Monday, July 01, 2013

தென்பட்டான் கண்ணன்!!!

எத்தனை உருகினால் தான் என்ன? கல் நெஞ்சம் கொண்டவர்க்கு கருணை என்பதும் உண்டா? உடலைப் போல் உள்ளமும் கருத்தவன் அல்லவா அவன்? இந்த நேரத்தில் தோழியர் தொல்லை வேறு தாங்கமுடியவில்லை. என் நோய் தீர என்ன செய்வது என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவர்கள் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. அவர்கள் எண்ணம் எல்லாம் தங்களை அலங்கரித்துக் கொண்டு ஒருவரிடம் மற்றவர் தங்கள் அழகினைக் காட்டி நிறை குறைகளைப் பேசிப் பொழுதைக் கழிப்பதிலேயே இருக்கிறது. என்னிடமும் அலங்கரித்துக் கொள்ளச் சொல்கிறார்கள். என் மனநிலையை அறிந்தவர் இந்த உலகில் எவருமே இல்லையா? தந்தையார் என் நிலையை உணர்ந்தவர் போல் சில நேரம் பேசுகிறார். மற்ற நேரங்களில் அவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதே நம் கடன்; அவனை மணக்க முடியுமா என்றும் பேசுகிறார். என் துயரம் யாருக்குமே புரியவில்லையா?

'கொஞ்சம் நில்லடி கோமளவல்லி. இப்போது நீ காட்டினாயே அந்தக் கண்ணாடியை இங்கே தா. விரைவில் தா'.

'கோதை. இதென்ன விந்தை?! இது நாள் வரை அலங்கரித்துக் கொள்ள மாட்டேன் என்று எப்போதும் அழுத கண்ணீரும், கண்ணீரை இறைக்கும் கைகளுமாய் இருந்தாயே. முன்பொரு காலத்தில் 'காறை பூணும் கண்ணாடி பார்க்கும்' என்று உன் தந்தையார் உன்னைப் பார்த்துப் பாடும் படி நடந்து கொண்டாயே அந்த நாட்கள் திரும்பி வந்தனவா?'

'கோமளவல்லி. உனக்குச் சொன்னாலும் புரிவதில்லை. அந்தக் கண்ணாடியை இங்கே கொடு'

கோமளவல்லி கைக் கண்ணாடியை கோதையிடம் கொடுக்கிறாள். கோதை அதில் தன் முகம் பார்க்கிறாள்.

'கோமளவல்லி. இது கண்ணாடி தானா? இல்லை கண்ணனின் ஓவியமா? இதனைக் கண்ணாடி என்று சொல்லி சற்று முன் நீட்டினாய். அப்போது இதில் கண்ணனின் திருவுருவம் தெரிந்தது. இப்போதும் தெரிகிறது. நீ ஏன் இதனைக் கண்ணாடி என்று சொன்னாய்?'

'கோதை. உனக்கு கண்ணன் மேல் பைத்தியம் மிகவும் அதிகமாகிவிட்டது. அது கைக்கண்ணாடி தான். இப்போது தானே அதில் என் முகத்தைப் பார்த்து புருவம் திருத்தினேன். அதனைப் பார்த்து கண்ணன் ஓவியம் என்கிறாயே. என்னை விட்டுவிடடி. நான் என் இல்லத்திற்கே செல்கிறேன். உன்னோடு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் எனக்கும் பைத்தியம் பிடித்துவிடும்'.

கோமளவல்லி அகன்று செல்கிறாள். அவள் போனபின்பு கண்ணாடியில் தெரியும் கண்ணனின் திருவுருவை கோதை பார்த்துக் கொண்டே தனக்குள் சிந்திக்கிறாள்.'கோமளவல்லி சொல்வதும் சரி தான் போலிருக்கிறதே. இது கண்ணாடி தான். பல நாட்கள் நானும் இதில் என் முகம் பார்த்திருக்கிறேன். ஏன் இன்று என் முகம் தெரியாமல் கண்ணனின் முகம் இதில் தெரிகிறது. அதோ அந்த நிலைக்கண்ணாடியில் சென்று பார்ப்போம்.'

