Thursday, April 22, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 10

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பத்தாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் ஒன்பது பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

மழை பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல். ஈரத்திலேயே உணவு.

உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.

ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் 'விதிவசம்' என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை' என்பது ஈசனுடைய விதி.

சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.

தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம். நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் காற்று நன்று; அதனை வழிபடுகின்றோம்.

----------

படிப்பவர்கள் தங்களுக்குத் தோன்றும் விளக்கம் சொல்லுங்கள். என் விளக்கத்தைப் பின்னர் சொல்கிறேன்.

5 comments:

குமரன் (Kumaran) said...

19 comments:

சிவா said...
குமரன்! அறிவில்லாதவனை எருமை என்கிறார். //** தமிழ்மக்கள் எருமைகள் போல். உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான் **// மொத்த தமிழனையுமே எருமை என்று விட்டாரே! :-))
மழையில் நனைந்து விட்டு உலர்த்தாமல் அலையும் மானிடனே, அதனால் குளிர் காய்ச்சல் வந்து அவதிப்பட்டு, காற்றை நீ திட்டுகிறாய். நீ சுத்தமான, உலர்ந்து இருப்பாயானால், காற்று உனக்கு அமிழ்தம் என்கிறார் பாரது.

சரி! எனக்கு சில சந்தேகங்கள். 1. ஜ்வரம் என்பது தமிழ் சொல்லா?. காய்ச்சல் என்பது தமிழ் சொல்லா?.
2. //**இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்.**// இதன் அர்த்தம் என்னவோ :-)).
3. ஈரத்திலேயே இருப்பதும், படுப்பதும் என்று சொல்கிறார். யாரும் வீம்புக்கு அப்படி செய்வது கிடையாதே. வசதி இல்லதவன், தங்க இடம் இல்லாதவன் வீதிகளில் கஷ்டபடுகிறான். மழையில் நனைந்து கஷ்டப்படுகிறார். அப்புறம் ஏன் பாரதி //**உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.**// என்று கூறுகிறார். இதற்க்கு வேறு அர்த்தம் இருக்கிறதா?

January 11, 2006 6:18 AM
--

Merkondar said...
//எப்போதும் ஈரத்திலேயே//
அதான் தமிழர்கள் ஈரமுள்ளவர்களாக்கும்

January 11, 2006 9:13 AM
--

சதயம் said...
பாரதியின் தீவிரம்,கருத்துக்களின் அடர்த்தி இன்றைய கவிஞர்களின் கவிதையில் வருவதில்லை என்பது என் கணிப்பு.

என்ன காரணமாயிருக்கும்னு நினைக்கிறீர்கள் குமரன்?

January 11, 2006 9:24 AM
--

குமரன் (Kumaran) said...

G.Ragavan said...
சிவா, ஜ்வரம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. காய்ச்சல் என்பதே தமிழ்ச்சொல்.

பாரதியின் காலத்தில்தான் தமிழ் மொழியானது உரைநடையில் தனது பழைய பொலிவை அடையத் தொடங்கியிருந்தது. ஆகையால் சில வடமொழிச் சொற்களைத் தவிர்க்க இயலாது.

January 11, 2006 11:50 AM
--

Muthu said...
/// பாரதியின் தீவிரம்,கருத்துக்களின் அடர்த்தி இன்றைய கவிஞர்களின் கவிதையில் வருவதில்லை என்பது என் கணிப்பு.

என்ன காரணமாயிருக்கும்னு நினைக்கிறீர்கள் குமரன்? ////

சதயம்,
பாரதியின் கவிதைகள் பல உணர்வுகளால் விளைந்தவை. இன்றைய கவிஞர்களின் கவிதைகள் பல கற்பனைகளால் வ்ரைந்தவை.

January 11, 2006 11:52 AM
--

குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. தமிழர்கள் ஈரமுள்ளவர்கள் தான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இங்கே பாரதியார் அந்த ஈரத்தைச் சொல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும் :-) நன்றாய் இருக்கிறது உங்கள் வார்த்தை விளையாட்டு. மிக ரசித்தேன்.

