Saturday, June 22, 2013

யத் பாவம் தத் பவதி

சாந்தீபனி முனிவர் ஆசிரமத்தில் கண்ணனுடனும் பலராமனுடனும் கழித்த மாணவப் பருவத்தினை எண்ணிக் கொண்டு அவனைப் பார்த்து உதவி கேட்க வந்துவிட்டேன். அவனைப் பார்க்க முடியுமோ இல்லையோ? இருபத்தி நான்கு குழந்தைகளைப் பெற்று கடுமையான வறுமையில் இருப்பதால் என் இயற்பெயரான சுதாமன் என்பதே மறைந்து எல்லோரும் என்னை இப்போது குசேலன் என்று அழைக்கும் நிலையில் நான் இருக்கிறேன். எந்த முகத்தை வைத்துக் கொண்டு கண்ணனைப் பார்க்க வந்தேனோ தெரியவில்லை. சிறு வயதிலேயே செயற்கரிய செயல்களைச் செய்து தான் இறைவன் என்பதைப் பலமுறைக் காட்டிய என் அன்பு நண்பன் அப்போது என்னால் எளிதாக அணுகும் படி இருந்தான். இப்போதோ துவாரகைக்கு அதிபதியாக கட்டுக்காவல் மிகுந்த கோட்டைக்குள் வாழ்ந்து வருகிறான். என் தோற்றத்தைப் பார்த்தால் யார் தான் நான் துவாரகாதீசனின் நண்பன் என்று ஒத்துக் கொள்வார்கள். எல்லாம் கண்ணன் விட்ட வழி.

***

இதோ துவாரகையின் முதல் வாயில் வந்து விட்டது. காவலர்கள் என்னை உள்ளே அனுமதிப்பார்களோ இல்லையோ தெரியவில்லையே?! இதென்ன விந்தை. அடியேனைப் பார்த்தவுடன் தலை தாழ்த்தி வணங்கி மதிற்கதவைத் திறந்து விடுகிறார்களே. கண்ணன் பெயர்களைச் சொல்லி 'ஜய விஜயீ பவ' என்று கோஷங்களும் இடுகின்றனர். ஆகா. என்னே இவர்களின் கிருஷ்ண பக்தி. எப்போதும் கண்ணன் நாமம் சொல்கிறார்கள்.

***

ஏழாவது வாயிலும் வந்தாகிவிட்டது. இது வரை எந்த வாயிலிலும் காவலர்கள் என் தோற்றம் கண்டு என்னைத் தடுத்து நிறுத்தவில்லை. ஆண்டி அரசன் என்ற பிரிவுகளே துவாரகையில் இல்லை என்பதை எவ்வளவு நன்றாகத் தங்கள் செயல்களிலும் காட்டுகிறார்கள் துவாரகைவாசிகள். ஆண்டியான என்னை ஒவ்வொரு வாயிலிலும் தங்கள் அரசரை வரவேற்பது போல் அல்லவா வரவேற்று உள்ளே அனுமதித்தார்கள். இந்த வாயிலிலும் அனுமதி பெறுவது எளிதாகத் தான் இருக்கும். அதில் ஐயமே இல்லை. அதோ கண்ணனே தன் தேவியர்களுடன் வருகிறானே அடியேனை எதிர்கொண்டழைக்க. என்னே கண்ணனின் சௌலப்யம் (எளிவந்த தன்மை)!


***

முதல் வாயில். காவலர்களில் ஒருவரும் கோட்டைக் காவல் தலைவரும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

காவலர் 1: கோட்டைக் காவல் தலைவரே! நம் சுவாமி கோட்டையை விட்டு வெளியே சென்றதாகவே தெரியவில்லையே. இப்போது தனியாக எந்த வித பரிவாரமும் இன்றி தேர், புரவி என்ற எந்த வாகனமும் இன்றி நடந்து கோட்டைக்குள் நுழைகிறாரே? இது என்ன விந்தை?

கோட்டைக்காவல் தலைவர்: ஆமாம் காவலரே! எனக்கும் அது மிக விந்தையாகத் தான் இருக்கிறது. நான் அறிந்த வரை சுவாமி கோட்டைக்குள் தான் இருக்கிறார். அதனால் சுவாமியைக் கண்டவுடன் எனக்கும் மிக விந்தையாக இருந்தது. அதுவும் நீங்கள் சொன்னது போல் ஐயன் தனியாக வருவதைக் கண்டு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் நம் சுவாமி மாயைகளில் வல்லவராயிற்றே. அவரை நாம் என்ன கேட்பது? எந்தக் கேள்வியும் கேட்காமல் துவாரகாதீசனிடம் தகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வது தானே நம் கடமை.

அதோ ஒரு ரிஷி வருகிறார். அவரிடம் வேண்டுமானால் நம் ஐயத்தைக் கேட்டுக் கொள்ளலாம்.

வணக்கம் சுவாமி.

ரிஷி: வாழ்த்துகள்.

கோட்டைக் காவல் தலைவர்: சிறிது நேரத்திற்கு முன்பு நம் கண்ணன் இந்த வழியாகக் கோட்டைக்குள் சென்றார். அடியோங்கள் அறிந்த வரை அவர் கோட்டையிலேயே தான் இருக்கிறார். அதனால் அவர் வெளியிலிருந்து உள்ளே செல்வதைப் பார்த்து நாங்கள் திகைத்து நிற்கிறோம். தாங்கள் தான் தயை செய்து எங்கள் மயக்கத்தைத் தீர்க்க வேண்டும்.

