Sunday, June 30, 2013

திருத்துழாயும் மலர்களும்

காலைக் கடன்களான வேத மந்திரங்களை ஓதி கதிரவன் உதிக்கும் திசையை நோக்கி சந்தியில் செய்யும் வந்தனங்களை எல்லாம் முடித்துக் கொண்டு இறைவனை வழுத்தி வாழ்த்தி இதோ மலர்களையும் கொய்து குடலையில் இட்டு கொண்டு வந்துவிட்டோம். இந்த அமைதியான சூழலில் இறைவனின் திருநாமங்களையும் அவன் திருவிளையாடல்களையும் எண்ணிக் கொண்டே அவனுக்காக மலர்மாலைகளைத் தொடுப்பது தான் எத்தனை இன்பம். நம்மைப் போல் மாலவனுக்கு மலர் மாலை தொடுப்பவர் எல்லோருக்கும் இது தானே பேரின்பம். இதனை விடுத்து இந்திர லோகம் சென்று அங்கே அரசாளும் இன்பம் பெற யார் தான் விழைவர்?எல்லா நிறத்திலும் பூக்கள் நம் நந்தவனத்தில் மலர்கின்றன. ஒவ்வொன்றும் மாலவன் திருமேனியை அலங்கரிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளுகின்றனவே. 'என்னை எடுக்க மாட்டாரா? மலர்மாலையில் வைத்துத் தொடுக்க மாட்டாரா? மாயவன் திருமேனியில் துலங்க மாட்டோமா? பிறவிப் பெரும்பயனை எய்த மாட்டோமா?' என்று ஒவ்வொரு மலரும் துள்ளித் துள்ளி நம் கைகளில் தானே வந்து விழுகின்றனவே?!இந்த நீல நிற மலரை பார்த்தால் நம் நீலமேக வண்ணனின் திருநிறத்திற்கு தான் ஏற்றதாக இருப்போம் என்ற மகிழ்வும் பெருமிதமும் தெரிகிறதே. வெண்ணிறப் பூக்கள் அவன் புன்சிரிப்பு பூக்கும் போது தெரியும் பற்களின் நிறத்திற்கு தாம் பொருத்தமாக இருப்போம் என்று சொல்கின்றனவே. சிவந்த மலர்கள் அவன் திருக்கண்களின் நிறத்திற்கும் கொவ்வைச் செவ்வாயின் நிறத்திற்கும் தாங்கள் போட்டி என்று சொல்கின்றனவே. மஞ்சள் நிறப் பூக்கள் அவன் இடையில் அணிந்திருக்கும் மஞ்சள் நிறப் பட்டிற்குத் தாங்கள் தான் பொருத்தம் என்று சொல்கின்றனவே.அட. இதென்ன இந்த பச்சை நிறத் திருத்துழாய் இலைகள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனவே. ஓ. இவற்றிற்கு தாங்கள் மலர்கள் இல்லையே; வெறும் இலைகள் தானே என்ற குறையோ? அடடா. திருமறுமார்பன் விரும்பி அணிபவை எந்த மலர்களும் இல்லையே; திருத்துழாய் மட்டும் தானே. அவற்றின் மணத்திற்கு மட்டும் தானே அவன் தன் மனத்தை இழப்பான். மற்ற மலர்களையாவது அவன் தோள்களிலும் கரங்களிலும் மட்டுமே சூடுவான். ஆனால் தன் திருமுடியில் வைத்துச் சூடிக் கொள்ளவும் தன் திருவடிகளை அழகு செய்யவும் முடி முதல் அடி வரை எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் சூடிக் கொள்ளவும் விரும்புவது திருத்துழாயை மட்டும் தானே?! ஆனால் அடியவர்கள் எப்போதும் அடக்கத்துடன் தான் இருப்பார்கள் போலும். புதியவர்கள் இறைவனுக்குத் தொண்டு செய்யக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ந்துத் துள்ளுவதைப் போல இந்த மலர்கள் எல்லாம் செய்கின்றன. ஆனால் ஏழாட்காலும் இறைவனுக்கே பணிசெய்து கிடந்த பழவடியார்கள் அமைதியாக அவன் திருப்பணியைச் செம்மையாகச் செய்வது போல் கிடக்கின்றன இந்த திருத்துழாய் இலைகள்.இருக்கின்ற திருத்துழாய் எல்லாம் தொடுத்தாகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் வேண்டும் போல் இருக்கிறது. மலர்களே இல்லாமல் வெறும் திருத்துழாயை மட்டுமே வைத்து இன்னும் இரண்டு மாலைகள் தொடுக்க வேண்டும். தொடுத்த மாலைகளை எல்லாம் இந்தக் குடலையில் வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் திருத்துழாய் இலைகளைப் பறித்து வரலாம். திருக்கோயில் வழிபாட்டிற்கு நேரமாகிவிட்டது.