January 11, 2006 7:03 PM
--

குமரன் (Kumaran) said...
சதயம். எல்லாக் காலத்திலும் தீவிரம், கருத்துகளின் அடர்த்தியுடன் கூடிய கவிதைகளை எழுதும் கவிஞர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது என் எண்ணம். நமக்குப் பாரதியைப் பிடிக்கிறது; அதனால் இந்தக் கவிதையை கருத்துகளின் அடர்த்தியுடையது என்று கூறுகிறோம். இந்தக் கவிதையையே இக்காலக் கவிஞர்கள் யாராவது எழுதியிருந்தால் அவரைத் திட்டியிருப்போம் என்பது தான் உண்மை.

January 11, 2006 7:06 PM
--

குமரன் (Kumaran) said...
இராகவன். எல்லாம் பழக்கம் தான் என்று நினைக்கிறேன். பாரதியார் அந்தக் காலத்தில் நிறைய மணிப்ரவாள நூல்களையும் வடமொழி நூல்களையும் படித்திருப்பார் என்று எண்ணுகிறேன். அதனால் தப்பித் தவறி வடமொழிச் சொற்கள் வந்து விழுகின்றன அவர் வார்த்தைகளில். அவர் காலத்தில் எழுதப்பட்ட மற்றவைகளைக் காணும் போது பாரதியார் எத்தனையோ மேல். வட மொழிச் சொற்கள் அவர் கவிதைகளிலும் உரைநடைகளிலும் எப்போதாவது தான் தலைகாட்டும்.

பழக்கம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கும் இந்த அனுபவம் உண்டு. எழுதிக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் வடமொழிச் சொல் முன் வந்து நிற்கும். அதற்கேற்றத் தமிழ்ச் சொல்லைத் தேடி மெனக்கெட்டாலும் சில நேரங்களில் வராது. அப்போது நான் சிந்தனை ஓட்டம் தடைபெறாமல் இருக்க வடமொழிச் சொல்லை எழுதியிருக்கிறேன். செந்தமிழ் வாய்ப் பழக்கம் மட்டும் அன்று; கைப்பழக்கமும் கூட.

January 11, 2006 7:12 PM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
முத்து. உங்கள் கருத்து ஏற்புடையதே. பாரதியாரின் கவிதைகள் எல்லாமே அவர் தன் கண் முன் கண்டு அனுபவித்ததில் எழுந்த உணர்வு பூர்வமானவையே. இன்றும் அப்படிப் பட்டக் கவிஞர்கள் இருக்கிறார்கள்; இருப்பார்கள். ஆனால் நீங்கள் சொன்னது போல் பலருடைய கவிதைகள் கற்பனைகளால் எழுந்தவையே. அதுவும் ஒரு கலை. எல்லாருக்கும் வருவதில்லை.

January 11, 2006 7:17 PM

--

சிவா said...
யோவ்! என்னய்யா இது! நான் தானே முதலில் கேள்வி கேட்டேன். பதில் எங்கய்யா?. எஸ்கேப் ஆறீங்களே :-))

January 11, 2006 9:04 PM
--

குமரன் (Kumaran) said...
கோவிச்சுக்காதீங்க சிவா. நீங்க அடிப்படையான கேள்விகளாக் கேட்டுட்டீங்களா? அதனால எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இந்தக் கவிதைக்கு என் விளக்கத்தை எழுதலாம்ன்னு நெனைச்சேன். அதுக்குள்ள என் பொண்ணு வந்து வாங்கப்பா விளையாடலாம்ன்னு இழுத்துக்கிட்டு போயிட்டா. அதான் உடனே போட முடியலை.

January 11, 2006 11:09 PM
--

குமரன் (Kumaran) said...
பாரதியாரின் வசன கவிதைகளை நிறைய முறை படித்திருக்கிறேன். ஆனால் எப்படியோ இந்தப் பாகத்தைப் படிக்காமல் விட்டிருக்கிறேன். இல்லையேல் படித்திருக்கிறேன்; ஆனால் அப்போது அவ்வளவாய் உறைக்க வில்லை போலிருக்கிறது. தெரியவில்லை. இன்று இந்தப் பதிவை எழுதும்போது இந்தப் பாகத்தைப் படித்து பகீரென்றது. என்னடா பாரதியார் ரொம்ப சூடா எழுதியிருக்காரேன்னு. நிறைய இந்த மாதிரி எழுதியிருக்கார் தான். ஆனால் நேரடியாத் தமிழனைச் சாடி எழுதினது இது தான் என்று எண்ணுகிறேன்.

