Sunday, July 29, 2007
கடம்பம் 6: கடுஞ்சின விறல் வேள் - முருகனா சேரனா?
பதிற்றுப்பத்தில் கடம்பினைக் கூறும் பாடல்களை எடுத்து இதற்கு முந்தைய கடம்பம் இடுகையில் சொல்லியிருந்தேன். அப்போது பாடல்களின் பொருள் முழுவதும் தெரியாததால் பொருள் சொல்லாமல் விடுத்திருந்தேன். அந்த இடுகையை இட்ட பின் நல்வினைப்பயனால் தமிழ் இணைய பல்கலைக்கழக நூலகத்தில் உரையுடன் கூடிய பதிற்றுப்பத்தினைக் கண்டேன். இங்கே கடம்பினைக்கூறும் பாடல்களில் முதல் பாடலைப் பொருளுடன் வழங்குகிறேன்.
இரண்டாம் பத்து:
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
வரை மருள் புணர் வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே
வரை மருள் புணர் - மலையைப் போல் தோன்றும் அலைகளையும்
வான் பிசிர் உடைய - வானத்தைத் தொடும் நீர்த்துளிகளையும் உடைய
வளி பாய்ந்து அட்ட - அவ்வப்போது காற்று பாய்ந்து நீரைக் குறைக்க
துளங்கு இருங் கமஞ் சூல் - விளங்குகின்ற மிகுந்த நீரைத் தன் வயிற்றினில் உடைய
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி - மிகுந்த பரப்பினையுடைய பெருங்கடலை அடைந்து
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் - துன்பம் செய்யும் அரக்கர்கள் இரவு பகல் பாதுகாப்பாகக் காக்கும்
சூருடை முழுமுதல் தடிந்த - சூரனுடைய வீரத்தின் உருவான மாமரத்தை அறுத்த
பேர் இசை - பெரும் புகழையுடைய
கடுஞ் சின விறல் வேள் - கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப்பெருமான்
களிறு ஊர்ந்தாங்கு - தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல
செவ்வாய் எஃகம் - சிவந்த முகத்தை உடைய உன் வேல்
விலங்குநர் அறுப்ப - எதிர்ப்பவரை அறுக்க
அருநிறம் திறந்த - அவர்களின் வலிமை வாய்ந்த மார்பினைப் பிளந்த
புண் உமிழ் குருதியின் - புண்ணிலிருந்து பெருகும் குருதியால்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து - நீல மணி போல் நிறத்தை உடைய பெரும்பள்ளமாகிய கடல் நீர் தன் நிறம் மாறி
மனாலக் கலவை போல - குங்குமக் கலவை போல் ஆக
அரண் கொன்று - எதிரிகளின் பாதுகாவலை அழித்து
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை - வீரம் மிகுகின்ற சிறப்பில் உயர்ந்த ஊக்கம் உடையவனே!
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் - எதிரி வீரர்கள் பலர் சுற்றி நின்று பாதுகாத்த பெரிய கடம்ப மரமெனும்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பாதுகாவல் உடைய காவல் மரத்தை அழியும் படி உன் வீரர்களை ஏவி
வென்று - மரத்தை அழித்து
எறி முழங்கு பணை செய்த - அந்த மரத்தினைக் கொண்டு முழங்குகின்ற முரசினைச் செய்த
வெல் போர் - போரினை வெல்லுகின்ற
நார் அரி நறவின் - பல ஆடைகளால் வடித்து எடுக்கப் பட்ட கள்ளினைப் பெரிதும் உடைய
ஆர மார்பின் - சந்தன மாலைகள் அணிந்த மார்பினை உடைய
போர் அடு தானைச் சேரலாத! - போரினில் வரும் எதிரிகளை வெல்லும் படையினை உடைய சேரலாதனே!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும் - மார்பில் அணிந்திருக்கும் மாலைகள் கூட்டம் ஓடும் தேனுடன் விளங்கும்.
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் - வலிமையில் உயர்ந்த, மலைகளைப் பழிக்கும் பெரிய யானைகளின்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த - பல அணிகலன்கள் அணிந்த முதுகின் மேல் கொண்டு பொலிந்த
நின் - உன்னுடைய
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே - பலரும் புகழும் செல்வங்களை இனிமையுடன் கண்டோமே!