நிலைக்கண்ணாடியில் கண்ணனின் முழு உருவம் தெரிகிறது. இவள் என்ன செய்கிறாளோ அதனையே கண்ணன் நிலைக்கண்ணாடியில் செய்கிறான்.

'ஆகா. எத்தனை நாளாக உருகினோமோ அதற்கு பயன் கிட்டிவிட்டதா? கண்ணன் மனம் கடைசியில் இரங்கிவிட்டதா? அதனால் தான் கண்ணாடியில் காட்சி தருகிறானா? அவன் உருவத்தைக் கண்டு மனம் துள்ளுகிறதே. ஆகா அவனுக்கு ஏற்ற ஆடை அணிகலன்களை அணிவோம் என்றால் இது என்ன கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவே முடியவில்லையே. அவன் திருவுருவம் தானே தெரிகிறது. இது நாள் வரை கண்களில் தென்படாமல் கொடுத்தத் தொல்லை போதாதென்று இன்று கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் தென்பட்டு தொல்லை கொடுக்கிறானே. இவனை என் சொல்ல? தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறானே. என்னைப் போன்ற பேதைப் பெண்களைத் தொல்லைப் படுத்திப் பார்ப்பதே இவனுக்கு வேலையாகப் போய்விட்டது.

கண்ணாடி இல்லாவிட்டால் என்ன? கைகளும் கால்களும் எங்கே இருக்கின்றன என்று தெரியாமலா போய்விட்டது. முடிந்த வரை கண்ணாடி பார்க்காமலேயே நம்மை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியில் தெரியும் கண்ணன் முன் வருவோம்'.

இப்படி எண்ணிக் கொண்டு கோதை தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியின் முன் வருகிறாள். அங்கே கண்ணனைக் கண்டு மிக மகிழ்ந்து நிற்கிறாள். அப்போது அருகில் பெருமானுக்காக விஷ்ணு சித்தர் தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலைகள் தென்படுகின்றன.

'என் கண்ணனுக்காகவே அப்பா இந்த மலர் மாலைகளைத் தொடுத்து வைத்திருக்கிறார். அவனுக்கு இந்த மாலைகள் தான் எவ்வளவு பொருத்தமாக இருக்கும். கண்ணாடியில் தெரியும் கண்ணனுக்கு இவற்றை அணிவித்துப் பார்ப்போம். கண்ணா, இந்தா இந்த மலர் மாலையை அணிந்து கொள்'.

கண்ணாடியில் தெரியும் கண்ணன் திருவுருவம் மலர் மாலையை அணிந்து கொள்ளவில்லை.

'கண்ணா. உன் மனம் மீண்டும் கல்லாகிவிட்டதா? கண் முன் தெரிகிறாய். ஆனால் நான் வேண்டிக் கொண்டு தரும் இம்மாலையை அணிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய். உன்னை என்ன தான் செய்வது?'

கண்ணன் கண் முன் தெரிவதால் கண்ணனை முன் போல் கடிய வார்த்தைகளால் கடிந்து கொள்ள கோதைக்கு முடியவில்லை. ஆனாலும் தந்தையார் மிகுந்து பக்தியுடன் தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலையைக் கண்ணனுக்கு அணிவித்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

'கண்ணா. நான் வருந்தி அழைத்துக் கொடுத்தாலும் மாலையை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே. உனக்கு இந்த மாலைகளை எப்படி அணிவிப்பது என்று எனக்குத் தெரியும்'

இப்படி சொல்லிக் கொண்டே மாலைகளை ஒவ்வொன்றாக தானே அணிந்து கொள்கிறாள்.
ஒவ்வொரு மாலை அணியும் போதும் கண்ணாடியில் இருக்கும் திருவுருவமும் அந்த மாலையை அணிந்து கொள்கிறது. ஒவ்வொரு மாலையை அணிந்து கொண்டும் அவனின் திருவுருவத்திற்கு அந்த மாலை எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று இப்படியும் அப்படியும் திரும்பித் திரும்பி அழகு பார்க்கிறாள் கோதை. இப்படி எல்லா மாலைகளையும் அணிந்து பார்த்த பின் அவற்றை திரும்பவும் குடலையில் இட்டுவிட்டு கைக்கண்ணாடியை எடுத்துக் கொண்டு மீண்டும் கண்ணன் திருமுகத்தைக் காண வேறுபுறம் சென்றுவிடுகிறாள். இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தது என்று தெரியாமல் இருந்த மகிழ்ச்சி மீண்டும் அவள் முகத்தில் குவிந்திருக்கிறது.