சிவா. உங்கள் ஆதங்கம் சரிதான். இல்லாதவன் அவதிப் படுகிறான்; வீம்புக்காகச் செய்வதில்லை தான். ஏன் பாரதியார் அவனைப் பார்த்து எருமைகளைப் போல என்று சொல்லியிருக்கிறாரோ, தெரியவில்லை. தமிழ் மணத்தில் எப்போதும் டாபிகலாக சில பதிவுகள் வரும். அந்தப் பதிவுகளை அந்தந்த நேரத்தில் படித்தால் தான் புரியும். மற்ற நேரங்களில் படித்தால் தலையும் புரியாது; வாலும் புரியாது. இந்தப் பாகமும் அப்படி ஒரு டாபிகல் விஷயமோ என்று தோன்றுகிறது. எதையோ பாரதியார் அப்போது பார்த்திருக்கிறார். அதனால் ஒட்டுமொத்தமாய் தமிழ் சமுதாயத்தையே சாடிவிட்டார் - தனக்கு இல்லாத உரிமையா என்று எண்ணிவிட்டார் போலிருக்கிறது.

நீங்கள் சொல்வது போல் அறிவில்லாதவனைத் தான் எருமை என்கிறார். ஈரத்திலேயே கிடந்து குளிர் காய்ச்சல் வந்து அவதிப்பட்டு இறந்து விட்டு, பழியை ஏன் குளிர் காற்றின் மேல் போடுகிறாய் என்று கேட்கிறார்.

அவர் கேட்பது என்னமோ எனக்குச் சரியாகப் படவில்லை. பாட்டெழுதிய சூழ்நிலை புரியாததால் இருக்கலாம்.

பின்னர் சாஸ்திரங்களைப் பற்றிப் பேசுகிறார். அவர் பேசுவது மனு சாஸ்திரம் போன்றவை அல்ல என்று தான் தோன்றுகிறது. உண்மை அறிவுகளைக் கூறும் சாஸ்திரங்களைப் பற்றிப் பேசுகிறார் - அறிவியல் அதில் ஒன்று.

தமிழ் நாட்டுப் பார்ப்பார் என்று அவர் சொல்வது பரம்பரையாய் வரும் பார்ப்பனர்களையும், படித்தவர்களையும் என்று தோன்றுகிறது. படித்தவர்கள் தான் நல்ல விஷயங்களை மக்களிடம் சொல்லி அறிவூட்டி அவர்கள் அவதிப்படாமல் காக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இப்போது தொலைக்காட்சிகளில் வரும் அவதியூட்டும் குடும்பச் சண்டைக் கதைகள், மாயாமந்திரச் சூனியக் கதைகள், மூட பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் குட்டி ரேவதி போன்ற சண்டைகளையும் போட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்கி மக்களை மேலும் அறியாமையில் ஆழ்த்தும் செயல்களைத் தான் கண்டிக்கிறார் என்று தோன்றுகிறது.

உண்மையான சாஸ்திரங்களைக் கொண்டு வருதலில் ஒரு வழிதான் இப்படிக் கண்டித்து அறிவுரை கூறுவது.

முன்னரே சொன்ன மாதிரி ஏதோ பாரதியார் சொல்லிவிட்டாரே என்பதால் தான் இவ்வளவு விளக்கமும். இல்லையேல் இவ்வளவு தூரம் இதில் சொல்லப்பட்டதைப் பற்றிக் கவலையுறுவேனா என்று தெரியவில்லை. இதில் நல்ல விஷயம் இருக்கலாம். ஆனால் சொல்லப் பட்ட விதம் கொஞ்சம் குத்தலாகத் தான் இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

January 11, 2006 11:30 PM
--

சிவா said...
நன்றி குமரன்! உண்மை தான். எல்லா சூழ்நிலைக்கும் இந்த பாடல் ஒத்து வராது. ஒரு வேளை பாரதி அன்று இந்த பாடல் எழுதும் சூழ்நிலை அப்படி இருந்திருக்குமோ. உங்கள் விரிவான விளக்கத்திற்க்கு நன்றி.

January 12, 2006 6:57 AM
--

குமரன் (Kumaran) said...

