Saturday, April 24, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 13

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பதிமூன்றாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பன்னிரண்டு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம். இரைகின்ற கடல் நீர் உயிரால் அசைகின்றதா? ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.

வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும் போது உயிருடனேதான் செல்கிறது. காற்றாடி? உயிருள்ளது. நீராவி வண்டி உயிருள்ளது; பெரிய உயிர். யந்திரங்களெல்லாம் உயிருடையன.

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள். பூமித்தாய். எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம்.

அகில முழுதும் சுழலுகிறது. சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும், அதற்கப்பாலும், அதற்கப்பாலும், சிதறிக் கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டே தானிருக்கின்றன. எனவே இவ்வையகம் உயிருடையது. வையகத்தின் 'உயிரையே' காற்றென்கின்றோம். அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.

----------

உங்களுக்குப் புரிந்ததை விளக்கலாம்.

2 comments:

குமரன் (Kumaran) said...

9 comments:

சிவா said...
உலகத்தின், இந்த அண்டத்தின் மூச்சே காற்று என்கிறார். உன்மை தானே. இந்த உலகின் மூச்சு பகலவன் கூட ஒரு வகை காற்றினால் தானே சக்தி கொடுக்கிறான்.
January 16, 2006 6:16 AM
--

Merkondar said...
//வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது.//
என்ன குமரன் சொல்கிறீர்கள்
அப்படியானல் உயிரற்றது எது மலைக்கு உயிர் இருக்கு என்பர்.
விளங்க வில்லையே
January 16, 2006 7:31 AM
--

G.Ragavan said...
என்னார்...அது மிக எளிது.

எதன் வழியாகக் காற்று பயணப்பட முடியாதோ....அது உயிரற்றது. அவ்வகையில் மலையும் ஒருவிதத்தில் உயிருள்ளதுதான்.
January 16, 2006 11:05 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் சிவா. இந்த அண்டத்தின் மூச்சே காற்று என்கிறார்.

//இந்த உலகின் மூச்சு பகலவன் கூட ஒரு வகை காற்றினால் தானே சக்தி கொடுக்கிறான்.
//

புரியலை. கொஞ்சம் விளக்குகிறீர்களா?
--

January 16, 2006 6:51 PM
குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. அடுத்தப் பின்னூட்டத்தில் எனக்குத் தோன்றுவதைக் கூறுகிறேன். உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கலாம்.
January 16, 2006 6:52 PM
--

குமரன் (Kumaran) said...
இராகவன். நீங்கள் சொல்லும் விளக்கம் மலைக்குப் பொருந்தலாம் - ஏனெனில் அது இந்த பூமியில் காற்று மண்டலத்திற்குள் இருப்பது. ஆனால் பாரதியார் அகிலம், சந்திரன், ஞாயிறு என்றெல்லாம் கூறுகிறாரே. அங்கெல்லாம் காற்று இருப்பதாய் இன்னும் கண்டுபிடிக்கவில்லையே? அப்படியென்றால் அவை உயிருடையது என்று எப்படிச் சொல்ல முடியும்?

இப்படி எழுதும் போது இன்னொன்று தோன்றுகிறது. காற்று மண்டலம் அங்கெல்லாம் இல்லாவிட்டாலும் ஞாயிறும் அகிலத்தின் (பிரபஞ்சத்தின்) பல விண்மீன்களும் அவற்றைச் சுற்றும் கிரகங்களும் வாயு உருவில் தானே இருக்கின்றன. அதனால் அங்கும் காற்று இருப்பதாய்ச் சொல்லலாம். :-)
January 16, 2006 6:56 PM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
இந்தக் கவிதைக்கு என் விளக்கம்: அசைகின்ற எல்லாமே சக்தி ரூபம். எங்கெங்கு சலனம் இருக்கிறதோ அங்கெல்லாம் சக்தியின் உயிரின் வெளிப்பாடு இருக்கிறது. சக்தியின் உயிரின் காற்றின் வெளிப்பாடு இல்லையேல் அங்கு சலனம் இருக்காது. பாரதியார் சின்ன விஷயங்களில் தொடங்கி அகிலம் வரை செல்கிறார் - இலை, கடல் நீர், எறியப்படும் கல், ஓடுகிற வாய்க்கால், அசையும் காற்று, மாடு, அது இழுத்துச் செல்லும் வண்டி, காற்றாடி, புகைவண்டி, யந்திரங்கள், பூமிப்பந்து, அவள் திருமேனியில் இருக்கும் எல்லாமே, அகிலம், சந்திரன், ஞாயிறு, விண்மீன்கள், எல்லாமே சலனம் உடையது. அதனால் சக்தியின் வெளிப்பாடு உடையது. அதனால் உயிருடையது.

அப்படியே சிறியதிற்கும் சொல்லலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று சொல்வார்களே. உயிரில்லாதது என்று நாம் நினைக்கும் ஒவ்வொரு பொருளும் அணுக்களால் உருவானது. அந்த அணுக்களுள் நுண் துகள்கள் (எலெக்ட்ரான், ப்ரோட்டான் போன்றவை) இருக்கின்றன; எப்போதும் சலனத்துடன் இருக்கின்றன. அதனால் அடிப்படையில் எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு. சக்தி இருக்கிறாள். அவள் இல்லாத இடமே இல்லை.

ஐன்ஸ்டீன் சொன்ன e=mc2 என்பதையும் இப்படியே புரிந்து கொள்ளலாம். இறைவனைப் பற்றி வடமொழி வேதம் சொல்வது 'அணோர் அணியான், மஹதோ மஹீயான் - சிறியவற்றில் சிறியவன். பெரியவற்றில் பெரியவன்'. தமிழ் வேதங்கள் சொல்வது 'அணுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய்' என்பது. விளக்கினால் விரியும். :-)
January 16, 2006 7:08 PM

--

G.Ragavan said...
// அங்கெல்லாம் காற்று இருப்பதாய் இன்னும் கண்டுபிடிக்கவில்லையே? அப்படியென்றால் அவை உயிருடையது என்று எப்படிச் சொல்ல முடியும்?

இப்படி எழுதும் போது இன்னொன்று தோன்றுகிறது. காற்று மண்டலம் அங்கெல்லாம் இல்லாவிட்டாலும் ஞாயிறும் அகிலத்தின் (பிரபஞ்சத்தின்) பல விண்மீன்களும் அவற்றைச் சுற்றும் கிரகங்களும் வாயு உருவில் தானே இருக்கின்றன. அதனால் அங்கும் காற்று இருப்பதாய்ச் சொல்லலாம். :-) //

என்னையே கேட்பது. பிறகு அதற்கு விடையும் சொல்வது. இதெல்லாம் நல்லாயில்லை. :-)

உயிரற்றது அசையாது. உயிருள்ளவை அசையும். நெருப்பு இருக்கிறதென்றால் அதுவும் காற்றால்தானே.

// இறைவனைப் பற்றி வடமொழி வேதம் சொல்வது 'அணோர் அணியான், மஹதோ மஹீயான் - சிறியவற்றில் சிறியவன். பெரியவற்றில் பெரியவன்'. தமிழ் வேதங்கள் சொல்வது 'அணுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய்' என்பது. விளக்கினால் விரியும். :-) //

நானும் ஒரு செய்யுள் சொல்றேன் கேளுங்க. பரஞ்சோதி முனிவர் சொன்னது. கிட்டத்தட்ட பிக் பேங் தியரி மாதிரியே இருக்கும்.

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்
January 17, 2006 4:43 AM
--

குமரன் (Kumaran) said...
நல்ல செய்யுள் இராகவன்
January 17, 2006 9:00 AM