***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

9 comments:

குமரன் (Kumaran) said...

Comments from the original post:

33 comments:

வல்லிசிம்ஹன் said...
கண்ணாடி சேவை நன்றாக இருக்கிறது குமரன்.
தன்னை மறந்து கண்ணனைக் கண்டவளுக்கு ஏது குறை.?
இனிமையாகக் கோதையுடன் பொழுது போகிறது. நன்றி.
December 25, 2006 7:37 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கோதையின் ஏக்கம் படிக்கவே கஷ்டமாக உள்ளது!

எல்லாம் இந்தக் குமரனைச் சொல்ல வேண்டும்! எத்தனை கல் நெஞ்சம் அவருக்கு? கோதை கவலைப்பட்டாள்; ஆனால் பாருங்களேன் கண்ணன், இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான், என்று ஆறுதலாக ரெண்டு வார்த்தை எழுதினால் தான் என்ன! குறைந்தா போய் விடுவார்! :-)

அவர்களுக்கு நான் படும் கஷ்டத்தை எல்லாம் கவின் தமிழில் எழுத வேண்டும்; அவ்வளவே! :-)))
December 25, 2006 8:10 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஹூம்; என் மனநிலையை அறிந்தவர் இந்த உலகில் எவருமே இல்லையா?

கோதை கவலைப்படாதேம்மா, உன் நெஞ்சம் ஒருவருக்குத் தெரியும்; பெயர் மாறன். அவர் என்ன சொல்லி உள்ளார் தெரியுமா?
வந்தாய் போல் வாராதாய்
வாராதாய் போல் வருவோனே!

வருவான் பார், சற்று நேரத்தில்!
ஆகா கண்ணாடியிலேயே வந்து விட்டானா?

கண்ணனடி கண்ணாடி இல் தெரிகிறதே!
கண்ணாடி சேவை இதுவன்றோ!
அயன சேவை என்பார்களே! உண்மையாகி விட்டதே!

குமரன் எழுதிக் கண்ணன் தந்த கண்ணாடி சேவை, மிக நன்று!
December 25, 2006 8:16 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன், நாம் பேசி வைத்த படம் எங்கே? :-)

ஓகோ, கண்ணனுக்குச் சூட்டத் தான் கோதை மாலை சுமந்தாளோ? பாவம் சின்னப் பெண்! மாலை என்ன பாரமோ என்னவோ? எல்லாம் கண்ணனுக்காகச் சுமக்கிறாள் இந்தக் கோதையென்னும் பேதை!
December 25, 2006 8:21 PM
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். நாம் பேசி வைத்துக் கொண்ட படம் இடுவதற்கு இன்னும் சமயம் வரவில்லை. இன்னும் இரண்டு மூன்று பதிவுகள் செல்லவேண்டும்.
December 25, 2006 8:42 PM
SK said...
இந்த நிகழ்வை வைத்துதான் கவியரசரும், "கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்-
கண்டுவர வேண்டுமடி தங்கமே தங்கம்"

எனப் பாடினாரோ?

