிறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

December 14, 2005 1:00 PM
குமரன் (Kumaran) said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேன் துளி. பாடல்கள் தான் அருமை. விளக்கம் ஒன்றுமில்லை.

December 14, 2005 1:02 PM
குமரன் (Kumaran) said...
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் (இன்னும் பல மொழிகளிலும்?) ஆழ்ந்த புலமை கொண்ட கவிதாயினி மதுமிதா அக்கா. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்.

December 14, 2005 1:05 PM
குமரன் (Kumaran) said...
நன்றி ஜெயராமன் சார். உங்கள் வலைப்பதிவில் அடுத்த பதிவு எப்போது வரும்? விதியா மதியா தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.

December 14, 2005 1:07 PM

குமரன் (Kumaran) said...

மூர்த்தி said...
அன்புள்ள குமரன்,

தங்களின் திருப்பாவை விளக்கங்கள் அற்புதம். ராகவன் தம்பியும் அருமையாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார். நான்கூட எழுதலாம் என நினைத்து வேலைப்பளுவால் தள்ளிப் போகிறது. வாழ்த்துக்கள் குமரன்.

December 16, 2005 8:45 PM
குமரன் (Kumaran) said...
வாழ்த்துகளுக்கு நன்றி மூர்த்தி. நீங்களும் திருப்பாவை பற்றி எழுத ஆரம்பித்திருக்கலாமே. நன்றாய் இருந்திருக்கும்.

December 17, 2005 5:44 AM
G.Ragavan said...
குமரன், மூர்த்தியண்ணாவைப் பற்றிச் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். ஒரு நொடியில் என்னையும் உங்களையும் தூக்கி விழுங்கி விடுவார். அவர் எழுதக் காத்திருக்கின்றேன்.

December 19, 2005 1:15 AM
இராமநாதன் said...
அருமையான விளக்கம் குமரன்..

//பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
//
ஆண்டாள் தன் ஆதங்கத்தையும் சேர்த்துப் பாடுகிறாரோ?

December 19, 2005 9:05 PM
குமரன் (Kumaran) said...
அதில் என்ன சந்தேகம் இராமநாதன். அப்படித் தான். :-)

December 20, 2005 10:01 AM
கவிநயா said...
கற்கண்டாய் இனிக்குமோ?
செந்தேனாய்ச் சுவைக்குமோ?
ஆண்டாள்தம் திருப்பாவை
குமரனின் தமிழ் வழியே
நெஞ்சகத்தை நிறைக்குமோ?!

April 30, 2008 9:51 AM
குமரன் (Kumaran) said...
நன்றி கவிநயா அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் அருமை... முந்தைய கருத்துக்களையும் இணைத்ததும் சிறப்பு... நன்றி...

குமரன் (Kumaran) said...

நன்றி தனபாலன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கருப்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ?
திருமேனித் திரள்முழுதும் தித்தித்து இருக்குமோ?

இருதோளில் சாய்ந்தே துயில்காணும் இன்பத்தை
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாய்நீ வடிவேலே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே//

பண் பல-வா?
பண்பு அல-வா?
:)

//பஞ்சசனன் உடலில் வளர்ந்து//

புரியவில்லை குமரன்; இது என்ன கதை?

//சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால்//

புரியவில்லை குமரன்; சேய்த் தீர்த்தம் என்றால் என்ன?

//சொல்லில் உலகளந்தான் வாயமுதம்//

புரியவில்லை குமரன்; வெறும் சொல்லில் உலகளந்தானா? காலால் அல்லவோ அளந்தான்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
குமரன், மூர்த்தியண்ணாவைப் பற்றிச் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்.

ஒரு நொடியில் என்னையும் உங்களையும் தூக்கி விழுங்கி விடுவார்.

அவர் எழுதக் காத்திருக்கின்றேன்//

:))
முருகா!

குமரன் (Kumaran) said...

பஞ்சசனன் என்னும் அரக்கன் வயிற்றில் பிறந்தது பாஞ்சஜன்யம் என்று படித்த நினைவு இரவி. எந்த புராணம் என்று தெரியவில்லை. கூகிளாரும் சரியான சுட்டி தரவில்லை.

சேய்த்தீர்த்தம் என்றால் என்ன என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

சொல்லில் என்பதை உண்பதை என்பதுடன் சேர்த்துப் படிக்க வேண்டும் இரவி. நீ உண்பதைச் சொன்னால் அது உலகளந்தாய் வாய் அமுதம்.