Wednesday, December 19, 2012

தீயினில் தூசு ஆகும்!


மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை,

தூயப் பெருநீர் யமுனைத்துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும்! செப்பேலோர் எம்பாவாய்!

மாயங்களில் வல்லவனை, எக்காலத்திலும் நிலைத்த வடமதுரை நகரின் செல்வனை, தூய்மையான புனிதமான நீரை உடைய யமுனை நதிக் கரையில் வாழ்பவனை, ஆயர் குலம் பெயர் பெற்று விளங்கும் படி தோன்றிய அழகிய திருவிளக்கு போன்றவனை, பெற்ற தாயின் வயிறு பெருமை கொள்ளும்படி செய்த தாமோதரனை -

நாம் தூய்மையுடையவர்களாக வந்து தூய்மையான மலர்களைத் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால் -

முன்னர் செய்த வினைகளும் இனி மேல் செய்யப் போகும் வினைகளும் அவற்றின் பயன்களும் தீயினில் விழுந்த தூசு போல் அழிந்து போகும்!

ஆதலால் அவன் திருநாமங்களைச் செப்புவாய்!

No comments: