Wednesday, June 19, 2013

சிற்றஞ்சிறுகாலை

மனம் மிக மிக அமைதியாக இருக்கிறது. துயில் கொள்ளச் சென்ற போது மனதில் ஆயிரம் எண்ணங்கள் இருந்தாலும் துயில் நீங்கி எழும் போது எந்த எண்ணங்களும் இல்லாமல் மனம் நிர்மலமாக இருக்கிறது. அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கும் வழக்கம் இருப்பதால் எழுந்தவுடன் 'ஹரி ஹரி' என்று தானாகவே வாய் முணுமுணுக்கிறது. அப்படி முணுமுணுத்ததே மனதில் மாயவனைப் பற்றிய எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அதுவே நாளின் முதல் எண்ணமானதால் நாள் முழுதும் தங்கும் எண்ணமாகவும் ஆகிறது. ஆகா. என்னே மாதவனின் கருணை. என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி என் மனத்தில் தங்கி அவனை எப்போதும் நினைக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டானே.

இதோ அடுத்த தெருவில் இருக்கும் ஆயர்களின் பசுக்களும் எருமைகளும் மேய்ச்சலுக்குக் கிளம்பிவிட்டன. அந்த ஆவினங்கள் இந்தத் தெரு வழியாகத் தான் செல்லும். அப்படி செல்லும் போது கோதை பார்த்துவிட்டால் போதும். கண்ணா கண்ணா என்று முனகிக் கொண்டே செயலறியாது நின்று விடுகிறாள். சில நேரங்களில் அந்த ஆவினங்களின் பின்னால் போகும் இடைச்சிறுவனைக் கண்டு மயங்கிவிழுகிறாள். சில நேரங்களில் அந்த ஆவினங்களைத் துரத்திச் சென்றால் கண்ணனைக் காணலாம் என்று சொல்லிக் கொண்டு பின் தொடர முயல்கிறாள். அதனால் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கவேண்டும்.

இன்னும் சரியாகப் புலரவில்லையே. கதிரவனைக் காண முடியவில்லை. ஆனால் கிழக்கில் சிறிது வெளிச்சம் தெரிகிறது. இது போதுமே மேய்ச்சலுக்கு கிளம்ப. அப்படி மேய்ச்சலுக்குப் போகும் பசுக்களின் குளம்பினால் மேல் எழும்பிய தூசி உடலில் பட்டால் எல்லாப் பாவங்களும் தீர்ந்துவிடும் என்றல்லவா மேலோர் சொல்லியிருக்கின்றனர். அந்தக் கோதூளியையும் நம் உடம்பில் தாங்கிக் கொள்ளலாம். உடனே விரைந்து வாசலுக்குச் செல்லவேண்டும்.

***

நல்லவேளை. கோதை ஏதோ காரியமாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறாள். இன்று வாசலுக்கு வரவில்லை. அதனால் அவளைக் கட்டி வைக்க வேண்டிய ஒரு வேலை குறைந்தது. ஒரே பெண் என்று கொஞ்சம் செல்லம் கொடுத்துத் தான் வளர்த்துவிட்டேன் போலும். சொற் பேச்சைக் கேட்பதே இல்லை. திருமணம் செய்து கொள் என்றால் 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் காண்' என்கிறாள். எல்லாம் கண்ணன் விட்ட வழி என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இருக்கிறேன்.

இதோ பசுக்களும் எருமைகளும் கழுத்தில் மணிகள் ஒலிக்க நம் வீட்டைக் கடந்து சென்றுவிட்டன. தினமும் அதிகாலையில் இவற்றின் திருமுகத்தில் முழிக்க வழிவகை செய்யும் இந்த இடைச்சிறுவன் நன்றாக இருக்க வேண்டும். ஆயிரம் பொன் கொடுத்தாலும் கோ தரிசனம் கிடைப்பது எளிதல்லவே.

