Wednesday, June 12, 2013

வாதமா விவாதமா? (கோதையின் கதை)

'வாருங்கள் தோழியர்களே'.

'என்னடி இது? வாருங்கள் என்று சொல்லிவிட்டு கோதை வேறு எதுவும் சொல்லவில்லையே. அவள் முகத்தில் இன்பக்குறியும் துன்பக்குறியும் மாறி மாறி வருகிறதே?'

'உனக்குத் தெரியாதா மாதவி? அவள் கண்ணன் மேல் காதலுடன் இருக்கிறாள். அதனால் தான் இந்த அமைதி. மேலுக்குத்தான் அவள் அமைதியாய் இருக்கிறாள்; உள்ளத்தில் ஒரு பெரும்புயலே அடிக்கிறது'.

'ஆமாம் பூங்குழலி. காதல் என்றால் எப்போதுமே இப்படித்தான். வேட்கையும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாறி மாறி வந்து வாட்டும். அது சரி. அவளுக்கு கண்ணன் மேல் காதல் என்றாயே? எந்த கண்ணனைச் சொல்கிறாய்? எனக்குத் தெரிந்து நம் ஊரில் இவள் வயதுக்கு ஒத்த கண்ணன் யாரும் இல்லையே?'

'மாதவி. மீண்டும் ஒன்றும் தெரியாதவள் போல் கேட்கிறாயே. அவள் தான் மானிடவர்க்குப் பேச்சுப்படேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு விண்ணவன் அந்த மாயவனை அல்லவா விரும்புகிறாள்?'

'என்ன மாயவனையா? நல்ல கதை. இவளோ மானிடப்பெண். அவனோ தேவாதிதேவன். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதைப் போலத்தான் இதுவும்'.

பெரும் கூச்சல் எழுகிறது. வந்த தோழியர் இரு பிரிவாய் பிரிந்து வாதிடுகின்றனர். ஒரு பிரிவு கோதையின் காதலை ஆதரிக்கிறது. இன்னொரு பிரிவு அவள் காதலை ஆதரிக்க வேண்டும் என்று எண்ணினாலும் இது நடக்குமா என்று வியக்கிறது. இதையே ஒரு வாய்ப்பாக வைத்து கோதையைக் கொஞ்சம் வம்புக்கு இழுக்கலாம் என்று இரண்டாம் பிரிவில் சில தோழியர் நினைத்து கிண்டலை தொடங்குகின்றனர்.

2ம் பிரிவில் ஒரு தோழி: கண்ணன் ஒரு வெண்ணெய்த் திருடன். அது தெரியாதா? வெண்ணைத் திருடும் போது கரிய குழல் கொண்ட ஆய்ச்சியிடம் மாட்டிக்கொண்டு தயிர் கடையும் மத்தினால் மொத்துண்டான். அந்த ஆய்ச்சியர் இட்ட வழக்கினால் யசோதை அவனை ஒரு கயிற்றினால் கட்டி உரலுடன் இணைத்துப் போட்டுவிட்டாள். அந்தக் குறும்பனைப் போய் இவள் காதலிக்கிறாளே?'

1ம் பிரிவில் ஒரு தோழி: கண்ணன் வெண்ணெயா திருடினான்? நாம் அவனுக்கு உரிய நம் மனதை மறைத்து வைத்துவிடுகிறோம். அந்த மனதை அல்லவா கொள்ளை கொள்கிறான்? அவனைக் கட்டிப் போடுதல் அவ்வளவு எளிதன்று. அவன் விண்ணில் வாழும் தேவர்களுக்கும் எண்ணற்கரியவன். யசோதையின் அன்பில் கட்டுண்டான். அப்படி அன்பில் கட்டுண்டும் மொத்துண்டும் அவன் இருப்பதால் கோதையின் காதலிலும் கட்டுப்படுவான். இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

2: அவன் விண்ணவர்க்கும் எண்ணற்கரியவனா? நன்றாய்ச் சொன்னாய். பாஞ்சாலியின் கணவர்மார் ஐவருக்காக தூதுவனாய் நடந்து மன்னவனாம் துரியோதனன் வாயில் ஏச்சுப்பட்டான். அப்போது என்ன செய்தான் கண்ணன்? மொத்துண்டு கட்டுண்ட அவன் இங்கு சொல்லுண்டு பேசாமல் வரவில்லையா? மன்னவனுக்கே மறுமொழி சொல்ல முடியவில்லை. இவன் விண்ணவர்க்கும் எண்ணற்கரியவனா?

