Sunday, December 23, 2012

கோதுகலமுடைய பாவாய்!


Thanks for the picture: Valliammaa

கீழ்வானம் வெள்ளென்று! எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு
மா வாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்
என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

கிழக்கு வானம் வெளுத்துவிட்டது! எருமைகள் எல்லாம் சிறுதீனி மேய்வதற்காக வீட்டைச் சுற்றிலும் பரந்து திரிகின்றன பார்! மிச்சம் இருக்கும் பிள்ளைகளும் நோன்பு நோற்கும் இடத்திற்கு போவதே கொண்டாட்டமாகப் போய் கொண்டிருக்கிறார்கள்; அவர்களைப் போகாமல் தடுத்து நிறுத்தி உன்னைக் கூவி எழுப்புவதற்காக வந்து நின்றோம்! குதூகலம் உடைய அழகான பெண்ணே! எழுந்திரு! குதிரையின் உருவில் வந்த கேசி என்ற அரக்கனின் வாயைப் பிளந்தவனை, முஷ்டிகன் சாணூரன் என்னும் மல்யுத்த வீரர்களை வென்று கொன்ற தேவாதிதேவனான கண்ணனைப் பாடி வேண்டியதெல்லாம் பெறுவதற்காக அவன் முன்னே சென்று நாம் சேவிப்போம்! அப்படி செய்தால் 'ஆகா! இவர்கள் நம் அடியவர்கள் அல்லவா?! நாமே சென்று அருள வேண்டியிருக்க இவர்கள் நம்மைத் தேடி வரும்படி செய்தோமே!' என்று நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் செய்வான்!

2 comments:

Ranjani Narayanan said...

ஆண்டாளின் புகைப்படம் கண்ணை கவருகிறது. சின்னப் பெண்ணாக எத்தனை அழகு!

அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்* ஆழ்வார்கள் தம் செயலை
விஞ்சி நிற்கும் தன்மையளாய்* பிஞ்சாய்
பழுத்தவள் - இல்லையா?

மிகவும் ரசித்து படித்து மகிழ்ந்தேன்.

எனது முப்பதும் தப்பாமே பதிவின் இணைப்பு:

http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/12/blog-post_16.html

Unknown said...

இனிய மார்கழித்திங்கள்
காலை வணக்கம்
அருமை