விரைவில் நித்ய கடமைகளை இயற்றிவிட்டு இறைவனுக்காக மலர் மாலை தொடுக்க வேண்டும். திருக்கோவிலைத் திறக்க இதோ கையில் கோவிற்சாவியுடன் அர்ச்சகரும் கிளம்பிவிட்டார். இப்போது தொடங்கினால் தான் அவர் நிர்மால்ய தரிசனத்தை நிறைவு செய்யும் போது மலர் மாலையுடன் நாம் மாலவன் திருமுன்பு நிற்க முடியும்.

***

கண்ணன் நினைவிலேயே காலங்கள் கழிகின்றன. அல்லும் பகலும் அவன் நினைவே. வந்தாய் போலே வாராதாய்; வாராதாய் போல் வருவோனே என்று நம் குலமுதல்வர் சரியாகத் தான் பாடியிருக்கிறார். திடீரென்று பக்கத்தில் அவனது வேணுகானம் கேட்கிறது; ஓடிப் போய் பார்த்தால் அவன் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறான்; அருகில் சென்றாலோ மறைந்துவிடுகிறான். எப்போதும் எதைப் பார்த்தாலும் அவன் நினைவாகவே இருக்கிறது. உடல் மெலிந்துவிட்டதாக தோழியர் கூறுகிறார்கள். உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாமே கண்ணன் என்று நான் இருக்க நான் மெலிவதாவது? அறியாப் பெண்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. தலை நோவும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்.

அவனுக்கு ஏற்றவளாக என்னை மாற்றிக் கொண்டால் அவன் வந்துவிடுவான். இப்படி எண்ணிக்கொண்டு கண்ணில் மையிடலாம் என்று எடுத்துவைத்துக் கொண்டு பல நாழிகை சென்றுவிட்டது. கருநிற மையைக் கண்டவுடன் மைவண்ணன் முகம் எதிரில் வந்து நிற்கிறதே. கருநிறம் கொண்ட எதனையும் இனிமேல் காணக்கூடாது. குவளை மலரை நம் நந்த வனத்தில் வெகு தூரத்தில் வளர்க்க ஏற்பாடு செய்தாகிவிட்டது. இந்த காக்கைகளையும் குயில்களையும் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. அடிக்கடி முன்னால் வந்து தங்கள் அழகு நிறத்தைக் காட்டி என்னை வாட்டுகின்றன.

காக்கைகளையும் குயில்களையும் கூட விரட்டிவிடலாம். ஆனால் இந்த பச்சை நிற மரங்களையும் நீல நிற வானத்தையும் கருநிற கார்மேகங்களையும் என்ன செய்வது? எந்த திசை நோக்கினாலும் எதாவது ஒன்று அவன் நினைவைக் கொண்டு வருகிறதே. ஆ.ஆ. காதல் நோய் மிகக் கொடிது. இந்த வளையல்களின் தொல்லை வேறு. கைகளில் நிற்கவே மாட்டேன் என்கிறது. தோழியர் அதற்கும் நான் மெலிந்தது தான் காரணம் என்கின்றனர். எதாவது ஒரு காரணம் போதும் இவர்களுக்கு - உணவும் உறக்கமும் எவ்வளவு முக்கியம் என்று உபதேசம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். உண்ணும் உணவும், உடுக்கும் உடையும், இருக்கும் இடமும் எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நம் தந்தையும் என் நிலையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்.

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

5 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

28 comments:

நாமக்கல் சிபி said...
சிற்றஞ்சிறுகாலை வந்துன்னைச் சேவித்து
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது...!
December 04, 2006 6:51 AM
Anonymous said...
அன்புக் குமரா!
ஓகோ! இதான் கோதையின் காதல் தமிழா??!!சிபியார் கூறிய நாலுவரிக்கா????இந்த உரை!!
உங்களுக்கு நேரம் கிடைக்காததன் காரணம் புரிந்தேன்.
நன்று!
யோகன் பாரிஸ்
December 04, 2006 7:14 AM
Anonymous said...
அன்புக் குமரா!
ஓகோ! இதான் கோதையின் காதல் தமிழா??!!சிபியார் கூறிய நாலுவரிக்கா????இந்த உரை!!
உங்களுக்கு நேரம் கிடைக்காததன் காரணம் புரிந்தேன்.
நன்று!
யோகன் பாரிஸ்
December 04, 2006 7:14 AM
குமரன் (Kumaran) said...
இல்லை யோகன் ஐயா. அவர் சொன்ன வரிகளுக்குப் பொருளுரை இனிமேல் தான் வரும். அந்தப் பாடலில் முதல் சொல்லை மட்டுமே இந்தப் பதிவிற்குத் தலைப்பாய் வைத்தேன்.
December 04, 2006 7:17 AM
நாமக்கல் சிபி said...
யோகன்!

தலைப்பைப் பார்த்தவுடன் இந்தப் பாடல் எனக்கு நினைவில் வந்ததால் எழுதினேன். தினம் ஒரு பாடலாக மார்கழி மாதம் பிரசுரிப்பார் என்று எண்ணுகிறேன்.

:)
December 04, 2006 7:20 AM

குமரன் (Kumaran) said...

நாமக்கல் சிபி said...
யோகன் அவர்களே!

முதல் பாடல் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்.." என்று தொடங்கும். முப்பது நாட்களுக்கும் முப்பது பாடல்கள் வரும்.
December 04, 2006 7:22 AM
குமரன் (Kumaran) said...
சிபி. இந்தப் பதிவின் தலைப்பில் உள்ள சொல்லில் தொடங்கும் திருப்பாவைப் பாசுரத்தின் வரிகளைச் சொன்னதற்கு நன்றி. யோகன் ஐயாவின் கேள்விக்குப் பதில் சொல்லும் போது இந்தப் பதிவு இந்தப்பாசுரத்தின் பொருள் விளக்கம் இல்லை என்று சொன்னேன். ஆனால் அதற்குப் பிறகு எண்ணிப் பார்த்தால் 'பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ' என்ற வரிகளின் பொருள் இந்தப் பதிவில் வருகிறதே என்று தோன்றியது. இந்தப் பதிவின் தலைப்பை முதலிலேயே சிந்தித்து வைத்துக் கொள்ளவில்லை. எழுதிக் கொண்டே வந்தேன். நிறுத்திவிடலாம் என்று தோன்றிய இடத்தில் நிறுத்திவிட்டுப் பின்னர் என்ன தலைப்பு வைக்கலாம் என்று தோன்றிய போது இந்தத் தலைப்பு தோன்றியது. அப்படியே இட்டுவிட்டேன். பின்னர் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் இந்த தற்செயலான இறை அருள் தென்படுகிறது. :-)

தானே தன்னைப் பாடிக் கொண்டான் என்றாற் போல் தானே தன்னைப் பற்றி எழுதிக் கொள்கிறாள் கோதை.
December 04, 2006 7:54 PM
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. நேரம் கிடைக்கவில்லை என்று சொல்லி உங்களுக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு மன்னியுங்கள். விரைவில் செய்கிறேன்.
December 04, 2006 7:55 PM
குமரன் (Kumaran) said...
சிபி. தினம் ஒரு பாடல் இல்லை. இராகவன் போன வருடமும் தேசிகன் அதற்கு முந்தைய வருடமும் அப்படி திருப்பாவைக்குப் பொருள் சொல்லிவிட்டார்கள். இந்த வருடம் இங்கே கொஞ்சம் விரிவாகச் செல்லும். தொடர்ந்து வந்துப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
December 04, 2006 7:57 PM
இலவசக்கொத்தனார் said...
குமரன்,
அவர்கள் சுட்டிகளைத் தாருங்களேன். எனக்கு பொருளோடு படிக்க வேண்டுமென ஆசை. அதற்குப் பின் உங்கள் விரிவான விளக்கங்களுக்கு வருகிறேன்.
December 04, 2006 8:02 PM

குமரன் (Kumaran) said...

விடாதுகருப்பு said...
சிற்றஞ்சிறு காலை என்பதில் சொற்குற்றம், பொருட் குற்றம் எல்லா வெங்காய குற்றமும் ஒருங்கே அமைந்துள்ளது.

சின்னஞ்சிறு காலை என்பதே சரியான சொல்.

சமஸ்கிருதம் படித்த செளராஸ்டிரன் எல்லாம் பாடம் நடத்தி தமிழன் அறிந்துகொள்ள வேண்டிய நிலை.

கொடுமைடா சாமி!
December 04, 2006 8:04 PM
குமரன் (Kumaran) said...
கொத்ஸ்,

தேசிகனின் திருப்பாவை பதிவுகளுக்கான சுட்டி:

http://www.desikan.com/blogcms/?item=38&catid=5

இராகவனின் திருப்பாவைத் தொடர் கடைசிப் பதிவின் சுட்டி:

http://iniyathu.blogspot.com/2006/01/blog-post_113713573451306314.html

இந்தப் பதிவிற்குச் சென்று அதற்கு முன்புள்ள பதிவுகளின் சுட்டிகளைப் பிடித்து முதல் பதிவு வரை சென்று படியுங்கள்.
December 04, 2006 8:08 PM
குமரன் (Kumaran) said...
விடாது கருப்பு ஐயா. தமிழறிஞர்கள் எல்லாம் படித்து பலமுறை பொருள் சொன்ன பாசுரத்தின் முதல் சொல் இது. இது தவறென்று ஐயா நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். தங்களின் பொன்னான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
December 04, 2006 8:10 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நம் தந்தையும் என் நிலையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்//

அப்படிப் போடுங்க!
குமரன், அப்படியே டெவலப் பண்ணுங்க! கதைக் களன் மிகவும் அருமை! இரண்டுமே பக்தி உள்ளங்கள்! ஆனால் அதற்கு இது, இதற்கு அது...முழுப் புரிதல் என்பது அவனிடம் மட்டும் தான் பாத்தீங்களா?

காத்திருக்கிறோம்! தினம் ஒரு கதை தானே! ஆமாம் என்றே சொல்லுங்கள்!
December 04, 2006 8:23 PM
குமரன் (Kumaran) said...
தினம் ஒரு பதிவு இல்லை இரவிசங்கர். முடிந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எழுத முயல்கிறேன்.
December 04, 2006 8:30 PM

குமரன் (Kumaran) said...

ஷைலஜா said...
//எந்த திசை நோக்கினாலும் எதாவது ஒன்று அவன் நினைவைக் கொண்டு வருகிறதே. ஆ.ஆ. காதல் நோய் மிகக் கொடிது. இந்த வளையல்களின் தொல்லை வேறு. கைகளில் நிற்கவே மாட்டேன் என்கிறது. தோழியர் அதற்கும் நான் மெலிந்தது தான் காரணம் என்கின்றனர்//

இந்த வரிகளில் காதல் ரசம் கனிவாய்வழிகிறது..அருமை!

குமரன்! வெளியூர் சென்றதால் தாமதமாய் பார்க்க நேர்ந்தது.
இன்னும் எழுதுங்கள் படிக்கக்
காத்திருக்கும்
ஷைலஜா
December 05, 2006 1:14 AM
Anonymous said...
குமரன்,

மிக அருமை.

இப்போது புரிந்தது ஏன் நிங்கள் தினம் ஒரு பாசுரத்திற்க்கு பதில் சொல்லவில்லை என்று.
December 05, 2006 6:29 AM
G.Ragavan said...
என்று விட்ட தொடர்...அது தொடர இத்தனை நாட்கள் ஆகி விட்டதே! ஆயினும் தொடரட்டும்.

சிற்றஞ்சிறு காலை என்று தலைப்பு இருந்திருக்க வேண்டும் குமரன். அந்த இடைவெளி கண்டிப்பாக வேண்டும்.