1: தூதனாய் துரியோதனன் சொல்லுண்டான் ஆகிலும் இவன் முன்பு ஒலிவீசும் கடல் சூழ்ந்த இந்த வையகம் முழுதினையும் உண்டு உமிழ்ந்தான் தெரியுமா? துரியோதனன் சொல்லை அன்று அரசவையில் உண்டு பின்னர் பாரதப் போரில் அதனை உமிழ்ந்தான், உலகை உண்டு உமிழ்ந்ததைப் போல. அதுவே அவன் மிகப்பெரியவன் என்று காட்டவில்லையா?

2: அவனா மிகப் பெரியவன்? கண்டவர்கள் இரக்கம் கொள்ளும்படி ஒரு குறள் உருவைக்கொண்டு அன்று வாமனனாய் மாவலியிடம் மூவடி மண் இரந்தவன் தானே இவன்?

1: மாவலியின் வேள்வியில் மண் இரந்தது எதற்காக? இவன் மூன்று உலகிற்கும் தலைவன். மாவலியோ இவன் அருளால் அந்த உலகங்களையெல்லாம் ஆளுபவன். மாவலி நாரணனிடம் கொண்ட பக்தியை நீ அறியாயோ? கண்ணன் பக்தியுடை அடியவர்க்கு எளியவன். அதனால் தான் தேவர்களின் காரியமும் ஆகவேண்டும் அதே நேரத்தில் மாவலியின் பக்தியையும் உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்று குறள் உருக்கொண்டு மண்ணிரந்தான். பக்தியுடை அடியவர்க்கு எளியவன் நம் கோதைக்கும் எளியவன் தான்.

இப்படி தோழியர் கொள்ளும் பூசலை கண்டு கோதையின் மனத்தில் குதூகலமும் ஏக்கமும் மாறி மாறித் தோன்றுகின்றன.

2: இவள் காதலை பெற்றவன் பாம்பின் மேல் படுப்பவன். எப்போதும் அது புஸ் புஸ் என்று சீறிக்கொண்டிருக்கும். அவனை இவள் மணந்து கொண்டால் அந்த பாம்பின் மேல் தான் படுத்து உறங்க வேண்டும். ஐயோ பாவம்.

1: நீ சொல்லும் அந்தப் பாம்பு என்ன வெறும் பாம்பா? அதுதான் பஞ்ச சயனம். சிறந்தவர்களுக்கு மட்டுமே உரியது. வெறும் பஞ்ச சயனத்தில் உறங்கினாலே எவ்வளவு சுகமாய் தூக்கம் வருகிறது. இந்தப் பாம்பாகிய பஞ்ச சயனமோ புஸ் புஸ் என்று தன் மூச்சினை விடும் போது அது மெதுவாய் தாலாட்டுவதைப் போல் அசையும். மாதவனை மணந்தால் அதில் உறங்கும் பேறு அல்லவா இவளுக்குக் கிடைக்கும்.

2: திருமணம் முடிந்த பின் மாப்பிள்ளையும் பெண்ணும் நான்கு சக்கரம் கொண்ட வாகனத்தில் ஏறி உலாவருவார்கள். நாரணனுக்கோ பறவை தான் வாகனம். இவள் அவனை மணந்து கொண்டால் அந்தப் பறவையில் ஏறிக்கொண்டு வானில் தான் பறக்கவேண்டும். வீதி உலா வரமுடியாது. யாருக்குத் தெரியும், அந்தப் பருந்து வானில் உயரப் பறக்கும் போது இவளைக் கீழே தள்ளிவிட்டாலும் விட்டுவிடும்.

1: கருடன் வேதங்களின் வடிவம். அதனை வாகனமாகக் கொண்டவன் வேதங்களின் தலைவன். இவள் அவனை மணந்து கொண்டால் அந்த வேதங்களில் வடிவான கருடன் இருவரையும் சேர்த்துத்தான் புகழ்வான். அந்த வேதநாயகனை மணந்தால் இவளுக்குத் தான் பெருமை.

2: கண்ணன் புராண புருஷன். பெரும் வயது உடையவன். கிழவன். ஒரு பெண்ணுக்கு வரன் தேடும் போது ஜாதகம் பார்ப்பது வழக்கம். ஆனால் அவனுக்கோ ஜாதகமே கிடையாது. அவன் பிறப்பிலியாயிற்றே? உண்மையில் அவன் ஆணா பெண்ணா என்பதே சந்தேகம். மோகினி அவதாரம் எடுத்தவன் அல்லவா? இப்படிப் பட்ட ஆணை பெரியவர்கள் வற்புறுத்தலினால் மணந்து கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் இவள் என்னடாவென்றால் தானாகவே அவனை வரித்திருக்கிறாளே?

1: கண்ணன் ஆதி காரணன். அனைத்தையும் படைத்தவன். எங்கும் நிறைந்தவன். ஆணல்லன். பெண்ணல்லன். அல்லால் அலியும் அல்லன். அனைத்தும் ஆனவன். புருஷோத்தமன். ஆண்களில் சிறந்தவன். அப்படிப்பட்டவனை அல்லவா இவள் வரிக்கிறாள். இவள் எப்படிப்பட்ட பாக்கியசாலி.

கோதை: தோழியர்களே. நீங்கள் மணிவண்ணனைப் பற்றிப் பேசிப் பேசி எனக்கு அதிகமான துக்கத்தைக் கொடுக்கிறீர்கள். போதும் உங்கள் விளையாட்டுப் பேச்சு. என்னை கொஞ்சம் தனியாக விடுங்கள்.

***

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

4 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

24 comments: தி. ரா. ச.(T.R.C.) said...
Dear kumaran
kannanin unnathamana gunagkalay sirithu kuraithum atharku maru mozhiyaga
thangale uyarthyum miga sirappaka
vathu seytheerkal.Intha murayel
Kalidasanum Kumara Sambhavathil Sivan Parvathy thirumanathil kayandullar.Intha uthhi migavum nandra ullathu. Raghavanum neengalum chakkai podu podukereerkal.Ethay padipathu,Ethai vidupathu. endru enakku puriyavillai.Raghavn kanthar Alankarathilum Neengaal kothy mozhiyelum kadalin adiyel sendru anubhavithu muthukkalay enaukku alikereerkal migavum nandri.TRC

December 15, 2005 7:29 AM
சிவா said...
குமரன்! நல்ல கற்பனை உரையாடல். கண்ணனை பற்றி நிறைய புராணம் சொல்லியிருக்கிறீர்கள். மாவலி கதை எல்லாம் தசாவதாரம் படத்தில் பார்த்தது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.

December 15, 2005 7:32 AM
குமரன் (Kumaran) said...
அன்புள்ள TRC,

இந்த உத்தி மிக நல்ல உத்தி தான். ஆனால் என் சொந்த உத்தியில்லை. ஆழ்வார்களும் ஆசாரியர்களும் இந்த உத்தியை ஏற்கனவே பயன்படுத்தியுள்ளனர். முதல் மூன்று வாதங்களும் ஒரு ஆழ்வார் பாடியது (பெரிய திருமொழி என்று எண்ணுகிறேன். எந்த ஆழ்வார் என்று சரியாக நினைவில்லை. வலைப்பதிவர் தேசிகனுக்குத் தெரிந்திருக்கலாம்). கடைசி மூன்று வாதங்களும் வேதாந்த தேசிகனின் 'கோதா ஸ்துதி' என்ற சம்ஸ்கிருத நூலில் இருப்பது. அதைத் தான் இங்கே நான் கோதையின் தோழியர் வாதிட்டுக் கொள்வதாய் போட்டுவிட்டேன்.

இராகவன் பதிவுகளையும் என் பதிவுகளையும் பாராட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. எதையும் விட்டுவிடாமல், எல்லாவற்றையும் படித்துவிடுங்கள்.

December 15, 2005 11:56 AM
குமரன் (Kumaran) said...
சிவா, மேலே சொன்னபடி இந்த கற்பனை என் சொந்தக் கற்பனையில்லை. கண்ணனைப் பற்றிய பல புராணச் செய்திகள் இந்த உரையாடலில் வருகின்றன. எல்லாச் செய்திகளும் ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்த செய்திகளாய்த் தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். இல்லையா?

December 15, 2005 11:58 AM
மதுமிதா said...
/// குறள் உருக்கொண்டு மண்ணிரந்தான்///

மண்ணிரந்தான்-விளக்குங்கள் குமரன்.

December 15, 2005 1:14 PM
குமரன் (Kumaran) said...
மதுமிதா அக்கா. மண்ணிரந்தான் என்ற சொல்லுக்கு மட்டும் விளக்கம் வேண்டுமா? இல்லை 'குறள் உருக்கொண்டு மண்ணிரந்தான்' என்ற வாக்கியத்திற்கு விளக்கம் வேண்டுமா?

குறள் உருக்கொண்டு மண்ணிரந்தான் - இது வாமன அவதாரத்தைக் குறிக்கிறது. குறள் உரு என்றால் வாமன வடிவம்; குட்டையான வடிவம்; குறுகிய வடிவம்.

மண்ணிரந்தான் - மண் இரந்தான் - நிலம் பிச்சையாக வேண்டி நின்றான்.

December 15, 2005 3:07 PM
வெளிகண்ட நாதர் said...
மார்கழி மாச பக்தி பஜனைக்கு தகுந்த மாதிரி, ஒருத்தரு திருப்பாவையும் , இன்னொருத்தரு கோதையும் சொல்லி பரவசமூட்டிறீங்க!

December 15, 2005 7:19 PM
குமரன் (Kumaran) said...
வெளிகண்ட நாதர்/உதயகுமார் அண்ணா. இதுவும் திருப்பாவையைப் பற்றிய வலைப்பதிவுகளே. இராகவன் நேரா பாக்களுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கிவிட்டார். நான் கோதை கதை, முன்னுரை எல்லாம் முடித்து விட்டு பாக்களுக்குச் செல்லலாம் என்று இருக்கிறேன். அதனால் நம்ம கதை மார்கழியையும் தாண்டிப் போகும். வழக்கம் போல தொடர்ந்து வந்து வாழ்ந்துங்கள். அப்படியே இதுவரை திருப்பாவையைப் பற்றி இங்கு நான் எழுதியுள்ள முன்னுரைப் பதிவுகளையும், கோதையின் கதைப் பதிவுகளையும் படித்துக் கருத்து கூறுங்கள்.

December 15, 2005 8:31 PM

குமரன் (Kumaran) said...

G.Ragavan said...
ஆகா! அற்புதம் குமரன். TRC சொன்னது போல இதே வழக்கைப் பரஞ்சோதி முனிவரும் பின்பற்றியிருக்கின்றார். கச்சியப்பரும் பின்பற்றியிருக்கின்றார். காளிதாசரும் பின்பற்றியிருக்கின்றார். அழகாகச் செல்கின்றது உங்கள் திருப்பாவை அறிமுகம்.

TRC, என்னுடைய பதிவுகளையும் குமரனுடைய பதிவுகளையும் படித்து மகிழ்ந்து பாராட்டிய உங்களுக்கு நன்றி.

December 16, 2005 1:56 AM
குமரன் (Kumaran) said...
இராகவன்,

பரஞ்சோதி முனிவரும், கச்சியப்பரும், காளிதாசரும் இந்த உத்தியைப் பின்பற்றிச் சொல்லியிருப்பதை உங்கள் பதிவில் எழுதுகிறீர்களா? மிக்கச் சுவையாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். திருவிளையாடல் புராணமும், கந்த புராணமும் உரைநடை வடிவில் சிறு வயதில் படித்திருக்கிறேன் - பாடல்களாய்ப் படித்ததில்லை. இந்த உரையாடல்களை மறந்துவிட்டேன்.

December 16, 2005 4:55 AM
G.Ragavan said...
இப்பொழுது இல்லை குமரன். மன்னியுங்கள். இந்தத் திடீர் எழுத்துகளால் நான் வழக்கமாக எழுதுகிறவை தடைப்படுகின்றன. வேறொரு சமயத்தில் அவைகளை எடுத்து எழுதுகின்றேன்.

பிறகு ஒரு விஷயம். "பொற்சிலையும் சொற்குவையும்" கதையில் சொல்லிய நிகழ்ச்சிக்கு ஆதாரம் கேட்டிருந்தீர்களே. வாரியார் எழுதிய சிவனருட் செல்வரில் நான் சொன்னதையே அவரும் சொல்லியிருக்கின்றார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் படிக்க நேர்ந்தது. மேலும் அது ராஜராஜசோழனுக்கெல்லாம் முன்னால் எழுதப்பட்டது.