ரிஷி: கோட்டைக் காவல் தலைவரே. நீங்கள் சொல்வது உண்மை தான். மாயக்கண்ணன் கோட்டைக்குள்ளேயே தான் இருந்தார். உள்ளே வந்தது கிருஷ்ணன் இல்லை. அவர் நம் அழகிய நம்பியின் நண்பர். சிறுவயதுத் தோழர். குசேலன் என்று பெயர் பெற்ற சுதாமன். என்றும் கிருஷ்ண தியானத்திலேயே இருப்பதால் அவர் முழுவதும் கிருஷ்ண மயமாகவே ஆகிவிட்டார். அதனால் அவரைப் பார்ப்பவர்களுக்கு அவர் கண்ணனாகவே தோற்றம் அளிக்கிறார்.

கோட்டைக் காவல் தலைவர்: அப்படியா? ஆகா. சரியாக விசாரிக்காமல் கோட்டைக்குள் அனுமதித்துவிட்டோமே. உடனே உள் வாயில் அதிகாரிகளிடம் சொல்ல வேண்டும்.

ரிஷி: கோட்டைக் காவல் தலைவரே. பதட்டம் வேண்டாம். குசேலர் வரவைக் கண்ணன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் அவரே குசேலரை எதிர் கொண்டழைத்து உள்ளே கூட்டிச் செல்கிறார். எந்த வித பதட்டமும் வேண்டாம். அவரது அருமை நண்பரை காலம் தாழ்த்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு அவர் மகிழ்ச்சியே அடைவார். நானும் இரு நண்பர்கள் அளவளாவுவதைக் காணவே ஓடோடி வந்தேன்.

கோட்டைக் காவல் தலைவர்: தங்கள் பெயரை அடியேன் தெரிந்து கொள்ளலாமா சுவாமி.

ரிஷி: அடியேன் கிருஷ்ண த்வைபாயனன் என்னும் வேத வியாசன்.

***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

10 comments:

குமரன் (Kumaran) said...

Comments from the original post:

44 comments:

கோவி.கண்ணன் [GK] said...
படம் நன்றாக இருக்கிறது குமரன் !
நன்றாக போகிறது கதை தொடருமா ?
December 10, 2006 7:39 AM
குமரன் (Kumaran) said...
யத் பாவம் தத் பவதி - எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
December 10, 2006 7:43 AM
Merkondar said...
இந்த படத்தை எங்கே பிடித்தீர்கள்
குசேலர் கதையாரும் அறிந்த ஒன்று என்றாலும் தங்களது புது முறை நன்றாக உள்ளது.
December 10, 2006 7:44 AM
குமரன் (Kumaran) said...
கண்ணன் அண்ணா. எந்தக் கதையைக் கேட்கிறீர்கள்? கோதையின் கதை தொடரும். குசேலரின் கதை அவ்வளவு தான். இந்த மட்டிலுமே குசேலரின் கதை கோதையின் கதையோடு தொடர்புடையது. :-)
December 10, 2006 7:44 AM
K.V.Pathy said...
Godaiyum Napinnaiyum oruvara?
K.V.Pathy
December 10, 2006 8:08 AM
K.V.Pathy said...
mannikkavum. mun kELvi thavaru.
Radaiyum Nappinnaiyum oruvara?
K.V.Pathy.
December 10, 2006 8:11 AM
bharatheeyan said...
குமரனுக்கு,

சரியான தருணத்தில் தான் ஆரம்பத்துள்ளீர்கள். என் அன்பு வாழ்த்துக்கள்.

bharatheeyan

www.mks4321@gmail.com
December 10, 2006 8:52 AM
குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. இணையத்தில் தான் இந்தப் படம் கிடைத்தது. இஸ்கான் இயக்கத்தினரின் கைவண்ணம் இது.

ஆமாம் ஐயா. குசேலர் கதை எல்லாரும் அறிந்தது என்பதால் கோதையின் கதைக்கு எது தொடர்புடையதோ அதனை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.
December 10, 2006 9:21 AM
குமரன் (Kumaran) said...
பதி ஐயா. கோதை பாடிய திருப்பாவையிலும் மற்ற பாசுரங்களிலும் நப்பின்னையைக் குறிப்பதால் கோதையும் நப்பின்னையும் ஒன்றாக இருக்க முடியாது. அதனை நீங்களும் உணர்ந்தே தங்கள் கேள்வியை மீண்டும் வேறு விதமாகக் கேட்டிருக்கிறீர்கள்.

இராதையும் நப்பின்னையும் ஒன்றே என்றும் இல்லை வெவ்வேறு என்றும் அறிஞர்கள் நடுவே விவாதம் நடந்துகொண்டு இருக்கிறது. இராதையும் நப்பின்னையும் (இருவருமே) பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. சங்கத் தமிழ் பாடல்களில் நப்பின்னைப் பிராட்டி குறிப்பிடப்படுவதாகப் படித்திருக்கிறேன். நப்பின்னையை கண்ணன் ஏறு தழுவி மணந்து கொண்டது தமிழ் மரபின் அடிப்படையில் உள்ளது என்றும் இந்தத் தமிழ் மரபே ஆழ்வார்களின் பாடல்களில் மிகப் பெரும்பான்மையாக இருக்கிறது என்றும் அறிஞர்கள் கூறுவார்கள். ஆழ்வார்களின் பாசுரப் பொருள் வடக்கே சென்ற போது அது இராதையாக உருமாற்றம் பெற்றிருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் நப்பின்னையும் இராதையும் ஒருவரே என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாததாகவே இருக்கிறது.

அடியேனைப் பொறுத்த வரை இருவரும் வெவ்வேறு என்றே நினைக்கிறேன்.
December 10, 2006 9:27 AM
குமரன் (Kumaran) said...
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி பாரதீயன் ஐயா.
December 10, 2006 9:30 AM

குமரன் (Kumaran) said...

வல்லிசிம்ஹன் said...
எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
நல்ல நினைவுகள் நன்மை பயக்கின்றன.

எதைச் சாப்பிடுகிறோமோ அதன் குணம் படிகிறது.
குசேலர் கிருஷ்ணனாகியது அருமையான கற்பனை.

நன்றி குமரன்.
December 10, 2006 11:30 AM
குமரன் (Kumaran) said...
வல்லியம்மா. இது நான் செய்த கற்பனை இல்லை. குசேல உபாக்கியானத்தில் வருவது தான். அது இங்கே பொருத்தமாக இருக்கவே எடுத்து எழுதினேன். :-)
December 10, 2006 11:44 AM
SK said...
கோட்டைக் காவலர்கள் குசேலரை கண்ணனாகவே பார்த்து அனுமதித்தார்கள் என்பது நான் இதுவரை அறியாத ஒன்று.

அனைவரும் கண்ணன் அனுபவத்தில் திளைத்து இன்புற வேண்டுகிறேன்.
December 10, 2006 12:19 PM
கால்கரி சிவா said...
யத் பாவம் தத் பவதி - அருமையான தத்துவம் குமரன்
December 10, 2006 7:39 PM
நாமக்கல் சிபி said...
//யத் பாவம் தத் பவதி - எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
//

நல்ல கருத்தினை உணர்த்தும் கதை குமரன்! நன்றி!
December 10, 2006 8:50 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
பழக்க தோஷம்! கை நேரே + குத்து, குத்தப் போனது! :-)))
மீண்டும் வருகிறேன், கண்ணபிரானின் குசேலோபாக்கியானத்துக்கு!
December 10, 2006 10:11 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஒரு நல்ல திரைக்கதை/நாடக வடிவில் கொடுத்து உள்ளீர்கள் குமரன்! நியூயார்க் நாடகப் பள்ளிக்கு அடியேனுடன் வருகிறீர்களா?:-)

//இருபத்தி நான்கு குழந்தைகளைப் பெற்று கடுமையான வறுமையில் இருப்பதால்//

இவ்வளவு கொடுமையான நிலையிலும், எந்த வசதியும் இல்லாது, குடும்ப பாரத்தை வருத்தப்பட்டுச் சுமக்கும் ஒருவன், இறைவன் பெயரை இடையறாது பற்றிக் கொண்ட ஒரே காரணத்துக்காக குசேலன், கண்ணன் ரூபமாக ஆனான்!

இன்று சகல இயந்திர வசதிகளும் உள்ள மக்கள் ரொம்ப அதிகமாக எல்லாம் பாரம் சுமப்பதில்லை! அவர்கள் எல்லாம் பற்றினால்?

உண்ணுஞ்சோறு பருகுநீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன், எம்பெருமான்
என்றென்றே கண்கள் நீர்மல்கி,
எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்!

அடுத்து கதை எங்கு செல்லப் போகிறது என்று அடியேனுக்குப் புரிகிறது! :-)
December 11, 2006 1:59 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் எஸ்.கே. நான் கூட போன வருடம் வரை அறியாமல் தான் இருந்தேன். போன வருடம் தான் இதனைப் பற்றி படித்தேன்.
December 11, 2006 9:56 AM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவா அண்ணா.
December 11, 2006 9:56 AM
குமரன் (Kumaran) said...
நன்றி நாமக்கல்லாரே.
December 11, 2006 9:56 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். மீண்டும் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் திரும்பி வந்தது நடுஇரவில். அவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? பதிவுகளா எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? :-)

ஒரு நல்ல கருத்தை எடுத்து வைத்திருக்கிறீர்கள். சாமி கும்பிட எல்லாம் நேரம் எங்கே இருக்குன்னு நானும் அப்ப அப்ப சொல்றது தான். தனியா காலையில சாமி கும்பிடாட்டியும் சரி; எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப எல்லாம் சாமி பேரை சொல்றோமேன்னு சொல்லிக்குவேன். ஆனால் எத்தனைப் பெரிய குடும்பப் பொறுப்பு இருந்தாலும் ஹரிபக்தியால் ஹரியாகவே தோற்றம் கொண்ட குசேல கண்ணனை நினைத்தால் நான் எல்லாம் எந்த மூலை?

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்சோதிக்கே
December 11, 2006 10:01 AM
குமரன் (Kumaran) said...
இரவி. கதை எங்கே போகிறது என்று மனது அலை பாய்கிறதா? சரி சரி. கொஞ்சம் பொறுத்திருங்கள். நீங்கள் புரிந்து கொண்டது சரியா என்று பார்க்கலாம்.
December 11, 2006 10:02 AM
enRenRum-anbudan.BALA said...
***************
//யத் பாவம் தத் பவதி - எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
//

நல்ல கருத்தினை உணர்த்தும் கதை குமரன்! நன்றி!
******
நான் சொல்ல எண்ணியதை வஜ்ரா சொல்லி விட்டார் ! அழகான நடை உங்களுடையது ...
December 11, 2006 12:45 PM
குமரன் (Kumaran) said...
'சீனியர்' பாலா. அப்படி சொன்னது கால்கரி சிவாவும் நாமக்கல் சிபியும். இதில் யார் வஜ்ரான்னு நீங்க நினைக்கிறீங்க? :-)
December 11, 2006 12:57 PM
G.Ragavan said...
எல்லாரும் சொல்லி விட்டார்கள். நானும் சொல்லி விடுகிறேன். கண்ணன் வடிவாகவே சுதாமர் தோன்றியதால் அவரை உள்ளே விட்டனர் என்ற செய்தி எனக்கும் புதியதே.

