Thursday, June 27, 2013

கண்ணன் என்னும் கருந்தெய்வம்

'தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும் அவனுடன் கூடி மகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன். புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல் அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்த பெருமான் தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?'

கண்ணனென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய்தாற்போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே


'சிறு குழந்தையாய் ஆலிலையில் துயில் கொண்ட பரமனின் வலையில் நான் அகப்பட்டுக் கொண்டேன். வேலால் குத்துவதைப் போல் நீங்கள் விரும்பிய வண்ணமெல்லாம் பேசாதீர்கள். கோலினைக் கையில் கொண்டு பசுக்களை மேய்த்து ஆயனாகக் குடக்கூத்து ஆடியவன் திருக்குடந்தையில் பள்ளி கொண்டுள்ளான். அவன் அணிந்த குளிர்ந்த நீல நிற துளசியைக் கொண்டு என் வாசம் வீசும் கூந்தல் மேல் சூட்டுங்கள்'

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே


'கஞ்சனைக் கொன்ற கருநிற வில்லைப் போன்றவன் தன் கடைக்கண் என்னும் அம்பினால் என் நெஞ்சினை ஊடுருவ நான் அதன் வெம்மையால் வேவுண்டு என் நிலையும் தளர்ந்து வாடுகிறேன். அஞ்சேல் இதோ வந்து விட்டேன் என்று கூறாத அந்த ஒருவன் என்னை வஞ்சித்தது போல் உங்களையும் வஞ்சிக்காமல் அவன் தன் மார்பில் அணிந்த வனமாலையைத் தருவானாகில் அதனை கொண்டு வந்து என் மார்பில் புரட்டுங்கள்'

கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே


(சிறைக்கோல் - சிறகுகள் உடைய கோல்; அம்பு)




'உலகத்தவரில் யார் தான் என் துன்பத்தை ஆற்ற வல்லவர்? ஆயர்பாடியில் எல்லாரையும் தன் அன்பாலும் அழகாலும் கவர்ந்து உண்ணும் கரு நிறக் காளை போன்றவன் என்னை வாட்ட வாட்டமுற்று உடல் தளர்ந்தும் உறுப்புகள் முறிந்தும் கிடக்கின்றேன். உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால், தெவிட்டாத அமுதம் போன்றவனின் அமுத வாயில் ஊறிய நீர் தான் கொண்டு வந்து என் உடல் காய்ந்து போய் விடாமல் என் உடல் மேல் தெளித்தும் நான் உண்ணக் கொடுத்தும் என் இளைப்பை நீக்குங்கள்'

ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கு இளைப்பை நீக்கிரே


(யாராவது எச்சிலை ஏந்தி வர முடியுமா? கோதையின் உள்மன ஆசை அவர்கள் கோவிந்தனையே அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்பதே. அப்படி அழைத்க்டுக் கொண்டு வந்தால் அவன் அமுத வாய் ஊறிய நீரை இவள் ஆசை தீரப் பருகலாமே)

'சாதாரணமாக அவனை எண்ணத்தில் கொண்டு அழுதாலும் என்றுமே அவனை வேண்டித் தொழுதாலும் தன் உருவத்தை அவன் காட்ட மாட்டான். அஞ்சாதே இதோ வந்தேன் என்றும் சொல்ல மாட்டான். அப்படிப்பட்ட அவன் ஒருவன் என்னைத் தழுவி என்னுள் மூழ்கி என்னைச் சுற்றிச் சுழன்று என்னைவிட்டுப் போக மாட்டேன் என்று கிடந்தான். அவனை இப்போது காண முடியாமல் தவிக்கிறேன். இலைகளும் தழைகளும் சூழ்ந்த கானகத்தின் உள்ளே பசுக்களின் பின்னால் நெடிய மால் குழல் ஊதிக் கொண்டு வருவான். அந்தக் குழலில் துளைகளின் வழி அவன் வாய் நீர் வரும். அதனைக் கொண்டு வந்து என் முகம் குளிரத் தடவுங்கள்'

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொலைவாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே


***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

3 comments:

குமரன் (Kumaran) said...

Comments from the original post:

21 comments:

வல்லிசிம்ஹன் said...
குமரன்,
கோதையை நினைக்கக் கண்கள்
உருகும்.
அவள் பட்ட பாடு
கண்ணன் சன்னிதி எங்கும் பாடப் படுகிறது.
பாவை நோன்புக்கு நல்ல பக்குவம் வேண்டும்.
மாயன் உலகுக்கு இட்டுப் போனதால்,
வாழும் புண்ணியம் குமரனுக்கே.
என் தமிழில் தவறு இருக்கும்.மன்னிக்கணும்.
December 13, 2006 6:57 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆண்டாளை என்ன சொல்லி அழைப்பது?
பட்டர்பிரான் கோதை
காதலுற்ற பேதை
பக்தியின் பைங்கிளி
தமிழ் ஆய்ந்த தையல்
கவிப் பேரரசி
கவிச் சக்கரவர்த்தினி
கனவு நனவு கண்ட தலைவி
அப்பப்பா....