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி - அழகிய மரத்தின் நிழலில் உறங்கும் கவரி மான்
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் - பரந்து விளங்கும் அருவியையும் தேனையும் கனவில் காணும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - ஆரியராகிய முனிவர்கள் நிறைந்து விளங்கும் பெரிய புகழையுடைய இமயம் முதல்
தென் அம் குமரியொடு - தென்னாட்டின் அழகாகிய குமரி வரை
ஆயிடை - இடையில் உள்ள எல்லா இடங்களிலும்
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே - மன்னர்களில் உயர்வாகக் கூறப்படுபவர்கள் எல்லோரிலும் பெருமை வாய்ந்தவனே!
***
'சூருடை முழுமுதல் தடிந்த' என்று கூறுகிறார் புலவர். மாமரம் என்று நேரடியாகக் கூறவில்லை. முழுமுதல் என்பதற்கு செல்வம், வீரம், உயிர் என்று பல பொருள் கூறலாம். ஆனால் பின்னால் இன்னொரு முறை முழுமுதல் என்று இந்தப் பாடலில் சொல்லும் போது அது 'காவல் மரம்' என்ற பொருளைத் தருகின்றது. அதனால் உரையாசிரியர்கள் இந்த இடத்திலும் 'மரம்' என்று பொருள் கொண்டு மாமரம் என்றனர் போலும். சூரனுடைய செல்வத்தை, வீரத்தை, உயிரை என்று எந்தப் பொருளைக் கூறினாலும் இந்த இடத்தில் பொருந்தும்.
சூரனை வதைக்கும் முன் யானை வாகனம் கொண்ட விறல் வேள் முருகவேள் சூரனை வதைத்தப் பின் மயில் வாகனம் கொண்டான் என்பது புராணம். அதற்கேற்ப இங்கே 'களிறு ஊர்ந்தாங்கு' என்றாரோ புலவர்? (வதைத்தார் என்றது பேச்சு வழக்கிற்காக. சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து அவனை மயிலும் சேவலுமாக ஏற்றுக் கொண்டார் என்பது புராணம்)
சங்ககாலத்தில் ஒவ்வொரு அரசனும் குறுநில மன்னனும் ஒரு மரத்தைப் புனிதமாகக் கொண்டு அதற்கு பலத்த காவல் இட்டுக் காத்து வந்தனர். அந்த மரத்திற்குக் காவல் மரம் என்று பெயர். ஒருவர் மேல் இன்னொருவர் படையெடுத்துப் போகும் போது அந்தக் காவல் மரத்தை அழித்து விட்டால் காவல் மரத்திற்கு உரியவர் தோற்றதாகக் கொண்டனர். அப்படி வெட்டப்பட்டக் காவல் மரத்தைக் கொண்டு முரசினை உருவாக்கி அதனை முழக்குதலும் வழக்கமாக இருந்திருக்கிறது.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பகையரசரில் ஒருவன் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்திருக்கிறான். அந்த கடம்ப மரத்தை அழித்து அதனிலிருந்து முரசு உருவாக்கி முழங்கிய செயலை இங்கே புலவர் பாடுகிறார்.
சங்க கால அரசர்கள் புலவர்களுக்கு மதுவினை மிகுதியாகக் கொடுத்து தாமும் உண்டனர் என்ற செய்தியை 'நார் அரி நறவின்' என்ற தொடர் மூலமாகக் குறிக்கிறார் புலவர். நறவு என்றால் தேன் என்றும் பொருள் உண்டு. இங்கே நார் அரி - நாரினால் அரிந்த - நார் ஆடையினால் வடித்தெடுக்கப்பட்ட என்றதால் கள் போன்ற ஒரு வகை மதுவைக் குறிக்கிறது.