குசேலன் என்ற பெயருக்குப் பொருள் என்ன?

அது சரி. வியாசர் இங்கு எங்கு வந்தார்?

கோதைக்கும் குசேலனுக்கும் என்ன தொடர்பென்று அறியக் காத்திருக்கிறேன்.
December 12, 2006 9:20 AM
குமரன் (Kumaran) said...
இராகவன். குசேலன் என்பது குபேரனுக்கு எதிர்ப்பதம். வறியவன் என்று பொருள். ஒருவரை அவர் இயற்பெயரையே விட்டுவிட்டு வறியவன் என்றே அழைப்பது என்றால் அவர் எப்படிப்பட்ட வறுமையில் இருக்க வேண்டும்?!

வியாசர் எல்லா இடத்திலும் வருவார். கண்ணன் கதையை வியாசர் சொல்லிக் கேட்டவர் அவர் மகன் சுகர். அவர் சொல்லிக் கேட்டவர் பரிட்சித்து மன்னன். அப்படித் தானே கண்ணன் கதையான பாகவதம் கிடைத்தது. அப்படி இருக்க இங்கே வியாசர் வருவதில் என்ன தடை? :-) (வியாசர் வந்தது அடியேன் கற்பனையே).

அடுத்தப் பதிவில் இந்தக் கதைக்கும் கோதையின் கதைக்கும் என்ன தொடர்பு என்று சொல்கிறேன். அதற்குள் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் 'கண்ணன் பாட்டு' வலைப்பூவிற்குச் சென்று இரவிசங்கர் இட்டிருக்கும் 'அலைபாயுதே கண்ணா' பதிவைப் பாருங்கள். அங்கே ஒரு ஓவியம் இருக்கிறது உங்களுக்கு விடையாக.
December 12, 2006 10:13 AM
enRenRum-anbudan.BALA said...
Kumaran,
//'சீனியர்' பாலா. அப்படி சொன்னது கால்கரி சிவாவும் நாமக்கல் சிபியும். இதில் யார் வஜ்ரான்னு நீங்க நினைக்கிறீங்க? :-)
//

I am terribly sorry for the oversight :)))
December 13, 2006 10:40 AM
ஜெயஸ்ரீ said...
கோதையின் கதையை விரிவாகக் கொண்டுசெல்கிறீர்கள். குசேலர் காவலர்களுக்குக் கண்ணனாகவே தோற்றமளித்ததை இங்கு சொன்னதன் காரணம் புரிகிறது.

படங்களும் அழகு. முதல் படத்தைப் பார்த்தபோது பள்ளியில் படித்த

"வழி நடந்திளைத்தவே இம்மலரடி இரண்டும் என்று
கழிமகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக் கண்ணன்"

என்ற குசேலோபாக்கியான வரிகள் நினைவுக்கு வருகின்றன.
December 13, 2006 12:14 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
ஆகா. அருமையான வரிகளைச் சொல்லியிருக்கிறீர்கள் ஜெயஸ்ரீ. கோதையின் கதையை விரைவில் நிறைவு செய்து திருப்பாவைக்குள் நுழைய முயற்சிக்கிறேன். குசேலோபாக்கியான வரிகள் மிக நன்றாக இருக்கின்றன. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஜெயஸ்ரீ.
December 20, 2006 4:22 PM
கவிநயா said...
"யத் பாவம் தத் பவதி"

கண்ணனை நினைந்து நினைந்து அவனாகவே ஆக ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

//"வழி நடந்திளைத்தவே இம்மலரடி இரண்டும் என்று
கழிமகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக் கண்ணன்"//

நீங்க இட்டிருக்கும் படத்துக்கு வெகு பொருத்தம்; வெகு அழகு! மனம் நெகிழ வைத்தது.
May 29, 2008 2:48 PM
குமரன் (Kumaran) said...
உண்மை தான் அக்கா.

நன்றி.
June 11, 2008 4:58 PM
sury said...
// ஆண்டி அரசன் என்ற பிரிவுகளே துவாரகையில் இல்லை//

அண்டி வருவோரை ஆட்கொள்ளும் அன்புடையோன்
அரசன் அல்ல.
அருளாளன்.
ஆண்டவன்.
இருக்கட்டும்.
எல்லாமே அவன் என்றால்
ஏற்பவனும் அவனே
எடுத்துத் தருபவனும் அவனே = பின்
எங்கே இருக்குமாம் பிரிவு ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
July 17, 2008 11:27 PM
குமரன் (Kumaran) said...
நன்கு சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி.
July 18, 2008 9:10 AM
Vidhya said...
@குமரன்

நல்ல கற்பனை. வியாசரை கடைசியில் வைத்து முடிக்க எண்ணிய விதம் எல்லாமே நன்றாக இருந்தது.

நடை அருமையாக‌ ஆடம்பரமில்லாமல் இருந்தது. இழுக்காமல் சட்டென்று முடிக்க வேண்டிய இடத்தில் கதையை முடித்து விட்டீர்கள். வியாசரை கொண்டு வந்து அத்துடன் கதையை முடித்திருப்பது ஆன்மீக ஆர்வமுள்ளவர்களுக்கு இனிமையாக இருக்கும்.


இப்போது என் கண்ணில் பட்ட சில பிழைகளை சொல்லட்டுமா?

