Friday, June 28, 2013

அல்லல் விளைத்த பெருமான்

'ஏற்கனவே சரியான வழி, சரியான முறை என்பதெல்லாம் முறை தவறி நடக்கும் இந்த உலகத்தில், நந்தகோபன் மகன் என்று பெயரளவிலேயே இருக்கும் (ஆனால் செயலில் நந்தகோபனைப் போல் இரக்கம் கொள்ளாமல் இருக்கும்) கொடியவனும் கடியவனும் ஆன திருமகள் நாதன் என்னும் காளையின் (கார் ஏறின்) குளம்புகளால் மிதிபட்டு நார் நாராகக் கிழிபட்டு திரும்பிப் படுக்கவும் இயலாமல் கிடக்கிறேன் நான். தோழியர்களே. அவன் எங்காவது போகும் போது அவன் மிதித்த காலடி மண் தான் கொணர்ந்து வந்து பூசுங்கள். அப்படியாகிலும் என் உடம்பை விட்டு உயிர் போகாமல் இருக்கும்.

(அவன் வாடி வந்து கொள்ள வேண்டியிருக்க இவள் வாடுகிறாளே - அது முறை தவறியது என்கிறாள். யார் யார் மூலமெல்லாம் அவனை அடையலாம் என்று எண்ணினாளோ அவர்கள் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை; அதனால் அவர்களைக் குறை கூறுகிறாள் - 'நந்தகோபன் மகன் என்னும்' என்றும் 'திருமாலால்' என்றும் - திருமகளும் நந்தகோபனும் யசோதையும் கண்ணனை அடைய உதவுபவர்கள் அல்லவா? உயிர் போய்விடும் போல் இருக்கிறது. இப்போது இவளுக்குத் தேவையெல்லாம் அவன் காலடி மண்ணே. அது இருந்தால் போதும் திரும்பிப் படுக்கக் கூட முடியாத துன்பம் தீரும்)

நடையொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே


'வெற்றியுடைய கருடக்கொடியோனின் ஆணையை மீறி ஒன்றும் நடக்காத இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லாத வகையில் பெற்ற தாயான யசோதை இவனை முழுக்க முழுக்க வேம்பே ஆக வளர்த்திருக்கிறாளே. தோழியர்களே. (அவனை அன்றி வேறெதையும் விரும்பாத அவன் பிரிவைத் தாங்க முடியாமல் விம்மி விம்மும் என்) குற்றமற்ற முலைகளை அழகிய திரண்ட அவன் தோள்களோடு இதுவரை பிரிந்திருந்த குறை தீர அவன் மறுத்தாலும் விடாது தோளில் என் முலைகளை அணையும் படி இறுக்கக் கட்டுங்கள்.

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீமீதாடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே







'தோழியர்களே. உள்ளத்தின் உள்ளே உருகி நைந்து போகிறேன். நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்று கூட கேட்காத, என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளைக் கொள்ளும் குறும்பனை மாடுகள் மேய்க்கும் இடையனைக் காணும் போது, இருப்பதால் ஒரு பயனும் இல்லாத என் கொங்கைகளை கிழங்கோடு அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து என் உடலிலும் மனத்திலும் எரியும் நெருப்பைத் தீர்ப்பேன்'

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்வேனே

'வளர்ந்த குழந்தைகளைப் போன்ற இந்த முலைகளின் இடர் தீர கோவிந்தனுக்கு ஒரு குற்றேவல் இந்தப் பிறவியிலேயே செய்யாமல் மறுபிறவியில் வைகுந்தம் சென்று அவனுக்குக் குற்றேவல் செய்யும் தவம் செய்து என்ன பயன்? சிறந்த அவனுடைய திருமார்பகத்தில் என் முலைகளை அவன் சேர்க்காவிட்டாலும் ஒரே ஒரு முறையாவது 'நான் உன்னை காதலிக்கவில்லை' என்ற உண்மையாவது என் முகத்தை நோக்கிச் சொல்லிவிட்டான் என்றால் அது மிக நல்லதாக இருக்கும்'

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே





துன்பங்கள் எல்லாம் விளைத்த பெருமானை திருவாய்ப்பாடிக்கு அணிவிளக்கை, வில்லிபுத்தூர் நகரின் தலைவரான விஷ்ணுசித்தரின் திருமகளான கோதை - வில்லை பழிக்கும் புருவமுடையவள் - கண்ணன் மேல் மிகவும் வேட்கை உற்று மிக விரும்பிச் சொல்லும் இந்தச் சொற்களை துதிப்பவர்கள் துன்பக்கடலுள் விழ மாட்டார்கள்

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக்கடலுள் துவளாரே


***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

3 comments:

குமரன் (Kumaran) said...

