Saturday, June 15, 2013

கூடிடு கூடலே (கோதையின் கதை)

'தோழியர்களே. தந்தையாரும் கண்ணன் வந்து என்னை மணப்பானோ இல்லையோ என்று மிகவும் கவலையுடன் இருக்கிறார். எனக்கோ கண்ணன் வந்து என் காதலை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை மிகுதியாய் இருக்கிறது. அப்பாவின் கவலை தீர்க்கவும் என் காதல் நோய் தீர்க்கவும் ஏதாவது வழியிருக்கிறதா?'

'கோதை. கூடல் இழைத்துப் பார்த்தால் என்ன? கை நிறைய மஞ்சள் கிழங்குகளை அள்ளி எடுத்து அவற்றை இரண்டிரண்டாகச் சேர்த்து இரட்டையாகச் சேர்ந்தே வருகின்றனவா கடைசியில் ஒற்றையாக ஒன்று தனித்து நிற்கிறதா என்றுப் பார்ப்பது தான் கூடல். இரட்டையாக வந்தால் உன் எண்ணம் கை கூடும்; நினைத்தது நடக்கும் என்று மனம் தேறலாம்'.

'நல்ல வழி சொன்னாய். இப்போதே கூடல் இழைத்துப் பார்த்துவிடலாம்'.

அறிவில் தெளிந்து ஞானம் பெற்றவர் பலர் தொழும் தேவனாம், கேட்டதெல்லாம் கொடுக்கும் வள்ளல், திருமாலிருஞ்சோலை வாழ் என் மணாளனார் பள்ளி கொள்ளும் போது அவர் கால்களை நான் வருடிடும் பேறு எனக்குக் கிட்டுமாகில் நீ கூடிடு கூடலே.

தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே

காடுகள் நிறைந்த திருவேங்கடத்திலும் திருக்கண்ணபுரத்திலும் எந்தக் குறையுமின்றி மகிழ்ந்து உறையும் வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னொடு சேர்த்துக்கொள்வான் ஆகில் நீ கூடிடு கூடலே.

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்தென் கைப்பற்றித் தன்னொடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே

பூவில் வாழ்பவன், புகழ்ந்து வானவர் போற்றுதற்கு உரிய அழகில் சிறந்தவன், அழகிய ஒளி மிகுந்த நெற்றியைக் கொண்ட தேவகிதேவியின் சிறந்த மகன், செல்வம் மிகுந்த வசுதேவரின் இளவரசன் வருவானென்றால் நீ கூடிடு கூடலே.

பூமகன் புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர்தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே

ஆய்ச்சியர்களும் ஆயர்களும் அஞ்சும்படி, பூக்கள் நிரம்பிய கடம்ப மரம் ஏறி, நீர்நிலையில் பாய்ந்து, அங்கு வாழ்ந்த காளியன் தலை மேல் நடமாடிய கூத்தனார் வருவானென்றால் நீ கூடிடு கூடலே

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடியக்
கூத்தனார் வரில் கூடிடு கூடலே

மாடமாளிகைகள் சூழ்ந்த வடமதுரைப்பதியில் வரும்போது கம்சனால் ஏவப்பட்டு நடுவீதியில் மறித்த, மத நீர் ஓடை போல் ஒழுகும் மதம் பிடித்த குவலயாபீடம் என்னும் யானையை உதைத்துக் கொன்றவன் என்னைக் கூடுமாகில் நீ கூடிடு கூடலே.

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மாமத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே

தீயவரை அறவே ஒழித்தவன், மருத மரம் முறிய நடந்தவன், கம்சனை வஞ்சனையால் கொன்றவன், மிகப் புகழ் கொண்டு திகழும் வடமதுரைப்பதியின் அரசன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே

அன்று தீயவைகளைச் செய்த சிசுபாலனையும், உயர்ந்து நின்ற மருதமரத்தையும், எருதையும், கொக்கையும், வெற்றி தரும் வேலைக் கொண்டிருந்த வீரனாம் கம்சனையும், கொன்றவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே

பக்தியுடையவர் தம் மனத்தன்றி வேறு ஒருவர் மனத்திலும் நில்லாதவன், நறுமணம் சூழ்ந்த துவாரகைப்பதியின் காவலன், கன்றுகள் மேய்த்து விளையாடும் கோபாலன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதி
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே

முன்னாளில் மாவலியின் பெரிய வேள்விக்கு அழகிய குறள் உருவுடன் சென்று நிலவுலகத்தையும் அண்டங்களையும் ஒவ்வொரு அடியால் அளந்து தன் உரிமையாய்க் கொண்டவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

கொண்ட கோலக் குறளுருவாய்ச் சென்று
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடியொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே

வேதியர் மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகும் நான்மறையின் பொருளானவன், மதம் ஒழுகும் கஜேந்திரன் என்னும் யானையின் துயர் தீர்த்து அதை உய்த்தவன், என் அழகன், ஆய்ச்சியர் சிந்தையில் ஆடும் குழகன் அவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகும் வாரணம் உய்யவளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே

'கோதை. பார்த்தாயா இந்த அழகை? நீ ஒவ்வொரு முறை கூடல் இழைக்கும் போதும் அது கூடலாகவே வருகிறது. ஒற்றையாய் நிற்கவில்லை. நீ நினைப்பது நிச்சயம் நிறைவேறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீ இனி துயர் தீர்ந்து மகிழ்ந்திருக்கலாம். நானே உன் தந்தையாரிடம் நாம் கூடல் இழைத்துப் பார்த்ததைக் கூறி அவர் துயரும் தீர்ந்து இருக்குமாறு கூறிவிடுகிறேன். வருந்தற்க'.

ஊடலையும் கூடலையும் உணர்தலையும் புணர்தலையும் நிலைத்து நின்ற புகழ் கொண்ட ஆய்ச்சியரின் கூடலையும் கூறிய அழகிய குழலைக் கொண்ட கோதையின் பாடல் பத்தையும் கூறுவார்க்கு இல்லை பாவமே

ஊடல் கூடல் உணர்தல் புணர்தல்
நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கில்லை பாவமே.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

***


6 comments:

குமரன் (Kumaran) said...

Comments from the original post:

19 comments: G.Ragavan said...
அருமையாக வந்திருக்கிறது குமரன். இது தொடர்பான எனது பதிவை நாளை இடுகின்றேன்.

December 19, 2005 6:18 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Kumaran,
Madu manay ponal enna, makkal sutram ponal enna,
kodi sempon ponal enna,kumaran kothy tamizh pothumadi, kurai ondrum illayadi. TRC

December 19, 2005 10:48 AM
சிங். செயகுமார். said...
கூடல்ன்னு போட்டு இருந்துச்சா ,ஓடி வந்து பார்த்தா தலிவரு ஏமாத்திட்டாரே.இந்த பகுதியெல்லாம் படிக்க ஆசைதான் .முதல்லேர்ந்து படிக்கணுமே. நேரங்கள்!

December 19, 2005 4:48 PM
குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். உங்கள் பதிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

December 19, 2005 8:24 PM
குமரன் (Kumaran) said...
அன்பு TRC

மாடு மனை போனால் என்ன
மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன
கோதை தமிழ் போதுமடி
குறை ஒன்றும் இல்லையடி.

உண்மை. உண்மை.

December 19, 2005 8:25 PM
குமரன் (Kumaran) said...
சிங்காரகுமரன், இந்த 'கூடிடு கூடலே'ங்கற தலைப்பை வைக்கறப்ப உங்களைத் தான் நெனச்சிகிட்டேன். எங்கடா கூடல்ன்னு பாத்தவுடன் சிங் உள்ள வந்து பாத்துட்டு வெறுத்துப்போகப்போறாரேன்னு. அப்படியே நடந்துடுச்சி. மன்னிச்சுக்கோங்க.

நெசமாவே ஆசைகள் இருந்தால் தானே நேரங்கள் வராதா? :-)

December 19, 2005 8:28 PM

குமரன் (Kumaran) said...

G.Ragavan said...
இந்தக் கூடலுக்கு இன்றைய பெயர் ஒத்தையா ரெட்டையா!

சிறுவயதில் ஊருக்குப் போனால் புளிய முத்துகளும் தீப்பெட்டித் தாள்களும் இதற்கு ஆகும். கை நிறைய அள்ளி ஒத்தையா ரெட்டையா கேட்க வேண்டும். அடுத்தவர் சொன்னதும், கணக்குப் பார்க்க வேண்டும். அடுத்தவர் சொன்னதே வந்தால் மொத்தமும் அவருக்குப் போய்விடும்.

