Friday, June 14, 2013

ஒரு மகள் தன்னைப் பெற்றேன் (கோதையின் கதை)

ஆஹா. ஊராரும் உற்றாரும் இப்படி பழிக்கும் படி ஆயிற்றே. மாமணிவண்ணனைத் தான் மணப்பேன் என்கிறாளே கோதை. அந்த நினைவாகவே எப்போதும் இருக்கிறாள். இறைவனை மணத்தல் மானிடப் பெண்ணுக்கு இயல்பாமோ? எத்தனைச் சொல்லியும் கேட்க மறுக்கிறாளே! நான் அவளுக்குச் சொன்ன மாதவன் கதைகளையேச் சொல்லி என்னை மடக்குகிறாள். மாயவா! என் செய்தாய் என் மகளை? ஒரு மகள் தன்னை உடையேன். உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன். செங்கண் மால் கொண்டு போவானோ?

எல்லாக் குழந்தைகளைப் போல் இவளும் மணல் வீடு கட்டி விளையாடுவாள் என்று பார்த்தால், சங்கு சக்கரம் தண்டு வில் வாள் என்று நாரணன் ஆயுதங்களையே மண்ணில் இழைத்து விளையாடுகிறாள். இவளுக்கு இன்னும் முற்றிய கன்னிப் பருவம் வரவில்லை. ஆனாலும் கோவிந்தனோடு இவள் மனம் ஈடுபட்டு என் உள்ளம் தடுமாறும் படி ஆகிவிட்டதே.

பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறால்!
கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடு இவளை
சங்கையாகி என்னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே!

நாட்டில் உள்ளவர்களும் ஊரார்களும் நன்கு அறியும் படி இவள் துழாய் மாலை அணிந்து கொண்டு, நாரணன் போகும் இடமெல்லாம் விசாரித்து விசாரித்து அங்கெல்லாம் செல்கின்றாள். நமக்கு கேடு நினைக்கின்றவர் பலர் இருக்கின்றார்கள். கேசவனோடு இவள் சேர முடியுமா என்று எள்ளுகிறார்கள். இவள் இவ்வாறு திரியாத படி காவலில் இடும் என்று பாரில் உள்ளோர் சொல்கிறார்கள். அதனைக் கேட்டு என் மனம் தடுமாறுகிறதே.

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கல்
சூடி நாரணன் போமிடமெல்லாம் சோதித்து உழிதருகின்றாள்
கேடு வேண்டுகின்றார் பலருளர் கேசவனோடு இவளை
பாடுகாவல் இடுமின் என்றென்று பார் தடுமாறினதே.

நீண்ட வாசகங்களைப் பேசவே இன்னும் கற்காதவள் இவள். பேதையேன் நான் பெற்ற பேதைப் பெண். ஆனால் எந்தவிதக் கூச்சமும் இன்றி எல்லார் எதிரிலும் மாதவன் பெயர்களைப் பிதற்றித் திரிகிறாள் என் கிளிபோன்ற மொழியுடையாள். வாசம் மிகுந்த குழல் உடைய மங்கையர்களே. என் மகள் இப்படி மயங்கி நிற்கின்றாளே.

பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள்
கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோலகழிந்தான் மூழையாய்
கேசவாவென்றும் கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே.

எல்லாவிதமான நகைகளும் பூணுகிறாள். பின் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாள். தன் கையில் உள்ள வளையல்களைக் குலுக்கிப் பார்த்துக்கொள்கிறாள். புத்தாடை அணிந்து கொள்கிறாள். பின் பெருமூச்சு விடுகிறாள். தன் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயை அழகுறத் திருத்திக்கொள்கிறாள். மயங்கிப் பின் தேறி, மயங்கிப் பின் தேறி, ஆயிரம் பெயர்களை உடைய தேவனின் பெருமைகளைப் பிதற்றுகிறாள். எதிரிகள் இல்லாத மாமணிவண்ணன் மேல் இவள் இப்படி மயக்கம் கொண்டுள்ளாளே.

காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணிவண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

6 comments:

குமரன் (Kumaran) said...

comments from the original post:

15 comments: G.Ragavan said...
அந்தோ! தனது மகள் கன்னியாக வருந்திப் பெருமூச்செறிவதைக் கண்ட எந்தத் தந்தைக்கும் தூக்கமிராது. அந்த நிலைதான் பெரியாழ்வாருக்கும். பாவம். திண்டாடுகின்றார். அவர் துயர் தீர்க்க மாதவன் வருவானா! அடுத்த பதிவிற்குக் காத்திருந்தால் தெரியும்.

December 16, 2005 7:22 AM
Merkondar said...
கல்லை கண்மூடித்தனமாக காதலித்த கன்னி
கல்லினுள் தெய்வமுண்டு ஆனால் காதலன் இல்லையே?
பெற்ற தந்தையின் மனது எப்படித் துடிக்கும்

December 16, 2005 9:09 AM
Suka said...
அப்போதே தன் மகளின் திருமண விருப்பத்தை ஆதரித்து உள்ளாரே. எப்போது மாறினோம் நாம்..