Comments from the original post:

15 comments:

வல்லிசிம்ஹன் said...
கோதை தமிழைக் கொடுத்து எம்மை வையம் சுமப்பதில் வம்பு ஏதும் இல்லை
என்று எண்ண வைக்கிறீர்கள் குமரன்.
என்ன தீவிரம் காட்டுகிறாள் ஆண்டாள்.!
அரங்கன் கருடனோடு வந்திராவிட்டால் இவளே பறந்திருப்பாள் தமிழ்ச் சிறகுகளால்.
நன்றி.
December 16, 2006 8:38 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
கோதை தமிழ் இனிக்கும். குமரன் இதற்ககாவே மறுபடியும் பிறக்கலாம் பிறந்து படிக்கலாம்.தவறு இல்லை.
December 16, 2006 10:07 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆண்டாள் தன் உள்ளத்து உணர்ச்சிகளை மறைக்காது உரைக்கும் உன்னதமான பாட்டு!

//நடையொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால்//

மாமனாரைப் புகழ்ந்து
மணாளனைப் பழிக்கிறாள், பாருங்கள்!

//வேம்பே ஆக வளர்த்தாளே//

வேம்பு நல் மரம் தானே!
விளக்கம் வேண்டும் குமரன்!
December 19, 2006 4:43 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வில்லைத் தொலைத்த புருவத்தாள்//

அழுது அழுது, வருந்தி வருந்தி, கண்களும, இமைகளும், புருவமும் நிலை அழிந்தன!
அதனால் வில் போன்ற வளைந்த புருவம், இன்று சற்றே அழகின்றிக் கிடக்கிறது! இத்தனைக்கும் காரணம் அல்லல் விளைத்த பெருமான்!

சூரியன் சுடுகிறதே என்று தாமரை வேறு ஒன்றுக்கு மலருமா?
அல்லல் விளைத்தாலும் கோதை, கோவிந்தனைத் தான் வெறுப்பாளோ?

அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!
ஆண்டாள் தமிழுக்கு அல்லால் என் அகம் குழைய மாட்டேனே!
December 19, 2006 4:45 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக்கடலுள் துவளாரே//

தான் துன்புறும் போது, நாம் எல்லாம் இன்புற்று இருக்க நினைக்கும் நல்ல உள்ளம் வேறு யாருக்கு வரும்? எங்கள் கருணைக் கடல் கோதையைத் தவிர! எங்கள் உடையவரைத் தவிர!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!
December 19, 2006 4:48 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
உண்மை வல்லி அம்மா. கோதையின் விரக தாபம் தீவிரமான சொற்களில் தான் வெளிப்பட்டிருக்கிறது. முன்பு ஒரு முறை இந்தப் பாசுரங்களைப் படித்திருந்தாலும் இந்தப் பதிவிற்காகப் படிக்கும் போது சொற்களின் தீவிரம் நன்கு மனத்தில் பட்டது.
December 21, 2006 4:27 PM
குமரன் (Kumaran) said...
உண்மை தான் தி.ரா.ச. மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே...
December 21, 2006 4:28 PM
குமரன் (Kumaran) said...
இல்லை இரவிசங்கர். மாமனார் மாமியார் இருவரையும் கூட நொந்து கொள்கிறார் என்கிறார்கள் ஆசாரியர்கள். அவர்கள் இவனை அடைய வழி செய்து தருவார்கள் என்று எண்ணியிருந்தாள்; அது கைகூடாது போல் இருக்கிறது. அதனால் கடிய கொடிய திருமால் என்று சொல்லும் போதே நந்தகோபன் மகன் என்று சொல்லி யார் யார் எல்லாம் புருஷாகாரம் செய்ய வேண்டியவர்களோ அவர்களை எல்லாம் நொந்து கொள்கிறாள்.

வேம்பும் அதன் இலை காய்களும் நல்லவையாக இருக்கலாம் இரவிசங்கர். ஆனால் வேம்பு கசக்குமே. இவன் முழுக்க முழுக்க வேம்பாக இருக்கிறானே கோதைக்கு தற்பொழுது. இங்கே யசோதையை நொந்து கொள்கிறாள்.
December 21, 2006 4:31 PM
குமரன் (Kumaran) said...
//சூரியன் சுடுகிறதே என்று தாமரை வேறு ஒன்றுக்கு மலருமா?
அல்லல் விளைத்தாலும் கோதை, கோவிந்தனைத் தான் வெறுப்பாளோ?
//

நன்கு சொன்னீர்கள் இரவிசங்கர்.

//அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!
ஆண்டாள் தமிழுக்கு அல்லால் என் அகம் குழைய மாட்டேனே!
//

அடியேனும்.
December 21, 2006 4:32 PM
குமரன் (Kumaran) said...
அட ஆமாம் இரவிசங்கர். நானும் கவனிக்கவில்லையே. தான் துன்பக்கடலில் இருப்பதைச் சொல்லி அதனைப் படிப்பவர் துன்பக்கடலில் விழமாட்டார்கள் என்றல்லவா சொல்கிறாள். என்னே இவள் கருணை?!!
December 21, 2006 4:33 PM
Anonymous said...
கோதை தமிழ் எளிய தமிழ், இனிக்கும் தமிழ், அரிய தமிழ், மறத்தமிழ்!

"மானிடர்க்கு என்று பேச்சுப்படின்!"

ரொம்ப மிரட்டுகிறாள் சார்! எந்தை பெரியாழ்வார் இந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு என்ன பாடு பட்டிருப்பார் ;-)?

ஒரு ஆழ்வாருக்கு ஈடு கொடுக்க இன்னொரு ஆழ்வாரால்தான் முடியும் என்றுணர்ந்த இறைவனின் ஏற்பாடு போலும்!!

சக்கைப் போடு போடறீங்க குமரன். ஆழ்வார் தமிழ்தானே நம் விளை(யாட்டு) நிலம். அங்கு குதி போடாமல் பின் வேறு எங்கு போடுவது! வாழ்க!
December 23, 2006 4:58 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
வாழ்த்துக்கு நன்றி கண்ணன் ஐயா. முடிந்த போதெல்லாம் இந்தப் பதிவிற்கு வந்து படித்துப் பார்த்து தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
December 26, 2006 6:43 AM
Radha said...
//கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்வேனே//

இது போன்ற தீவிரத்தை (என்ன பதம் உபயோகிப்பது என்று தெரியவில்லை) வேறு எங்காவது கண்டதுண்டா? இந்த பாசுரம் படித்த பொழுது நாயிகா பாவத்தில் மற்ற ஆழ்வார்களையும் கோதையையும் ஏன் பெரியோர் சமமாக சொல்லவில்லை என்பது லேசாக புரிந்தது. விஷ்ணு சித்தர் பெண்ணை நன்றாக "கிருஷ்ண வெறியூட்டி" வளர்த்து விட்டார். பின்னாளில் இவளை வைத்துக் கொண்டு என்ன பாடு பட்டிருப்பார் ?? மற்ற ஆழ்வார்கள் அருளி உள்ள தாய் பாசுரங்களில் தாயார் பட்ட கஷ்டம் எல்லாம் புரிந்து கொள்ள இயலாமல் போகலாம். விஷ்ணு சித்தர் கதை அவ்வாறு இல்லை. திருமகள் போன்ற ஒரு மகளை வளர்த்து பின்னர் அவளை நிரந்தரமாக பிரிய வேண்டி இருந்த இவரது கஷ்டம், "நல்லதோர் தாமரைப்பொய்கை...என் மகளை எங்கும் காணேன் !" என்று புலம்பும் பொழுது நம்மையும் படுத்தி விடும்.
July 11, 2009 9:18 AM
குமரன் (Kumaran) said...
கோதைத் தமிழில் எழுதுவதற்காக நாச்சியார் திருமொழி படிக்க முடிந்தது. இன்னும் நீங்கள் சொல்லும் பெரியாழ்வார் பாசுரங்களைப் படிக்கவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்திருக்கிறேன். முழுமையாக இனி மேல் தான் படிக்க வேண்டும்.
August 14, 2009 3:09 PM
Radha said...
சரி தான். நான் இட்ட பின்னூட்டத்தில் கடைசி ஒரு வரி மட்டும் தான் கண்ணில் பட்டதா? :-(
"ஒரு மகள் தன்னை உடையேன்" என்று தலைப்பிட்டு ஒரு இடுகையை கோதைத் தமிழில் காண நேர்ந்தது.(அதனால் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் என்று நினைத்துவிட்டேன்.)அந்தப் பாசுரம் உள்ள பத்தில் தான் இந்த பாசுரமும் உள்ளது. உங்களுக்கு கண்ணனின் பூரண அருள் இருக்கிறது. விரைவில் படித்துவிடத் தான் போகிறீர்கள். :-)

நிற்க, பெரியாழ்வார் பாசுரம் தெரியாமலேயே அவர் நிலையை ஒருவாறு புரிந்து கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
August 22, 2009 8:15 AM