Thursday, April 29, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 15

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பதினைந்தாம் (இறுதிப்) பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பதினான்கு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், வானம். தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் - இவையெல்லாம் நினது விளக்கம்.

மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம். காற்றிலே ஒரு சதுர அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.

ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்; அவற்றுள் இன்னுஞ் சிறியவை - இங்ஙனம் இவ்வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.

மஹத் - அதனிலும் பெரிய மஹத் - அதனிலும் பெரிது - அதனிலும் பெரிது.

அணு - அதனிலும் சிறிய அணு - அதனிலும் சிறிது - அதனிலும் சிறிது.

இரு வழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம். புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம். 'நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி'.

----------

உரை தேவையில்லை. எளிதாகவே இருக்கிறது.

1 comment:

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
இராகவன், வசந்தன் சொல்வது சரியாகத் தான் இருக்கும் போல் இருக்கிறது. இங்கே பாருங்கள் பாரதியார் 'ஜந்துக்கள்' என்று ஒற்று மிகுந்து தான் எழுதியிருக்கிறார். ஒன்று அவர் சரியாக இருக்க வேண்டும். இல்லையேல் இது பதிப்பாளர்களின் தவறாக இருக்கவேண்டும்.
January 20, 2006 8:22 PM

--
G.Ragavan said...
குமரன், சமீபத்தில் ஒரு பதிப்பு வந்ததே..இந்த ஒற்றுகளைப் பற்றி. மிகவும் செய்யலாமாம். மிகாமலும் போகலாமாம். இருங்கள். அந்தப் பதிப்பின் சுட்டியை இங்கே தருகிறேன்.
January 21, 2006 11:57 PM
--

G.Ragavan said...
http://kumizh.blogspot.com/2006/01/blog-post_20.html

குமரன், இந்தச் சுட்டியைப் பாருங்கள். உங்களுக்கு வேண்டிய விளக்கம் கிடைக்கும்.
January 22, 2006 12:22 AM
--

சிவா said...
குமரன்! இறுதி பாகமும் நன்றாக எளிமையாக இருந்தது. //**காற்றிலே ஒரு சதுர அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன**// பாரதி நிறைய விஞ்ஞான பூர்வமான கூறுகிறார். அவர் கவிதைகளில் இந்த அளவு விஞ்ஞான பூர்வமாக சொல்லியிருப்பார் என்று நான் நினைக்க வில்லை. 'மஹத்' என்றால் என்ன?? அனைத்து பாகங்களையும் கொடுத்தமைக்கு நன்றி. உங்கள் ப்ளாக்குகளில் இந்த ப்ளாக் எனக்கு ரொம்ப பிடித்ததில் ஒன்று. மற்ற வசன கவிதைகளையும் நேரம் கிடைக்கு போது போடுங்கள்.
January 22, 2006 2:51 AM
--

குமரன் (Kumaran) said...
இராகவன், அந்தப் பதிவை நேற்றே பார்த்தேன். அந்தப் புத்தகத்தையும் வாங்க வேண்டும்.

இந்தக் கவிதையைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?
January 22, 2006 9:41 AM
--

குமரன் (Kumaran) said...
சிவா. மஹத் என்றால் பெரியது என்பதற்குரிய வடமொழிச் சொல். இந்தப் பொருளுடன் அந்த வரியை இன்னொரு முறை படியுங்கள். நன்றாய்ப் பொருந்திவரும்.

இந்த வலைப்பதிவின் நோக்கமே பாரதியாரின் அவ்வளவாகப் பிரபலம் அடையாத கவிதைகளைப் பற்றிப் பேசுவதே. அவ்வப்போது பிரபலமான கவிதைகளும் வரும். வேறு சில கவிதைகளைப் பார்த்துவிட்டு பின்னர் பாரதியாரின் மற்ற வசனகவிதைகளைப் பார்ப்போம்.

கோதை தமிழையும், விஷ்ணுசித்தரையும் கவனிக்காமல் விட்டுவிட்டேன். அவர்களை கொஞ்சம் கவனித்துவிட்டு பாரதியாரைக் கவனிக்கலாம். சரியா?
January 22, 2006 9:45 AM
--

Anonymous said...
Barathiyar kalathil ithu nichayamaga palarukku purinthitukkathu - lots of scientific information !!

Arputhamana pathivu.

Kumaresh
January 25, 2006 9:17 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி குமரேஷ்.
January 26, 2006 12:09 PM