December 16, 2005 6:07 AM
G.Ragavan said...
சொல்ல நினைத்த மற்றொன்று. சிவனருட் செல்வர் நூல் பெரியபுராணத்தைத் தழுவி எழுதப் பட்டது. ஆகையால் பெரிய புராணத்தை உருட்டினால் ஏதேனும் முறையான தகவல் கிடைக்கலாம்.

December 16, 2005 7:23 AM
குமரன் (Kumaran) said...
இராகவன், இப்படி இப்போது இல்லை என்று இதுவரை இரண்டு முறை சொல்லிவிட்டீர்கள். குறித்துவைத்துக்கொள்ளுங்கள். நானும் குறித்துக்கொள்கிறேன். இப்போது வழக்கமாக எழுதுகின்றவற்றை முடித்தபின் இவற்றைப் பற்றி எழுதலாம்.

வாரியார் சொல்லியிருப்பதும் மரபின் வழி வரும் கருத்தாய் இருக்கலாம் அல்லவா? அதனால் இதனை யாராலும் இது தான் வரலாறு என்றோ இல்லை இது மரபின் வழி வரும் கருத்து என்றோ அறுதியிட்டுக் கூற முடியாது என்று எண்ணுகிறேன். ஆனால் 'பொற்சிலையும் சொற்குவையும்' உண்மையில் நடந்திருக்கப் பெரும் வாய்ப்புகள் உண்டு. பெரிய புராணம் இராஜராஜசோழனுக்கு முன்னால் எழுதப்பட்டதா இல்லை பின்னரா? இராஜேந்திர சோழனுடைய பேரன் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதியது என்று படித்ததாய் நினைவு. அது உண்மையென்றால் அதில் ஏதாவது துப்பு கிடைக்கலாம். என்னிடம் தொண்டர் புராணம் தற்போது இல்லை. மதுரையில் இருக்கிறது. அதனால் நேரம் கிடைக்கும் போது நீங்கள் கொஞ்சம் பாருங்கள்.

December 16, 2005 11:59 AM
இராமநாதன் said...
பிரமாதம் குமரன்,
அருமையான உரையாடல்.

இராகவன், நீங்க ரெண்டு பேரும் பத்தான் தோனி மாதிரி பிச்சு உதறுறீங்க..

December 19, 2005 9:15 PM
குமரன் (Kumaran) said...
நன்றி இராமநாதன். பத்தான் தோணின்னா என்னங்க?

December 20, 2005 10:03 AM
இராமநாதன் said...
என்ன குமரன்,
Irfan Pathan, MS Dhoni???? :))

December 20, 2005 10:41 AM
குமரன் (Kumaran) said...
ஓ...அவங்களா...எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப தூரம் இராமநாதன். உங்க பதிலைப் பார்த்தவுடனே வலையில Irfan Pathanன்னா யாருன்னு தேடிப்பார்த்தேன். அப்புறம் தான் அவங்க கிரிக்கெட் விளையாடுறவங்கன்னு தெரிஞ்சது. :-) பத்தானும் தோனியும் சேர்ந்தே விளையாடுவாங்களா? அதுவும் எனக்குத் தெரியாது. மன்னிச்சுக்கோங்க.

December 20, 2005 11:00 AM
இராமநாதன் said...
நானும் கிரிக்கெட் பாலோ பண்றதில்ல. ஆனா, நீங்க சொல்றது கொஞ்சம் டூ டூ மச்! :))

//மன்னிச்சுக்கோங்க.//
இது என்ன கொலைக்குத்தமா? பொதுமன்னிப்பெல்லாம் கேக்கறதுக்கு? :P

December 20, 2005 11:10 AM
குமரன் (Kumaran) said...
உண்மையத் தான் சொன்னேன் இராமநாதன். எனக்கு நெசமாவே வலையில அவங்க பேரு போட்டுத் தேடின பிறகு தான் தெரிஞ்சது. தமிழ்மணப் புண்ணியத்தால கங்குலி பேரை இப்ப தலைப்புகள்ல பார்த்ததுண்டு. அவ்வளவுதான்.