ஆரியர் என்பதற்கு முனிவர் என்று பொருள் தருகிறார்கள் உரையாசிரியர்கள். ஆரியர் என்பதற்கு ஆசிரியர் என்ற பொருளும் உரையாசிரியர்கள் காலத்தில் இருந்தது என்பதை அறிவேன். ஆனால் சங்க காலத்தில் இந்த 'ஆரியர்' என்ற சொல்லுக்கு நாம் இப்போது பொருள் கொள்ளும் 'ஆரிய இனத்தவர்' என்ற பொருளா இல்லை 'ஆசிரியர்' என்ற பொருளா எந்த பொருள் இருந்தது என்பதை அறியேன். இரண்டு பொருளும் இங்கே பொருந்தும். ஆரிய இனத்தவர் நெருக்கமாக நிறைந்திருக்கும் இமயம் என்றும் பொருள் கொள்ளலாம்; இன்றைக்கும் முனிவர்கள் நிறைந்திருக்கும் இடமாதலின் முனிவர் நிறைந்திருக்கும் இமயம் என்றும் பொருள் கொள்ளலாம்.
இமயவரம்பன் என்ற பெயருக்கேற்ப 'இமயம் முதல் குமரி வரை' என்கிறார் புலவர்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
குமரன்,
ஆகா! அருமை! அற்புதம்!
படிக்கச் சுவைத்திடும் பாடல். எளிமையான விளக்கம். மிக்க நன்றி.
குமரன், ஒரு சின்னக் கேள்வி[ஐயம்]
/* கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப்பெருமான்... தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல */
முருகப் பெருமானின் வாகனம் மயில் அல்லவா? முருகனின் வாகனம் மயிலென்றுதான் சின்ன வயதில் பள்ளியில் படித்த ஞாபகம். இதுவரை நான் எங்கும் முருகனின் ஓவியங்களையோ அல்லது விக்கிரத்தையோ யானையுடன் பார்த்ததில்லை. அப்படியிருக்க, ஏன் ,"முருகன் தன் வாகனமாகிய யானையில்" ... என்று புலவர் பாடியுள்ளார்.
அல்லது நான்தான் பிழையாக விளங்கிக் கொண்டேனோ? ஆட்சேபனை இல்லையெனின் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தெளிவுபடுத்துவீர்களா?
மிக்க நன்றி.
வெற்றி. இடுகையில் இன்னும் சில கருத்துகளைக் கூறியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
தங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி.
உங்கள் கேள்விக்கு/ஐயத்திற்கு, செஞ்சொல் பொற்கொல்லன் இராகவன் வந்து பதில் சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும். அவர் வருவதற்கு நாளானால் நான் சொல்கிறேன். :-)
//முருகப் பெருமானின் வாகனம் மயில் அல்லவா?//
வெற்றி...
மயில்,யானை,ஆடு
மூன்றும் ஐயன் முருகனின் ஊர்திகள் என்று புதிரா புனிதமாவில் ஒரு கேள்வியை வைத்திருந்தோம்!
சுவாமிமலையில் யானை வாகனத்தைக் காணலாம்! அப்போ சூர சம்காரம் நடைபெறவில்லையே! அதானால் லாஜிக்கா யானை வைச்சிருக்காங்க போல! :-)
சில ஆலயங்களில், ஆடு (கிடா) அவனுக்கு ஒரு வாகனம்.
மயில், யானை, ஆடு - ஆணவம், கண்மம், மாயை என மும்மலங்களை குறிக்கும்.
மற்றவை கொற்றவை அண்ணனார் ராகவனார் வந்து கற்றவை பகர்வார்!:-)
விளங்க செய்தமைக்கு நன்றி குமரன்...
நன்றி மௌலி ஐயா.
குமரன்,
மேலதிக கருத்துக்கள் இணைத்தமைக்கு நன்றி.
ரவிசங்கர்,
உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
குமரன் & ரவிசங்கர்,
நீண்ட நாட்களாக தமிழக நண்பர்களிடம் கேட்க வேணும் என எண்ணியிருந்த கேள்வி. அதை இப்போது உங்களிடம் கேட்கிறேன். இக் கேள்விக்குப் விடை கிடைத்தால் ஈழத்தில் உள்ள எனது ஊர் பற்றிய சில தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.
