Wednesday, July 11, 2007

அடியேன் சிறிய ஞானத்தன்

ஜெய்க்குமார் என்றொரு அன்பர் என் பதிவில் என்னைப் பற்றி இருக்கும் 'அடியேன் சிறிய ஞானத்தன்...' என்ற குறிப்பைக் கண்டு அதன் பொருள் கேட்டு நவம்பர் மாதத்தில் மின்னஞ்சல் எழுதியிருந்தார். கூடிய விரைவில் பொருள் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்புறம் வேலைப்பளுவில் அதனைச் செய்ய இயலவில்லை. மீண்டும் இன்று அவரிடமிருந்து பொருள் கேட்டு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதனால் அவருடைய பொறுமைக்கு நன்றி கூறி, பொருளுடன் இந்த இடுகை.
இவை நம்மாழ்வார் பாசுர வரிகள்.

அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் யார்க்கும் அரியானை
கடிசேர் தண்ணந்துழாய்க்கண்ணி
புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ஆக்கை அடியாரைச்
சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனில் மிக்கோர் அயர்வுண்டே

அடியேனோ அறிவு சிறிதும் இல்லாதவன். குறை அறிவு கொண்டவன். அறிவு மயக்கம் கொண்டவன். அப்படி இருக்க பிரமன் முதலான தேவர்களுக்கும் யாருக்கும் அறிவதற்கு அரியவனை, மிகுந்த மணம் கொண்ட குளிர்ச்சியான துளசிமாலை அணிந்தவனை, கண்ணனை, குற்றம் குறை கொண்ட உடம்பு தன் அடியாரை மீண்டும் அடையா வண்ணம் எல்லா வினைகளையும் தீர்க்கும் திருமாலை, அடியவன் காண்பதற்கு புலம்பிக்கொண்டிருக்கிறேன். இதனை விட அயர்வு தரும் வேறொன்றுண்டோ?

இந்த பாசுரம் அடிக்கடி மனத்தில் ஓடும் பாசுரம். அதில் இருந்து முதல் அடியையும் கடைசி அடியையும் தான் அடியேனைப் பற்றி என்றிருக்கும் குறிப்பில் இட்டிருக்கிறேன்.

33 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகையை இட்டுவிட்டு தற்செயலாகப் பார்த்தேன். கூடலில் இந்த இடுகை 100வது இடுகை. நம்மாழ்வாரின் கருணையே கருணை. தானாகவே நூறாவது இடுகையில் தன் பாசுரத்தை அமைத்துக் கொண்டார்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!!!

வெட்டிப்பயல் said...

விளக்கம் நல்லா இருக்குங்க குமரன்...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

நன்றி பாலாஜி.

ஜீவா (Jeeva Venkataraman) said...

மிக்க நன்று குமரன்...

எனினும் அயர்வில்லை என்று சொல்வார் என்றல்லவா எதிர்பார்த்தேன்!?

வெற்றி said...

குமரன்,
அருமையான விளக்கம்.

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி எங்களின் வாசிப்புப் பசிக்குத் தீனி போட இறைவன் அருள் பாலிப்பானாக.

குமரன் (Kumaran) said...

ஜீவா. வைணவத்தில் தன் முயற்சியில் இறைவனை உணர முடியாது என்பதும் அவன் அருளால் மட்டுமே முடியும்; அதற்கு ஒரு குறியீடாக அவனே கதி என்ற சரணாகதி செய்ய வேண்டும் என்பதும் சிந்தாந்தம். நான் காண வேண்டி என் முயற்சியில் புலம்புகிறேன்; இதனை விட அயர்வு தரும் செயல் வேறொன்றில்லை என்று சொல்வதன் மூலம் தன் முயற்சியால் கூடாது; அவன் அருளால் மட்டுமே கூடும் என்பதைச் சொல்கிறார் மாறன் சடகோபன்.

நானே வழியும் ஜீவனுமாக இருக்கிறேன் என்ற ஏசுநாதரின் சொற்கள் வைணவத்தைப் பிரதிபலிப்பது போல் எனக்குத் தோன்றும். இறைவனே வழியும்; அவனே அடையும் முடிவும் என்பது வைணவம். பிற சிந்தாந்தங்களில் அவன் முடிவு மட்டுமே; அடையும் வழி நம் சுய முயற்சியாம் கரும, பக்தி, ஞான யோகங்கள்.

குமரன் (Kumaran) said...