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்

சுகா

December 16, 2005 10:46 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Raghavan
kathal konda pengal eppadi iruparkal endru evalavu sariyaha Karai poonum endra padalil vilakukirar. indrum athu porutha maha ullathu.Matrapadi Pesavum theriyatha chinna penn
pinnal ellorukkum migavum elithaga puriyum padi thiruppavai padalkalay padappogoral. kannanin anbu irunthal mudiyathathu oondru unda.TRC

December 16, 2005 11:14 AM
குமரன் (Kumaran) said...
இராகவன்,

மாதவன் வருவதற்கு இன்னும் வெகு நாள் ஆகும். அடுத்தப் பதிவில் வரமுடியாது என்று இப்போது தான் எனக்கு SMS அனுப்பினார். :-)

December 16, 2005 11:35 AM
குமரன் (Kumaran) said...
வருகைக்கு நன்றி என்னார் ஐயா. நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. கல்லுக்குள் தெய்வத்தைக் காணலாம்; ஆனால் அந்த தெய்வத்தைக் காதலிக்கக் கூடாது என்பது தான் பெற்ற தந்தையின் துடிப்பு என்று சொல்லவருகிறீர்களா? அதனைத் தான் கண்மூடித்தனம் என்கிறீர்களா?

December 16, 2005 11:38 AM
குமரன் (Kumaran) said...
வருகைகும் கருத்துக்கும் நன்றி சுகா. உங்கள் பெயர் என் பழைய புனைப்பெயரை நினைவு படுத்துகிறது. சுதா (சுரேந்திர தாசன்) என்ற பெயரில் பள்ளியில் படிக்கும்போதும் கல்லூரியில் படிக்கும் போது சில கவிதைகளை (உரைநடைக் கவிதைகளை அல்ல; கொஞ்சம் மரபு உருவம் உண்டு அந்தக் கவிதைகளுக்கு) எழுதியிருக்கிறேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

பெரும்பாலும் பெண்கள் பெற்றோர்களின் பார்வையில் தங்கள் தகுதிக்குக் குறைவானவர்களையே விரும்புகிறார்கள்; அந்தக் காதலைத் தான் அவர்கள் ஆதரிப்பதில்லை. இங்கு கோதை தகுதிக்கு மிஞ்சி அல்லவா ஆசைப்படுகிறாள். அப்படி கண்ணனை மாப்பிள்ளையாய் அடைய இந்த அப்பாவுக்கும் ஆசைதான். ஆனால் அது நடக்குமா? தன் மகளின் ஆசை நிறைவேறுமா? என்று தான் கலங்குகிறார்.

December 16, 2005 11:44 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
TRC சார். என்ன சார் இராகவன் பதிவுகளையும் என் பதிவுகளையும் மாறி மாறிப் படிக்கிறீர்களா? இங்கு வந்து இராகவனை விளித்து பின்னூட்டம் இட்டுருக்கிறீர்கள்? பரவாயில்லை. இராகவனும் கோதைத் தமிழைப் பற்றித் தான் இப்போது எழுதிக்கொண்டு இருக்கிறார். அதனால் அதில் தவறில்லை :-)

உண்மை தான். காறை பூணும் பாடலில் சொன்ன மாதிரி காதல் கொண்ட பெண்கள் இப்போதும் இப்படித் தான் இருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. எனக்குக் கூடப்பிறந்த சகோதரிகள் இல்லாததால்.

'பேசவும் தெரியாத பெண்' என்று பெரியாழ்வார் தான் நினைக்கிறார். தம் மக்கள் எவ்வளவு தான் பெரிய அறிவாளியாய் இருந்தாலும் பெற்றோருக்கு எப்போதும் அவர்கள் குழந்தைகள் தானே. அப்படித் தான் தன் மகள் கோதையும் 'பேசவும் தெரியாத பெண்' என்கிறார் விஷ்ணுசித்தர். அவள் தான் ஏற்கனவே 'கருப்பூரம் நாறுமோ' என்று பாடிக்கொண்டு இருக்கிறாளே.

December 16, 2005 11:50 AM
சிவா said...
இந்த பதிவின் நடை ரொம்ப நன்றாக வந்துள்ளது. பொண்ண பெத்தவன் பாட்ட அழகா சொல்லப்பட்டிருக்கிறது. மெகா சீரியல் மாதிரி ஆக்கிட்டீங்க. வாரம் ஒன்று என்று எழுதாமல், அடிக்கடி எழுதறீங்களே. அதனால் பொழைச்சீங்க.

