Monday, April 26, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 14

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பதினான்காம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பதிமூன்று பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் 'ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம' என்று போற்றுகிறார்கள்.

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக. அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. சமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. காற்றின் செயல்களையெல்லாம் பரவுகின்றோம். உயிரை வணங்குகின்றோம். உயிர் வாழ்க.

----------

உரை:

ப்ரஹ்ம என்றால் மிகப் பெரியது என்று பொருள். அது இறைவனைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது. இறைவன் தானே மிகப் பெரியவன். வேத ரிஷிகள் காற்றைக் 'கண்கண்ட கடவுள் - ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம' என்று போற்றுகிறார்கள். ஏனெனில் அவன் புகழ் எவ்வளவு போற்றினாலும் போற்றி முடியாது. வேதங்களே காற்றின் புகழைப் போற்ற முடியாது என்றால் நம்மால் முடியுமா? முடியாது.

ப்ராணன் என்பது உயிராகிய காற்று. அது ஐந்து விதமாக மாறி நம் உடலில் நிகழும் அனைத்து முக்கியக் காரியங்களையும் ஆற்றுகின்றது என்பது ஆயுர்வேதக் கொள்கை.

ப்ராணன் இருக்கும் இடம் இருதயம்; மூச்சினால் நாம் உட்கொள்ளும் காற்று நுரையீரலுக்குச் சென்று அங்கிருந்து இருதயத்தில் அமர்ந்து நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான செயலைச் செய்கிறது. அதனால் அது முக்கியமான காற்று எனப்படுகிறது. அவனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

ப்ராணனின் இரண்டாவது உருவாகிய அபாநன் நிலைக்கும் இடம் மலஜலம் கழிக்கும் உறுப்புகள். இந்த வாயுவின் உதவியினால் தான் நம் உடலில் இருக்கும் அசுத்தங்கள் வெளியேறுகின்றன. ஒரு நாள் அபாநன் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மிகக் கடினம். அதனால் அவனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

ப்ராணனின் மூன்றாவது உருவாகிய வ்யாநன் உடலெங்கும் பரவியிருக்கிறது. இருதயத்தில் ப்ராணனிடமிருந்து பெற்ற உயிர்ச்சக்தியை உடலெங்கும் இரத்தத்தின் மூலம் பரப்புவது வ்யாநனின் வேலை. அவனை வணங்குகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

ப்ராணனின் நான்காவது உருவாகிய உதாநன் கழுத்தில் (தொண்டையில்) நின்று உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் வயிற்றுக்குக் கொண்டு செல்கிறான். அவனே பேசுவதற்கும் பாடுவதற்கும் ஒலி எழுப்புவதற்கும் உதவுகிறான். அவனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

ப்ராணனின் ஐந்தாவது உருவாகிய சமாநன் வயிற்றில் நிலைத்து எல்லா உணவையும் செரிக்கிறான். அப்படி ஜீரணம் பண்ணிய உணவில் இருந்து சக்தியை வ்யாநன் உடலெங்கும் கொண்டு செல்கிறான். சமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

1 comment:

குமரன் (Kumaran) said...

சிவா said...
குமரன்! கவிதைக்கு விளக்கம் நன்று. கடினம் என்பதால் நீங்களே கூறிவிட்டீர்கள். இன்னொரு சின்ன கேள்வி. பாரதி வசனக்கவிதை காற்று தேவனை மட்டும் தான் எழுதியிருக்கீறாரா?. இல்லை வேறு வசனக்கவிதைகளும் இருக்கிறதா?
January 19, 2006 3:34 AM
--

Merkondar said...
நன்று குமரன்
January 19, 2006 4:47 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவா. பாரதியார் மொத்தம் ஆறு தலைப்புகளில் வசனகவிதை எழுதியிருக்கிறார் - காட்சி, சக்தி, காற்று, கடல், ஜகத்சித்திரம், விடுதலை. ஒவ்வொன்றும் பல பகுதிகள் கொண்டது. காற்று 15 பகுதிகள் கொண்டது. ஆமாம். இன்னும் ஒரு பகுதி இருக்கிறது. சனிக்கிழமை அதைப் பதிக்கிறேன்.
January 19, 2006 5:17 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி என்னார் ஐயா.
January 19, 2006 5:18 AM
--

G.Ragavan said...
குமரன் இந்தக் கவிதை எனக்குப் புரியவில்லை. ஆனால் உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகு புரிந்தது. நல்ல அருமையான விளக்கம்
January 19, 2006 6:36 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன்.
January 19, 2006 8:28 AM
--

Anonymous said...
Samaskrutham therintha ungalal mattume ippadi vilakka mudiyum. Nalla pathivu.

Kumaresh
January 19, 2006 10:54 AM
--

குமரன் (Kumaran) said...
அப்படியில்லை குமரேஷ். வடமொழி தெரியாத பல பேருக்கு பஞ்சப் ப்ராணனைப் பற்றித் தெரியும்.

நன்றி குமரேஷ்.
January 19, 2006 10:54 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
நம்மில் பலர் தினமும் சொல்லும் மந்திரத்தின் சுத்தமான தமிழ் விளக்கத்தை பாரதியினுடைய உரையுடன் தங்களுடைய சொல்லாட்சியையும் சேர்த்து தந்தது மிகவும் சிறப்பாக உள்ளது. தி. ரா.ச
January 19, 2006 7:55 PM
--

குமரன் (Kumaran) said...
பாராட்டுக்கு மிக்க நன்றி திரு. தி.ரா.ச.
January 20, 2006 4:08 AM
--
rnateshan said...
அற்புதமாக ஆழ்ந்து சிந்தித்து கொடுத்து இருப்பது நன்கு புலனாகிறது! எங்கள் நன்றி உங்களுக்கு எப்போதுமே உண்டு!!
January 20, 2006 4:55 AM
--

குமரன் (Kumaran) said...
பாராட்டுக்கு நன்றி திரு. நடேசன்.
January 20, 2006 5:28 AM