வல்லியம்மா சொன்னது போல மார்கழி மாதம் சுகமாகப் போகிறது!!
December 25, 2006 11:36 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
நன்றி வல்லி அம்மா. கண்ணாடி சேவை இன்னும் இரண்டு மூன்று பதிவுகளுக்குத் தொடரும்.
December 26, 2006 6:50 AM
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். கோதையாகவும் கோதையின் தோழியாகவும் மாறிவிட்டீர்களே. கோதை உங்களின் ஆதரவான சொற்களைக் கேட்டு சற்றே மனம் தேறியிருக்கிறாள். ஆனாலும் அவளுக்கு வேண்டியது உங்கள் ஆதரவான சொற்கள் இல்லையே. வேண்டியதைத் தான் இப்போது கொஞ்சமாகவேனும் பெற்றுவிட்டாளே. மகிழ்ச்சிக் குறி அவள் திருமுகத்தில் தென்படவில்லையா உங்களுக்கு?
December 26, 2006 6:52 AM
குமரன் (Kumaran) said...
முலையைக் கிழங்கோடு கிள்ளி அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்த்துக் கொள்வேன் என்றவள் சின்னப் பெண்ணா? என்ன சொல்கிறீர்கள் இரவிசங்கர்?
December 26, 2006 6:53 AM
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்கள் சொன்ன பாடல் கண்ணன் பாட்டில் பாரதியார் பாடியதல்லவா?

சுகமாக பொழுதைப் போக்குவதற்கு நன்றி எஸ்.கே. காலக்ஷேபம் - பொழுது போக்கு என்று இதனைத் தானே சொன்னார்கள்.
December 26, 2006 6:54 AM
G.Ragavan said...
ஞானமலர்கண்ணா
ஆயர்குல மணி விளக்கே
வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே
கானத்தில் உயிரினத்தைக் கட்டுவிக்கும் கண்ணா..........
தானே உலகாகித் தனக்குள்ளே தானடங்கி
மானக் குலமாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்று உன் மலர்த்தாள் கரம் பற்றி நானும் தொழுவேன் நம்பிப் பரந்தாமா
உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!
================================
கண்ட இடம் எல்லாம் கண்ணனிடம்
மனம் செல்லக் கண்டேனடி தோழி
கள்வன் அவனென்று அறிந்த பின்னும்
நெஞ்சம் விரும்பிடவும் கொண்டேனடி
பாடலை நான் பாட அவன் குரலில் கேட்டேன்
நாட்டியம் நானாட அவன் அசைவைக் கண்டேன்
ஓவியம் நான் தீட்ட அவன் திறமை கண்டேன்
கேட்டிடும் ஓசையெல்லாம் அவன் குரலே
(கண்ட இடமெல்லாம்
December 26, 2006 11:07 AM
குமரன் (Kumaran) said...
இது எந்தப் பாடலில் வருகிறது இராகவன்? படித்ததில்லை இதுவரை.
December 26, 2006 2:18 PM
K.V.Pathy said...
arumai!
vazhtukkaL.
Pathy.
December 26, 2006 11:26 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
நன்றி பதி ஐயா.
December 27, 2006 6:05 AM
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
இது எந்தப் பாடலில் வருகிறது இராகவன்? படித்ததில்லை இதுவரை. //

முதல்பாட்டு கண்ணதாசன் எழுதியது. திருமால் பெருமைக்காக. அடுத்த பாட்டு முருகதாசன் எழுதியது. குமரன் பதிவுக்காக.
December 27, 2006 9:08 AM
குமரன் (Kumaran) said...
முதல் பாடல் எந்த இடத்தில் வரும் இராகவன். இதுவரை கேட்டதாக நினைவில்லை.

இரண்டாவது பாடலை எழுதிய முருகதாசருக்கு என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள். அவர் மயிலாருக்கு நண்பரா?
December 27, 2006 10:11 AM
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
முதல் பாடல் எந்த இடத்தில் வரும் இராகவன். இதுவரை கேட்டதாக நினைவில்லை. //

ஹரி ஹரி கோகுல ரமணா என்று டி.எம்.எஸ் மற்றும் டி.எல்.மகராஜன் (குட்டி பத்மினிக்காக) பாடுகையில் ஆண்டாள் வளர்ந்து விடுவார். அப்பொழுது கே.ஆர். விஜயாவிற்காக முதலில் இசையரசியின் குரலில் இந்தப் பாடலைப் பாடி...பிறகு ஹரி ஹரி கோகுல ரமணா என்று தொடர்வார். மிகவும் அருமையான பாடல்.