குசேலர் என்றால் வறியவர் என்ற பொருள் நேரடியாக வராது. குசேலர் என்றால் கந்தல் ஆடையை உடுத்தியவர் என்று பொருள்.

கண்ணனை போல சரீரம் ஆகும் சாருப நிலை குசேலர் பெற்றதாக பாகவதத்தில் சொல்லப்படவில்லை. குசேலரை ப்ரம்ம வித்து என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. (பாகவதம் 10 :80:6)

கந்தையுடுத்தியவரும், அழுக்கடைந்தவரும், இளைத்தவரும், நாடி நரம்புகள் தெரிய இருப்பவராக குசேலர் வருணிக்கப்படுகிறார். (பாகவதம் 10:80:23)

அது மட்டுமா இப்படி கந்தையோடும், அழுக்கோடும் , பிச்சையெடுப்பவரும், இளைத்துமிருக்கும் இந்த பிராம்மணனை போயா கண்ணன் உபசரிக்கிறானே என அந்தப்புறத்தில் இருக்கும் பெண்கள் ஆச்சரியமடைந்ததாக இருக்கிறது.(பாகவதம் 10:80: 24, 25)

ஆக கண்ணனுக்கும் அவருக்கும் சொரூப ஒற்றுமை இல்லை. அவர் கண்ணனின் சாருப ஸ்திதியை அடையவில்லை என்று தெளிவாக தெரிகிறது. ஒரே ஒருவர் மாத்திரமே அந்த நிலையை அப்போது அடைந்ததாக தெரிகிறது. அது உத்தவர். அதற்கும் அவ்வளவாக ஆதாரம் இல்லை. சைதன்ய சம்பிரதாயத்தில் அது சொல்லப்பட்டதால்,பெரியோர் வாக்கு என ஏற்கிறோம்.

வியாசர் அங்கு வருகிறார் என்பது போன்ற எழுத்தாளருக்குரிய கற்பனை சுதந்திரத்தை ஏற்கலாம். ஆனால் கந்தையுடன் வரும் குசேலரை கிருஷ்ணர் என்று காவலர் மயங்குவது கொஞ்சம் தவறாக படுகிறது. இது கதையின் மூல கதாப்பாத்திர தன்மையையும் மாற்றி விடுகிறது.
November 20, 2008 9:26 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
வாங்க வித்யா.

இந்தப் பகுதியை மட்டும் படித்து விட்டுவிடாமல் இந்த 'கோதை தமிழ்' பதிவில் இருக்கும் எல்லா இடுகைகளையும் தொடர்ந்து படித்துப் பார்த்துச் சொல்லுங்கள். கோதையின் கதையைச் சொல்லியிருக்கிறேன். 2007 ஏப்ரலுக்கு அப்புறம் இதில் எழுதவில்லை. விரைவில் திருப்பாவையை எழுதத் தொடங்கவேண்டும்.

நீங்கள் தரவுகளுடன் பேச வருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. இந்தத் தொடரில் சில கற்பனைகளை அடியேன் செய்திருந்தாலும் இந்தப் பகுதி என் கற்பனை இல்லை என்றே இப்போது நினைக்கிறேன்; இரு வருடங்கள் ஆகிவிட்டன. எந்த அடிப்படையில் இதனை எழுதினேன் என்று இப்போது சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

கவிநயா அக்கா சொன்ன இரு பகுதிகளில் ஒன்றைப் படித்துவிட்டீர்கள். அடுத்து கோதை கண்ணாடியில் கண்ணனைக் காணும் பகுதியைப் படிக்கப் போயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அங்கும் சாரூபத்தைக் காணுவீர்கள். இவ்விரு பகுதிகள் மட்டுமின்றி மற்ற எல்லா பகுதிகளையும் படித்துப் பாருங்கள். ஒரு தொடர்ச்சி கிடைக்கும். :-)
November 20, 2008 9:35 AM
குமரன் (Kumaran) said...
இந்தப் பகுதியின் முந்தைய, பிந்தைய பகுதிகளை மீண்டும் படித்துப் பார்த்து ஏதாவது நினைவிற்கு வருகிறதா என்று பார்க்கிறேன். பின்னர் உங்களின் பின்னூட்டத்திற்கு பொருளுடைய பதில் தர முடியும் என்று எண்ணுகிறேன். நாளை வரை பொறுத்திருங்கள். இன்று மாலை தான் இவற்றைப் படிக்க நேரம் கிட்டும்.

நன்றிகள்.
November 20, 2008 9:37 AM
குமரன் (Kumaran) said...
வித்யா. முன்பே சொன்னது போல் இது என் கற்பனை இல்லை. வைணவப் பெரியார்கள் தந்திருக்கும் திருப்பாவை வியாக்கியானத்தில் ஒரு வரி வருகிறது - 'குசேலர் கிருஷ்ண தியானத்திலேயே மூழ்கி இருந்ததால் வாயிற்காப்போர் அவரைக் கண்ணனாகக் கண்டனர்' என்று. அதனை விரித்தே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறேன். கிருஷ்ண த்வைபாயனர் வந்தது அடியேன் கற்பனை.

குசேலர் என்ற சொல்லின் நேரடிப் பொருளைச் சொன்னதற்கு நன்றி. இது வரை அறிந்திலேன். குபேரனுக்கு எதிர்ப்பதம் குசேலன் என்றே எண்ணியிருந்தேன்.

