பூனை தன் முன் உள்ள ஒரு சிறு பாத்திரத்தில் உள்ள பாலைத்தான் குடிக்கமுடியுமே ஒழிய பாற்கடலையே குடிக்க ஆசைப்பட்டால் அதனை என்ன சொல்வது? தத்துவ விசாரணையும் அப்படிப்பட்டதே. அது மாபெரும் கடல்; ஆனால் அது பாற்கடல். பால் இந்தப் பூனைக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த பாற்கடலில் இருக்கும் பாலை எல்லாம் அருந்திவிட வேண்டும் என்றப் பேராசையுடன் இந்தப் பூனை இறங்குகிறது. அது அந்தப் பாற்கடலில் மூழ்கிவிடாமல் இருக்க இறைவன் துணை செய்யட்டும்.
அன்பர்களே! உங்களுக்கு தத்துவம் படிப்பதில் விருப்பம் இல்லையென்றால் இதற்கு மேல் படிக்காதீர்கள். உங்கள் நேரம் வீணடிக்கப் பட்டதாய் பின்பு வருந்த நேரிடும்.
பாரதியார் 'நிற்பதுவே; நடப்பதுவே' என்ற பாடலில் உலகம் பொய் என்னும் தத்துவக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இறுதியில் 'காண்பதுவே உறுதி கண்டோம். காண்பதல்லால் உறுதியில்லை; காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கிறார். ஆனால் இந்த உலகம் அநித்தியமானது; அதனால் அது பொய் என்னும் கருத்து மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த கருத்தின் தாக்கம் எவ்வளவு தூரம் என்பதை அறிந்து கொண்டு தான் அவர்கள அதைச் சொல்கிறார்களா; இல்லை 'ஆஹா. எனக்கும் இந்த தத்துவம் புரிந்துவிட்டது. நான் பெரிய ஆள்' என்று எண்ணிக்கொண்டு பேசுகிறார்களா தெரியவில்லை. இந்தக் குற்றசாட்டு எனக்கும் பொருந்தும். எனக்கு இந்த 'உலகம் பொய்' என்னும் தத்துவம் முழுதாய்ப் புரியவில்லை. ஆனால் கேள்விகள் உண்டு. அவற்றைதான் இங்கு பேசப்போகிறேன்.
நண்பர் நடராஜன் இந்தப் பதிவின் முந்தையப் பதிவில் இட்ட பின்னூட்டம் தான் இந்தப் பதிவு எழுதத் தூண்டுதல். அவர் எடுத்தவுடனே சொல்வது 'இந்த உலகில் எது உண்மை? எல்லாம் மயக்கம் தான் இல்லையா? உன்னிடம் இப்போது என்ன இருக்கிறதோ அது உனது என்று எண்ணுகிறாய். ஆனால் எது உன்னிடம் நிற்கிறது?'. இந்தக் கருத்து பாதி சரி; மீதி சரியில்லை. இந்த உலகில் எல்லாமே மெய் தான். எதுவுமே பொய் இல்லை. இராகவன் சொன்னது போல் நிற்பது எல்லாம் நிலையானது இல்லை தான். அதனால் அது பொய் ஆகாது. பொய் என்றால் அது என்றைக்குமே இல்லாதது. அது இருப்பது போல் தோன்றும் போதும் இல்லாதது - கானல் நீரைப் போல. இன்று இருந்து நாளை இல்லாமல் போனால் அது நிலையில்லாததே ஒழிய பொய்யில்லை.
கானல் நீர் கூட பொய்யில்லை என்று சில நேரம் தோன்றும். அதில் நீர் இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் அது தோற்ற மயக்கமே. அதில் நீர் இல்லை. அதில் இருப்பது போல் தோன்றும் நீரால் யாருக்கும் பயன் இல்லை. அதனால் அதனைப் பொய் என்று கூறலாம். ஆனால் அறிவியல் படித்தவர்கள் அது சரி என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதில் பயன் கொள்ளத்தக்க நீர் இல்லாவிட்டாலும், நீராவியின் வடிவில் அதில் நீரின் பாகம் இருக்கிறது. அது தான் நீராய் கானலில் தெரிகிறது என்பர்.
அப்படி நிலையில்லாதது பொய்யில்லை என்றால் ஏன் பெரியவர்கள் அப்படி சொல்லியிருக்கிறார்கள்? அவர்கள் சரியாய்த் தான் சொல்லியிருக்கிறார்கள். நாம் புரிந்துகொண்டது தான் தவறு. அவர்கள் சொன்னது 'இந்தப் பொருள்கள் எல்லாம் நிலையில்லாதவை. (பொய் என்று சொல்லவில்லை) அவற்றின் மீது நீ பற்று வைத்துள்ளாயே - அது பொய். அந்தப் நிலையில்லா பொருள்கள் என்றும் நிலைத்தவை என்று எண்ணுகிறாயே அது பொய். அது தான் மயக்கம்'. மனைவி மக்கள், வீடு வாசல், காடு கழனி, பெயர் புகழ் எல்லாமே உண்மைதான். ஆனால் நிலையில்லாதவை. அதனால் அவை கொடுக்கும் போதையிலிருந்து வெளியே வா. மயக்கம் கொள்ளாதே' என்பது தான் பெரியவர்கள் செய்யும் உபதேசம்.