ஜீவா,

இங்கே நான் என்னாமல் அடியேன் என்றதும் அந்த சரணாகதியைக் குறிக்கத் தான். சரணத்தில் இருப்பவன்; திருவடிகளாக இருப்பவன்; அடியவன்; அடியேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி. எல்லா பதிவுகளையும் சேர்த்தால் 300க்கும் மேலான இடுகைகள் ஆகியிருக்கும். 200வது இடுகைக்குப் பின் இராகவன் ஆணைப்படி எண்ணுவதை நிறுத்திவிட்டேன். இடுகைகளை எண்ணுவதை விட என்ன எழுதுவது என்று எண்ணி இடுகைகளை இடுங்கள் என்று சிலேடைச் சுவையுடன் கூறினார். அப்படியே செய்கிறேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

தன் முயற்சி என்று பார்க்கும் போதுதானே அயர்வு ஏற்படும் குமரன்???

அவன் அருளில் விளையும் பயிரில் ஏது அயர்வு?

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜீவா. அடியேன் காண்பான் அலற்றுவன் என்று இங்கே தன் முயற்சியைக் கூறி அப்புறம் தான் இதனில் மிக்கோர் அயர்வுண்டே என்கிறார்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

இப்போது புரிந்தது குமரன், விளக்கத்திற்கு நன்றி குமரன்!

வவ்வால் said...

குமரன்!

100 அடித்தும் ஆடாமல் ஸ்டெடியாக நிற்கிறீர்கள் அதற்கு வாழ்த்துகள்!

//வைணவத்தில் தன் முயற்சியில் இறைவனை உணர முடியாது என்பதும் அவன் அருளால் மட்டுமே முடியும்; அதற்கு ஒரு குறியீடாக அவனே கதி என்ற சரணாகதி செய்ய வேண்டும் என்பதும் சிந்தாந்தம//

வாழ்த்து சொல்லிட்டு சும்மா போக முடியவில்லை!

எல்லா சித்தாந்தங்களிலும் இது போல உண்டு,

மர்க்கட நியாயம் , மார்ச்சல நியாயம் என்பார்கள்.

மர்க்கடம் = குரங்கு, மார்ச்சலம் = பூனை.

குரங்கு தன் குட்டியை தூக்கி செல்லாது குட்டி தான் குரங்கை பற்றி கொண்டு செல்ல வேண்டும்,
பூனை தனது குட்டியை வாயில் கவ்வி தூக்கி செல்லும், குட்டி கண்ணை மூடி இருக்கும்.

இது போல தான் இறைவனை இரு வழிகளிலும் அடைகிறார்கள் எல்லா சித்தந்தங்களிலும்!

//இந்த இடுகையை இட்டுவிட்டு தற்செயலாகப் பார்த்தேன். கூடலில் இந்த இடுகை 100வது இடுகை.//

இதற்கும் ஒரு பெயர் உள்ளது ...காகதாலிய நியாயம்! :-))

குமரன் (Kumaran) said...

வாங்க வவ்வால். ஆடாமல் ஸ்டெடியாக எல்லாம் இல்லை வவ்வால். நடுவில் பல முறை ஆட்டம் கண்டவன் தான். அதே காரணங்களுக்காக மீண்டும் ஆட்டம் காண்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. :-)பணியிடத்திலும் பளு அதிகமாகிறது.

நீங்கள் சொல்லும் பூனை போல் குரங்கு போல் சரணாகதி செய்வது தமிழக வைணவத்திற்கே உரியது என்று தான் நினைக்கிறேன். வேறு வட நாட்டு வைணவ சித்தாந்தங்களிலும் இருக்கலாம். மற்ற சித்தாந்தங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அடியேன் சிறிய ஞானத்தன். அனைத்தும் அறிந்தவன் இல்லை. அதனால் அடியேன் சொல்வது தவறாக இருக்கலாம்.

காகதாலிய நியாயத்தையும் கொஞ்சம் விளக்கி அது எப்படி தற்செயலாக நடந்ததற்குப் பொருந்தும் என்று சொல்லுங்கள். :-)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வவ்வால் said...

தெய்வத்தின் குரல் என்ற காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரர் எழுதிய் நூலில் சொல்லி இருப்பர் இந்த மர்க்கடம், மார்ச்சல நியாயம் பற்றி, அவர்கள் சைவ வழி வந்தவ்ர்கள் அல்லவா அதான் இது சைவத்திலும் உண்டு என்று சொன்னேன், மற்றபடி எனகு இதில் ஆழ்ந்த அறிவெல்லாம் இல்லை!

காகதாலியம் தெரியாதா குமரன்(தெரியும் என்பது எனக்கு தெரியும்)

காக்கை உட்காற பனம்பழம் தான்!

குமரன் (Kumaran) said...

காஞ்சிப் பெரியவர் வைணவ சித்தாந்தத்தையும் தெய்வத்தின் குரலில் விளக்கியிருக்கிறார் வவ்வால். எப்போதோ சிறுவயதில் படிக்கும் போது அதில் வைணவ சித்தாந்தத்தைப் பற்றி அவர் சொன்ன விளக்கங்களைப் படித்திருக்கிறேன். அங்கே இந்த பூனை, குரங்கு சரணாகதி முறைகளைப் பற்றி பேசியிருப்பார்.