பாகவதத் தரவுகளுக்கு நன்றி. உத்தவர் சாரூப நிலையை அடைந்தார் என்ற செய்திக்கு நன்றி. ஹரே கிருஷ்ணா இயக்கத்தவரின் ஓவியங்கள் சிலவற்றில் உத்தவரைக் கண்ணனின் உருவில் பார்த்த நினைவு வருகிறது. சுதாமன் சாரூப நிலையை அடைந்ததும் பெரியோர் வாக்கு என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சான்றோர் சொன்னபடியே தான் இந்தக் கதை செல்கிறது.
November 20, 2008 7:11 PM

குமரன் (Kumaran) said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வித்யாவின் பதிவில் இட்ட அடியேனின் பார்வைப் பின்னூட்டத்தை இங்கும் பதிக்கிறேன்! :)

//கந்தையுடன் வரும் குசேலரை கிருஷ்ணர் என்று காவலர் மயங்குவது கொஞ்சம் தவறாக படுகிறது//

உம்...பாகவத புராணத்தின் படி, அனைவரும் அறிய, எடுத்துச் சொல்லுங்க வித்யா!

ஆனாலும் அடியேனும் ஒரு (கற்பனைப்) பார்வையைச் சொல்லட்டுமா?

குசேலர் கண்ணனின் சாரூபம் பெற்றாரோ இல்லையோ...
கண்ணன் குசேலரின் சாரூபத்தை, நினைத்தால் மிக எளிதாகப் பெற முடியும் அல்லவா?

அப்படியான சாரூபத்தில்,அவன் ஜகன் மோகனாகாரம் மறைந்திடுமா? எவ்வளவு தான் அவனே மறைத்து வந்தாலும் மறைந்திடுமா?

குசேலரின் எண்ணம் முழுதும் கண்ணன் என்பதால் கண்ணனாகவே தெரிந்தார் என்பதை ஒரு புறம் இப்போதைக்கு வைப்போம்!

கண்ணனின் எண்ணம் முழுதும் குசேலர் அல்லவா? அவர் வருகை அந்த அந்தர்யாமிக்குத் தெரியும் அல்லவா? அதான் கண்ணன் குசேலனாகவே மாறி விட்டார். எப்படி?

நண்பன், அரண்மனைகளை அதிகம் பார்க்காதவன், அவன் எப்படி உள்ளே வருகிறான், யாரேனும் அவனைத் தடுத்து தெரியாமல் விசாரித்து விட்டால்? அது கூடக் கண்ணனுக்குப் பொறுக்காது!
அதே சமயம் குசேலரின் ஆவலைத் தூண்டி பிறகு தான் பார்க்க வேண்டும் என்ற நட்பான கபடும் கூட!

சர்வ அந்தர்யாமி, குசேலன் சாரூபம் கொண்டு, குசேலனக்குள் குசேலனாகவே உள்ளே வருகிறான்!

அப்படியான சாரூபத்தில்,அவன் ஜகன் மோகனாகாரம் மறைந்திடுமா? எவ்வளவு தான் அவனே மறைத்து வந்தாலும் மறைந்திடுமா?

கந்தாடையில் இருந்தாலும், தோள் கண்டார் தோளே கண்டார் என்று, காவலர் எல்லாம் அந்த ஜகன் மோகனாகாரத்தில் லயித்து கண்ணனாய் பாவிக்க, எந்த ஒரு விசாரிப்புத் தடையும் இன்றி, நண்பன் உள்ளே வருகிறான்!

குசேலனுக்கும் யாரிடமும் எது கண்ணன் மாளிகை என்று விசாரிக்கத் தோனவில்லையே! அப்படி விசாரித்தால் காவலர்கள், என்ன இது கண்ணனே அவர் மாளிகையை விசாரிக்கிறாரே என்று குழம்புவார்களே!

இப்படி எந்தவொரு பிறழ்வும் இன்றி, தடுப்பார் யாரும் இன்றி, குசேலனுக்குள் கண்ணனாய், கண்ணனே, கண்ணன் மாளிகையைக் காட்ட, கண்ணபிரான் நண்பன், கண்ணனைக் காண கண்ணிரண்டும் ஏந்தி வருகிறான்!

ஜகன் மோகனாகாரா! பார்க்கும் மரங்களில் எல்லாம் உன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா!

காக்கைச் சிறகினிலே உன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!
குசேலன் கந்தாடையிலே உன் பீதாம்பரம் தோன்றுதையே நந்தலாலா!
:)
November 21, 2008 2:15 PM
Vidhya said...
//சர்வ அந்தர்யாமி, குசேலன் சாரூபம் கொண்டு, குசேலனக்குள் குசேலனாகவே உள்ளே வருகிறான்!//

திரும்ப சாருபத்தை வச்சு கலக்க ஆரம்பிச்சுட்டீங்களா? தெய்வம் பக்த வடிவம் எடுப்பதை சாரூபம் என்னும் சொல்லால் குறிக்க கூடாது. மற்றப்படி தெய்வம் அடியார் வடிவத்தை எடுத்ததற்கு நிறைய உதாரணம் இருக்கவே செய்கிறது.

ஆனால் இந்த சாரூப விஷயம் குசேலர் கதையில் சுவாரஸ்யமாகவே இருந்தாலும், இப்படி கதையின் அழுத்தம் சாரூபத்திற்கு போவதால், அடியார் மீது ஆண்டவனுக்கு இருக்கும் அந்த அன்புக்கு கொடுக்கும் அழுத்தம் கதையில் இல்லாமல் போகிறது. அந்த குசேல, கிருஷ்ண அன்பு தரும் நெகிழ்ச்சி மிஸ்ஸிங்.