கருப்பு, சின்னஞ்சிறு என்று சொல்வதும் சரி. ஆனால் பழந்தமிழில் சின்ன இல்லை. சிறியதான் இருந்தது. சங்க நூல்கள் மட்டுமல்ல காப்பியங்களும் பதிகங்களும் சிறியதைத்தான் பயன்படுத்தியிருக்கின்றன. சின்னஞ்சிறு என்பதும் சரியே. அது பிற்காலப் பழக்கம் என்றே எனக்குத் தோன்றுகிறது. பாரதி சொல்லியிருக்கிறாரே "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்று. பழைய இலக்கியங்களில் சின்ன படித்த நினைவில்லை. தமிழிலக்கியம் தெரிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன்.
December 05, 2006 10:58 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சிற்றஞ்சிறு காலை என்று தலைப்பு இருந்திருக்க வேண்டும் குமரன். அந்த இடைவெளி கண்டிப்பாக வேண்டும்//

உரைநடைக்கு அந்த இடைவெளி பெரிதும் உதவும் ஜிரா! ஆனால் பாசுரத்தில் சேர்ந்தே பயின்று வரும்! யாப்பாகப் பார்த்தால் தவறு இல்லை!

//கருப்பு, சின்னஞ்சிறு என்று சொல்வதும் சரி. ஆனால் பழந்தமிழில் சின்ன இல்லை. சிறியதான் இருந்தது//.

பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் கூட "சிற்றில் வந்து சிதையேலே!" என்று தான் வருகிறது!
சிற்றில்=சிறு+இல்; இது நன்னூல் புணர்ச்சி விதிகளின் படி எப்படி வருகிறது என்று பின்னர் வந்து தருகிறேன்! இப்போது சற்று வேலை மிகுதி! மன்னிக்கவும்!

சிற்றில் என்று சொல்லாமல் சின்னில் என்றும் சொல்லி இருக்கலாம்! தவறு ஆகியிருக்காது! ஆனால் கால வழக்கில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி உள்ளனர்; அவ்வளவே!

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்று பாரதியும் கால வழக்கில் உள்ள சொல்லைக் கையாளுகிறார்!
சிற்றரசர் என்ற சொல்லையும் ஒப்பு நோக்குங்கள்!!

இப்படித் தமிழைக் கொண்டு கலந்து பேசுவதும் கருத்து உரைப்பதும் எவ்வளவு இனிமையாக உள்ளது!
கசப்புகள் நீங்கி, கவின் தமிழ் உரையாடல் எவ்வளவு இனிமை! இப்போது மட்டும் அல்ல, தனியே பேருந்துப் பயணத்தில் நினைத்துப் பார்க்கும் போது கூட இனிமை தான்! இது நிலைபெற வேண்டும் என்றென்றும்!!
December 06, 2006 9:23 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சில+சில என்பது சிற்சில என்று ஆகிறது!
அதே போல் சிறு+சிறு = சிற்சிறு ஆகலாம் அல்லவா?

"தம் முன்னே தாம் வந்தால் முன் சொல்லின் இறுதி அகரம் நீங்க லகர வொற்றாகவும், அது திரிந்து றகர வொற்றாகவும் மாறலும், இயல்பாய் நிற்பின், இயல்பும் மிகுதலும் ஆம்" என்று உரையில் இப்போது படித்தேன்.

இன்னொன்றும் பாருங்கள்!
கன்று+ஆ = கற்றா என்று ஆகிறது.
"கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே" என்பது தேவாரம்.

"சிற்றஞ்சிறு" வை, சிறு+அம்+சிறு என்று பிரித்தால் மேற்சொன்ன மாதிரி ஆக வழி உண்டு!
கன்று+ஆ=கற்றா
சிறு+அம்=சிற்றம்
சிற்றம்+சிறு=சிற்றஞ்சிறு என்று ஆகி விடுகிறதே!

