எல்லா நிறத்திலும் பூக்கள் நம் நந்தவனத்தில் மலர்கின்றன. ஒவ்வொன்றும் மாலவன் திருமேனியை அலங்கரிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளுகின்றனவே. 'என்னை எடுக்க மாட்டாரா? மலர்மாலையில் வைத்துத் தொடுக்க மாட்டாரா? மாயவன் திருமேனியில் துலங்க மாட்டோமா? பிறவிப் பெரும்பயனை எய்த மாட்டோமா?' என்று ஒவ்வொரு மலரும் துள்ளித் துள்ளி நம் கைகளில் தானே வந்து விழுகின்றனவே?!
இந்த நீல நிற மலரை பார்த்தால் நம் நீலமேக வண்ணனின் திருநிறத்திற்கு தான் ஏற்றதாக இருப்போம் என்ற மகிழ்வும் பெருமிதமும் தெரிகிறதே. வெண்ணிறப் பூக்கள் அவன் புன்சிரிப்பு பூக்கும் போது தெரியும் பற்களின் நிறத்திற்கு தாம் பொருத்தமாக இருப்போம் என்று சொல்கின்றனவே. சிவந்த மலர்கள் அவன் திருக்கண்களின் நிறத்திற்கும் கொவ்வைச் செவ்வாயின் நிறத்திற்கும் தாங்கள் போட்டி என்று சொல்கின்றனவே. மஞ்சள் நிறப் பூக்கள் அவன் இடையில் அணிந்திருக்கும் மஞ்சள் நிறப் பட்டிற்குத் தாங்கள் தான் பொருத்தம் என்று சொல்கின்றனவே.
அட. இதென்ன இந்த பச்சை நிறத் திருத்துழாய் இலைகள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனவே. ஓ. இவற்றிற்கு தாங்கள் மலர்கள் இல்லையே; வெறும் இலைகள் தானே என்ற குறையோ? அடடா. திருமறுமார்பன் விரும்பி அணிபவை எந்த மலர்களும் இல்லையே; திருத்துழாய் மட்டும் தானே. அவற்றின் மணத்திற்கு மட்டும் தானே அவன் தன் மனத்தை இழப்பான். மற்ற மலர்களையாவது அவன் தோள்களிலும் கரங்களிலும் மட்டுமே சூடுவான். ஆனால் தன் திருமுடியில் வைத்துச் சூடிக் கொள்ளவும் தன் திருவடிகளை அழகு செய்யவும் முடி முதல் அடி வரை எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் சூடிக் கொள்ளவும் விரும்புவது திருத்துழாயை மட்டும் தானே?! ஆனால் அடியவர்கள் எப்போதும் அடக்கத்துடன் தான் இருப்பார்கள் போலும். புதியவர்கள் இறைவனுக்குத் தொண்டு செய்யக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ந்துத் துள்ளுவதைப் போல இந்த மலர்கள் எல்லாம் செய்கின்றன. ஆனால் ஏழாட்காலும் இறைவனுக்கே பணிசெய்து கிடந்த பழவடியார்கள் அமைதியாக அவன் திருப்பணியைச் செம்மையாகச் செய்வது போல் கிடக்கின்றன இந்த திருத்துழாய் இலைகள்.
இருக்கின்ற திருத்துழாய் எல்லாம் தொடுத்தாகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் வேண்டும் போல் இருக்கிறது. மலர்களே இல்லாமல் வெறும் திருத்துழாயை மட்டுமே வைத்து இன்னும் இரண்டு மாலைகள் தொடுக்க வேண்டும். தொடுத்த மாலைகளை எல்லாம் இந்தக் குடலையில் வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் திருத்துழாய் இலைகளைப் பறித்து வரலாம். திருக்கோயில் வழிபாட்டிற்கு நேரமாகிவிட்டது.
***
இது விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரின் நிலையிலிருந்து எழுதியது.
***
அருஞ்சொற்பொருள்:
திருத்துழாய் - துளசி
விழைதல் - விரும்புதல்
ஏழாட்கால் - ஏழு தலைமுறை
பழவடியார்கள் - பழம்பெரும் அடியார்கள்
குடலை - பூக்கூடை
இன்னும் ஏதாவது சொற்களுக்குப் பொருள் தெரியாவிட்டால் கேளுங்கள்.