உண்மையிலேயே எனக்கு காகதாலிய நியாயம் என்றால் என்ன என்று தெரியாது வவ்வால். காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது தான் அது என்றால் இப்போது புரிகிறது. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

குமரன் பூனை கையில் குட்டி அசைவற்று இருப்பதுபோல நாமும் அசைவில்லா நம்பிக்கையை அவன் மீது வைக்கலாம்.

தான்...ஆடும்போது அவன் நம் கண்ணுக்குத் தெரிய மறுக்கிறான்.

100ஆவது பதிவு என்று சொல்லலாம்.படித்த கருத்துக்கள் பல நூறு. வாழ்த்துக்கள் குமரன்.

Srikanth said...

Nice posting.

"Adiyen siriya Gyanathan" enbathai Naichiyanusanthanam enrum sollalamo?

"Sathamaanam bhavathi" enrapadi 100 adithu vitteergal! Melum pathivugal ezhutha vaazhthukkal!

Anonymous said...

100க்கு வாழ்த்துக்கள்....

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் வல்லி அம்மா. தான் என்ற எண்ணம் ஆட்டம் போது அவன் கண்களுக்குத் தெரிவதில்லை. வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா.

குமரன் (Kumaran) said...

நன்றி Srikanth.

ஆசாரியர்கள் அப்படித் தான் சொல்லுவார்கள். தன்னைத் தாழ்த்திக் கூறிக் கொள்வதை நைச்யானுசந்தானம் என்று சொல்வார்கள். தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

நம்மாழ்வார் திருவடிகளே சரணம். வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே.

நீங்கள் மௌலி ஐயாவா? பெயர் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
நம்மாழ்வார் நிறைகுடம் அது தழம்புமா?
நல்ல விளக்கம்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் யோகன் ஐயா. நிறைகுடமாக இருப்பவர்கள் தான் தம்மைத் தாழ்த்திக் கொண்டு எளிமையாக இருக்கிறார்கள்; பேசுகிறார்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரன் முதலில் வாழ்த்துக்கள்!
நீங்கள் என்ன தான்,
எண்ணிக்கை விட்டாலும்
எண்ணிக் கை விட்டாலும்
நாங்கள்
எண்ணி எண்ணிக் கைவிடாது களிப்பெய்தும் கூடல் அல்லவா இது? :-)

சற்றே உடல் நலம் தேறி, இப்ப தான் உங்கள் ஒவ்வொரு பதிவா பார்த்துக்கொண்டு வந்தேன்!

//செடியார் ஆக்கை அடியாரைச்
சேர்தல் தீர்க்கும் திருமாலை//

பாசுரத்தின் வைர வரிகள்!

அடியேனும் சிறிய ஞானத்தன்!
அடியேனுக்கு மிக்கோர் அயர்வுண்டே!
அயர்வுறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயர்அறு சுடரடி தொழுதுஎழு என்மனனே!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

மதுரையம்பதி said...

//நீங்கள் மௌலி ஐயாவா? பெயர் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?! //

நல்ல வெப் சென்ஸ் வைத்திருக்கிறீர்கள் போல.....அன்று ஏனோ தெரியவில்லை login was failing repeatedly...hence annony comment....

தி. ரா. ச.(T.R.C.) said...

100கூடல் பதிவுக்கு என் வாழ்த்துக்களும் ஆசியும்

குமரன் (Kumaran) said...

உடல் நலம் தேறிய உடனே வந்து இடுகைகளைப் படித்துப் பின்னூட்டங்கள் இட்டதற்கு நன்றி இரவிசங்கர்.

மதுரைக்கார நக்கீரர் இங்கேயும் வந்து தொந்தரவு பண்றார் இரவிசங்கர். அயர்வறும் அமரர்களா அயர்வுறும் அமரர்களா? :-)

குமரன் (Kumaran) said...

மௌலி ஐயா. அப்போது தான் மற்ற இடுகைகளில் உங்கள் பின்னூட்டத்தைப் படித்தேன். அதனால் நீங்களாக இருக்கும் என்ரு தோன்றியது. :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி தி.ரா.ச.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இரவிசங்கர். அயர்வறும் அமரர்களா அயர்வுறும் அமரர்களா? :-)//

அமரர்கள் அயர்வுறுவார்கள்!:-)
அதிபதி அயர்வறுப்பான்!
"அயர்வு அறும் அமரர்கள் அதிபதி யவனவன்" என்பதே சரி குமரன்!
அடியேன் சிறிய ஞானத்தன்! எழுத்துப் பிழைக்கு மன்னியுங்கள்! :-)

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். உண்மை தான். அமரர்கள் அயர்வுறுதல் உண்டு. இவன் அயர்வறுக்கிறான். :-)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.