கேள்வி இதுதான்:-
தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ மாவடி எனும் பெயரில் ஊரோ, நகரமோ அல்லது சின்னக் குறிச்சியோ உண்டா/இருந்ததா?
ஏன் கேட்கிறேன் என்றால், ஈழத்தில் எமது ஊரில் உள்ளவர்களின், குறிப்பாக எனது பகுதியில் வாழ்பவர்களின் மூதாதைகள் [என் மூதாதையரும் சேர்த்து] காஞ்சியில் இருந்து வந்து குடியேறியவர்கள். அதனால் அவர்கள் இங்கே வந்த போது ஊருக்குக் காவலாக வைரவர் கோயில் ஒன்றை அமைத்தனர். அதன் பெயர் காஞ்சி வைரவர். இப்பவும் அக் கோயில் எனது ஊரில் இருக்கிறது. அக் கோயில் பகுதி காஞ்சி வைரவர் கோயிலடி என அழைக்கப்படும்.
அதுபோல, எனது வீட்டிற்கு அருகில் பழைய வைரவர் கோயில் உண்டு. அக் கோயிலுக்கு எனது குடும்பம் தான் ஒவ்வொரு மாலையிலும் விளக்கேத்துவது. அக் கோயிலின் பெயர் மாவடி வைரவர்.
இக் கோயிலடியில் மாமரம் ஏதும் இல்லை. இக் கோயில் அரச மரத்தின் கீழ்தான் இருக்கிறது.
என் கேள்வி என்னவெனின், காஞ்சி இப்பவும் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆகவே காஞ்சி வைரவர் என வந்தது பற்றிக் குழப்பம் இல்லை.
ஆனால், மாவடி வைரவர் என ஏன் வந்தது என்பது பல நாளாக எனக்கிருக்கும் குழப்பம். அதனால்தான் தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ இப் பெயரில் ஏதாவது இடம் இருக்குதா எனக் கேட்கிறேன்.
அதுமட்டுமல்ல, ஒரு முருக பாடலில்,
"காஞ்சி மாவடி வையும் செவ்வேள்" என வருவது உங்களுக்குத் தெரியும்.
ஆக இந்த மாவடி என்பது ஒரு இடத்தின் பெயர் இல்லயெனின், அதற்கு வேறேதாவது பொருள் உண்டா?
வேறு பழைய சமய/இலக்கிய பாடல்களில் இந்த மாவடி எனும் சொல் புழங்கப்பட்டிருக்கிறதா?
வெற்றி, உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லத் தாமதம் செய்தத்தற்கு மன்னிக்கவும்.
காஞ்சிபுரத்தில் இருக்கும் சிவபெருமான் ஆலயத்திற்கு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் என்று பெயர் - அது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தத் திருக்கோவிலின் தல மரம் மாமரம். அந்த மாமரத்தின் கீழே குடி கொண்டிருக்கும் இறைவனார் திருப்பெயர் தான் ஏகாம்பரேஸ்வரர் - ஏக + ஆம்பர + ஈஸ்வரர் = ஒற்றை மாமரத்தின் கீழ் வசிப்பவர். இந்த மாமரம் கோவிலில் கருவறையின் அருகில் இல்லாமல் திருச்சுற்றில் ஐயன் சன்னிதி பின்புறத்தில் இருக்கிறது. அந்த மாமரத்தின் அருகில் திருமுருகன் சன்னிதியும் இருக்கிறது. அந்த திருமுருகனுக்கு 'மாவடி முருகன்' என்று பெயர் - என்று நினைக்கிறேன். அதனைத் தான் நீங்கள் குறித்த பாடல் சொல்கிறது.
அந்த மாவடியின் கீழ் வைரவரும் குடி கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர் தான் உங்கள் ஊரிலும் இருக்கிறார் எனலாம்.
முருகனின் யானை வாகனத்திற்குப் பிணிமுகம் என்று பெயர்.
நெடுஞ்சேரலாதன்...இமயவரம்பர் என்று பெயர் கொண்டவர். இவர் வென்றது கூபகத்துக் கடம்ப மரம். அதாவது இன்றைய கோவா. அந்த மரத்தைக் கூட செங்குட்டுவனைக் கொண்டு வெட்டச்செய்தார் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. சேரசூரியன் என்று ஒரு புதினத்தைக் கோவி.மணிசேகரன் எழுதியிருந்தார். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.