இதை இன்னொரு விதத்திலும் கூறலாம். அன்பே சிவம் என்றும் பெரியவர்கள் கூறியுள்ளனர். எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பேண வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவ்வுலகில் எல்லாம் பொய் என்றால் எதற்காக எதன் மேலும் அன்பு பூண வேண்டும்? எல்லா உயிர்களும் பொய் அல்லவா? ஏன் அவற்றின் மீது அன்பு செலுத்தவேண்டும்? அவர்கள் அப்படி எல்லா உயிர்களையும் தன்னுயிராய் எண்ணும்படி சொல்வதே அந்த உயிர்களும் அவை வாழும் இந்த உலகமும் பொய்யல்ல என்று சொல்லும்.
தன் குழந்தையின் மீது வைக்கும் அன்பு அது தனக்கே தனக்குரியது என்னும் மயக்கத்தால் வருவது; அந்தக் குழந்தை மட்டும் அல்ல; இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனின் படைப்பு; அதனால் எனக்கு உறவு; அதனால் நான் எல்லா உயிர்கள் மேலும் அன்பு பூண வேண்டும்; இதுவே அந்தப் பெரியவர்களின் உபதேசம்.
எல்லா உயிர்கள் மேலும் அன்பு கொள்; அது நித்தியம். ஆனால் அப்படி நீ ஏதாவது செய்யும் போது புகழ் வந்தால் அதனைப் பெரிதாய்க் கொள்ளாதே; ஏனெனில் அது அநித்தியம். ஆனால் நீ அன்பு கொள்வதும், புகழ் வருவதும் இரண்டும் பொய் அல்ல. நித்தியமானதின் மேல் பற்று வை. அநித்தியமானதை அது நிலையில்லாதது என உணர். இதுவே அவர்களின் கருத்து.
2 comments:
நவம்பர் 14, 2005 அன்று என்னால் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் இந்த இடுகை இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
14 comments:
பூனை said...
இதைப்படிக்கும் மற்ற பூனைகள் மூழ்காதுதானே?
November 14, 2005 6:02 AM
--
G.Ragavan said...
// அது தான் மயக்கம்'. மனைவி மக்கள், வீடு வாசல், காடு கழனி, பெயர் புகழ் எல்லாமே உண்மைதான். ஆனால் நிலையில்லாதவை. அதனால் அவை கொடுக்கும் போதையிலிருந்து வெளியே வா. மயக்கம் கொள்ளாதே' என்பது தான் பெரியவர்கள் செய்யும் உபதேசம். //
சரியாகச் சொன்னீர்கள். இதைத்தான் அருணகிரியும் "அமரும் பதி கேள் அகம் ஆம் எனுமிப் பிமரங் கட" என்கிறார். அமரும் பதி கேள் அகம் ஆம் கெட என்று சொல்லவில்லை. அவைகளைப் பற்றிய பிமரம் (பிரமை) கெட வேண்டும் என்கிறார்.
November 14, 2005 6:18 AM
--
sethu said...
குமரன்
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
இன்றைய தினமலாpல் எனது வலைபதிவு இடம் பெற்றுள்ளதை தொpவித்தமைக்கு நன்றி
November 14, 2005 6:22 AM
--
குமரன் (Kumaran) said...
அப்படிதான் நினைக்கிறேன் மிஸ்டர் பூனை...ஆதான் நீங்க மூழ்காம திரும்பி வந்து உங்க கருத்தைச் சொல்லியிருக்கீங்களே?
அது சரி...எப்போதிலிருந்து பூனை கதையெல்லாம் எழுத ஆரம்பித்தது?
November 14, 2005 11:41 AM
--
குமரன் (Kumaran) said...
நல்ல எடுத்துகாட்டு இராகவன். நன்றிகள்.
November 14, 2005 11:42 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி சேது (நெல்லை மைந்தன்).
மீண்டும் வாழ்த்துகள். இன்னைக்கு யார் பெயர் வந்திருக்குன்னு இனிமேல் தான் பார்க்கணும்.
November 14, 2005 11:51 AM
--
சிவா said...
நிலையில்லாதவற்றுக்கும் பொய்யானவற்றுக்கும் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி
November 15, 2005 12:50 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவா...
November 15, 2005 1:01 PM
--
ரங்கா - Ranga said...
