பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் எட்டாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் ஏழு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.
----------
மழைக்காலம். மாலை நேரம். குளிர்ந்த காற்று வருகிறது. நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான். பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டா? காற்று நம்மீது வீசுக. அது நம்மை நோயின்றிக் காத்திடுக. மலைக்காற்று நல்லது. வான் காற்று நன்று. ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.
அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. காற்று வருகின்றான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருக. அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.
----------
இந்தப் பாகத்திற்கு நான் விளக்கம் சொல்லப் போவதில்லை. படிக்கும் போது உங்களுக்கு பாரதியார் என்ன சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது? அதனை பின்னூட்டத்தில் இடுங்கள். என் கருத்தினை பின்னர் பின்னூட்டத்தில் இடுகிறேன்.
Added on 06-Jan-2006
--------------------------
எனது உரை:
மழைக்காலத்தில் மாலை நேரத்தில் வரும் குளிர்ந்த காற்றிலிருந்து ஆரம்பிக்கிறார் பாரதியார். நோயாளியைப் பற்றிக் கூறிவிட்டு அந்த நோய் வரும் காரணங்களையும் அடுக்குகிறார். காற்றே உயிரென்பதால் அதற்கு அஞ்சி வாழ முடியாது. அதனை மதிக்க வேண்டும். அதனை இன்பமுற அனுபவிக்க வேண்டும். காற்றை அனுபவிக்க வேண்டும் என்றால் எங்கே செல்ல வேண்டியிருக்கிறது? மலையுச்சிக்கு. அந்த மலைக் காற்றும் வான் காற்றும் நோயின்றி நம்மைக் காத்திடும். அப்படிக் காக்கவேண்டும் என்றும் வேண்டுகிறார்.
ஏன் மலையுச்சிக்குச் செல்லவேண்டும்? ஊரில் உள்ள காற்று அசுத்தமாய் இருக்கிறது. அதனை பகைவனாக்கிவிட்டனர் மக்கள். அவர்கள் காற்றை மதிப்பதில்லை. அதனால் அவன் கோபம் கொண்டு நம்மை அழிக்கிறான் என்கிறார்.
அவன் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் அவனை மதிக்கவேண்டும். சுற்றுப்புற சூழல் பேணப் பட வேண்டும். சேறு தங்கலாகாது. கெட்ட நாற்றம் இருக்கலாகாது. எவ்வித அசுத்தமும் செய்யக் கூடாது என்கிறார். நாற்றம் என்ற சொல் பாரதியார் காலத்திலேயே கெட்ட நாற்றம் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது போலும். என்ன என்ன செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டுப் பின் என்ன என்ன செய்யவேண்டும் என்றும் பட்டியல் போடுகிறார். ஒரு விஷய்த்தைச் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு பின்னர் அதன் இடத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை மனோதத்துவம் தெரிந்த ஒருவர் சொல்லிவிடுவார். இல்லையெனில் செய்யாதே என்னும் விசயத்தைச் செய்யாமல் இருக்க இயலாது மனிதனால். காற்று வாழ்க.
1 comment:
7 comments:
சிவா said...
நன்றாக இருக்கிறது குமரன். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல காற்றே மனிதனின் ஆரோக்கியத்திற்க்கு நல்ல வழி என்கிறார் பாரதி. எங்கும் அசுத்தங்களையும் குப்பைகளையும் போட்டு வைத்து விட்டு, இந்த மனிதர்கள் மூக்கை பொத்திக்கொண்டு 'கெட்ட காற்று' என்று காற்றை திட்டுகிறார்களே என்று பாரதி கவலை படுகிறார். இதை தான் //**ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர்.**// என்று கூறுகிறாரோ?. காற்றை கெடுத்து விட்டால் (மாசுபடுத்திவிட்டால்) அப்புறம் உயிரின் ஆதாரம் போய்விடும். //**காற்று நம்மீது வீசுக. அது நம்மை நோயின்றிக் காத்திடுக.**// நல்ல காற்றே நோயற்ற வாழ்வின் ஆதாரம். இதை தான் பாரதி பாடல் முழுவதும் சொல்லி, மாசுபடுத்தாதீர்கள். காற்றே நம் மருந்து. காற்றே நம் உயிர். அவனை வழிபடுங்கள் என்று முடிக்கிறார். ( எப்படி நம்ம விளக்கம் :-))). பெரிய ஆளுங்க எல்லாம் வருவதுக்கு முத்தி சொல்லிடனும்னு சொல்லிட்டேன் :-)))
January 05, 2006 7:04 AM
--
குமரன் (Kumaran) said...
நல்ல விளக்கம் சிவா.
January 05, 2006 12:22 PM
--
G.Ragavan said...
அருமையாகச் சொன்னீர்கள் சிவா. சுற்றுப்புறச் சூழல் என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதை உணர்த்துவதுதான் பாரதியின் இந்தப் பாடல். மிக அற்புதமான விளக்கத்தையும் தந்திருக்கிறார் குமரன். மிகச் சிறப்பு.
January 06, 2006 5:56 AM
--
குமரன் (Kumaran) said...
இராகவன், நான் எங்கே இன்னும் விளக்கமே கொடுக்கலையே. அதுக்குள்ள அற்புதமான விளக்கம்ன்னு சொல்லிட்டீங்க. 'சிவா அற்புதமான விளக்கம் கொடுத்திருக்கிறார் குமரன்'னு சொல்றீங்களா? அப்படின்னா சரி. சிவா அருமையான விளக்கம் தான் கொடுத்திருக்கிறார்.
January 06, 2006 1:19 PM
--
குமரன் (Kumaran) said...
இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சிவாவைத் தவிர வேறு யாரும் விளக்கம் தரவில்லை. அதனால் நானே விளக்கம் தந்து பதிவில் போட்டுவிடுகிறேன். அப்பத்தானே அடுத்தப் பதிவுக்குப் போகமுடியும்?
January 06, 2006 1:20 PM
--
G.Ragavan said...
ஓ! சிவா போட்ட விளக்கமா அது! பெயரைச் சரியாகப் பார்க்கவில்லை. மன்னிக்க. மன்னிக்க. கெளம்புற அவசரத்துல இனிமே பின்னூட்டம் போடக் கூடாதுன்னு இப்ப புரியுது. முந்தி இப்படித்தான் கணேஷையும் குமரனையும் கொழப்புனது நெனவிருக்கா?
January 07, 2006 1:36 AM
--
குமரன் (Kumaran) said...
நல்லா நினைவிருக்கு இராகவன். :-)
January 07, 2006 7:06 AM
Post a Comment