இதே விளையாட்டை ஆண்டாளும் கண்ணனுடன் விளையாண்டதில் வியப்பில்லை. ஏனென்றால் வென்றால் மொத்தமும் ஆண்டாளுக்குச் சொந்தமல்லவா. விட்டு விட முடியுமா அந்தச் செல்வத்தை!

December 20, 2005 4:31 AM
சிங். செயகுமார். said...
அய்யோ ஆண்டாள் ,கண்ணன் கதையா? உண்மையிலேயே படிக்க ஆசை. படிச்சிட்டு உங்களுக்கு தனி கட்டுரையே எழுதுறேன் . இப்போ திருப்திதானே பண்டிதரே (இன்னிக்கி மறுபடியும் தமிழ்மண திரட்டியில இந்த பதிவு இருந்துச்சா அதன் ஓடோடி வந்து...................)

December 20, 2005 8:44 AM
குமரன் (Kumaran) said...
இந்த 'ஒத்தையா ரெட்டையா' விளையாட்டை நானும் கேள்விபட்டிருக்கிறேன் இராகவன். ஆனால் விளையாடியதில்லை.

கண்ணனுக்கு மட்டும் என்ன, எப்போதடா ஒரு உயிருக்கு அருள் செய்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று வாய்ப்புகளுக்காகக் காத்துக் கிடப்பவன் அல்லவா? அவனுக்கும் கூடல் விளையாடுவதில் மிக்க இஷ்டம்.

December 20, 2005 10:10 AM
குமரன் (Kumaran) said...
மறுவருகைக்கு நன்றி சிங். உங்கள் கட்டுரையைப் படித்தபின் தான் எனக்குத் திருப்தி.

December 20, 2005 10:11 AM
சிவா said...
இது ஒத்தையா ரெட்டையா வெளாட்டா! நாங்க புளியமுத்தை வச்சி வெளாண்டிருக்கோமே!
'காளியன் தலை' 'மதம் பிடித்த யானை' நெறைய கதை இருக்கும் போல இருக்கே! குமரன்! அப்படியே சைடுல அந்த கதையையும் சொல்றது. தெரியாதவங்க தெரிஞ்சிப்போம்ல!

December 20, 2005 4:29 PM
குமரன் (Kumaran) said...
சிவா, ஏற்கனவே திருப்பாவை சொல்ல ஆரம்பிச்சு கோதையின் கதையே மெகாத்தொடர் மாதிரி போகுதுன்னு சொன்னீங்க. நான் கதைக்குள் கதை, கிளைக்கதைகள்ன்னு சொல்ல ஆரம்பிச்சா மகாபாரதம் மாதிரி ஆயிரும். எதிர்காலத்தில் கண்ணன் கதைகள் சொல்ல ஒரு தனி வலைப்பூ தொடங்கி இந்தக் கதைகள் எல்லாம் சொல்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

December 20, 2005 7:34 PM

குமரன் (Kumaran) said...

இராமநாதன் said...
//நான் கதைக்குள் கதை, கிளைக்கதைகள்ன்னு சொல்ல ஆரம்பிச்சா மகாபாரதம் மாதிரி ஆயிரும். எதிர்காலத்தில் கண்ணன் கதைகள் சொல்ல ஒரு தனி வலைப்பூ தொடங்கி இந்தக் கதைகள் எல்லாம் சொல்கிறேன்//
கண்டிப்பாக செய்யுங்கள் குமரன். கிருஷ்ணனின் கதைகள் கேட்க கசக்குமா என்ன?

அப்படியே இராகவனும் கந்தபுராணக் கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சுட்ட பழமா, சூரன் வதமென்று கந்தன்கருணையில் பார்த்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். என்ன இராகவன்?

December 22, 2005 10:58 AM
குமரன் (Kumaran) said...
இராமநாதன். இப்போது எடுத்துள்ள விஷயங்களைப் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு பின்னர் கண்ணன் கதைகள் ஆரம்பிக்கிறேன். இராகவனும் ஒரு பெரிய பட்டியல் வைத்திருக்கிறார். இந்த நேயர் விருப்பம் அவர் பட்டியலில் எங்கு நிற்குமோ? அவரே வந்து சொல்லட்டும்.