இப்படி ஒரு காதல் கவிதையை நாலே வரியில் எழுத முடியுமா? இல்லை இக்காலத்தில் உள்ளது போல் ஒரு கவிதை எழுதி, அந்தத் தாளைக் கிழித்துப் போட்டு, இன்னொரு கவிதை எழுதி!...
December 13, 2006 9:23 AM
குமரன் (Kumaran) said...
வல்லியம்மா. உங்கள் தமிழில் தவறு எதுவும் இல்லையே. ஏன் அப்படி நினைத்தீர்கள்?

கோதையை நினைக்க கண்கள் பனிக்கும் என்பது உண்மையே. நீங்கள் சொன்னது போல் பாவை நோன்பிற்கு நல்ல பக்குவம் வேண்டும். அந்த பக்குவம் கோதைக்கு இருந்தது என்று காட்டவே அவள் கதையை இவ்வளவு விரிவாக அவள் பாசுரங்களுடன் சொல்கிறேன்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.
December 13, 2006 9:27 AM
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர்.

கண்ணனைப் போல் தானே கண்ணனின் காதலியும். எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் சரியே. :-)

இந்தக் காலத்தில் கவிதைக்காக உணர்ச்சியை ஏற்றிக் கொள்கிறார்கள் (ஏற்றிக் கொள்கிறோம்). அத்னால் எழுதி கிழித்து எழுதி கிழித்து என்று கவிதை எழுதிக் கொண்டிருக்கிறோம். அவள் தன் உணர்வுகளை அல்லவா சொன்னாள். அதனால் தான் நாயகி பாவத்தை ஏறிட்டுக் கொண்ட ஆழ்வார்களை விட இவள் பாசுரங்களில் காதல் பொங்கி வழிகிறது.
December 13, 2006 9:32 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அவன்
வண்ண ஆடை கொண்டு என்
வாட்டம் தணியுங்கள்!

அவன்
துளசி மாலை
சூட்டி என் சூட்டைத் தணியுங்கள்!

அவன்
வனமாலை தந்து என்
மனமாலை மாற்றுங்கள்!

அவன்
தேன் எச்சில் கொண்டு என்
தாகம் தீருங்கள்!

அவன்
குழல் எச்சில் கொண்டு என்
சிந்தை குளிருங்கள்!

அடடா, இன்று நாம் காணும் காதலி! ஜீன்ஸ் படம் என்று எடுத்துக் கொண்டு பாருங்கள்!
அவன் போட்ட உடை
அவன் கிள்ளிக் கொடுத்த காய்ந்த பூ
அவன் குடித்த எச்சில் ஸ்ட்ரா, பெப்சி கேன்...
இதெல்லாம் ஆண்டாள் அன்றே கண்டு விட்டாள்!
அவள் கண்டதை இன்று வைரமுத்து கண்டு வியக்கிறார்.
December 13, 2006 9:55 AM

குமரன் (Kumaran) said...

Anonymous said...
காதலால் கட்டிப் போட்டது போதாதென்று
கவின் தமிழாலும் கட்டிப் போடுகிறாளே!

"புண்ணில் புளிப்பு எய்தாற் போல்"
"கடைக்கண் என்னும் சிறைக் கோல்"
"கார் ஏறு உழக்க உழக்குண்டு"
"அழிலும் தொழிலும் உருக்காட்டான்"

இதுவல்லவா சொல்லாட்சி!
நீயல்லவோ செஞ்சொற் பொற்கொல்லி!

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் வந்தவளே!
உண்மை தான்!!
உன்னைப் படிக்கா விட்டால்
என்னை - வையம் சுமப்பதும் வம்பு!
December 13, 2006 10:05 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
காதலால் கட்டிப் போட்டது போதாதென்று
கவின் தமிழாலும் கட்டிப் போடுகிறாளே!

"புண்ணில் புளிப்பு எய்தாற் போல்"
"கடைக்கண் என்னும் சிறைக் கோல்"
"கார் ஏறு உழக்க உழக்குண்டு"
"அழிலும் தொழிலும் உருக்காட்டான்"

இதுவல்லவா சொல்லாட்சி!
நீயல்லவோ செஞ்சொற் பொற்கொல்லி!

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் வந்தவளே!
உண்மை தான்!!
உன்னைப் படிக்கா விட்டால்
என்னை - வையம் சுமப்பதும் வம்பு!
December 13, 2006 10:40 AM
SK said...
அன்று கோதை தமிழுக்குக் கண்ணபிரான் உருகி ஏற்றுக்கொண்டான்.

இன்றும் கண்ணபிரான் அதற்கு உருகுவதைக் காண்கையில்,
"பரவசம் மிகவாகுதே!"
December 13, 2006 1:57 PM
மதுமிதா said...
கண்ணன் கண்ணன் கண்ணன்
நீக்கமற நிறைந்தவன்
நேசிப்போர் உள்ளம் புகுந்து
கள்ளத்தைப் போக்குபவன்

அவன் உள்ளம்
கொள்ளை கொண்ட
கோதை
உலகை ஆட்கொண்டாள்
உன்னத பாடலினால்

நன்று குமரன்
நன்றி
December 13, 2006 9:37 PM
மணியன் said...
கோதையின் தமிழை காதல் மொழிகளை அழகாக விளக்கியுள்ளீர்கள். பதிவும் பின்னூட்டங்களும் உண்மையாகவே பரவசப் படுத்துகின்றன.
December 14, 2006 12:48 AM
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். ஆண்டாளின் காதலையும் ஐஸ்வர்யா காதலையும் நன்றாகத் தான் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்கள். :-)
December 20, 2006 4:13 PM
குமரன் (Kumaran) said...
உண்மை தான் இரவிசங்கர். தாயாரைப் பற்றிய சுப்ரபாத சுலோகத்திற்குப் பொருள் சொன்னது போல் நாலாயிரத்திற்கும் சொல்லலாமே. ஒவ்வொரு சொல்லும் தகுந்த இடத்தில் தகுந்த காரணத்தால் தானே இருக்கிறது?!
December 20, 2006 4:15 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. பரவாயில்லையே. பின்னூட்டம் எல்லாம் போடறீங்க?! :-) ச்சும்மா... சீறி அருளாதீர்கள். :-)
December 20, 2006 4:16 PM
குமரன் (Kumaran) said...
நன்றி மதுமிதா அக்கா.
December 20, 2006 4:16 PM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி மணியன் ஐயா. தங்களுக்கும் என் மின்னஞ்சல் கிடைக்கிறதா? இல்லை தாங்கள் இந்தப் பதிவை கூகுள் ரீடரில் போட்டிருக்கிறீர்களா?
December 20, 2006 4:17 PM
நாமக்கல் சிபி said...
உருகி உருகி கண்ணனை காதலித்திருக்கிறாள் கோதை!!!

படிக்கும் போதே பொறாமையா இருக்கு :-)
December 28, 2006 11:38 AM
குமரன் (Kumaran) said...
யார் மேல பொறாமையா இருக்கு பாலாஜி? கண்ணன் மேலேயா கோதையின் மேலேயா? :-)
January 01, 2007 7:49 AM
கவிநயா said...
//உருகி உருகி கண்ணனை காதலித்திருக்கிறாள் கோதை!!!

படிக்கும் போதே பொறாமையா இருக்கு :-)//

ஆமா! எனக்கும்! கோதையிடம்தான். உலகத்து அன்பையெல்லாம் ஒன்றாய்க் கவர்ந்து கொண்டாள் போலும்!
May 29, 2008 2:58 PM
குமரன் (Kumaran) said...
எனக்கு ரொம்ப பிடித்த பாசுரங்கள் அக்கா இந்தப் பாசுரங்கள்.
June 12, 2008 11:51 AM
குமரன் (Kumaran) said...
எனக்கு ரொம்ப பிடித்த பாசுரங்கள் அக்கா இந்தப் பாசுரங்கள்.
June 12, 2008 11:51 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
* அவன் இடுப்பில் சுத்தியுள்ள துணியைக் கொண்டாந்து - என் வாட்டம் தணிய வீசீரே

* அவன் மேனியில் பட்ட மாலையை - என் மார்பில் வச்சி புரட்டீரே

* அவன் இதழில் சுரக்கும் நீரைக் கொண்டாந்து - என் வாயூற்றி இளைப்பை நீக்கிரே

* அவன் குழலூதிப் பட்ட எச்சிலை - என் குளிர முகத்தில் தடவீரே...


இதெல்லாம் ஏதோ காம சூத்திர உத்திகள் போல இருக்குடீ கோதை:) Where did u buy that book? Hey, dont hide from me; Tell naa?:)
-------

இந்தப் பாசுரத்தில், மத்ததெல்லாம் (இடுப்பு ஆடை) ஒரு முறை சொல்லிட்டு..
எச்சிலை மட்டும் ரெண்டு முறை சொல்லுறா
1) வாயில் ஊறிய எச்சில்
2) குழலில் பட்ட எச்சில்

ரெண்டுத்துக்கும் வேறுபாடு இருக்கா?
ஏன் இப்பிடிச் சொல்லுறா இவ? ஒங்களுக்குத் தெரியுதா?
June 03, 2013 7:28 PM