ஆக இந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒன்று. அவன் அன்பெனும் பிடிக்குள் அடங்கிடும் மலை என்பதுதான் அது. இங்கே குசேலரை சாரூப நிலை அடைந்தவராகவும், பெரும் நிலை அடைந்தவராகவும் காண்பிக்கும்போது நம்மை போன்ற சாதாரணர் எங்கே இறைவனை காண்பது என்ற தயக்கம் பழையப்படி ஏற்படலாம். பாகவதத்தில் இந்த கதையை சொன்ன காரணமே, தன் பக்தர் யாராய் இருந்தாலும் எந்த வித தகுதியும் பார்க்காமல் ஓடி வருவான் என்பதை சொல்வதற்குதான்.

ஆனால் சாருபம் எனும் மையக்கரு மாறுதலால் கதை வேறொரு கோணத்தில் சுவாரஸ்யமாய் போய் விட்டது. முக்கியமான விஷயம் மறைந்து போய்விட்டது.
November 22, 2008 2:38 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
வித்யா.

கதையின் கரு எந்த வகையிலும் மாறவில்லை என்பதே என் எண்ணம். கிருஷ்ண தியானத்தில் எப்போதும் மூழ்கி இருந்ததால் குசேலரின் திருவுருவம் காவலர்களுக்கு கண்ணனின் திருவுருவமாகத் தெரிந்தது. அவ்வளவு தான் செய்தி. இதில் கிருஷ்ண பக்தி என்னும் அன்பு மிக நன்றாகக் காட்டப்பட்டது. அப்படிப்பட்ட அன்பெனும் பிடியில் அகப்படும் கருப்பொருள் கண்ணன் என்பதும் நன்றாகக் காட்டப்பட்டது. அவனும் தேவியரும் குசேலரை எதிர்கொண்டழைத்த போதும் அவர் திருப்பாதம் கழுவிய போதும் அவர் தந்த அழுக்கு மூட்டை அவலை உண்ட போதும் கண்ணனின் எளிவந்த தன்மை பேசப்பட்டது. அவை எல்லாம் எந்த வகையிலும் மாறவில்லை.

கண்ணனின் மேலுள்ள அன்பால் குசேலரும் கண்ணனாகத் தெரிந்தார் என்பது மட்டுமே இங்கே எழுதி வரும் கோதையின் கதைக்குத் தேவைப்பட்டதால் அதனை மட்டும் வியாசரின் வாயால் சொல்லிவிட்டு கதை மீண்டும் கோதையின் வரலாற்றிற்குச் சென்றுவிட்டது. இங்கே குசேலரின் கதையை முழுவதுமாகச் சொல்லத் தேவையின்றிப் போனதால் கண்ணனின் எளிவந்த தன்மை கோடிகாட்டப்பட்டது. முழுவதும் சொல்லப்படவில்லை. தேவையான அளவே சொல்லப்பட்டது.

குசேலரின் கதையை முழுவதும் சொல்லத் தொடங்கியிருந்தால் 'எளிவந்த தன்மை' என்று கோடி மட்டும் காட்டாமல் நீங்கள் எதிர்பார்ப்பது போல் குசேல கிருஷ்ண அன்பு தரும் நெகிழ்ச்சி மிக நன்றாக வெளிகாட்டப்பட்டிருக்கும்.

காவலர்களுக்கு கிருஷ்ணனாகத் தெரிந்தவர் கண்ணனுக்கும் தேவியருக்கும் குசேலராகத் தான் தெரிகிறார். அதனால் இங்கே சாரூபம் என்பது இல்லை. கதைப்பகுதியில் இது சாரூபம் என்றும் சொல்லப்படவில்லை. பின்னூட்டத்தில் தான் அது முதன்முதலில் வந்து அதைத் தொடர்ந்து சாரூபத்தைப் பற்றிய பேச்சு வந்தது. அதற்கேற்ப வாதங்கள் பிரதிவாதங்கள் வைக்கப்பட்டன. அதனால் இந்தக் கதை சாரூபத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. குசேலர் கண்ணனின் மேலுள்ள அன்பினால் கண்ணனாகச் சிலருக்கு சில நேரம் தென்பட்டார் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு பின்னர் கோதைக்கும் அப்படி ஒரு அனுபவம் கிட்டியது என்று சொல்லச் சென்றுவிட்டது.

கண்ணன் மேல் அன்பு என்பது சாதாரணர்க்கும் வேண்டிய ஒன்று தானே. அந்த அன்பெனும் பிடிக்குள் அவன் அகப்படுவான் என்று காட்டுவதும் அவனது எளிவந்த தன்மையைச் சொல்லுவதும் சாதாரணர்க்கும் அவன் கிடைப்பான் என்று சொல்வது தானே. இதில் சாதாரணர் தயக்கம் கொள்ள வேண்டியது இல்லை. கோதையாய் இருந்தாலும் குசேலராய் இருந்தாலும் அன்புக்கு அகப்படுவான் அவன் என்பதே இந்தக் கதை சொல்லுவது.

சாரூபம் என்ற எண்ணமே இந்தப் பகுதியை எழுதும் போது ஏற்படவில்லை. சாரூபம் என்றால் கண்ணனின் திருவுருவம் எப்போதும் பெறுவது. இல்லையா? கதையில் அப்படி காட்டப்படவில்லை. கோதைக்கும் அந்நிலை இல்லை. கண்ணாடியில் கண்ணனின் திருவுருவம் தென்பட்டாலும் பின்னர் அவள் அவளுருவத்தில் தான் திருவரங்கத்திற்குச் செல்கிறாள்.