G.Ragavan said...
// பழக்கம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கும் இந்த அனுபவம் உண்டு. எழுதிக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் வடமொழிச் சொல் முன் வந்து நிற்கும். அதற்கேற்றத் தமிழ்ச் சொல்லைத் தேடி மெனக்கெட்டாலும் சில நேரங்களில் வராது. அப்போது நான் சிந்தனை ஓட்டம் தடைபெறாமல் இருக்க வடமொழிச் சொல்லை எழுதியிருக்கிறேன். செந்தமிழ் வாய்ப் பழக்கம் மட்டும் அன்று; கைப்பழக்கமும் கூட. //

புரிகின்றது குமரன். அது தவறொன்றும் இல்லை. சரியே.

பாரதி முடிந்த வரை தமிழைத் தூய்மைப் படுத்திப் பிரித்தெடுத்தான். அவனுக்கு முன்னால் அதைச் செய்தது அருணகிரி. முதலில் மணிப்பிரவாளமாகப் பாடி....நாளாக நாளாக...பவழத்தை விட்டு விட்டு மணியை மட்டும் கொண்டார்.

இரண்டையும் குழப்புவது எனக்குப் பிடிக்காது. முடிந்த வரையில் தனித்தனியாகக் கையாள வேண்டும் என்பது என் விருப்பம்.

வடமொழிப் பழக்கம் தவறென்று சொல்ல மாட்டேன். வடக்கு வடக்காக இருக்க..தெற்கு தெற்காக இருக்க...அனைத்தும் நன்றாக இருக்கும்.

January 12, 2006 10:05 AM
--

குமரன் (Kumaran) said...
//இரண்டையும் குழப்புவது எனக்குப் பிடிக்காது. முடிந்த வரையில் தனித்தனியாகக் கையாள வேண்டும் என்பது என் விருப்பம்.
//

எனது விருப்பமும் அதுவே.

January 12, 2006 10:19 AM
--

Anonymous said...
Thanks a lot.This reminds one of another works of Bharathi, "The Fox with the golden tail".And also Bharathi's answer on a question on when the country would get Swaraj? He replies as when the country, begins to teach in national languages instead of in foreign languages. There is more of it...also a look at http://www.kamakoti.org/tamil/part1kural62.htm
and http://www.kamakoti.org/tamil/part1kural85.htm among others in "Theivathin kural".

August 11, 2006 10:02 AM
--

குமரன் (Kumaran) said...
தெய்வத்தின் குரல் சுட்டிகளைக் கொடுத்த நண்பருக்கு நன்றி. தெய்வத்தின் குரலைக் கல்லூரியில் படிக்கும் போது நூலகத்தில் படித்தேன். அண்மையில் படிக்கவில்லை. நேரம் ஏற்படுத்திக் கொண்டு படிக்கிறேன். நன்றி.

August 12, 2006 9:57 PM
--

வெற்றி said...
குமரன்,
பாரதியின் வசன கவிதையைப் பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி. என்னைப் பொறுத்தவரையில், பாரதி பாட்டுக்கொரு புலவன் மட்டுமல்ல, எமது சமூகத்தின் சீர்கேடுகளைக் களைந்தெறியத் துடித்த சீர்திருத்தவாதி. மனிதனை மனிதனாக மதித்து நடக்க வேண்டுமெனப் போதித்த மகான். இன்னும் பல பழங் கட்டுக்கதைகளை வேதமென்றும் , இந்துமத சாத்திரம் என்று போதித்து மக்களை ஏமாற்றித் திரியும் கூட்டத்தினரையும் , ஏமாரும் மாந்தர்களையும் உண்மையை அறியச் செய்ய படாதபாடுபட்ட இறை தூதன்.

//தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்//

பாரதியை விட எமது அவலங்களை யாரால் உள சுத்தியுடன் இப்படி அழகாகச் சொல்ல முடியும்?

September 06, 2006 4:23 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் வெற்றி. பாரதியாரின் உள்ளத் தூய்மை மிக அரிதானதொன்றே. அவன் காலத்தையும் தாண்டி சிந்தித்த பெரும் சிந்தனாவாதி. சீர்திருத்தவாதி.

இந்தப் பாடலில் பாரதி சாஸ்திரம் என்று குறிப்பிடுவது அறிவியல் என்ற பொருளில் என்று நினைக்கிறேன்.

September 06, 2006 5:12 PM

சிவ. இராஜ்குமார் said...

இங்கு கடந்த காலம் பற்றிய எண்ணம்
துக்கத்தையே பாரதி ஈரம் என்கிறார் போலும்.