குமரன்,
தங்கள் பதிவுகள் அத்தனையும் (திருவாசகம், பஜகோவிந்தம், விஷ்ணுசிட்தர்) படித்தும், சேகரித்தும் வருகிறேன். உங்கள் எழுத்து நடையும், விளக்கமும் அருமை; தொடர்ந்து வர வேண்டும்.
பாரதியின் ஒரு கதையிலும் (இரு சிறு கயிறுகள் - கந்தன், வள்ளி - பேசிக் கொள்வது போலவும், வள்ளியிடமிருந்து வாயுதேவன் வெளிப்பட்டு பேசுவது போலவும் அமைந்திருக்கும்) இந்த மெய்/பொய் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் என்று நினைவு. அதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
ரங்கா
November 18, 2005 8:39 AM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி ரங்கா. தங்களுக்கு என் எழுத்து நடையும், விளக்கமும் பிடித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.
நீங்கள் சொல்லும் பாரதியின் 'கந்தன் - வள்ளி' கதையைப் படித்துள்ளேன். அதை அடுத்தப்பதிவாய் போட்டுவிடுகிறேன். :-)
November 18, 2005 10:12 AM
--
கோவி.கண்ணன் said...
குமரன்,
இந்த பதிவு நீங்கள் அஞ்ஞாதவாசம் இருந்தபோது எழுதிய பதிவா ?
மெய்யாகவே என்கண்ணில் படவே இல்லை. :)
உலகம் - நிகழ்வுகள் - மெய்யா ? பொய்யா ?
பஞ்சபூத உடலுடன் ஜீவன் (ஆன்மா) சேரும் போதுதான் இந்த உலக காட்சியும் அறிவும் கிடைக்கிறது.
உடலும், உயிரும் தனியாக இருக்கும் போது அறிவற்ற நிலை அங்கே மெய்யா ? பொய்யா ? அறிந்து கொள்ளவே முடியாது.
உடலில் இருந்து கொண்டே உயிரெனப்படும் ஆன்மாவை அறிந்து கொண்ட ஆன்மா நிகழ்வுகளை பொய் மெய் என்பதைக் தாண்டி 'காலத்தின்'
சுழற்சியாக கருதும் என நினைக்கிறேன்.
:))
March 11, 2007 12:13 PM
--
குமரன் (Kumaran) said...
இல்லை கோவி.கண்ணன் அண்ணா. இது போன வருட நவம்பரில் எழுதியது. என் அஞ்ஞாதவாசம் இரண்டு மாதங்கள் தானே.
உயிர் உடலில் இணையும் போது தான் உலகம் தென்படுகிறது என்ற கருத்து இப்போது அறிவியலிலும் பேசப்படும் ஒரு கருத்து. பேருலகம் (பிரபஞ்சம்) நாம் கவனிப்பதால் தான் இருக்கிறது - யாரும் கவனிக்க இல்லையென்றால் பிரபஞ்சமும் இருக்காது - என்பதைப் போன்ற ஒரு கருத்தை 'டிஸ்கவர்' மாத இதழில் படித்திருக்கிறேன்.
March 11, 2007 6:52 PM
--
Radha said...
:) மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் குமரன். ஆதி சங்கரர் "ப்ரஹ்மம் சத்யம். ஜகத் மித்யை" என்பதோடு நிறுத்தி விடவில்லை என்று ரமணர் மிக அழகாக சொல்லி இருப்பார். (பகவத் வசநாம்ருதம் - 2)
மூன்றாவதாக பிரபஞ்சம் ப்ரஹ்ம மயம் என்று சொன்னதை பலரும் choice-இல் விட்டுவிடுகின்றனர். :-)
அத்வைத சாதகர்கள் என்றும் நிலையான வஸ்து எது என்ற தேடலில் உலகத்தில் நாட்தோறும் காணும் அனைத்தையும் நிலை இல்லாதது என்று ஒதுக்கி விடுகின்றனர். இறுதி உண்மையை உணரும் பொழுது முன்பு ஒதுக்கியவை யாவும் சேர்த்துக் கொள்ளப் படுகின்றன. அதாவது இறைவனுக்கு அந்நியமாய் காணும் காலம் வரை (தான்) பிரபஞ்சம் மாயை. "த்ரிஷ்டிம் ஞான மயீம் க்ருத்வா பச்யேத் ப்ரஹ்ம மயம் ஜகத்" என்றொரு வாசகம் உண்டு.
நம் பாரதி பிரபஞ்சம் முழுவதையும் இறைவனாக கண்டான் என்பதை அவனுடைய கதைகள் கவிதைகளை படித்தால் தெரிந்துவிடும். i am a HUGE fan of bharathi !! :-)
July 09, 2009 6:49 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி இராதா.
உங்களைப் போன்ற பாரதி அன்பர்களுக்காகவாவது இந்த பதிவில் தொடர்ந்து எழுதும் படி இறைவன் அருளவேண்டும். :-)
August 14, 2009 1:01 PM
Post a Comment