// இரண்டாவது பாடலை எழுதிய முருகதாசருக்கு என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள். அவர் மயிலாருக்கு நண்பரா? //

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். மயிலாருக்கு நெருங்கிய உறவு என்று பேசிக்கொள்கிறார்கள்.
December 27, 2006 10:43 AM
குமரன் (Kumaran) said...
அடுத்த முறை சன் டிவியில் திருமால் பெருமை போடும் போது இந்தப் பாடலைக் கவனித்துக் கேட்கவேண்டும். இசையரசி என்று நீங்கள் சொன்னது பி.சுசீலாவையா எம்.எஸ்.எஸ் ஆ?

யாருக்குத் தெரியும்? மயிலாரும் முருகதாசரும் ஒரே ஆளாகக் கூட இருக்க வாய்ப்புண்டு. இந்த இணைய உலகில் எது வேண்டுமானாலும் நடக்கும். :-)
December 27, 2006 11:01 AM

குமரன் (Kumaran) said...

Anonymous said...
கரியவனைக் காணாத
கண்ணென்ன கண்ணே
கண் இமைத்துக் காண்போர் தம்
கண் என்ன கண்ணே..

கண் முன்னால் வரவிட்டால் என்ன, கண்ணாடி மூலமாகவாவது வந்தானே, தரிசனம் தந்தானே...

மேலே உள்ள பாடல் ஆய்ச்சியர் குரவை, சிலப்பதிகாரம்...எம் எஸ் அம்மா பாடி கேட்டிருப்பீர்கள்....மற்ற வரிகள் இதோ....

முவுலகும் ஈரடியால்
முறை நிறம்பா வகை முடியத்
தாவிய சேவடி சிவப்ப
தம்பியோடும், கான்போந்து
சோவரணும் போய்மடியத்
தொல் இலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத
செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத
செவியென்ன செவியே.

மடந்தாழு நெஞ்சத்துக்
கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நடந்தானை
யேத்தாத நாவென்ன
நாவே நாராயணா
என்னா நாவென்ன நாவே.

..மெளலி
December 28, 2006 1:11 AM
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
அடுத்த முறை சன் டிவியில் திருமால் பெருமை போடும் போது இந்தப் பாடலைக் கவனித்துக் கேட்கவேண்டும். இசையரசி என்று நீங்கள் சொன்னது பி.சுசீலாவையா எம்.எஸ்.எஸ் ஆ? //

என்னைப் பொருத்த வரையில் இசையரசி என்றால் அது பி.சுசீலாதான். அவருக்குத்தான் அந்த இடம். எத்தனையெத்தனை பாடல்களை உணர்ச்சி ததும்பப் பாடிய இசைத்தேவி அவர். தமிழுக்கும் அமுதென்று பேர் என்று அவர் பாடுகையிலேயே அதற்குப் பொருள் தெரிந்து விடுகிறதே. வைகறைப் பொழுதில் விழித்தேன் அந்த வடிவேல் முருகனை நினைத்தேன் என்று பாடும் பொழுது ஓம் சரவணபவாய நம ஓம் என்ற மந்திரம் நெஞ்சில் எழுகிறதே. இதோ இங்கே குறிப்பிட்டுள்ள கண்ணன் பாட்டும்...அடடா! இசையரசி எந்நாளும் நீயே உனக்கொரு இணையாரம்மா? எல்லோரும் இசைப்பது இசையாகுமா!

// யாருக்குத் தெரியும்? மயிலாரும் முருகதாசரும் ஒரே ஆளாகக் கூட இருக்க வாய்ப்புண்டு. இந்த இணைய உலகில் எது வேண்டுமானாலும் நடக்கும். :-) //

நடக்கும் நடக்கும். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..யார் அறிவார்?
December 28, 2006 3:43 AM
Anonymous said...
sri kumaran,

Urs posts on Kodhai tamizh on kodhai seeing kannan in kannadi is excellent.