December 22, 2005 12:35 PM
G.Ragavan said...
// அப்படியே இராகவனும் கந்தபுராணக் கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சுட்ட பழமா, சூரன் வதமென்று கந்தன்கருணையில் பார்த்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். என்ன இராகவன்? //

என்ன இராமநாதன். இவ்வளவு லேசாச் சொல்லீட்டீங்க! குருவி தலையில பனங்காய் வெக்கலாமா?

வாரியார் சொன்னதச் சொல்றேன். "இலக்கிய ஞானம் இருந்தாலே இராமயணத்தைச் சுவைக்கலாம். ஆனால் சாத்திர ஞானம் இருந்தாத்தான் கந்தபுராணத்தைத் தொடவே முடியும். தங்கச்சங்கிலியை யார் வேணும்னாலும் போட்டுக்கலாம். ஆனா வைரப் பதக்கம் எல்லாரும் போட முடியுமா?"

அவரே இப்படிச் சொல்லீருக்காரு. நான் எந்த மூலைக்கு! இந்த முயற்சிக்கெல்லாம் ரொம்பப் பக்குவம் வேணும்.

December 23, 2005 4:56 AM
G.Ragavan said...
// அப்படியே இராகவனும் கந்தபுராணக் கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சுட்ட பழமா, சூரன் வதமென்று கந்தன்கருணையில் பார்த்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். என்ன இராகவன்? //

என்ன இராமநாதன். இவ்வளவு லேசாச் சொல்லீட்டீங்க! குருவி தலையில பனங்காய் வெக்கலாமா?

வாரியார் சொன்னதச் சொல்றேன். "இலக்கிய ஞானம் இருந்தாலே இராமயணத்தைச் சுவைக்கலாம். ஆனால் சாத்திர ஞானம் இருந்தாத்தான் கந்தபுராணத்தைத் தொடவே முடியும். தங்கச்சங்கிலியை யார் வேணும்னாலும் போட்டுக்கலாம். ஆனா வைரப் பதக்கம் எல்லாரும் போட முடியுமா?"

அவரே இப்படிச் சொல்லீருக்காரு. நான் எந்த மூலைக்கு! இந்த முயற்சிக்கெல்லாம் ரொம்பப் பக்குவம் வேணும்.

December 23, 2005 4:57 AM
G.Ragavan said...
// இராகவனும் ஒரு பெரிய பட்டியல் வைத்திருக்கிறார். இந்த நேயர் விருப்பம் அவர் பட்டியலில் எங்கு நிற்குமோ? அவரே வந்து சொல்லட்டும். //

உண்மைதான் குமரன். பட்டியல் கொஞ்சம் பெரிதுதான். அவைகளை முதலில் முடிக்க வேண்டும். பிறகு கந்தபுராணம் எழுத முயலலாம். கந்தன் கண்ணசைந்தால் பட்டென்று நடக்கலாம். அவன் விருப்பம் அவனே அறிவான்.

December 23, 2005 4:59 AM
கவிநயா said...
//நெசமாவே ஆசைகள் இருந்தால் தானே நேரங்கள் வராதா? :-)//

நல்லா சொன்னீங்க!

//மாடு மனை போனால் என்ன
மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன
கோதை தமிழ் போதுமடி
குறை ஒன்றும் இல்லையடி.//

உண்மை!

நானும் புளியங்கொட்டை வச்சு ஒத்தையா ரெட்டையா ஆடியிருக்கேன்... long long ago... so long ago... :)

May 18, 2008 5:34 PM
குமரன் (Kumaran) said...
நன்றி அக்கா. திராச ரொம்ப எளிமையா அழகா சொல்லியிருக்காருல்ல?!

May 22, 2008 9:11 AM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"கூடல்" விளையாட்டு ரெண்டு வகை

1. ஒத்தையா? ரெட்டையா?
2. கோல மாவுக் கூடல்
-----

ஒத்தையா? ரெட்டையா?

= புளிய முத்து (புளியங்கொட்டை) அல்லது, சூடு கொட்டை வச்சி விளையாடுவது; சில வசதியான வீடுகளில் சோழி வச்சும் வெள்ளாண்டுவாங்க;

இராகவன் சொன்ன அதே விளையாட்டு முறை தான்!