December 16, 2005 5:08 PM
குமரன் (Kumaran) said...
சிவா,

உண்மையைச் சொல்வதென்றால் இந்த வலைப்பூ (திருப்பாவை விளக்கம்) ஒரு மெகாத் தொடராய் போகும் என்று தான் நினைக்கிறேன். ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நினைப்பதால் தான் வாரம் ஒருமுறை என்று எழுதாமல் அடிக்கடி இந்த வலைப்பூவில் எழுதுகிறேன். :-)

இந்தப் பதிவின் நடை உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. நானும் ஒரு பெண்ணைப் பெற்றவன் தானே. அதனால் இயற்கையாய் வந்ததோ என்னவோ? நீங்களும் ஒரு பெண்ணைப் பெற்றவர்; அதனால் உங்களுக்கும் பிடித்திருக்கும் :-)

தொடர்ந்துப் படித்து வழக்கம்போல் ஆதரவு தாருங்கள்.

December 16, 2005 5:54 PM
தி. ரா. ச.(T.R.C.) said...
kathal konda pengal eppadi iruparkal endru evalavu sariyaha Karai poonum endra padalil vilakukirar. indrum athu porutha maha ullathu.Matrapadi Pesavum theriyatha chinna penn
pinnal ellorukkum migavum elithaga puriyum padi thiruppavai padalkalay padappogoral. kannanin anbu irunthal mudiyathathu oondru unda.TRC

December 17, 2005 4:28 AM

குமரன் (Kumaran) said...

இராமநாதன் said...
அருமையான நடை, குமரன்.

விளக்கங்களும் முத்துகளாய் இருக்கின்றன.

//இப்போது தான் எனக்கு SMS அனுப்பினார். :-)
//
அது சரி, அந்த முருகனே வந்து இராகவனுக்கு தமிழ் அள்ளித்தருவது போல், உங்களுக்கு நோட்ஸ் சப்ளை அந்த நாராயணனேவா? நிச்சயம் 100% தான்.

December 19, 2005 9:29 PM
G.Ragavan said...
// அது சரி, அந்த முருகனே வந்து இராகவனுக்கு தமிழ் அள்ளித்தருவது போல், உங்களுக்கு நோட்ஸ் சப்ளை அந்த நாராயணனேவா? நிச்சயம் 100% தான். //

அப்படித்தான் இருக்கும். அவனருளின்றி வேறேது.

என்னைக் கேட்டால் நான் சொல்வதெல்லாம் என்னுள் இருந்து முருகன் சொல்வது என்றுதான் சொல்வேன். நன்றோ தீதோ....அதைச் சொல்ல வைத்து அதன் பலனை எனக்குத் தருகின்றவன் கந்தனே.

எனக்குக் கந்தனென்றால் குமரனுக்குக் கண்ணன்.

December 20, 2005 4:36 AM
குமரன் (Kumaran) said...
இராமநாதன் சொன்னதையும் இராகவன் சொன்னதையும் வழிமொழிகிறேன்.

இராமநாதன், உங்களுக்கு அப்படி யாராவது இருக்காங்களா ரஷ்யாவுல, நோட்ஸ் சப்ளை செய்வதற்கு. குறைந்தது பிட்ஸ் சப்ளை செய்றதுக்காவது ஆளுண்டா? :-)

December 20, 2005 10:07 AM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில//

ஒரு தகப்பன், பெற்ற பெண்ணை, அவ வளரும் போது காண்கின்ற காட்சிகள் இருக்கே...

விகல்பம் இல்லாக் கண்கள்..
அதே சமயம் அந்த மலர்க்கொடி எந்தக் கொம்பில் நல்லபடியாப் படரப் போகுதோ? -ன்னு கவலை..

ஆனால், தன் கவலையைத் தள்ளி, அவள் மனசு ஆசைகளுக்கு மதிப்பு அளிக்கும் உள்ளம்!

இப்படி "இயல்பாக"ப் பாடும்/ பார்க்கும் தந்தை;
அதான் பெண்களுக்கு வேண்டும்; கோதை குடுத்து வைத்தவள்
- கோவிந்தனுக்காக அல்ல! ஆழ்வாருக்காக!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காறை = இதென்ன நகை?

காறையும் கூறையும் அழகு!

//நான் பெற்றப் பேதைப் பெண்//

பெற்ற பேதை என்பதே சரி; ப் வராது; பெயரெச்சம்
http://dosa365.wordpress.com/2012/09/12/35/

அப்போது பல இடங்களில் "அழுத்தி" உள்ளீர்கள்-ன்னு இப்போ படிக்கும் போது தெரிகிறது:)
ஆனாலும் நான் யார் அதைச் சொல்ல? அப்போது இமயங்களை வேடிக்கை மட்டுமே பார்த்த வழிப்போக்கன்!

வெறும் வழிப்போக்கனாகவே முருகன் என்னை இருத்தி இருந்திருக்கலாமோ? வழி போகியாவது இருக்கும், தடைபடாமல்...


குமரன் (Kumaran) said...

எங்கே வலி மிகும் எங்கே மிகாது என்பது எத்தனை வருடங்கள் கைப்பழக்கம் இருந்தாலும் இன்னும் தெரியவில்லை இரவி. 2005ல் இன்னும் மோசம். திருத்தத்திற்கு நன்றி. அன்றே திருத்திவிட்டேன்.