ஒருவன், ஒருவள் என்று சொல்லாது ஒருவன் ஒருத்தி என்று தான் ஆண்டாள் பயில்கிறாள் பிறிதோர் இடத்தில்; "ஒருத்தி மகனாய்ப் பிறந்து"..
அவள் தமிழ் இலக்கணப் பிழை புரிய சாத்தியமா என்று தெரியவில்லை!

தேவநேயப் பாவாணர், புலவர் பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் நூற்களைப் படித்தால், இன்னும் தெளியலாம்.
நம் இராம.கி ஐயா அவர்களையும் ஒரு வார்த்தை கேட்டு விடுதல் நன்று!
December 06, 2006 10:30 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
ஷைலஜா. தாமதமாகப் படித்தாலும் முடிந்த போதெல்லாம் படித்துவிடுங்கள். :-)
December 19, 2006 1:43 PM
குமரன் (Kumaran) said...
நன்றி திரு. மதுரையம்பதி. தங்கள் பதிவைப் படிக்க அடியேனை அனுமதியுங்கள். என்னால் தங்கள் பதிவைக் காண இயலவில்லை.
December 19, 2006 1:45 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். வெகு நாட்களுக்குப் பின்னர் தான் தொடங்கியிருக்கிறேன் மீண்டும். முடிந்த போதெல்லாம் படித்து பின்னூட்டம் இடுங்கள்.
December 19, 2006 1:46 PM
குமரன் (Kumaran) said...
இராகவன், கேட்க மறந்துவிட்டேனே. ஏன் சிற்றஞ்சிறு காலை என்று இடைவெளி கட்டாயம் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சின்ன என்பது பழந்தமிழ் நூல்களில் பயின்று வரவில்லை என்பது எனக்குப் புதிய செய்தி இராகவன். நன்றி.
December 19, 2006 1:47 PM
குமரன் (Kumaran) said...
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி இரவிசங்கர்.
December 19, 2006 1:49 PM
குமரன் (Kumaran) said...
ஆண்டாள் இலக்கணப்பிழை செய்திருக்க வாய்ப்பில்லை இரவிசங்கர். தமிழும் வடமொழியும் கற்ற வேற்றுமொழியான் தமிழைத் தவறாகச் சொல்லிக் கொடுப்பதா? அதனைத் தமிழர்கள் கேட்டுக் கொள்வதா? என்ற வேகத்தில் வந்த வார்த்தைகள் அவை. அவ்வளவு தான்.

தமிழறிஞர்கள் சொல்வதனால் அந்த வேகம் குறையாது. அந்த வேகம் தோன்றியது தமிழின் மீது உள்ள அன்பினால் அன்று. வேற்று மொழிகளின் மீதான வெறுப்பினால்.
December 19, 2006 1:52 PM
கவிநயா said...
//உண்ணும் உணவும் பருகும் நீரும் கண்ணனே//

என்னே கோதையின் காதல்/பக்தி! படிக்கப் படிக்கச் சுவைக்கிறது. நீங்கள் சொன்னது போல கோதையே தன்னைப் பற்றி எழுதிக் கொண்டது போல காதலும் பக்தியும் கலந்து கசிகிறது... அருமை!

'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாடல் நினைவு வந்தது.
May 18, 2008 5:44 PM
குமரன் (Kumaran) said...
நன்றி அக்கா. ஒரு பெண்ணின் மனநிலையை, உணர்வை ஒரு ஆண் எந்தப் பொழுதும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள இயலாது என்று நம்புபவன் நான். இங்கே கோதையின் உணர்வுகள் நன்றாக வந்திருப்பதாக நீங்கள் சொன்னால் (ஒரு பெண்ணின் உணர்வுகளைப் பற்றி இன்னொரு பெண் சொன்னால்) மீண்டும் நான் சொன்னதே உறுதியாகிறது - நாச்சியாரே தன்னைத் தானே எழுதிக் கொண்டது இது.
May 22, 2008 9:12 AM