ஒத்தை-ன்னு எதிராள் சொல்லி ஒத்தையே வந்தா, நம்ம கைப்பிடி முத்துக்கள் அம்பேல்;

வென்ற முத்துக்களைப் போட்டு வைக்கறத்துக்குன்னே, குருத்தோலைப் பெட்டிகளும் உண்டு; இந்தப் புளியமுத்துக்களை ஏதோவொரு பெரிய "பொக்கிஷமா" வச்சிருப்போம் வீட்டுல;

இந் நாளில் தீப்பெட்டித் தாள் வச்சி விளையாடுவதும் வழக்கம்!
பசங்க = தீப்பெட்டித் தாள்; பொண்ணுங்க = புளிய முத்து:)

ரெட்டைக் கிளி தீப்பெட்டி, சீத்தா பைட் தீப்பெட்டி, ஏரோ பிளேன் தீப்பெட்டி, ஒத்தைக் குதிரைத் தீப்பெட்டி, சங்கு சக்கரத் தீப்பெட்டி, கண்ணழகித் தீப்பெட்டி... இப்பிடி பல லேபிள்கள் :) கண்ணழகி தான் பசங்க கிட்ட பேமஸ்:))

வீட்டுல தீப்பெட்டி வாங்கியாறச் சொன்னா, வாங்கியாறும் போதே, மேல் லேபிளை எடுத்துருவோம்; லேபிளைக் கிழியாம எடுப்பதே தனிக் கலை:)
வென்ற லேபில்களைப் பக்குவமாத் தடவித் தடவிப் பாதுகாப்போம்; அந்த வாசனையே தனி சொகம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

2. கோல மாவுக் கூடல்

இது வயசுக்கு வந்த அக்காங்க வெளாடுவது:)
கண்ணைத் துணியால் கட்டீருவாங்க; கோல மாவால் வட்டம் போடணும்;

தொடங்குன எடத்துலேயே வட்டம் வந்து முடிஞ்சா = கூடும்!
இல்லீன்னா = கூடாது! அதான் "கூடல்"!

ஐய்யய்யோ, இப்படி வெள்ளாண்டு, கோதைக்கு வட்டம் கூடலீன்னா, அவன் கூட மாட்டானா?

சேச்சே.. அப்படியில்லை!
ஒரே வட்டம் கெடையாது; மொத்தம் பத்து வட்டம் போடணும்;
ரெட்டைப் படையா வந்தாக் கூடுவான்;

ரெண்டே வட்டத்தில் ஜெயிச்சாலும், ரெட்டைப் படை அல்லவா? = அவனும் அவளும்!
எனவே மனசுல நெனச்சது கூடும்-ன்னு ஒரு விளையாட்டுத்தனமா நம்பிக்கை:)

கூடிடு கூடலே, கூடிடு கூடலே -ன்னு கண்ணைப் பொத்தி விளையாடும் சொகம் இருக்கே!
ஆனா என்னைய இந்த ஆட்டத்துக்குச் சேத்துக்க மாட்டாங்க; பொண்ணுங்க ஆட்டம்;

ஆனா, வீட்டின் புழக்கடைக் கிணற்றடியில், கோல மாவு இருக்கும்; அத வச்சி, சும்மா வட்டம் இழுத்து, எப்பவாச்சும் தனியா வெளாடுவேன்:)

ஒரு முறை அத்தை இதப் பாத்துட்டு, மாமா கிட்டச் சொல்ல, அவரு என் பேரையே மாத்திட்டார் அன்னியில் இருந்து:)

அவரு செல்லமாக் கூப்பிட்டாலும், நண்பர்கள் முன்னாடிக் கூப்புட்டா, மானம் போவும்:)
அவனுங்களும் வேணும்ன்னே அப்படிக் கொஞ்சலாக் கூப்பிட்டு வம்படிப்பானுங்க:) இப்போ அதெல்லாம் நெனச்சாச் சிரிப்பா வருது, முருகா!
-----------

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கள்ளன் கதிர்காமக் கந்த மணாளன்
வள்ளல் பழமுதிர் சோலை மணாளன்
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிடக்
கொள்ளும் ஆகில் நீ கூடிடு கூடலே!
--------

முருகன் குழகன் குகனென்று பலபேர்
முழுதும் வட்டம் கூடிடு கூடலே!
கோவலன் வரில் நீ கூடிடு கூடலே
கொண்டவன் என்னை நீ கூடிடு கூடலே!