***

இது விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரின் நிலையிலிருந்து எழுதியது.

***

அருஞ்சொற்பொருள்:

திருத்துழாய் - துளசி
விழைதல் - விரும்புதல்
ஏழாட்கால் - ஏழு தலைமுறை
பழவடியார்கள் - பழம்பெரும் அடியார்கள்
குடலை - பூக்கூடை

இன்னும் ஏதாவது சொற்களுக்குப் பொருள் தெரியாவிட்டால் கேளுங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

18 comments:

குமரன் (Kumaran) said...
படங்கள் தந்துதவிய நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு நன்றி.
December 24, 2006 4:15 PM
ஓகை said...
பாடல் எங்கே?
December 24, 2006 6:35 PM
குமரன் (Kumaran) said...
ஓகை ஐயா. கோதையின் கதையினைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். நடுவில் ஏதாவது பாசுரங்கள் பொருத்தமாக இருந்தால் அவற்றை இடுகிறேன். இந்தப் பதிவிற்கு எந்த பாசுரங்களும் இடவில்லை. நாச்சியார் திருமொழி பாசுரங்கள் இடும் அளவிற்கு இட்டாகிவிட்டது என்று எண்ணுகிறேன். இனி திருப்பாவை பாசுரங்கள் தான் பார்க்கவேண்டும். நடுவில் ஏதாவது பொருத்தமான பாசுரங்கள் தோன்றினால் அவற்றையும் இடுகிறேன்.

தொடர்ந்து வந்து படிக்கிரீர்கள் என்பதைச் சொல்லாமல் சொன்னதற்கு நன்றி. :-)
December 24, 2006 7:28 PM
enRenRum-anbudan.BALA said...
குமரன்,
வாசிக்க சுவாரசியமாக இருந்தது ! மலர்களுக்குள் இவ்வளவு போட்டியா :)))
துளசியின் பெருமையை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
தொடருங்கள் !
December 25, 2006 1:54 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//புதியவர்கள் துள்ளுவதைப் போல இந்த மலர்கள் எல்லாம் செய்கின்றன. ஆனால் ஏழாட்காலும் பணிசெய்து கிடந்த பழவடியார்கள் அமைதியாக செய்வது போல் கிடக்கின்றன இந்த திருத்துழாய் இலைகள்.//

நல்ல ஒப்பு நோக்கு, குமரன்! அதனால் தானா ஏகாந்த விஸ்வரூப சேவைகளில் துழாய் மட்டும் சூடிக் கொள்கிறான்! :-)

குமரன் (Kumaran) said...

Anonymous said...
குமரன்,

இன்றுதான் தங்களின் கடந்த 3 பதிவுகளைப் படித்தேன்....அருமை....நன்றி....

மெளலி...
December 26, 2006 2:11 AM
குமரன் (Kumaran) said...
நன்றி பாலா. எழுதத் தொடங்கும் போது இந்த எண்ணங்கள் எல்லாம் தோன்றவில்லை. எழுதிக் கொண்டே வரும் போது தோன்றியவற்றை அப்படியே எழுதிவிட்டேன். எல்லாம் அவன் உள்ளிருந்து எழுதுபவை. அதனால் தான் ஒரே பதிவாய் எழுத நினைத்தவற்றை எழுதி முடிக்க மூன்று நான்கு பதிவுகள் ஆகிவிடுகின்றன.