Kannadi sevai-in nijamana mahimaii indru unarum peradainthen. Nandri.

sundaram
December 30, 2006 9:32 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
நீங்கள் தந்துள்ள பாடலை பல முறை கேட்டிருக்கிறேன் திரு.மௌலி. அதனை ஒரு பதிவிலும் இட்டிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2006/01/127.html
January 01, 2007 7:39 AM
குமரன் (Kumaran) said...
நன்றி திரு.சுந்தரம். முதல் வருகைக்கும் நன்றி. தொடர்ந்து வந்து படித்துப் பாருங்கள்.
January 01, 2007 7:48 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//முதல்பாட்டு கண்ணதாசன் எழுதியது. திருமால் பெருமைக்காக. அடுத்த பாட்டு முருகதாசன் எழுதியது. குமரன் பதிவுக்காக.//

ஐயா முருகதாசரே, பாடல் அருமை!
அப்படியே கொஞ்சம் விரித்துச்

சந்தப் பாட்டாய் தந்தால், அந்தச் சொந்தப் பாட்டைக் கொஞ்சம்,
எந்தைக் கண்ணன் பாட்டில் இட்டு
சிந்தை களித்திட லாமே?

முருகதாசரை எப்படி எங்குப் பிடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ஜிரா! அப்படியே பித்துக்குளி முருகதாசர் போலும் பாடுவாரா அவர்! :-))
January 02, 2007 1:08 AM
கவிநயா said...
"யத் பாவம் தத் பவதி"

இந்தப் பதிவைப் படிக்கையில் கண்கள் பனித்தன. "தென்பட்டான் கண்ணன்" என்றதும் "கண்டேன் சீதையை" நினைவு வந்தது :) கோதையாகவே மாறிவிட்ட குமரா, நீங்கள் ரொம்பக் கொடுத்து வைத்தவர்!
May 29, 2008 3:31 PM
குமரன் (Kumaran) said...
நன்றி அக்கா. இந்த இடுகைகளை எழுதிய போது இருந்த நிலைக்கு மீண்டும் செல்ல முடியுமா தெரியவில்லை. ஆழ்ந்து எழுதினேன்.
June 12, 2008 11:54 AM
கவிநயா said...
கோதையும் கண்ணனும் அருள்வார்கள், குமரா! கவலை வேண்டாம் :)
June 12, 2008 4:17 PM

குமரன் (Kumaran) said...

Vidhya said...
குமரன்

இதற்கு ஆதாரம் அது இது என்று சொல்லவே முடியாது. அருமையாக ஒன்றி போய் எழுதி இருக்கிறீர்கள்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் பொதுவாக ஆண் எழுதும்போது பெண் கதாபாத்திரங்களும் ஆண் போலவே பேசும்; சிந்திக்கும். இங்கே என்ன என்றால் ஆண்டாள் பேசுவதாக நீங்கள் எழுதியிருக்கும் வரிகள் பெண்கள் பேசுவது போலவே இருக்கிறது. இதர சகோதரிகளும் இதை ஒத்துக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆண்டாள் ஏன் மாலையை அணிந்துக் கொண்டாள் என்பதற்கு சாரூப நிலையை காரணமாக காட்டியிருக்கிறீர்கள். நயமான கற்பனை.

இந்த கட்டுரை எழுதி முடியும் வரை ஆண்டாள் தியானத்தில் உங்களை அறியாமல் லயித்து விட்டிருப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

இதில் எனக்கு மாறுபாடன கருத்துக்களை சொல்லட்டுமா?

1. ஆண்டாள் மாதுர்ய பாவத்தில் இருப்பவள். ஒருபோதும் மாதுர்ய பாவத்தில் இருப்பவர் நேசிப்பவராக தன்னை மாற்ற மனதிலும் எண்ண மாட்டார்கள். எனவே சாரூபம் இங்கே சாத்தியமில்லை. சாமீபமும், சாயுஜ்யமும் மட்டுமே நிகழும். தேனாய் ஆக மாட்டோம்; தேனுண்டு மயங்கும் பரமானந்தம் வேண்டுவதால் என்பதே அந்நிலையின் தன்மை!