இந்த மாதிரி கிரிக்கெட்ல ஒண்ணும் தெரியாம இருந்தா நம்ம ஊரில கொலைக்குத்தம் மாதிரி தானுங்களே. அதான் பொதுமன்னிப்பு கேட்டுட்டேன். :-)

December 20, 2005 11:16 AM

குமரன் (Kumaran) said...

Radha said...
சும்மா கலக்கு கலக்குன்னு கலக்கி இருக்கீங்க குமரன். இதுவும் மிக அருமை. :-)
நேரமின்மையால் இதை மட்டும் சொல்லிவிட்டு புறப்படுகிறேன்.

//
kumaran said...
முதல் மூன்று வாதங்களும் ஒரு ஆழ்வார் பாடியது (பெரிய திருமொழி என்று எண்ணுகிறேன். எந்த ஆழ்வார் என்று சரியாக நினைவில்லை. //

திருமங்கையின் பெரிய திருமொழியே தான்.
இரண்டு தோழிகள் விளையாடும் "சாழல்" என்ற ஒரு விளையாட்டு.
"மான் அமரும் மென் நோக்கி வைதேகி இன் துணையா,
கான் அமரும் கல் அதர் போய்க் காடு உறைந்தான் கான், ஏடீ
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய், சாழலே !"
(பெரிய திருமொழி - 11.5.1)

வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு,
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் காண், ஏடீ
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும், சாழலே !
(பெரிய திருமொழி - 11.5.5)

~
ராதா

July 11, 2009 11:52 AM
Radha said...
தட்டச்சுப் பிழை...
"கான் அமரும் கல் அதர் போய்க் காடு உறைந்தான் *காண்*, ஏடீ" என்று இருக்க வேண்டும்.
~
ராதா

July 11, 2009 11:56 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராதா. சாழல் பாடல்கள் தான். இந்தப் பகுதியை எழுதி முடித்த பின்னர் அவற்றைக் கண்டு கொண்டேன்.

August 14, 2009 3:12 PM
Radha said...
இதேப் போன்று திருவாசகத்திலும் ஒரு சாழல் பதிகம் உள்ளது.தருமபுரம் சுவாமிநாதன் குரலில் கேட்பதற்கு நன்றாக இருக்கும்.

August 22, 2009 8:24 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராதா. திருவாசகத்தின் சாழல் பதிகத்தைப் பற்றியும் கேள்விபட்டிருக்கிறேன். படித்திருக்கவும் வாய்ப்புண்டு - சரியாக நினைவில்லை.

September 05, 2009 8:28 AM

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோதை: தோழியர்களே. நீங்கள் மணிவண்ணனைப் பற்றிப் பேசிப் பேசி எனக்கு அதிகமான துக்கத்தைக் கொடுக்கிறீர்கள். போதும்//

பேசினாலும் துக்கம்
பேசாவிட்டாலும் துக்கம்
என்ன செய்வாள் பேதை கோதை?
விசித்திரக் காதல் என்றால் விக்கித்துத் தான் போக வேண்டும்!

//இதையே ஒரு வாய்ப்பாக வைத்து கோதையைக் கொஞ்சம் வம்புக்கு இழுக்கலாம் என்று இரண்டாம் பிரிவில் சில தோழியர் நினைத்து//

தோழமை இரு வகை!
1. வாய்
2. நெஞ்சம்

வாய் = பேசும்
நெஞ்சம் = எண்ணும்

பேசுபவர்கள் எல்லாம் கலைந்து போன பின்,
எண்ணும் ஒருத்தியாவது, பேசாமல் அருகில் இருப்பாளா?

தாபத்தில் தவிக்கும் கோதைக்கு, தாகமும் எடுக்கிறதே!
ஆனாலும் பசி மறந்து, வயிறு வாட வாட வாழ்கிறாளே...

சூடிக் கொடுத்தாள்
தமிழ் பாடிக் கொடுத்தாள்
வயிறு வாடிக் கொடுத்தாள்

அவளுக்கு ஒரு குவளை நீர் கொடுக்கும் தோழமை உண்டோ?

நீர் குடுத்து, கண்
நீர் துடைத்து விட
ஒரு தோழமை உண்டோ?
- இப்படிக்கு,
உன்னைப் போல் ஒருத்தி..