நீங்களும் தொடர்ந்து படித்துப் பாருங்கள்.
December 26, 2006 6:45 AM
குமரன் (Kumaran) said...
அப்படியா இரவிசங்கர். ஏகாந்த விஸ்வரூப சேவைகளில் திருத்துழாய் மட்டுமே சூட்டிக் கொள்கிறானா? புதிய செய்தி. எல்லா நேரங்களிலும் அவன் திருத்துழாய் அணிந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சில திருக்கோயில்களில் திருமஞ்சனத்தின் (திருநீராட்டலின்) போது அவன் திருத்துழாயை மட்டுமே அணிந்து கொண்டிருபப்தையும் பார்த்திருக்கிறேன்.
December 26, 2006 6:48 AM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி திரு.மௌலி. தொடர்ந்து படித்து வாருங்கள்.
December 26, 2006 6:48 AM
G.Ragavan said...
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணையின் திறம் கண்டேன்

பச்சை நிறம் திருமேனி
பவழ நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்
December 26, 2006 10:46 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். இந்தப் பாடல் இந்தப் பதிவை எழுதும் போது மனத்தில் ஓடியது.
December 26, 2006 2:19 PM
Anonymous said...
அற்புதமான பதிவு குமரன். எல்லா மலர்களையும் கண்ணனுக்கு சூட்டி அழகு பார்த்து விட்டீர்கள். அருமை.

குமரேஷ்
December 27, 2006 10:21 AM
குமரன் (Kumaran) said...
நன்றி குமரேஷ்.
December 27, 2006 11:57 AM
கவிநயா said...
//இந்த அமைதியான சூழலில் இறைவனின் திருநாமங்களையும் அவன் திருவிளையாடல்களையும் எண்ணிக் கொண்டே அவனுக்காக மலர்மாலைகளைத் தொடுப்பது தான் எத்தனை இன்பம். நம்மைப் போல் மாலவனுக்கு மலர் மாலை தொடுப்பவர் எல்லோருக்கும் இது தானே பேரின்பம். இதனை விடுத்து இந்திர லோகம் சென்று அங்கே அரசாளும் இன்பம் பெற யார் தான் விழைவர்?//

உண்மைதானே. அவனடிகள் போற்ற மனிதப் பிறவியை விட்டால் வேறு ஏது?

//'என்னை எடுக்க மாட்டாரா? மலர்மாலையில் வைத்துத் தொடுக்க மாட்டாரா? மாயவன் திருமேனியில் துலங்க மாட்டோமா? பிறவிப் பெரும்பயனை எய்த மாட்டோமா?' என்று ஒவ்வொரு மலரும் துள்ளித் துள்ளி நம் கைகளில் தானே வந்து விழுகின்றனவே?! //

ஹ்ம்.. அந்த மலர்கள்தாம் எவ்வளவு கொடுத்து வைத்தவை!

அருமையாக எழுதுகிறீர்கள் என்பதை விதவிதமாய்ச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும், குமரா! :)
May 29, 2008 3:20 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
நன்றி அக்கா. விதவிதமாகச் சொல்லாவிட்டாலும் சொல்லமலேயே விட்டாலும் கூட நல்லது தான். ஒவ்வொரு தடவை யாராவது வந்து 'நல்லா இருக்கு' என்று சொல்லும் போதெல்லாம் எதோ ஒன்று துள்ளுகிறதே அந்தத் துள்ளல் குறையும். :-)
June 12, 2008 11:53 AM
கவிநயா said...
//ஒவ்வொரு தடவை யாராவது வந்து 'நல்லா இருக்கு' என்று சொல்லும் போதெல்லாம் எதோ ஒன்று துள்ளுகிறதே அந்தத் துள்ளல் குறையும். :-)//

அச்சோ! எம்புட்டு சரீயா சொன்னீக! மாம்பழத்த விட்டுட்டு ஒவ்வொரு கெளையா புடிச்சு தொங்கிக்கிட்டே இருக்கோமுல்ல :(
June 12, 2008 1:06 PM
Radha said...
குமரன்,
இந்த பதிவு மிக அருமை. :-)
இதனை தொடர்ந்து அப்படியே பெரியாழ்வார், "செண்பகப் பூச் சூட்ட வாராய்", "மல்லிகை பூச் சூட்ட வாராய்", "பாதிரிப் பூ சூட்ட வாராய்" .... என்று பாடிய பாசுரங்களுக்கு எங்கள் அனைவரையும் அழைத்து சென்றால் என்ன ? :-)
~
ராதா
July 11, 2009 11:20 AM
குமரன் (Kumaran) said...
நீங்கள் சொல்லும் பாசுரங்களைக் கோவில் நித்யானுசந்தானம் என்ற நூலில் படித்திருக்கிறேன் இராதா.
August 14, 2009 3:10 PM