2.ஆண்டாள் கண்ணனின் நச்சரிப்பு தாங்காமல் அதை அணிந்ததாகவே இது வரை இருக்கும் கதைகளில் உண்டு. உங்கள் கற்பனை அருமை என்றாலும் ஆண்டாளின் அடிப்படை தன்மை மாறுதலடைவது, இது வேறு ஒரு ஆண்டாள் என்பது போல காட்டி விடுகிறது.

வேறு குறையே ஒன்றுமில்லை குமரரே!
November 20, 2008 10:36 AM
குமரன் (Kumaran) said...
ரொம்ப நாளாக மீண்டும் கோதை தமிழில் எழுதியதை எல்லாம் படித்துப் பார்த்து அந்த மன நிலை மீண்டும் வருகிறதா என்று பார்க்கவேண்டும்; அடுத்த பகுதிகளை எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். கவிநயா அக்கா இவற்றை எல்லாம் இந்த வருடம் படித்த போதும் செய்ய முடியவில்லை. விரைவில் இதில் எழுத வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நானும் 'விரைவில் விரைவில்' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இப்போது நீங்கள் உங்கள் பின்னூட்டங்களால் முழுவதையும் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு என்னைத் தள்ளுகிறீர்கள். நன்றி வித்யா. :-)

உங்கள் பெயரைப் படிக்கும் போதெல்லாம் 'வித்யா விநய சம்பந்ந' என்ற கீதைச் சொற்றொடர் தான் நினைவிற்கு வருகிறது. :-)
November 20, 2008 12:02 PM
குமரன் (Kumaran) said...
தங்கள் பாராட்டிற்கு நன்றி வித்யா. அவளே அவள் கதையை எழுதிக் கொண்டாள் என்றே நினைக்கிறேன். அந்த மனநிலை மீண்டும் வராததாலேயே இந்தத் தொடர் தொடராமல் இருக்கிறது.

1. மாதுர்ய பாவத்தில் இருப்பவர்கள் சக்கரையை ருசிக்கும் எறும்பாகவே இருக்க விரும்புவார்கள்; சக்கரையாக மாறுவதை விரும்ப மாட்டார்கள் என்று சொல்வது நியாயம் தான். அனுபூதிமான்கள் பலரும் சொல்லப் படித்திருக்கிறேன். ஆனால் மாதுர்ய பாவத்தில் இருப்பவர்கள் ஒரு போதும் தன் காதலைப் பெற்றவராகத் தான் மாறுவதை விரும்ப மாட்டார்கள் என்ற கருத்தில் ஏற்பில்லை. சைதன்ய மகாபிரபுவும் 19ம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்த நடனகோபால நாயகி சுவாமிகளும் என் கருத்துக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். சைதன்ய மகாபிரபு கண்ணன், இராதை இருவரின் அவதாரம் என்பது தான் கௌடிய வைணவ மரபு. அவர் கண்ணனாகவும் இராதையாகவும் மாறி மாறி இருந்தாரே. மாதுர்ய பாவத்திற்கு அவரையும் தானே எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள்?!

நாயகி சுவாமிகள் அவரது பெயர் சொல்வதைப் போல் சேலை கட்டிக் கொண்டு ஆண்டாள் கொண்டையுடன் ஹரி பஜனை செய்து கொண்டிருந்தவர். சில நேரங்களில் கிருஷ்ண பாவத்தில் கண்ணனைப் போல் புல்லாங்குழலுடன் த்ரிபங்கியாக நின்றும் நாட்டியம் ஆடியும் காலத்தைக் கழித்தார் என்று கேள்விபட்டிருக்கிறேன். இந்த மாதிரி சூழல்களில் அவர்கள் தங்களையே கண்ணனாகத் தானே கண்டிருக்கிறார்கள். ஆண்டாளுக்கு மட்டும் ஏன் அந்நிலை வந்திருக்கக்கூடாது?

சாரூபம், சாமீப்யம், சாயுஜ்யம் என்ற மூவகை முக்தி நிலைகளும் பக்தர்களுக்கு உண்டு. வைகுண்டத்தில் நித்யர்கள் முக்தர்கள் எல்லோரும் அவனைப் போன்றே திருவுருவம் கொண்டிருப்பார்கள் என்று தானே வைணவ நூற்கள் கூறுகின்றன. அது சாரூபம் தானே. அவனருகில் அவன் சேவையில் என்றும் இருப்பது சாமீப்யம். இதுவும் பக்தர்களுக்கு உண்டு. அவனில் அவனாகவே கலந்து அவன் திருமேனியில் ஒன்றாகிவிடுவது - பிராட்டியார்களைப் போல், திவ்யாயுதங்களைப் போல் - அதுவும் பக்தர்களுக்கு உண்டு.

சாரூபமும் சாமீப்யமும் சாயுஜ்யமும் பெற்ற பின்னரும் தேனை நுகரும் வண்டாக இருப்பதில் தடையில்லை என்று தான் நித்யர்களையும் முக்தர்களையும் வைத்து வைணவ சித்தாந்தம் சொல்கிறது. அவர்கள் அந்நிலைகளிலும் நித்ய கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவே பரமானந்தம் என்பது சித்தாந்தம்.

2. கண்ணனின் நச்சரிப்பு தாங்காமல் ஆண்டாள் மலர்மாலைகளை அணிந்து கொண்டாளா? அடியேன் இதுவரை கேட்டிராதது இது. மன்னிக்கவேண்டும். தெளிவுறுத்த வேண்டும்.
November 21, 2008 12:25 AM

குமரன் (Kumaran) said...

Radha said...
இந்த பதிவை படித்த பொழுது "வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே!" என்ற பாசுரம் நினைவிற்கு வர, அதை இங்கே சொல்லலாம் என்று வரும்பொழுது எனக்கு முன்பாக ரவி சொல்லிவிட்டு போயிருக்கிறார். :-) கண்களில் பச்சை மை இட்டு கொண்டால் பார்ப்பது எல்லாம் பச்சையாக தெரியுமாம்.
கோதை கண்ணாடியில் கண்ணனை காண்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. ஒரு பழைய சினிமா பாடல் நினைவிற்கு வருகிறது. "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன? " என்ற பாடல்; காதலன் முகம் எவர்சில்வர் பாத்திரங்களில் எல்லாம் தெரிவது போல வரும். :-)

இன்னொரு கதை நினைவிற்கு வருகிறது. கண்ணன் ராதையின் வீட்டிற்கு சென்று அவளோடு அளவளாவி விட்டு திரும்புகிறான். அப்பொழுது நடைபெறுவதாக உள்ள ஒரு சம்பாஷனை.
"ஹே ராதே ! எப்படி இருக்கிறாய் ? "
"ஹே கம்சா ! நான் சௌக்கியமாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? "
"அடி கள்ளி ! நான் கண்ணன். இங்கே கம்சன் எங்கே வந்தான்?"
"அடே கள்வா ! நான் சந்திரவளி. இங்கே ராதை எங்கே வந்தாள் ?"
கண்ணன் வெட்கத்துடன் சிரித்துவிட்டு("வழிந்துவிட்டு" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்) அந்த இடத்தை விட்டு அகன்றான்.

மேற்படி கதை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.
கோதைத் தமிழ் top class !! :-)
~
ராதா
July 11, 2009 8:40 AM
குமரன் (Kumaran) said...
சந்திரவளி என்பவள் யார் இராதா?

நல்ல கதையை சொல்லியிருக்கிறீர்கள்.
August 14, 2009 3:07 PM
Radha said...
சந்திரவளி ராதையைப் போல இன்னொரு ஆயர்குலப் பெண்.
ராதையின் தோழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சரியா என்று தெரியாது. :-)
August 22, 2009 7:58 AM

மாதேவி said...

சூடிக் கொடுத்த சுடர்கொடி அமுதத்தில் இன்புற்றோம்.

படம் நன்றாக இருக்கின்றது.

குமரன் (Kumaran) said...

நன்றி மாதேவி.