குமரன், செய்யுளைப் படிக்கத் தொடங்கினேன். சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது. பொறுமையாக உட்கார்ந்து பார்க்க வேண்டும்.
// குமரன் (Kumaran) said...
உங்கள் கேள்விக்கு/ஐயத்திற்கு, செஞ்சொல் பொற்கொல்லன் இராகவன் வந்து பதில் சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும். அவர் வருவதற்கு நாளானால் நான் சொல்கிறேன். :-) //
ஆகா.....இராகவனுக்கு என்ன தெரியும் குமரன். ஆனை மட்டுமா ஐயனுக்கு...ஆடும் ஆடாதா அடியார் உள்ளமும் கூடத்தான் வாகனங்கள். நீங்களே விளக்கம் சொல்லுங்கள். நானும் ரசிக்கிறேன்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சுவாமிமலையில் யானை வாகனத்தைக் காணலாம்! அப்போ சூர சம்காரம் நடைபெறவில்லையே! அதானால் லாஜிக்கா யானை வைச்சிருக்காங்க போல! :-) //
nope. please. dont make such logics which people can easily accept. அதுதான் உண்மைன்னு நம்பத் தொடங்கீருவாங்க. நாளைக்கு எழுதுறவன்..மொதல்ல முருகன் ஆனைல போனாரு...சண்டைக்கப்புறம் மயில் வந்துருச்சு..மயில்ல போனாருன்னு எழுதுவாங்க. :)))))))))
// சில ஆலயங்களில், ஆடு (கிடா) அவனுக்கு ஒரு வாகனம்.
மயில், யானை, ஆடு - ஆணவம், கண்மம், மாயை என மும்மலங்களை குறிக்கும்.
மற்றவை கொற்றவை அண்ணனார் ராகவனார் வந்து கற்றவை பகர்வார்!:-) //
பகரார். அதையும் நீங்களே பகருங்க. மும்மலம் வரைக்கும் வந்தவங்க...அதுக்கு மேலையும் சொல்லலாமே.
சங்ககாலப் பாடலான இந்தப் பாடலில் சூரனைக் கொன்றான் குமரவேள் என்று தெளிவாக இருக்கிறது. ஆனால் பிற்காலத்தில் வைணவர்களை முருகன் பக்கம் இழுக்க இந்தக் கதையை ஏற்படுத்தினார்களாம். எப்படி இருக்கிறது? :-)
இராகவன்,
கோவி. மணிசேகரன் எழுதிய புதினத்தைப் பற்றி இங்கே சொல்லியிருக்கிறீர்கள். இன்னொரு கோவி. எழுதிய புதினத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?!
பொறுமையாகப் படித்தீர்களா? நீங்களே இந்தப் பழந்தமிழ் செய்யுளைப் படிக்காவிடில் மற்ற யார் படிப்பார்கள்? அப்புறம் எல்லோரும் தங்கள் தங்கள் மனத்தில் தோன்றியவற்றை எழுதிக் கொண்டு செல்வார்கள். அது ஆய்வுக்கட்டுரைகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் அது ஒரு தரவாகவும் இன்னொருவரால் எடுத்துக் காட்டப்படும். தரவுகள் இப்படித் தானே ஏற்படுகின்றன.
லாஜிக்கா இரவிசங்கர் சொன்னதை இவ்வளவு தூரம் மறுத்த நீங்கள் லாஜிக்கே இல்லாமல் சொல்லப்பட்ட சிலவற்றை மறுக்காமல் பேசாமல் இருப்பது ஏனோ? அந்தத் தவறான வாதங்களை உண்மைன்னு நம்பத் தொடங்கினா பரவாயில்லையா? நீங்க சொன்ன மாதிரி தான் 'முதல்ல ஆனையில போனாரு. மயில் வந்துருச்சு. மயில்ல போனாரு'ன்னு தான் இப்ப ஒரு ஆய்வுக் கட்டுரை வந்திருக்கு.
Post a Comment