கதையின் மையக்கரு மாறவில்லை. பின்னூட்டத்தில் சாரூபம் என்ற சொல் வரும் வரை வேறொரு கோணத்திற்கும் பேச்சு செல்லவில்லை. அப்போதும் இப்போதும் கண்ணனின் மேல் உள்ள அன்பு, அதில் அவன் அகப்படும் எளிமையே முன் நிற்கின்றன. அவையே முதன்மையான விதயங்கள். அவை நாம் சாரூபத்தைப் பற்றி பின்னூட்டங்களில் பேசும் போதும் மறைந்து போகவில்லை.
November 22, 2008 7:33 AM

குமரன் (Kumaran) said...

Vidhya said...
@ குமரன் (Kumaran)

//பின்னூட்டத்தில் தான் அது முதன்முதலில் வந்து அதைத் தொடர்ந்து சாரூபத்தைப் பற்றிய பேச்சு வந்தது.//

தப்புத்தான். கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன். :)) சாரூபம் எனும் சொல்லை வேண்டுமானால் பின்னூட்டத்தில் முதலில் ஒருவர் இருக்கலாம்.

ஆனால் உங்கள் கதையின் சஸ்பென்ஸ் இரண்டு விஷயங்களில் இருந்தது. அந்த இரண்டும்தான் கதையின் மையக்கருவாகவும் இருந்தன.

1. குசேலர் கிருஷ்ணனாக தெரிந்தது

2. அந்த ரிஷி கிருஷ்ண த்வைபாயனர் எனும் வியாசர்.

ஆக கதையின் அழுத்தமே 'ஆஹா..குசேலர் எப்படி கிருஷ்ணர் போலவே சரீரம் கொண்டவராகி விட்டிருக்கிறார். பார்த்தீர்களா' எனும் எஃபெக்டில் தான்.

ஆனால் உண்மையான குசேலர் கதையை இதுவரை நாம் நினைக்கும்போதெல்லாம் கிருஷ்ணரின் அன்பும், தராதரம் பார்க்காத கருணையுமே நினைவில் வரும். இந்த கதையில் குசேலருக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த முக்கிய நிகழ்ச்சி சொல்லப்படவில்லை. குசேலர் கிருஷ்ணரையே நினைந்து அந்த சரீர ஒற்றுமையை அடைந்ததே சொல்லப்படுகிறது. அதோடு கதையையும் நிறைவு செய்து விட்டீர்கள். பின்னெப்படி எதுவும் மாறவில்லை என்கிறீர்கள்?

நிச்சயம் இதுவரை குசேலர் கிருஷ்ணர் கதையை படித்தப்போது ஏற்பட்ட அந்த நெகிழ்ச்சியான‌ பாதிப்பு இங்கே வரவில்லை. உங்கள் கதையில் எப்படி ஒரு பக்தர் இறைவனையே நினைந்து அவர் ரூபத்தை பெறுகிறார் என்றுணர்ந்து யோக பாவனையில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே சர்வ நிச்சயமாக குசேலர் கதையின் ட்ரெண்டே இங்கு மாறி விட்டது.

//அப்போதும் இப்போதும் கண்ணனின் மேல் உள்ள அன்பு, அதில் அவன் அகப்படும் எளிமையே முன் நிற்கின்றன. அவையே முதன்மையான விதயங்கள். அவை நாம் சாரூபத்தைப் பற்றி பின்னூட்டங்களில் பேசும் போதும் மறைந்து போகவில்லை.//

நீங்கள் எழுதியவராய் இருப்பதால் மூலக்கதை உங்களுள் ஓடிக்கொண்டிருக்கு. அதனால் அன்பு இங்கு மறையாதது போல் இருக்கும்.

ஆனால் படிப்பவர் கதையில் நேரடியாக ஆழ்வதால் உங்கள் கதையின் மையக்கருதான் அவர்களது உணர்வை ஆட்கொள்ளும் விஷயமாக இருக்கும்.

இந்த கதையை படித்து ஆன்மீகமாய் இரசித்தவர்கள் எல்லாம் (என்னையும் சேர்த்து) கிருஷ்ணர் போல குசேலர் தெரிந்தார் என்றதும் ஒரு ரசனை ஏற்படுகிறது. அந்த காட்சி மனதில் தெரியும்போது ஒரு லேசான ஆனந்தமும், வியப்பும் மேலிடும். அப்போது கிருஷ்ணரை நினப்பதனால் ஏற்படும் பக்தியும், நெகிழ்ச்சியும் இருக்குமே ஒழிய மூலக்கதையில் கிருஷ்ணர் பரம கருணையோடு இறங்கி வந்து காட்டிய அந்த அன்பின் நெகிழ்ச்சியை இங்கே உணரமுடியவில்லை.
November 22, 2008 8:54 AM
குமரன் (Kumaran) said...
வித்யா.

நீங்கள் சொல்லும் நெகிழ்வு கட்டாயம் நான் குசேலரின் கதையை குசேலோபாக்கியானமாக எழுதும் போது இருக்கும். எனக்கும் இருக்கும். படிப்பவருக்கும் இருக்கும். :-)

முன்பே சொன்னது போல் இங்கே சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு முதன்மைக் கதையான கோதையின் கதைக்குத் தொடர் சென்றுவிட்டது.

நானும் கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன். :-)
November 22, 2008 10:05 AM
Vidhya said...
எப்போ கன்னத்தில் போட்டுக் கொள்ளும் பழக்கம் வந்துவிட்டதோ, அந்த நிமிடமே நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள். :))
November 22, 2008 11:31 AM
குமரன் (Kumaran) said...
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. அதனால தான் அடியார் வழி நடந்துக்கிட்டேன். :-)
November 22, 2008 11:43 AM

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

குமரன் (Kumaran) said...

நன்றி தனபாலன்.