Sunday, December 23, 2012

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!



தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ?! உம் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!

தூய்மையான மாணிக்கங்களால் ஒளி வீசும் மாடங்களில் எல்லாம் விளக்குகள் எரிய, நறுமண தூபங்கள் கமழத், தூங்குவதற்காகவே இருப்பது போன்ற படுக்கையின் மேல் கண்களை மூடிக் கொண்டிருக்கும் மாமன் மகளே! மாணிக்கங்களால் அழகு பெற்றிருக்கும் கதவுகளின் தாளைத் திறப்பாய்!

மாமீ! அவளை எழுப்ப மாட்டீர்களா? உங்கள் மகள் தான் ஊமையா? இல்லை செவிடா? மயக்கம் அடைந்துவிட்டாளோ? படுக்கையை விட்டு எழ முடியாதபடி நீண்ட உறக்கம் கொள்ளும் படி யாராவது மந்திரம் போட்டுவிட்டார்களா?

மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று என்று இறைவனின் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்வோம்! அவளை எழுப்புங்கள்!

6 comments:

Unknown said...


சந்தம் மிகுந்த கவிதையை எடுத்துக் காட்டி நயவுரை தந்தீர்! நன்று! நன்றி!

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி புலவர் ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

திருப்பாவை பாசுரம் மனம் நிறைத்தது..பாராட்டுக்கள்..

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

குலசேகரன் said...

//தூய்மையான மாணிக்கங்களால் ஒளி வீசும் மாடங்களில் எல்லாம் விளக்குகள் எரிய, நறுமண தூபங்கள் கமழத், தூங்குவதற்காகவே இருப்பது போன்ற படுக்கையின் மேல் கண்களை மூடிக் கொண்டிருக்கும் மாமன் மகளே! மாணிக்கங்களால் அழகு பெற்றிருக்கும் கதவுகளின் தாளைத் திறப்பாய்!//

பெண் வாழுமிடம் மாட மாளிகை, தூயமையான மாணிக்கங்களால் ஒளிவீசும். நறுமணத்தூபங்கள் கமழும் படுக்கையில் துயில, அவ்வறையின் கதவுகளோ மாணிக்கங்களால் அழகு பெற்றிருக்கிறது. பெருஞ்செல்வம்.

அப்படிப்பட்ட பெண்ணுக்கு எதற்கு இறைவன்? அவளுக்குத்தான் எல்லாமே கிடைத்துவிட்டதே? அவளுக்கு வேண்டிய கணவனை அவள் தந்தை கோடிகளைக்கொட்டிப்பெருவாரே?

அப்பெண்ணை ஆண்டாள் அழைக்கக்காரணம்? ஒருவேளை அப்படிப்பட்ட மில்லியன்ர்களுக்கும் பில்லியனர்களுக்கும்தான் ஆண்டாளின் கண்ணன் வருவானோ? அவனை அழைக்கத்தான் மில்லியர்களை எழுப்புகிறீராரோ? குச்சியிலும் குடிசையிலும் கட்டாந்தரையில் துயிலும் ஒருத்தியை அழைத்தாள் கண்ணன் வரமாட்டானோ?

குமரனின் சிந்தனைக்காக.

குமரன் (Kumaran) said...

அருள்முதல்வாதம் பேசும் பாசுரங்களில் பொருள்முதல்வாதம் தேடும் குலசேகரரே. கோதை பத்து பாசுரங்களில் (திருப்பாவை 6 முதல் 15 வரை) தோழியர்களை எழுப்புகிறாள். இன்னும் நான்கு நாட்களில் அந்த எல்லா பாசுரங்களுக்கும் விளக்கம் இங்கே சொல்லியிருப்பேன். அவற்றை எல்லாம் பாருங்கள். கோதை பில்லியனர் மில்லியனர் தோழியை மட்டும் எழுப்புகிறாளா மற்றவரையும் எழுப்புகிறாளா என்று. :)